Published:Updated:

ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?
ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?

ஒப்பீடு / டட்ஸன் ரெடி கோ Vs ரெனோ க்விட்தொகுப்பு : ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?

ஒரே பிளாட்ஃபார்ம், ஒரே மார்க்கெட், ஒரே செக்மென்ட் என ஒரேயடியாக மோத இருக்கின்றன டட்ஸன் ரெடி-கோவும், ரெனோ க்விட் காரும். ஆனால், இரண்டுமே முற்றிலும் வித்தியாசமானவை. எப்படி?

டிஸைன்

இரண்டு கார்களும் அடிப்படையில் ஒரே கார்தான் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ரெனோ க்விட், நீளத்திலும், வீல்பேஸிலும் பெரிய காராக இருக்கிறது. ஆனால் ரெடி-கோ, நீளத்தில் 250 மிமீ குறைவு. ஆனால், உயரத்தில் க்விட்டைவிட 63 மிமீ உயரம் அதிகம் ரெடி-கோ. மேலும், ரெடி-கோ, க்விட்டைவிட 25 கிலோ குறைவு. 

இரண்டு கார்களின் டிஸைனுமே அதன் பிராண்ட் கொள்கைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இரண்டில் எது அழகு என்று பார்த்தால், ரெடி-கோதான்.

இறுக்கமான, அதேசமயம் நேர்த்தி யான செதுக்கல் கொண்ட பாடி பேனல், பார்க்க 2014 ரெடி-கோ கான்செப்ட் காரை நினைவூட்டுகிறது. பானெட், பம்பர் ஆகியவை ஷார்ப்பான கோடுகள், வளைவுகளோடு கச்சிதமாகப் பொருந்துகின்றன. டட்ஸனின் ட்ரேட்மார்க் கிரில் பிரீமியமாக இருக்கிறது. மெட்டாலிக் பட்டைகளுடன் ஹெட்லைட்ஸ் மிக அழகாக இருக்கின்றன. டாப் வேரியன்ட்டில் LED உண்டு.

ரெடி-கோ காரின் பின்பக்கமும் வித்தியாசமான டிஸைன்தான். டெயில்கேட்டின் அடியில் இருக்கும் க்ரோம் பட்டை பிரீமியமான தோற்றத்தைத் தருகிறது. விலை குறைந்த ஒரு காரை, விலைமதிப்பு மிக்க காராகத் தோற்றமளிக்க வைத்ததை, டட்ஸன் டிஸைனர்களின் வெற்றியாகத்தான் கருத வேண்டும்.

க்விட், பார்க்க பிரீமியமாக இல்லை என்றாலும், அதற்கென ஒரு கெத்தைக் கொண்டுள்ளது. கரடுமுரடான தோற்றம்கொண்ட க்விட் காரின் பெரிய டிஸைன் ப்ளஸ் பாயின்ட், அதன் கறுப்பு வண்ண கிளாடிங்குகள்தான்.

இரண்டு கார்களிலும் 13 இன்ச் வீல்கள்தான். ஆனால், ரெடி-கோ காரில்தான் வீல்கள் காருடன் அழகாகப் பொருந்தி தோற்றமளிக்கின்றன. க்விட் காரில் பாடி பெரிதாகவும், வீல்கள் சிறிதாகவும் தெரிகின்றன.

ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?
ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?

க்விட் காரில் முதலில் தனித்துத் தெரிவது, அதன் முன்பகுதிதான். இதன் செவ்வக வடிவ ஹெட்லைட்ஸ், தனித்துத் தெரியும் கிரில் எல்லாம் சேர்ந்து பெரிய காராக க்விட்டைக் காட்டுகின்றன. க்விட் காரின் கிரில்லுக்கு, க்ரோம் பட்டைகளைத் தனியாக வாங்கிப் பொருத்த முடியும் என்பது கூடுதல் ப்ளஸ்.

ரெடி-கோ காரில் டெயில் லைட்டுகள் செங்குத்தாக அமைக்கப் பட்டிருக்க, க்விட்டில் படுக்கைவசமாக அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, முன்பு க்விட்டில் இருந்த சுமாரான விங் மிரர்கள், இப்போது தரமானதாக மாற்றப்பட்டுள்ளன.

இரண்டு கார்களும் அடிப்படையில் ஒன்றுதான் என்றாலும், வெளிப்புற டிஸைனில் ஒரு பாகம்கூட இரு கார்களுக்கிடையே பகிரப்படவில்லை.

உள்ளே

உயரமான இருக்கைகள், அகலமான கண்ணாடிகள், லைட் டான வண்ணங்கள் ஆகியவற்றால், ரெடி-கோ காரின் உள்பக்கம் விசாலமாக இருக்கிறது. க்விட் காரின் உள்ளே எல்லாமே கிரே கலரில் இருப்பதால், நெருக்கியடித்ததுபோல் இருக்கும். உள்பக்க இடவசதியில் இரு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், பின்னிருக்கை இடவசதியில் ரெடி-கோ கொஞ்சம் ஸ்கோர் செய்கிறது. காரணம், உயரமான இருக்கைகள் என்பதால், கால்களுக்கு அதிக இடவசதி.

ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?
ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?

இரண்டு கார்களின் பின்னிருக்கைகளுமே மூன்று பேர் சொகுசாகப் பயணிக்க ஏற்றவை இல்லை. டிரைவிங் பொசிஷனில்கூட இரு கார்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம். ரெடி-கோவில் உயரமாக அமர்கிறோம். இந்த டிரைவிங் பொசிஷன் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு மிகப் பெரிய ப்ளஸ். க்விட் காரில், டிரைவிங் பொசிஷன் சற்றுத் தாழ்வாக, நார்மலாக உள்ளது.
ரெடி-கோ டேஷ்போர்டில் பொருட்கள் வைக்க இடங்கள் அதிகம். ஆனால், க்ளோவ்பாக்ஸில் இடவசதி குறைவுதான். க்விட் காரின் க்ளோவ் பாக்ஸ் பெரிதாக இருந்தாலும், அதனைப் பூட்டும் மெக்கானிசம் சுமாராக உள்ளது. ரெனோ இதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

வைப்பர்/இண்டிகேட்டர் கன்ட்ரோல்கள், பவர் விண்டோஸ் ஸ்விட்ச்சுகள் போன்றவை இரண்டு கார்களிலும் பகிரப்பட்டுள்ளன. ஆனால், க்விட் காரில் பவர் விண்டோஸ் ஸ்விட்ச் - டேஷ்போர்டில் வைக்கப்பட்டிருக்க, ரெடி-கோ காரில் இருக்கைகளுக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளன.

வசதிகளைப் பொறுத்தவரை ரெடி-கோ கொஞ்சம் வீக்தான். க்விட் காரில் இருக்கும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே அதன் பெரிய ப்ளஸ். ரெடி-கோ காரிலோ சாதாரண சிஸ்டம்தான். ரெடி-கோ காரில் USB உடன் CD பிளேயர் இருக்கிறது. க்விட் காரில் CD பிளேயர் இல்லைதான். ஆனால், க்விட்டில் ப்ளூ-டூத், நேவிகேஷன் இருக்கிறதே! அடிப்படை வசதிகளான வைப்பர்களுக்கான செட்டிங்குகள், சென்டர் லாக்கிங் போன்றவையும் ரெடி-கோ காரில் இல்லை. ஆனால் க்விட்டில், அதிக இடம்கொண்ட டோர் பாக்கெட்டுகள், பெரிய லக்கேஜ் கம்பார்ட்மென்ட் ஆகியவை இருப்பதால், க்விட்தான் பிராக்டிக்கலான காராக இருக்கிறது.

இன்ஜின்

இரண்டு கார்களிலும் ஒரே இன்ஜின், கியர்பாக்ஸ்தான். எடைகூட இரண்டு கார்களுக்கும் 25 கிலோதான் வித்தியாசம். எனவே, பெர்ஃபாமென்ஸிலும் இரண்டு கார்களும் ஒன்றாக இருக்கும் என்றால், அதுதான் இல்லை.  799 சிசி, 3-சிலிண்டர் இன்ஜின், 54bhp சக்தி, 7.2kgm டார்க்தான் இரண்டிலும். ஆனால், இரண்டு கார்களுக்கும் உள்ள டியூனிங்கில் ஐந்து முதல் 10 சதவிகிதம் வித்தியாசம் உள்ளது.

ஐடிலிங்கில் ரெடி-கோ ரொம்பவே சத்தம் போடுகிறது. ஆக்ஸிலரேட்டரை மிதித்தாலும், எடுத்தவுடன் லேசான திணறல்; பிறகுதான் திராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக உள்ளது. பவர் டெலிவரியும் சீராக இல்லை. டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், இன்ஜின் சத்தம் அதிகமாக இருக்கிறது. மேலும், ரெடி-கோ இன்சுலேஷன் சுமாராக இருப்பதால், எல்லாவித மெக்கானிக்கல் சத்தங்களும் காருக்குள் கேட்கின்றன.

சரி, க்விட் மட்டும் சூப்பரா என்றால், இல்லைதான். ஆனால், ரெடி-கோ உடன் ஒப்பிடும்போது ஸ்மூத்தாகவும், அமைதியாகவும் உள்ளது க்விட்.

ரெடி-கோ கார் 0-100 கி.மீ வேகத்துக்கு 15.9 விநாடிகள் எடுத்துக்கொள்வது, க்விட்டைவிட வேகம்தான் என்று டட்ஸன் சொல்கிறது. நம்முடைய சின்ன டிராக் டெஸ்ட்டில் க்விட்தான் சீறியது. க்விட் காரின் மிட்-ரேஞ்ச் ஸ்ட்ராங்காக இருப்பதால், திணறாமல் வேகம் பிடிக்கிறது. இதனால், ஓட்டவும் சிறப்பாக உள்ளது. இரண்டு கார்களிலும் கியர்பாக்ஸ் சுமாராகவே உள்ளன. ஆனால், லைட்டாக இருப்பதால் டக் டக்கென்று ஓட்ட வசதி.

ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?

ஓட்டுதல் தரம், கையாளுமை

க்விட், பெர்ஃபாமென்ஸில் முன்னேற... ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் பின்தங்குகிறது. ரெடி-கோ உயரமாக இருப்பதால், சஸ்பென்ஷனை சற்று இறுக்கமாக அமைத்துள்ளார்கள். இதனால், ஓட்டுதல் தரம் மோசமான சாலைகளில் சற்று ஆடி அதிர்ந்து செல்கிறது. ஆனால், சாலை சிறப்பாக இருந்துவிட்டால், ரெடி-கோ சிறப்பாகச் செல்கிறது. சின்னச் சின்ன மேடு பள்ளங்களைச் சீராகச் சமாளிக்கிறது ரெடி-கோ. டர்னிங் சர்க்கிள் டைட்டாக இருக்க, ஸ்டீயரிங் லைட்டாக இருக்க, பார்க்கிங் மிக மிக ஈஸி. டிராஃபிக்கிலும் வளைத்து நெளித்து ஓட்ட எளிதாகவே உள்ளது. ஆனால், ஸ்டீயரிங் ஃபீட்பேக் மோசமாக இருப்பதால், நெடுஞ்சாலையில் நம்பிக்கையாக இல்லை. வளைவுகளில் ரொம்பவே விரட்டினால், ரோல் இருக்கிறது.

க்விட் காரின் லைட்டான ஸ்டீயரிங்கும் ஃபீட்பேக்கில் மோசம்தான். ஆனால், கார் தாழ்வாக இருப்பதால், இயற்கையாகவே பாடி ரோல் குறைவாக இருக்கிறது. சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக

ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்?

இருந்தாலும், வேகமாகச் செல்லும்போது ஓட்ட ஜாலியாக இருக்கிறது.

டட்ஸனுக்கு ரெடி-கோ ரொம்பவே ஃப்ரெஷ்ஷான தயாரிப்பு. சிட்டி காராக சிறப்பாகச் செயல்படுகிறது. ரொம்பவே டைட்டான பட்ஜெட் கொண்டவர்களுக்கு ரெடி-கோ நல்ல சாய்ஸ். 3 லட்சம் ரூபாய் (உத்தேசமாக) முதல் 4 லட்சம் ரூபாய் வரை விலை என்பது அருமையான டீல்.

க்விட் கார் அழகாக மட்டுமல்லாமல், பிராக்டிக்கலான காராக இருப்பதும் அதன் பெரிய ப்ளஸ். நல்ல ஓட்டுதல் தரம், நிறைய வசதிகள், அருமையான ரீஃபைன்மென்ட் என அதிக விலை கொடுத்தாலும், அதற்கேற்ற திருப்தி கொடுக்கிறது க்விட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு