Published:Updated:

சின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / ஹோண்டா BR-V தொகுப்பு : ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
சின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்!

காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டில் ஹாட் எஸ்யுவியாகக் களமிறங்கியுள்ளது ஹோண்டா BR-V. சிக்கலான செக்மென்ட் இது. விலை, டிஸைன், வசதிகள் என சிறந்த பேக்கேஜ் கொண்ட காரே ஜெயிக்கும். இங்கே BR-V பின்னியெடுக்குமா?

டிஸைன்

ஹோண்டா BR-V காரின் முன்பக்கம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். ஹெட்லைட்ஸ் டிஸைன் செம்ம ஹாட். இன்னொரு பக்கம் ஏகத்துக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும் க்ரோம், டாலடிக்கிறது. கரடுமுரடான தோற்றத்துக்கு ஸ்கஃப் பிளேட்ஸ் சேர்க்கப் பட்டுள்ளன. ஆனால், காரின் பக்கவாட்டு டிஸைன் பக்காவாக இல்லை. பிளாஸ்டிக் வீல் ஆர்ச்சுகள், பார்க்க கெத்தான தோற்றத்தை காருக்குத் தரவில்லை. கதவுகளும் ஜன்னல்களும், மொபிலியோவில் இருப்பவைதான். காரின் டெயில், பின்பக்கக் கதவுகளுக்கு அருகில் இல்லாமல் தள்ளி இருப்பதால், இந்த எஸ்யுவி சில கோணங்களில் பார்க்க எம்பிவிபோல இருக்கிறது.

BR-V காரில் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்தாலும், பின்னாளில் ஆல்-வீல் டிரைவ் சேர்க்கும் திட்டம் ஹோண்டாவிடம் இல்லை. BR-V எப்போதும் ஃப்ரன்ட்-வீல் டிரைவ்தான்.

உள்ளே...

4,456 மிமீ நீளத்துடன் இந்தியாவில் உள்ள காம்பேக்ட் எஸ்யுவிகளிலேயே BR-Vதான் நீளமான கார். இதனால், காருக்குள் ஹோண்டா புகுந்து விளையாடியிருக்கிறது. இதன் போட்டி கார்களில் இல்லாத ஒரே வசதியாக, மூன்றாவது வரிசை இருக்கை BR-Vயில்தான் உள்ளது. இந்த இருக்கை பயன்படுத்தும் அளவில் இருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கடைசி வரிசையை அடைவதும் எதிர்பார்த்ததைவிட எளிதாகவே இருக்க, கால்களுக்கு இடவசதியை, நடுவரிசையை முன்னே தள்ளிக்கொள்வதன் மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். கடைசி வரிசையில் சீட்டிங் பொசிஷன் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும், பெரும்பாலான 7-சீட்டர் கார்கள் இப்படித்தான் இருக்கும். நடுவரிசை இருக்கை சொகுசாக உள்ளது. பேக்ரெஸ்ட் ஆங்கிளையும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அகலம் குறைவான கார் என்பதால், நடுவரிசையில் மூன்று பேர் சொகுசாக அமர்ந்து பயணிப்பது கடினம்தான்.

சின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்!

ஓட்டுநர் இருக்கைக்குச் சென்றால், ரொம்பவே பழக்கப்பட்ட இடமாகத் தோன்றுகிறது. காரணம், BR-V காரின் டேஷ்போர்டு, சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட அமேஸ் காம்பேக்ட் செடான் காரில் இருக்கும் அதே டேஷ்போர்டுதான். முக்கியமான கன்ட்ரோல்கள் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது மகிழ்ச்சி. ஹூண்டாய் க்ரெட்டா அளவுக்கு பாகங்களின் ஒருங்கிணைப்பு தரம் இல்லை.
ரெனோ க்விட் காரில்கூட டச் ஸ்கிரீன் உள்ளது. ஆனால், BR-V காரில் டச் ஸ்கிரீன் இல்லை என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். மேலும், இவ்வளவு நீளமான காருக்கு பார்க்கிங் சென்ஸார்கூட இல்லை. எப்படி ரிவர்ஸ் கேமரா மட்டும் கொடுத்திருக்கப் போகிறார்கள்?

கொடுக்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ப்ளூ-டூத், ஆடியோ ஸ்ட்ரீமிங்காவது கொடுத்துள்ளார்கள். லெதர் சீட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக்கலாக மடித்துக்கொள்ளக்கூடிய ரியர்-வியூ மிரர்கள், ரியர் ஏ.சி வென்ட் போன்ற வசதிகள், விலை உயர்ந்த VX வேரியன்ட்டில் உள்ளன. எல்லா வேரியன்ட்டிலும் இரட்டை காற்றுப் பைகள் உள்ளன. விலை குறைந்த பெட்ரோல் வேரியன்ட்டைத் தவிர, மற்ற வேரியன்ட்டுகளில் ஏபிஎஸ் உண்டு.

சின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்!

இன்ஜின்

சிட்டியில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் BR-V காரிலும். ஆனால், இப்போது ரொம்பவே குறைவான சத்தத்தோடுதான் இயங்குகிறது இந்த இன்ஜின். சிட்டி, ஜாஸ், மொபிலியோ, அமேஸ் கார்களில் இந்த இன்ஜின் தரும் அதே 100 bhp சக்தியையும்  20kgm டார்க்கையும் BR-V அளிக்கிறது. ஆனால், டியூனிங்கைக் கொஞ்சம் மாற்றியுள்ளார்கள். இப்போது முன்பைவிட குறைந்த ஆர்பிஎம்-ல் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக, இன்ஜின் இப்போது நன்றாக ரெவ் ஆகிறது. அப்படியிருந்தும் 0-100 கி.மீ வேகத்தை அடைய 16.25 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கிறது. கிளட்ச்சும் லைட்டாகவே உள்ளது. இதன் அராய் மைலேஜ் லிட்டருக்கு 21.9 கி.மீ. எனவே, BR-Vதான் காம்பேக்ட் எஸ்யுவிகளிலேயே அதிக மைலேஜ் தரும் கார்.
இதன் இன்னொரு இன்ஜின் 119bhp சக்தியை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். இதில் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால், இதில் இருப்பது புதிய 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். சிட்டி, மொபிலியோவில் இருப்பது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ். BR-V பெட்ரோல் மேனுவல் மாடலின் அராய் மைலேஜ் லிட்டருக்கு 15.4 கி.மீ; பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலின் மைலேஜ், லிட்டருக்கு 16 கி.மீ.

சின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்!

ஆட்டோமேட்டிக் CVT மாடல்  செக்மென்ட் டிலேயே முதன்முறையாக பேடில் ஷிஃப்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் CVT மாடலைச் சீறவிடலாம் என்று ஆக்ஸிலரேட்டரை அழுத்தி மிதித்தால், இன்ஜின் ரெவ் ஆகி சத்தம் வருகிறதே தவிர, பவரைக் காணோம். ஆனால், பேடில் ஷிஃப்ட்டர்கள் சிறப்பாக இயங்குகின்றன. ரிலாக்ஸாக ஓட்டினால்தான் BR-V ஆட்டோமேட்டிக் ஓட்ட சிறப்பாக இருக்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஓட்டுதல் தரம் சிறப்பாகவே உள்ளது. சஸ்பென்ஷன் செட்-அப் சற்று இறுக்கமாக இருந்தாலும், குறைந்த வேகங்களில் அலுங்காமல் குலுங்காமல் செல்கிறது. டஸ்ட்டர் அளவுக்கு நேர்க்கோட்டில் ஸ்டேபிளாகச் செல்லவில்லை. ஸ்டீயரிங் நல்ல எடை கொண்டிருக்கிறது. வளைவு நெளிவான

சின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்!

சாலைகளில் அனுபவித்து ஓட்டும் அளவுக்குக் கையாளுமை சிறப்பாக இல்லை என்றாலும், ஓகே ரகம்.

சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட BR-V பெட்ரோல் ஆட்டோ மேட்டிக் மாடல் சிறப்பாக இருக்கிறது. டீசல் மாடல் அன்றாடப் பயன்பாட்டுக்குச் சிறப்பாக இருக்கும். 7-சீட்டர் என்பதற்காகவே பல குடும்பங்களுக்கு இது கச்சிதமான காராக இருக்கும். 10.08 லட்சம் ரூபாய் முதல் 15.59 லட்சம் ரூபாய் வரை (சென்னை ஆன்ரோடு) வரை விலை கொண்டிருந் தாலும் டச் ஸ்கிரீன், ரிவர்ஸ் சென்ஸார்கள் இல்லை என்பது கொஞ்சம் இடிக்கிறது. மேலும்,  கொஞ்சம் ஒரு டைப்பாக இருக்கும் இந்த டிஸைனை இந்திய வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். யதார்த்தமாகப் பார்த்தால்…
 மகிழ்ச்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு