Published:Updated:

நானும் எஸ்யுவிதான்!

டெஸ்ட் டிரைவ் / மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸாதொகுப்பு / ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
நானும் எஸ்யுவிதான்!

மாருதி சுஸூகியின் காம்பேக்ட் எஸ்யுவியின் பெயர் விட்டாரா பிரெஸ்ஸா. (இத்தாலியில் பிரெஸ்ஸா என்றால், காற்று). அறிமுகமான இரண்டே மாதத்தில் 50,000 புக்கிங்குகளைக் கடந்துவிட்ட பிரெஸ்ஸாவில் இருப்பது 1.3 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் என ஒரே ஆப்ஷன்தான். மாருதியின் இந்த காம்பேக்ட் எஸ்யுவி எப்படி இருக்கிறது?

டிஸைன்

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சிம்பிளாக இருக்கிறது விட்டாரா பிரெஸ்ஸாவின் தோற்றம். வளைவுகள் எதுவும் இல்லாமல் நேர்கோட்டில் செல்லும் டிஸைனால், காரின் பாக்ஸ் போன்ற வடிவம் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், அதிக இடவசதிக்காக, காரை பிராக்டிக்கலாக மாருதி சுஸூகி வடிவமைத்துள்ளது தெரிகிறது. 16 இன்ச் அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்கள், 198 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை பிரெஸ்ஸாவுக்கு எஸ்யுவிக்கான கெத்தை அளிக்கிறது.

ஜரோப்பிய நாடுகளில் சுஸூகி விட்டாரா தயாரிக்கப்படும் அதே C-பிளாட்ஃபார்மில்தான், இங்கு பிரெஸ்ஸா தயாரிக்கப்படுகிறது. எனவே, பிரெஸ்ஸாவின் எடை மற்ற மாருதி கார்களுடன் ஒப்பிடும்போது அதிகமாகவே இருக்கிறது (1,195 கிலோ). 2017-ம் ஆண்டில் வரவிருக்கும் BharatNCAP க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைகளை, இந்த கார் எளிதாக பாஸ் செய்துவிடும் என்கிறது மாருதி சுஸூகி.

உள்ளே...

உள்ளே இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களைத் தாண்டி டேஷ்போர்டில் எந்த கவர்ச்சியும் இல்லை. நீங்கள் ஏற்கெனவே மாருதி காரை வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு பிரெஸ்ஸாவின் கேபின், எந்தவொரு புதிய அனுபவத்தையும் தராது. இன்டீரியரின் பல பாகங்கள், மாருதியின் மற்ற காரில் இருப்பவைதான். இதனால், காரின் உதிரி பாகங்களின் விலை குறைவாக இருந்தாலும், ஒரு எஸ்யுவிக்கான தனித்தன்மை இல்லை. ஆனால், ரூஃப் லைனிங் மற்றும் சீட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபேப்ரிக்குகள் உயர்தரத்தில் இருப்பது ஆறுதல். சிறப்பம்சங்களின் பட்டியலும் நீளம்.

நானும் எஸ்யுவிதான்!

டேஷ்போர்டில் இருக்கும் இரட்டை க்ளோவ் பாக்ஸில், மேலே இருப்பது கூலிங் வசதியைப் பெற்றுள்ளது. தடிமனான C-பில்லர், காரை ரிவர்ஸ் எடுக்கும்போது இடைஞ்சலாக இருக்கிறது. காம்பேக்ட் எஸ்யுவியாக இருந்தாலும், பூட் ஸ்பேஸ் மற்றும் பயணிகளுக்கான இடவசதி நன்றாகவே இருக்கிறது. தேவையான லெக்ரூம் - ஹெட்ரூம், காரின் அகலம் காரணமாக, நடுவரிசை இருக்கையில் மூன்று பேர் வசதியாக உட்கார முடிகிறது. மடக்கக்கூடிய ஆர்ம் ரெஸ்ட்டில், கப் ஹோல்டர்கள் இருக்கின்றன. டோர் பாக்கெட்கள் பெரிதாக இருப்பதால், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்களை எளிதாக வைக்க முடியும்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

மாருதி சுஸூகியின் பல டீசல் மாடல்களில் காணப்படும் ஃபியட்டின் 1,248 சிசி, 4 சிலிண்டர் DDiS 200 இன்ஜின்தான் பிரெஸ்ஸாவிலும் இடம்பெற்றுள்ளது. 90bhp பவர் மற்றும் 20kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், டர்போ லேக்குக்குப் பெயர்பெற்றது. எனவே, பிரெஸ்ஸாவிலும் 2,000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்வதற்கான பவர் இருப்பதால், ஓவர்டேக் செய்வது சுலபம். 0 - 100 கி.மீ வேகத்தை 12.96 விநாடிகளில் எட்டிப் பிடிக்கிறது பிரெஸ்ஸா. காரை விரட்டி ஓட்டும்போது, இன்ஜின், வெளிச்சாலைச் சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. கியர்பாக்ஸ் துல்லியமாக இல்லாவிட்டாலும், கிளட்ச் லைட்டாக இருப்பதால், நெரிசலான டிராஃபிக்கில் காரை ஓட்டுவது ஓகே!

நானும் எஸ்யுவிதான்!
நானும் எஸ்யுவிதான்!

ஓட்டுதல் தரம் & கையாளுமை

முன்பக்கம் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் மற்றும் பின்பக்கம் டார்ஷன் பீம் சஸ்பென்ஷன் என, இந்த வகை கார்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான சஸ்பென்ஷன் அமைப்பே பிரெஸ்ஸாவிலும் இருக்கின்றன. ஐரோப்பிய கார்களைப்போல இறுக்கமான செட்-அப் கொண்டிருப்பதால், நிலையற்ற சாலைகளில் வேகமாகச் செல்லும்போது, கார் ஆட்டம் காண்கிறது. திருப்பங்களில் காரைச் செலுத்தும்போது, பாடி ரோல் ஆவதை உணர முடிகிறது. நமது காரில் இருந்த அப்பல்லோ டயர்கள்,

நானும் எஸ்யுவிதான்!

சிறந்த முறையில் அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டதுடன், போதுமான கிரிப்பையும் அளித்தன.

மாருதி சுஸூகி டீசல் என்றாலே மைலேஜ்தானே! விட்டாரா பிரெஸ்ஸா, ஒரு லிட்டர் டீசலுக்கு நகருக்குள் 15.32 கி.மீ; நெடுஞ்சாலையில் 18.11 மைலேஜ் அளிக்கிறது. காரின் குறைவான எடையே இதற்குக் காரணம். இந்திய மக்களை மனதில் வைத்து, கனக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா, இவ்வுளவு பெரிய வெற்றியைப் பெற்றதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், காரின் டிஸைன் அட்டகாசமாக இல்லை என்பதுடன், கையாளுமையும் சிறப்பாக இல்லை. பட்ஜெட் கார் என்பதை உணர்த்தும் வகையில்தான் இருக்கிறது பிரெஸ்ஸாவின் கட்டுமானத் தரம். ஆனால் மைலேஜ், கொடுக்கும் காசுக்கு ஏற்ற மதிப்பு, நம்பகத்தன்மை என பிராக்டிக்கலாக இருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா, மக்களின் அபிமானத்தைத் தொடர்ச்சியாகப் பெறும் என்றே தோன்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு