Published:Updated:

கஸ்டம் கையாள சுலபம்!

ஃபர்ஸ்ட் ரைடு / ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம்தொகுப்பு : ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
கஸ்டம் கையாள சுலபம்!

பேட் பாய் தோற்றத்துக்கும், இடி முழக்கம் போன்ற எக்ஸாஸ்ட் சத்தத்துக்கும் பெயர் பெற்ற ஹார்லி டேவிட்சன், க்ரூஸர் ஸ்டைலின் உச்சம். ஹார்லி பைக்குகளின் ஓட்டுதல் அனுபவத்தைச் சுலபமாகப் பெறுவதற்கு, ஸ்போர்ட்ஸ்டர் சீரிஸ் பைக்குகள் ஏற்றதாக இருக்கின்றன. இதில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1200 கஸ்டம் (Custom) பைக்கை, Iron 883 மற்றும்
Forty-Eight பைக்குகளுக்கு இடையே பொசிஷன் செய்துள்ளது ஹார்லி. Forty-Eight பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான்  1200 கஸ்டம் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதைவிட இது பிராக்டிக்கலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 1200 கஸ்டம் எப்படி இருக்கிறது?

டிஸைன்

Forty-Eight பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 1200 கஸ்டம், அந்த பைக்கைவிடப் பெரிது. க்ரோம் கலந்த கிளாஸிக் டிஸைனைக் கொண்டிருக்கும் இந்த பைக்கின் அகலமான முன்பக்க டயர் மற்றும் ஹெட்லைட்டின் வடிவமைப்பு, பைக்கின் தோற்றத்தோடு பொருந்திப் போகிறது. சீட் சற்று உயரமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், உண்மையில் இதன் உயரம் குறைவுதான் (725 மிமீ). எனவே, உயரம் குறைவானவர்களும் இந்த பைக்கைச் சுலபமாகக் கையாள முடியும். 

ஒற்றை அனலாக் ஸ்பீடோமீட்டருக்குள்ளே இருக்கும் சின்ன டிஸ்ப்ளேவில் ஓடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ட்ரிப் மீட்டர் தெரிகின்றன. ஸ்பீடோ மீட்டருக்கு மேலே இருக்கும் ஒரு பட்டையில் நியூட்ரல், இண்டிகேட்டர், லோ ஃப்யூல் வார்னிங் விளக்குகள் இருக்கின்றன. பெரிய பெட்ரோல் டேங்க் இருப்பதால், ஃப்யூல் கேஜைச் சேர்க்க ஹார்லி டேவிட்சன் விரும்பவில்லை. மற்ற ஹார்லி டேவிட்சன் பைக்குகளைப் போலவே, இதிலும் இண்டிகேட்டர்களுக்குத் தனித் தனி ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டிருப்பது, வசதியாக இல்லை. பட்டன்கள் பொசிஷன் செய்யப்பட்டுள்ள விதமும் வசதியாக இல்லை. 5 ஸ்போக்குகளைக்கொண்ட அலுமினியம் வீல், க்ரோமில் மின்னுகிறது. Forty-Eight பைக்கைவிட 1200 கஸ்டம் சற்று அதிக வீல்பேஸையும், எடையையும் கொண்டிருந்தாலும், பைக்கை ஓட்டுவது கடினமாக இல்லை.

கஸ்டம் கையாள சுலபம்!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

1200 கஸ்டம் பைக்கில் இருக்கும் 45 டிகிரி V-ட்வின், ஏர் கூல்டு 1,202 சிசி இன்ஜின், Forty-Eight பைக்கில் இருந்து பெறப்பட்டிருக்கிறது. அதிர்வுகளைக் குறைப்பதற்காக ரப்பர் மவுன்ட்டிங் செய்யப்பட்டிருந்தாலும், ஐடிலிங்கில் அதிகப்படியான அதிர்வுகளை உணர முடிகிறது. கியர் மாற்ற, அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. 9.6kgm டார்க் இருப்பதால், 2,000 ஆர்பிஎம்மில் இருந்தே பவர் கிடைக்கிறது. 6,000 ஆர்பிஎம் வரை இயங்கினாலும், இன்ஜினுக்கு ஃப்யூல் செலுத்தப்படும் விதம் சீராக இல்லாததால், குறைவான வேகத்தில் பைக்கை ஓட்டுவது சிரமமாக இருக்கிறது.

கஸ்டம் கையாள சுலபம்!

கிளட்ச் எடை அதிகமாக இருப்பதால், டிராஃபிக்கில் கை வலிப்பது நிச்சயம். இன்ஜின், அதிகப்படியான வெப்பத்தை உமிழ்கிறது. ஹார்லி டேவிட்சன் பைக்குகள் நெரிசல் குறைவான நெடுஞ்சாலைகளுக்காகத் தயாரிக்கப்பட்டது என்றாலும், இந்த பைக்கை வாங்குவோர் நகருக்குள்ளே அதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. நெடுஞ்சாலையில் 100-120 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆனால், அதை அடைவதற்கு பைக்கின் சீரற்ற ஃப்யூலிங் பெரும் தடையாக இருக்கிறது. நகரத்தில் 15.21 கி.மீ-யும் மற்றும் நெடுஞ்சாலையில் 18.38 கி.மீ-யும் மைலேஜும் கிடைக்கிறது.

கஸ்டம் கையாள சுலபம்!

ஓட்டுதல் தரம், கையாளுமை

சொகுசான இருக்கை மற்றும் வசதியான ஹேண்டில் பார் காரணமாக, நீண்ட தூரப் பயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். சஸ்பென்ஷன் இறுக்கமாக செட் செய்யப்பட்டிருப்பதால், மேடு பள்ளங்களில் சாலையின் தன்மையை உணர முடிகிறது. அந்தச் சமயத்தில் தனது நிலைத்தன்மையை பைக் சற்றுத் தவற விடுகிறது. பைக்கின் அதிக எடை (268 கிலோ), இந்தப் பிரச்னையைப் பெரிதாக்குகிறது. பின் பக்க சஸ்பென்ஷன் டிராவல் மிகக் குறைவாக இருப்பதால், நம் சாலைகளில் வலியில்லாமல் செல்வது கடினம். அகலமான டயரால் முன்பக்கத்தின் எடை கூடியிருந்தாலும், பைக்கைக் கையாள்வது சுலபமாகவே இருக்கிறது. இரட்டை பிஸ்டன்களைக் கொண்ட முன்பக்க டிஸ்க் பிரேக்குகளின் திறன் அட்டகாசம். ஆனால், பைக்கில் இருக்கும் மிஷ்லின் டயர்கள் அதனைத் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்படவில்லை. ஏபிஎஸ் இல்லாத காரணத்தாலும், டயர்களின் கிரிப் போதுமான அளவில் இல்லாததாலும், இந்த பைக்கின் வேகத்தைச் சட்டென குறைப்பது, வீல்களை லாக் செய்து விபத்துக்கு வழிவகுக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு