Published:Updated:

ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!
ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

ஒப்பீடு / மோஜோ Vs தண்டர்பேர்டு 500 Vs ஹிமாலயன்தொகுப்பு : ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம், ஹிமாலயன். இந்த பைக்கை சிம்லாவில் ஓட்டியபோது, அதன் பன்முகத் திறமைகள் நன்கு வெளிப்பட்டன. தற்போது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஹிமாலயன் மட்டுமல்லாது அதன் முக்கிய போட்டியாளர்களான மஹிந்திரா மோஜோ மற்றும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தோம்.

தண்டர்பேர்டு பைக் ஒரு க்ரூஸர் என்றாலும், பலர் அந்த பைக்கில் பெட்டி படுக்கைகளோடு டூர் செல்வதைக் காண முடியும். டெக்னிக்கல் விவரங்கள் மற்றும் டிஸைனில் அசத்தும் மோஜோவை, ஸ்போர்ட்ஸ் டூரராக பொசிஷன் செய்துள்ளது மஹிந்திரா. இதுதான் இந்த பைக்குகளை ஒப்பிடத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம். ஒவ்வொரு பைக்குக்கும் இடையே, 15,000 ரூபாய் விலை வித்தியாசம்; இன்ஜின் அளவுகளில் வேறுபாடு இருந்தாலும், டூரர் என்ற தகுதி இவற்றை ஒன்று சேர்க்கிறது.

இன்ஜின், சேஸி, சஸ்பென்ஷன்

ராயல் என்ஃபீல்டின் தயாரிப்புகள் தான், இங்கிருக்கும் பைக்குகளிலேயே விலை குறைவான (ஹிமாலயன்) மற்றும் விலை அதிகமான (தண்டர்பேர்டு) பைக்குகள். பெரிய இன்ஜின் (499 சிசி), அதிக பவர் (27.6bhp) மற்றும் டார்க் (4.13kgm), ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் எனக் கூடுதல் விலையை நியாயப்படுத்த ஓரளவுக்கு முயற்சி செய்கிறது தண்டர்பேர்டு. முற்றிலும் புதிய
411 சிசி இன்ஜினைக் கொண்டிருக்கும் ஹிமாலயன், தொழில்நுட்பத்தில் அசத்தவில்லை. ஆனால், தண்டர்பேர்டு பைக்கில் இருக்கும் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, ஆயில் கூலர் மற்றும் புஷ் ராடுகளுக்குப் பதிலாக, ஓவர்ஹெட் கேம் போன்ற சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஆரம்பம் மற்றும் மிட் ரேஞ்ச் வேகத்துக்காக இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

எனவே, இங்கிருக்கும் பைக்குகளிலே குறைவான பவரை (24.8bhp) வெளிப்படுத்தும் ஹிமாலயன், மோஜோவைவிட அதிக டார்க்கை (3.2kgm) வெளிப்படுத்துகிறது. லிக்விட் கூலிங், 4 வால்வுகள், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் என அசத்துகிறது மோஜோவின் 295 சிசி இன்ஜின். சேஸி மற்றும் சஸ்பென்ஷன் விஷயத்தில், தண்டர்பேர்டு சிம்பிளான அமைப்பைக்கொண்டிருக்கிறது. சிங்கிள் டவுன் ட்யூப் ஃப்ரேமில், இன்ஜின் Stressed Member ஆக இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் இரட்டை ஷாக் அப்ஸார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்டர்பேர்டுதான் எடை அதிகமானது (195 கிலோ) என்றாலும், இதன் குறைவான 775 மிமீ Saddle Height, உயரம் குறைவானவர்களும் பைக்கைப் பயன்படுத்த எளிதானதாக மாற்றிவிடுகிறது.
ட்யூப்ளர் பெரிமீட்டர் ஃப்ரேம், அப்சைடு டவுன் ஃபோர்க்ஸ் - மோனோஷாக் சஸ்பென்ஷன், முன்பக்கம் 320 மிமீ டிஸ்க், பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் என மெக்கானிக்கல் விஷயங்களிலும் மோஜோ முன்னிலை வகிக்கிறது.

ஸ்ப்ளிட் க்ரேடில் ஃப்ரேம், முன்பக்கம் லாங் ட்ராவல் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் லிங்க்ட் மோனோஷாக் சஸ்பென்ஷன், ஸ்போக் வீல்களில் ஆன்-ஆஃப் ரோடுக்கான டயர்கள் என, தான் ஒரு அட்வென்ச்சர் பைக் என்பதை நிருபிக்கிறது ஹிமாலயன்.

ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

ஓட்டுதல் அனுபவம்

சிட்டி டிராஃபிக்குக்கு ஏற்ற வேகத்தில், மோசமான சாலைகளில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை, மிருதுவாக இருக்கும் ஹிமாலயனின் சஸ்பென்ஷன் நன்கு சமாளிக்கிறது. 2,000 ஆர்பிஎம்-க்கு மேலே போதுமான டார்க் கிடைப்பதால், நகரத்தில் இந்த பைக்கை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருப்பதால், ஹெவியான கிளட்சைப் பிடித்து கியர் மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். குறைவான வேகத்தில் செல்லும்போது, மோஜோவின் எடையை நம்மால் உணர முடிகிறது. மேலும், ஹிமாலயன் போல இதன் ஹேண்டில்பார் ரெஸ்பான்ஸ் இல்லை. இதில் இருக்கும் இரட்டை எக்ஸாஸ்ட்கள் வெளியிடும் சத்தம் ரசிக்கும்படி இருக்கிறது. 4 வால்வுகளைக்கொண்ட இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதுடன், 4,000 ஆர்பிஎம்-க்கு மேலே பவர் டெலிவரி சூப்பராக இருக்கிறது.

மோஜோவின் கிளட்ச் எடை குறைவாக இருப்பதுடன், கியர்களும் துல்லியமாக மாறுகின்றன. க்ரூஸர் ஸ்டைலில், பின்னோக்கி வடிவமைக்கப்பட்டிருக்கும் உயரமான ஹேண்டில்பார் மற்றும் முன்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ் காரணமாக, தண்டர்பேர்டில் சொகு சான சீட்டிங் பொசிஷன் கிடைக்கிறது. ஆனால், இதன் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உரிய சத்தம், ரிலாக்ஸாக பைக்கை ஓட்டத் தூண்டுகிறது.

ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

பெர்ஃபாமென்ஸ்

ஸ்மூத்தான நெடுஞ்சாலைக்கு ஏற்றது, வேகமானது - மோஜோதான். 0 - 100 கி.மீ வேகத்தை 9.5 விநாடிகளில் எட்டிப் பிடிக்கும் இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 143 கிமீ. ஆனால், ஒரு டூரர் பைக்குக்கு அடிப்படையான டாலர் கியரிங் (Taller Gearing) மோஜோவில் மிஸ்ஸிங். 100 கி.மீ வேகத்தில் செல்லும்போது, ஃபுட் பெக்கில் அதிர்வுகள் எட்டிப் பார்க்கின்றன. மேலும், இன்ஜின் அந்த வேகத்தில் நிலைத்திருக்காமல், கூடுதல் வேகத்தை எட்டவே ஆர்வம் காட்டுவதை உணர முடிகிறது. ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் போல, விரைவாக கியர் மாற்றி விரட்டி ஓட்டப்படுவதையே மோஜோவின் இன்ஜின் விரும்புகிறது.

அதிகபட்சமாக 133 கி.மீ வேகத்தை எட்டும் தண்டர்பேர்டு, பொறுமையாக 0 - 100 கி.மீ வேகத்தை 12.5 விநாடிகளில் எட்டுகிறது. அப்படி மூன்று இலக்க வேகத்தில் செல்லும்போது, அதிர்வுகள் பைக்கை ஆட்டிப் படைக்கின்றன. பைக்கும் அதன் கம்ஃபர்ட் ஸோனில் இருந்து வெளியே வந்துவிட்டது போலத் தோன்றுகிறது. எனவே, டாப் கியரில்... 3,000 ஆர்பிஎம்-ல்... 80 கி.மீ வேகத்தில் நாள் முழுக்க பயணிக்கவே தண்டர்பேர்டு விருப்பப்படுகிறது. தண்டர்பேர்டு பைக்குக்கு நேர்மாறாக இருக்கிறது ஹிமாலயன். அதிர்வுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன், 7,000 ஆர்பிஎம் வரை பைக்கை விரட்ட முடிகிறது. ஆனால், 5,000 ஆர்பிஎம்மிலேயே பவர் வெளிப்பாடு தனது உச்சத்தை எட்டி விடுவதை இங்கு சொல்லியாக வேண்டும். எதிர்பார்த்தபடியே ஹிமாலயனின் அதிகபட்ச வேகம் (128 கி.மீ) குறைவாக இருந்தாலும், 0 - 100 கி.மீ வேகத்தை தண்டர்பேர்டு பைக்குக்கு முன்பாகவே எட்டிவிடுகிறது (10.8 விநாடிகள்). ஹிமாலயன் வெளிப்படுத்தும் சத்தம், எரிச்சலை ஏற்படுத்துகிறது. பவர் குறைவாக இருந்தாலும், டாப் கியரில் 80 - 110 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது. மிட் ரேஞ்ச் பவர் வெளிப்பாடு நன்றாக இருப்பதால், நெடுஞ்சாலையில் இந்த பைக்கை ஓட்டுவது மனநிறைவைத் தருகிறது.

பிரேக்ஸ் மற்றும் கையாளுமை

ஹிமாலயனின் முன்பக்க டிஸ்க் பிரேக் டல்லாக இருக்கிறது. பிரேக் லீவரை முழுவதுமாகப் பிடித்தால்தான், போதுமான பிரேக்கிங் திறன் வெளிப்படுகிறது. ஆனால், பைக்கின் கையாளுமை ஓட்டுநருக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் அமைந்திருப்பது ஆறுதல். சியட் நிறுவனத்தின் ஆன்-ஆஃப் ரோடு Gripp  XL டயரைக்கொண்டிருக்கும் ஹிமாலயனை, வளைத்து நெளித்து ஓட்ட முடிவது ஆச்சரியம்.

ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

மோஜோவின் முன் பக்க டிஸ்க் பிரேக்கின் செயல்பாடு சுமார்தான். ஆனால், பின்பக்க டிஸ்க் பிரேக் அநியாயத்துக்கு ஷார்ப்பாக இருக்கிறது. எனவே, பின் பக்க வீல் லாக் ஆக வாய்ப்பு உண்டு; கவனம். டெக்னிக்கல் மற்றும் மெக்கானிக்கல் விவரங்களைப் பார்க்கும்போது, மோஜோவின் கையாளுமை ஸ்போர்ட்டியாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் விதமாக, திருப்பங்கள் மற்றும் நேரான சாலைகளில் செல்லும்போது, மோஜோ நாம் எதிர்பார்த்த திசையில் செல்லாமல் அலைபாய்கிறது. எனவே, ஹேண்டில்பாரை அடிக்கடி திருத்திக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இதில் இருக்கும் பைரலி Diablo Rosso II டயர்கள், பைக்குக்கு அட்டகாசமான ரோடு கிரிப்பை அளிக்கின்றன. தண்டர்பேர்டு பைக்கின் கையாளுமை, யூகிக்கக் கூடிய அளவிலே இருக்கிறது. முன்பக்க டிஸ்க் பிரேக்கின் செயல்பாடு சூப்பராக இருப்பதால், திருப்பங்களில் செல்லும்போதுகூட தைரியமாக வேகத்தைக் குறைக்க முடிகிறது. அதற்காக, இதன் கையாளுமையை ஹிமாலயனுடன் ஒப்பிட முடியாது.

ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

ஓட்டுதல் தரம்

சீரற்ற சாலைகளில் வேகமாகச் செல்லும்போது, தண்டர்பேர்டின் சஸ்பென்ஷன் தனது பணியை முழுமையாகச் செய்யவில்லை. ஆனால், பைக்கின் சீட்டிங் பொசிஷன் மற்றும் இருக்கைகளின் சொகுசு நன்றாக இருப்பதால், இது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை. மோஜோவின் சீட், வலியை ஏற்படுத்துகிறது. மேலும், கம்யூட்டர் பைக் போல இதன் ஃபுட் பெக்ஸ் முன்பக்கம் பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. குறைவான வேகங்களில் சிறப்பாகச் செயல்படும் மோஜோவின் சஸ்பென்ஷன், அதிக வேகங்களில் சொதப்புகிறது. ஹிமாலயனின் லாங் ட்ராவல் சஸ்பென்ஷன், மோசமான சாலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்கிறது. சீட்டிங் பொசிஷனும் வசதியாக இருப்பதாலும், அதிக வேகங்களில் பைக் நிலையாகச் செல்வதாலும், நீண்ட தூரப் பயணங்களை எளிதாக இதில் மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ!

இந்த ஓப்பீட்டில் இருந்து தெளிவாகத் தெரியும் விஷயம் - தண்டர்பேர்டு, ஹிமாலயனுக்கு உண்மையான போட்டியாளர் இல்லை. ஏனெனில், சொகுசான க்ரூஸர் அனுபவத்தைத் தரும் இந்த பைக், ஹிமாலயனுடன் ஒப்பிடும்போது கட்டுமானத் தரத்தில் பின்தங்கிவிடுகிறது. இந்த மூன்று பைக்கில் மாடர்ன் சஸ்பென்ஷன், பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ் எனத் தொழில்நுட்ப ரீதியாக சிறந்து விளங்கும் மோஜோ, டூரர் பைக் என்பதற்கான தகுதிகள் இன்றித் தவிக்கிறது. அதற்கு, அந்த பைக்கின் சேஸி செட்-அப் முக்கியக் காரணம்.

எரிச்சலைத் தரும் இன்ஜின் சத்தம், ஹெவியான கிளட்ச், திறன் குறைவான பிரேக்குகள், கூடுதல் பவர் இல்லாதது என ஹிமாலயனில் பல குறைகள் இருந்தாலும் - பைக்கின் ஓட்டுதல் தரம், சொகுசு, ஆஃப் ரோடு திறன், கையாளுமை அவற்றை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. எனவே, ஹிமாலயன்தான் சிறந்த டூரர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு