Published:Updated:

2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்!
2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்!

பயணம் / ராயல் என்ஃபீல்டுதமிழ்

பிரீமியம் ஸ்டோரி
2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்!

‘ஒரு மனுஷன் வீடு வந்து சேர்றதுக்குள்ள எவ்வ்வ்வளவு சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கு!’ என்று வடிவேலு சொல்வது எவ்வளவு உண்மை! சாதாரணமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினால் டிராஃபிக், வாகனப் பிரச்னை, மழை, வெயில், போலீஸ் என்று எக்கச்சக்க சிக்கல்களைத் தாண்டித்தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.

ஆனால், சென்னையைச் சேர்ந்த சக்திவேல், பிரவீன் ஆகிய இருவரும் - இந்தியா முழுக்க 8,100 கி.மீ-களை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து, எக்கச்சக்க அனுபவங்களையும், நினைவுகளையும் அள்ளி வந்திருக்கிறார்கள். ‘‘இந்த 25 நாள் எங்க வாழ்க்கையிலேயே மறக்கவே முடியாது!’’ என்று ஹெல்மெட்டைக் கழற்றியபடி இருவரும் தங்கள் அனுபவங்களை மாறி மாறிச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

சக்திவேல்: ‘‘நாங்க ரெண்டு பேருமே இன்ஜினீயர்ஸ்! ஆனா, போட்டோகிராஃபிதான் எங்களோட கனவு. அதைவிட, பைக் ஓட்டுறது பிடிக்கும். அதுக்கும் மேல - புல்லட்! பிரவீன் தண்டர்பேர்டு 350 வெச்சிருக்கார். ஹைதரபாத்தில் ஒரு போட்டோகிராஃபி ஃபங்ஷன்ல, ‘நாம ஜாலியா புல்லட்ல ஒரு லாங் ட்ரிப் அடிச்சா என்ன?’னு பிரவீன்தான் திடீர்னு ஒரு ஐடியா கொடுத்தார். நான் இதுக்காகவே எலெக்ட்ரா 350 வாங்கினேன். நாலே நாள்ல எனக்கு பைக்கை டெலிவரி கொடுத்தது ராயல் என்ஃபீல்டு. இது வரலாற்றிலேயே எனக்கு மட்டும்தான்னு நினைக்கிறேன். எதையுமே பிளான் பண்ணிப் பண்ணா எங்களுக்கு செட் ஆகாது! அதனால, பெருசா எதுவும் பிளான் பண்ணாம, தடால்னு ஒரு நைட்டு புல்லட்டுகளைக் கிளப்பிட்டோம். பெசன்ட் நகர் பீச்ல இருந்து கிளம்பி, பாண்டிச்சேரி போயி, அங்கே இருந்து கன்னியாகுமரி, கேரளா, மங்களூர், கோவா, சத்தாரா, அஜந்தா குகை, இந்தூர், ஆக்ரா, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், ஸ்ரீநகர் வழியா லே, லடாக்னு போயிட்டு, மறுபடியும் சென்னை - இதுதான் எங்க ரூட் மேப்! டூர் முடிச்சுட்டு வந்ததும், மனசுக்குள்ள ஏதோ ஒரு திருப்தி + தன்னம்பிக்கை!’’

2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்!

பிரவீன்: ‘‘போட்டோகிராஃபி படிக்கிறப்ப நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். ஆனா, புல்லட்தான் எங்களை திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக்கிச்சு. ஏதாவது சாதிக்கணும்னு நாங்க இதைப் பண்ணலை. ஒரு ஜாலிக்காகப் பண்ணோம். வழியில நிறைய அனுபவங்கள். என்னோட தண்டர்பேர்டு பழைய மாடல்ங்கிறதால, அடிக்கடி பிரச்னை பண்ணுச்சு. ஆக்ஸிலரேட்டர் கேபிள், கிளட்ச் கேபிள், டிஸ்க் பேடு, ஸ்பார்க் ப்ளக், ஸ்பேர் டியூப்னு எல்லாமே எங்ககிட்ட கைவசம் இருந்துச்சு. அதனால தப்பிச்சோம். பெரும்பாலும் நாங்க நைட் டிராவல் செய்யலை. இந்தியாவுல 16 மாநிலங்களுக்குப் போயிட்டு வந்துட்டோம். மோசமான சாலைனு பார்த்தா கேரளாவில் இருந்து மங்களூர் போற சாலை ரொம்ப டஃப் கொடுக்குது. அதனால, அங்கே மட்டும் இரவுப் பயணம் கட்டாயமாகிடுச்சு! டாப் ஸ்பீடே 30 கி.மீதான்னா பார்த்துக்கோங்க!

சக்திவேல்: “பெரும்பாலும் நாங்க ரூம் எடுத்துத் தங்கின நாட்கள் குறைவுதான். நிறைய தாபாக்கள்ல, தமிழர்கள் மேல ரொம்பக் கரிசனமா இருக்காங்க. ‘இங்கேயே தங்கிக்கோங்க தம்பிங்களா’னு பஞ்சாப் தாபா ஓனர்ஸ் சிலர் இடம் கொடுத்தாங்க. மைனஸ் டிகிரின்னு இதுவரை கேள்விதான் பட்டிருக்கோம். ஆனா, ஸ்ரீநகர்ல மைனஸ் 5 டிகிரியில் தங்கி சாதனை பண்ணிட்டு வந்தது, இப்போ நினைச்சாலும் ஜில்லுனு இருக்கு. நமக்கே இப்படின்னா பைக்குகளுக்குச் சொல்லவே வேண்டாம். புல்லட் மேல ஐஸ் கட்டிகளா சூழ்ந்து, அதை ஸ்டார்ட் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. அங்கேதான் நாங்க ரூம் எடுத்துத் தங்க வேண்டியதாப் போச்சு. ‘இந்தக் குளிர்ல வண்டிங்கள்லாம் போகாது. பனிமழை பெய்யுது. இப்போ கிளம்பினா மாட்டிப்பீங்க.. ரோடும் பிளாக் பண்ணிருப்பாங்க’னு ஐடியா கொடுத்தாங்க. அதான் ஸ்ரீநகர்ல 3 நாள் தங்கினோம். அது ரொம்ப ஜிலீர் அனுபவம்!’’

2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்!

பிரவீன்: ‘‘பயணத்துல நாங்க விழி பிதுங்கினது மொழிப் பிரச்னையாலதான். எங்க ரெண்டு பேருக்குமே இந்தி தெரியாது. மத்தியப் பிரதேசத்தில் இருந்து எங்கேயும் ஆங்கிலத்தில் ஒரு சைன் போர்டுகூட இல்லை. ஒவ்வொரு ‘பையா’க்களிடமும் கேட்டுக் கேட்டுப் பயணம் செஞ்சது - அதுவும் இன்ட்ரஸ்ட்டிங். அதைவிட, லே - லடாக் பகுதியில வழக்கம்போல இந்திய ராணுவத்திடம் சிக்கி, மொழி தெரியாமல் பதில் சொல்லி அவஸ்தைப்பட்டோம். பெரும்பாலும், லடாக் வர்றவங்க டெல்லியில புல்லட் வாடகைக்கு எடுத்துட்டுத்தான் வருவாங்க. ஆனா, தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் புல்லட்டைப் பார்த்தவுடனே புரிஞ்சுக்கிட்டாங்க. அப்புறம் எங்களோட ஆர்வத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. ‘பார்த்துப் போகணும்... 18,000 அடி உயரத்துக்கு மேல இருக்கீங்க.. மூச்சுவிட சிரமமா இருக்கும். ஆக்ஸிஜன் ட்யூப் வெச்சுக்கோங்க.. பனிச் சரிவு இருக்கும்’னு ஏகப்பட்ட அட்வைஸ்!’’

சக்திவேல்: ‘‘நாங்க ரொம்பப் பயந்தது ஸ்ரீநகரில்தான். - என்ன அமைப்புனு தெரியலை... ‘ஆன்ட்டி இந்தியன்ஸ்’ங்கிற கோஷம் எழுப்பி, கல்லெறிச் சண்டை, பாட்டில் வீசுறதுனு கலவரம் பண்ணினப்போ, போட்டோ எடுத்து சிக்கிக்கிட்டோம். எங்களையும் தாக்க வந்தப்போ, அங்கே இருந்த ஒரு தமிழர்தான் எங்களைக் காப்பாத்தினார். கேமராவுல இருக்குற போட்டோக்களை எல்லாம் டெலிட் பண்ணிட்டு, வார்ன் பண்ணிட்டு அனுப்பிட்டாங்க! ‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரசாங்கத்துக்கு எதிரா இந்த அமைப்பு போராடுவாங்க.. ‘இனிமே வெள்ளிக்கிழமை இந்தப் பக்கம் வந்திடாதீங்க’னு எச்சரிச்சு அனுப்பினார் ஒரு தமிழர்.

தமிழன், காப்பாத்துவான் சார்!”

பயணம் போகும்போது என்னென்ன கவனிக்க வேண்டும்?

•  எங்கே தங்கப் போகிறோம்? எந்த ரூட் என எல்லாமே முன்கூட்டியே பிளான் செய்ய வேண்டும். ஆனால், நாம் திட்டமிட்டபடி எதுவும் நடக்காது என்பது வேறு விஷயம்.

• வாட்டர் பாட்டில், சாக்லேட், ஸ்நாக்ஸ் போன்றவை கையில் இருக்க வேண்டும்.

• பைக்கில் எப்போதுமே எக்ஸ்ட்ரா ஸ்பேர்ஸ் இருக்க வேண்டியது அவசியம். ட்யூப், கிளட்ச்-ஆக்ஸிலரேட்டர் கேபிள்கள், பிரேக் பேடுகள், இன்ஜின் ஆயில், ஸ்பார்க் ப்ளக் போன்றவை ரொம்ப முக்கியம்.

• ஹெல்மெட், ஜாக்கெட், க்ளோவ்ஸ், ‘நீ பேட்’ போன்ற பாதுகாப்புச் சாதனங்கள் அவசியம்.

• தேவையான அளவு மட்டுமே பணம் வைத்திருப்பதுதான் சேஃப்டி. மடியில் கனம் இருந்தால், வழியில் பயம் இருக்கத்தான் செய்யும். எனவே, ஏடிஎம் - கிரெடிட் கார்டு போன்றவை பெஸ்ட்.

• ரொம்ப முக்கியமான விஷயம் - எக்ஸ்ட்ராவாக இரண்டு மொழிகள் தெரிந்து வைத்திருந்தால் நலம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு