Published:Updated:

சின்ன இனோவா!

கிளாஸிக் கார் / தேவூ மேட்டிஸ்இரா.த.சசிபிரியா, படங்கள்: தே.தீட்ஷித்

பிரீமியம் ஸ்டோரி
சின்ன இனோவா!

இந்தியாவில் 1999-ம் ஆண்டு கொரியன் ஆட்டோமொபைல் நிறுவனமான தேவூ மோட்டார்ஸ் (Daewoo Motors), ‘சிட்டி கார்’ செக்மென்டில் மேட்டிஸ் (Matiz) எனும் பெட்ரோல் காரை அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு வந்த சமயத்தில், மக்களிடம் மேட்டிஸுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்றும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் காராக இருக்கிறது மேட்டிஸ். இதன் உதிரி பாகங்கள் எங்கும் கிடைக்காத நிலையிலும் பராமரித்து, பாதுகாத்து வருவோரும் உண்டு.

திருச்சியைச் சேர்ந்த சையத் ரியாஸ், மேட்டிஸ் மீது காதல் கொண்டவராக இருக்கிறார்.

“என்னுடையது 2001 மாடல் கார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதைப் பயன்படுத்தி வருகிறேன். விற்பனைக்கு வந்த சமயத்தில் இருந்தே எனக்கு இந்த கார் மீது கிரேஸ். அப்போது ‘குஷி’ படத்தில், விஜய் இந்த காரை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டு வருவார். அதிலிருந்தே இந்த காரின் மீது ஆர்வம் வந்தது. நீண்ட நாட்களாக இந்த காரைத் தேடிக் கண்டுபிடித்தேன்.

இதற்கு முன்பு அம்பாஸடர் பயன்படுத்தி வந்தேன். என்னதான் புதிது புதிதாக கார்கள் வந்தாலும் எனக்கு ஓட்ட சுலபமான, ஸ்டைலானது மேட்டிஸ் கார்தான். அந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற சஸ்பென்ஷன், இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் கொண்ட எந்த காரும் இல்லை. லேட்டஸ்ட் கார்களில் உள்ள அத்தனை வசதிகளும் அப்போதே இந்த காரில் இருந்தன. அப்போது, மாருதி காரில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இருந்தது. ஆனால், மேட்டிஸில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், நல்ல சஸ்பென்ஷன், பவர் ஸ்டீயரிங் என அப்போதே தூள் கிளப்பியது. 2007-ல்தான் மாருதியில் காயில் ஸ்பிரிங் டைப் சஸ்பென்ஷன் அறிமுகமானது. இந்த அட்வான்ஸ் வசதிகள் எல்லாம் அப்போதே இந்த காரில் இருந்தன.

ப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இதில் கூடுதல் ப்ளஸ். மேட்டிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் ஹூண்டாய் சான்ட்ரோவில் மட்டுமே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் இருந்தது. மாருதி காரில் கார்புரேட்டர்தான்.

மேட்டிஸில் எனக்குப் பிடித்ததே இதன் கம்ஃபர்ட்தான். ஓட்டுவதற்கு ஈஸியாகவும் ஸ்மூத் தாகவும் இருக்கிறது. பிரேக்கிங், கியர் ஷிஃப்ட்டிங், இன்ஜின், இன்டீரியர் டிஸைன் என அனைத்துமே சூப்பர். இடவசதியும் தாராளமாக இருக்கிறது. உயரமாக இருப்பவர்களுக்கும் சீட்டிங் பொசிஷன் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிட்டி டிரைவிங்குக்கு ஏற்ற கார், மேட்டிஸ்.

விடுமுறையில் குடும்பத்துடன் சென்று வர, பூட் ஸ்பேஸ் போதுமான அளவில் இருக்கிறது. லாங் டிரைவ் சென்றுவந்தால்கூட அலுப்பு தெரியாது. மொத்தத்தில், சின்ன இனோவாபோல் நெடுஞ்சாலையிலும், சிட்டியிலும் பட்டையைக் கிளப்பலாம்.

இதுவரை பிரேக் -டவுன் பிரச்னையே எனக்கு வந்தது இல்லை. இந்த காரில்தான் முதன்முதலில் ஆஷ் ட்ரே, ஆர்ம் ரெஸ்ட் போன்ற வசதிகளும் அறிமுகமாயின.

இந்த காரை நான் 65,000 ரூபாய்க்கு வாங்கினேன். வாங்கியதும் ஒருமுறை காரை முழுமையாக சர்வீஸ் செய்தேன். இதுவரை நான் 30,000 கி.மீ. வரை ஓட்டியுள்ளேன். எனக்கு எந்த விதமான பிரச்னைகளும் இல்லை. சின்னச் சின்ன ரிப்பேர் செலவுகள் மட்டுமே செய்துள்ளேன்.

ஹெட்லைட் மட்டும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். மற்றபடி காரில் எந்த பிரச்னையும் இல்லை. சர்வீஸ் மற்றும் பராமரிப்பு சுலபமாகவே உள்ளது. ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதிலும் பெரிதாக சிரமம் இல்லை. ஏ.சி பயன்படுத்தினால், லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜும். ஏ.சி போடாமல் 18 கி.மீ மைலேஜும் கிடைக்கிறது” என்கிறார் ரியாஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு