Published:Updated:

ரேஸுக்கு நாங்க ரெடி!

ஆக்ஸிலரேட்டர் முறுக்கும் பெண்கள்!ரேஸிங் அகாடமி / அலீஷாக.தனலட்சுமி

பிரீமியம் ஸ்டோரி
ரேஸுக்கு நாங்க ரெடி!

சென்னை இருங்காட்டுக்கோட்டை... அனல் பறக்க நடந்த அந்த பைக் ரேஸ் முடியவும், ரேஸர்கள் ஹெல்மெட்டை அகற்ற... பார்வையாளர்கள் பலருக்கும் பயங்கர ஷாக். அவ்வளவு நேரமும் டிராக்கில் சீறிப் பறந்தவர்கள் அனைவருமே ஜஸ்ட் 20+ கேர்ள்ஸ். வளரும் ரேஸிங் பேர்ட்ஸ்!

அலிஷா அப்துல்லா... இந்தியாவின் முதல் பைக் ரேஸர். ரேஸிங் மீது கிரேஸ் உள்ள பலரின் இன்ஸ்ப்ரேஷன்.

எட்டு வயதில் தன் அப்பாவின் அப்பாச்சி பைக்கில் ஆரம்பித்து, இன்று கோ-கார்ட் தொடங்கி போலோ கப் வரை பல களங்களைக் கண்ட 26 வயது அலிஷாவின் புதிய அத்தியாயம்தான் ‘அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமி.’

ஜுன் மாதம் நடக்கவிருக்கும் சாம்பியன் ஷிப்புக்காக தன் அணியினரை சியர்-அப் செய்துகொண்டிருந்த அலிஷாவிடம் ஒரு ஷார்ட் பிரேக்கில் பேசியதிலிருந்து....

“ஜேகே டயர் நேஷனல் சூப்பர் பைக் சாம்பியன்ஷிப், ஃபோக்ஸ்வாகன் போலோ கப் என இது வரையிலும் நான் கலந்துகொண்ட எல்லா ரேஸிலும் என்னுடன் மோதியது ஆண்கள்தான். கிட்டத்தட்ட இதுவரைக்கும் 90 பதக்கங்கள் வாங்கியிருந்தாலும்கூட, தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான கார் பந்தயத்தில் ஐந்தாவது இடத்தில் வந்தது மறக்க முடியாத அனுபவம்.

ரேஸுக்கு நாங்க ரெடி!

நம் நாட்டில்தான் ஆண் - பெண் வேறுபாடு. ஆனால், வெளிநாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் களத்தில் உள்ளனர். உண்மையில் ஆண்களைவிட பெண்கள்தான் அங்கே அவ்வளவு வேகம். நினைத்தாலே சிலிர்க்கிறது!’’ எனச் சிலாகித்து பேசும் அலிஷாவுக்கு, அந்தச் சமயத்தில் தோன்றியதுதான் இந்தப் பயிற்சி மையத்திற்கான ஸ்பார்க்.

‘‘ரேஸ் என்றாலே அது ரிச் கேம்; பணக்காரர்களுக்கான ஸ்போர்ட் என்பதும்... பெண்கள் என்றால் லேடி பேர்ட் சைக்கிள் ஓட்டவும், ஆண்கள் பின்னால் பைக் பில்லியனில் உட்கார்ந்துபோக மட்டும்தான் முடியும் என்பதும்தான் இங்கே பலருடைய கருத்தும்கூட! இந்தத் தவறான கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வீடு இருக்கும் தெருவையே ரேஸ் டிராக்காக நினைத்து வலம் வந்துகொண்டிருக்கும் பெண்கள் பலரையும், உலகம் முழுக்கச் சுற்றி வரும் ரேஸ் சாம்பியன்களாக மாற்ற வேண்டும். இந்த உந்துதலின் வெளிப்பாடுதான் ‘அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமி.’

சமூக வலைதளங்களில் இது பற்றி அறிவிப்பு வெளியிட்டதோடு, தமிழ்நாட்டில் உள்ள 10 கல்லூரிகளுக்குச் சென்று மாணவிகளைச் சந்தித்து ரேஸ் பற்றிப் பேசினேன். ஆர்வத்தோடு வந்த பல பெண்களின் முதல் தயங்கியது, அவர்களது பெற்றோர் பற்றித்தான். சாலையில், டிராஃபிக்கில் ஓட்டுவதைவிட டிராக்கில் ஓட்டுவது பாதுகாப்பானது என்பதைப் புரியவைத்து, 80 பெண்களைத் தேர்வு செய்தேன். இதில் கோவா, பெங்களூரு என இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பித்த பெண்களும் அடக்கம்.

ரேஸுக்கு நாங்க ரெடி!

அவர்களுக்கான இறுதிக்கட்டத் தேர்வுதான் இருங்காட்டுக் கோட்டையில் நடந்து முடிந்த ரேஸ். இதில், தேர்வு செய்யப்பட்டுள்ள 18 பெண்கள் நடக்கவிருக்கும் வுமன் ரேஸிங் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடப் போகும் சூறாவளிகள்!’’ என்றார் அலிஷா.

தேர்வாகி இருக்கும் பெண்களுக்கு ரேஸ் பைக், பெட்ரோல், தங்குவதற்கான வசதி, ஹெல்த் டிரிங்க்ஸ், ரேஸிங் காஸ்ட்யூம்ஸ் என அனைத்துக்குமே தானே ஸ்பான்ஸர்களை ஏற்பாடு செய்திருக்கிறார் அலிஷா. மற்ற விளையாட்டுகளைப்போன்று ரேஸுக்குத் தினசரிப் பயிற்சிகள் எடுக்க முடியாது. ஒருவருக்கு ஒரு நாள் பயிற்சிக்கே குறைந்தது இருபதாயிரம் வரை செலவாகும் என்பதால், வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி அளிக்கிறார்.

‘‘நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க கேர்ள்ஸ்?” என்று டிராக்கில் பிஸியாக இருந்த சிலரை அணுகினோம். தங்களது முதல் ரேஸிங் அனுபவத்தை செல்லமான படபடப்புடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் பட்டாம்பூச்சிப் பெண்கள்.

ரேஸுக்கு நாங்க ரெடி!

‘‘‘என்னடா மச்சி, இந்தப் பொண்ணு கேடிஎம் பைக்ல இப்படிப் பறக்கறா... ச்சே, நம்மல்லாம் வேஸ்டுடா’ - இதுதான் என்னைக் கடந்து செல்லும் என் காலேஜ் பாய்ஸின் இப்போதைய புலம்பல்!’’ என்று ஆரம்பித்த ஹரிதா, 18 பெண்களில் மூன்றாவது இடம் பிடித்தவர். பெங்களூருவில் பொறியியல் படிக்கிறார். ‘‘சின்ன வயசுல இருந்தே பைக்னா அவ்வளவு இஷ்டம். சுதந்திரத்தை வெளிப்படுத்த ஒரு சூப்பரான வழி பைக்தான். பத்தாம் வகுப்பு படிக்கறப்போ வீட்டில கேடிஎம் ட்யூக் வாங்கித் தந்தாங்க... பெங்களூருவில் ஃப்ளைட் போற டிராக்கில் பைக் ஓட்டிருக்கேன். டிராக்கில் ஆசை தீர எவ்வளவு வேகத்துலயும் பறக்கலாம்!’’ என குஷியில் குதிக்கிறார் ஹரிதா.

‘‘ஃபேஸ்புக் மூலமாதான் அலிஷா அகாடமியில ஜாயின் பண்ணுனேன். பொதுவா பொண்ணுங்க பைக்கைத் தொட்டாலே வீட்டுல பயப்படுவாங்க... ஆனா, என் அம்மா என்னை பைக் ஓட்ட என்கரேஜ் பண்ணுவாங்க. லவ் யூ அம்மா!’’ என்கிறார் பிரியங்கா.

‘‘அப்பாவோட பைக் மீது சொல்லப்படாத காதல் எப்பவுமே பொண்ணுங்களுக்கு இருக்கும். ஆனா, அது பலருக்கும் ஒரு கனவாகவே போயிடுது. அப்படியே பைக் ஓட்டினா கூட தெரு வரைக்கும் ஓட்டத்தான் அவங்களுக்கு லைசென்ஸ் கிடைக்கும். ரேஸ்னாலே டேஞ்சர்; பணம் வேணும். இந்த பயம்தான் தடைகளுக்குக் காரணம். இந்தத் தடைகள் எதையும் பற்றியும் யோசிக்காதீங்க. நீங்கள் பைக் ஓட்டுவதில் ஆர்வமாக உள்ள பெண்ணாக இருந்தால் மட்டும் போதும்; உங்கள் கனவை நனவாக்கக் காத்திருக்கிறது அலிஷா அகாடமி’’ என்கிறார் அலிஷா.

அசத்துங்க கேர்ள்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு