Published:Updated:

இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்!
இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்!

ரீடர்ஸ் ரெவ்யூ / ஃபியட் அபார்த் புன்ட்டோ ஈவோராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்!

என் வீட்டில் நான் முதன்முதலாகப் பார்த்த கார், மாருதி ஆம்னி. பின்பு எனது அப்பா டாடா சியராவுக்கு மாறினார். அந்த காரின் டிஸைன் எனக்கு மிகவும் பிடிக்கும். நகருக்குள் பயணிக்க சின்ன கார் ஒன்று தேவைப்பட்டதால், கட்டுமானத் தரத்துக்குப் பெயர்பெற்ற ஃபியட் பேலியோவை வாங்கினோம். எனக்கு கார் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். கல்லூரி படிக்கும்போது, எனது சொந்தப் பயன்பாட்டுக்காக ஸ்கோடா ஆக்டேவியா VRS வாங்கினேன். இப்போதும் அந்த கார் என்னிடம்தான் இருக்கிறது. இன்றும்கூட அதன் நிலையான பெர்ஃபாமென்ஸ் மற்றும் பாடியின் உறுதித்தன்மை வியக்க வைக்கும். குடும்பப் பயன்பாட்டுக்காக, ஓட்டுதல் அனுபவத்துக்கும் தரத்துக்கும் புகழ்பெற்ற ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவை வாங்கினேன்.

ஏன் அபார்த் புன்ட்டோ ஈவோ?

தொழில் தொடர்பாக, அடிக்கடி காரில் பயணிக்க வேண்டியிருக்கும். எனவே, நெரிசல் மிக்க சாலைகளில் சுலபமாகச் செல்ல, ஒரு சின்ன கார் வாங்கலாம் என எண்ணினேன். தொடர்ச்சியாக பவர்ஃபுல் கார்களையே பயன்படுத்திவந்ததால், நல்ல பெர்ஃபாமென்ஸை வழங்கும் ஹேட்ச்பேக்கைத் தேடிக்கொண்டிருந்த போது, ஃபோக்ஸ்வாகன் போலோ GT மட்டுமே இருந்தது. போலோவுக்கும், வென்ட்டோவுக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை என்பதால், அந்த கார் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. மேலும், அதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. அப்போதுதான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஃபியட் நிறுவனம், சக்தி வாய்ந்த அபார்த் புன்ட்டோ ஈவோ காரைக் களமிறக்கியது. அதில், போலோ GT  மாடலைவிட பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இருந்ததால், என் மனதை அபார்த் புன்ட்டோ ஈவோ முழுவதுமாக ஆக்ரமித்துக்கொண்டது.

இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்!

ஷோரும் மற்றும் சர்வீஸ் அனுபவம்

கார் அறிமுகமானதுடன், சென்னை அண்ணா நகரில் இருக்கும் ஆர்டிசி ஃபியட் ஷோரூமுக்கு விரைந்தேன். டெஸ்ட் டிரைவ் செய்த பிறகு, உடனடியாக காரை புக் செய்தேன். இரண்டு நாட்களில் சொன்னபடியே காரை டெலிவரி செய்தார்கள்.

5,000 கி.மீ கடந்தவுடன் காரை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றேன். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 15,000 கி.மீ.க்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதும் என்று அவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், காரை முழுவதுமாக செக் செய்து, 2 மணி நேரத்தில் என்னிடம் காரை ஒப்படைத்தனர்.

பிடித்தது

ஸ்மூத்தான இன்ஜின்தான் இந்த காரின் மிகப் பெரிய பலம். 143bhp பவர், இந்தியாவிலேயே இதுதான் பவர்ஃபுல் ஹேட்ச்பேக். சஸ்பென்ஷன் செட் செய்யப்பட்ட விதம், பாடி ரோல் சுத்தமாக இல்லை. நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் இருப்பதால், அதிக வேகத்தில் சென்று பிரேக் அடித்தால்கூட, உடனடியாகக் காரை நிறுத்த முடிகிறது. ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங், அற்புதமான கையாளுமையை வழங்குகிறது. சம்மரில் காருக்குள் நுழைந்தவுடன் ஆட்டோமேட்டிக் ஏ.சி உடனடியாக காரின் கேபினை கூல் செய்து விடுகின்றது.

போலோவுடன் ஒப்பிடும்போது, புன்ட்டோவில் இடவசதி அதிகம். காரின் கட்டுமானத் தரம், ராணுவ டேங்க்போல உறுதியாக இருக்கிறது. திறன்மிக்க ஹெட்லைட்ஸ் இருப்பது, இரவு நேர நெடுஞ்சாலைப் பயணங்களின்போது உதவியாக இருக்கிறது. காரின் ஸ்டெபிலிட்டி, கார் முழுமையாக நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

நகரப் பயன்பாட்டைத் தாண்டி, நெடுஞ்சாலையிலும் இந்த காரின் செயல்பாடு பிரமிக்கவைக்கிறது. நகரத்தில் 10-11 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 16-17 கி.மீ-யும் எனக்கு மைலேஜ் கிடைக்கிறது. காரின் ஆடியோ சிஸ்டம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஸ்பீக்கர்கள் மன நிறைவைத் தராததால், அவற்றை மாற்றிவிட்டேன்.

இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்!

பிடிக்காதது

முன் பக்க இருக்கைகள் பொசிஷன் செய்யப்பட்ட விதத்தினால், ஸ்டீயரிங் வீல் ஓட்டுநருக்கு மிக அருகே அமைந்திருக்கிறது. வென்ட்டோவுடன் ஒப்பிடும்போது, புன்ட்டோவின் கிளட்ச் பெடல் டிராவல் அதிகம். 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில், ரிவர்ஸ் கேமரா, டச் ஸ்க்ரீன் சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பார்க்கிங் சென்ஸார், புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்ற வசதிகள் இல்லை.

2,000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டிய பிறகு, காரின் செயல்பாடு வேற லெவல்தான். வழக்கமான புன்ட்டோவுடன் ஒப்பிடும்போது, அபார்த் மாடலில் ஃபியட் பேட்ஜுக்குப் பதிலாக அபார்த் ஸ்டிக்கர்கள் மற்றும் லோகோ, புதிய அலாய் வீல் டிஸைன், சைடு ஸ்கர்ட்ஸ், பின் பக்க ஸ்பாய்லர் ஆகியவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, பெரிய அளவில் அபார்த் புன்ட்டோ ஈவோ தனித்துத் தெரியவில்லை.

காரின் கேபினில் இடம் பெற்றுள்ள பிளாஸ்டிக்கின் தரம் மற்றும் ஃபிட் அண்டு ஃபினிஷ், காரின் விலையை நியாயப்படுத்தும் விதத்தில் இல்லை. போதுமான பூட் ஸ்பேஸ் இருந்தாலும், பின் பக்க இடவசதி குறைவாகவே இருக்கிறது. புன்ட்டோவின் பலமான கிரவுண்ட் கிளியரன்ஸ், இதில் காணாமல் போய்விட்டது.
வென்ட்டோவின் ஸ்மூத்தான கியர்பாக்ஸ் உடன் ஒப்பிடும்போது, அபார்த் புன்ட்டோ ஈவோ காரின் கியர்பாக்ஸில் கியர் மாற்ற, சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பவர்ஃபுல் காரின் எக்ஸாஸ்ட் சத்தம், அதற்கேற்ப இல்லாதது நெருடல்.

என் தீர்ப்பு

என்னதான் குறைகள் இருந்தாலும், ஓட்டுநருக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய கையாளுமை மற்றும் ஸ்டெபிலிட்டி, பவர்ஃபுல்லான இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸ், உறுதியான கட்டுமானத் தரம் போன்றவற்றை விரும்புவர்களையும், உண்மையான கார் ஆர்வலர்களையும் ஃபியட் அபார்த் புன்ட்டோ ஈவோ நிச்சயம் ஏமாற்றாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு