Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி

எனது வயது 55. நான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆல்ட்டோ 800 காரைப் பயன்படுத்தி வருகிறேன். அந்த கார் எனக்கு இதுவரை எந்தவொரு பிரச்னையையும் கொடுக்கவில்லை. ஆனால், டிராஃபிக்கில் கிளட்ச் பிடித்து கியர் மாற்றி ஓட்டுவது சிரமமாக இருக்கிறது. அதனால், 6 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், புதிதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். AMT கியர்பாக்ஸ் கொண்ட ஆல்ட்டோ K10, வேகன்-ஆர், செலெரியோ ஆகியவற்றில் எதை வாங்கலாம்? ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் (3 பேர்) திருப்பதி சென்றுவருவேன். அதனால், அந்த கார் மலைச் சாலைகளில் ஓட்ட சிறப்பாக இருப்பது அவசியம்.

ரமேஷ் கார்த்திக், சென்னை.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மேற்கூறிய மூன்று கார்களிலும் இருப்பது, 67bhp பவர்- 9.1kgm டார்க்கை வெளிப்படுத்தும் 998 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். டிஸைன்தான் மூன்று கார்களையும் வேறுபடுத்துகிறது. உங்களுக்குப் பழக்கப்பட்ட ஆல்ட்டோவின் பேக்கேஜில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேண்டுமென்றால், ஆல்ட்டோ K10 காரைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் கூறியதிலே விலை குறைவான இந்த காரின் பின் பக்க இடவசதி பெரிய மைனஸ். கூடுதல் இடவசதியுடன் பிராக்டிக்கலான கார் தேவை என்றால், வேகன்-ஆர் காரை டிக் செய்யுங்கள். ஆனால், இதன் டிஸைன் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சற்று மாடர்ன் தோற்றம் மற்றும் கேபின் உங்களுக்கு அவசியம் என்றால், செலெரியோ காரைப் பரிசீலிக்கலாம். மூன்று கார்களின் பூட் ஸ்பேஸும் குறைவு என்பதை நினைவில் கொள்ளவும்.

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட், ஹூண்டாய் வெர்னா, க்ரெட்டா, ஹோண்டா சிட்டி ஆகியவற்றில் எதை வாங்கலாம்? நல்ல மைலேஜ், அற்புதமான டிஸைன், நம்பகத்தன்மை, சிறப்பான ஓட்டுதல் தரம் ஆகியவற்றை எனது புதிய கார் கொண்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

மகேஷ், திருப்பூர்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நீங்கள் குறிப்பிட்டவற்றில் முன்பக்க டிஸைனை மறந்துவிட்டுப் பார்த்தால், வென்ட்டோ மற்றும் ரேபிட் இரண்டுமே அடிப்படையில் ஒரே கார்கள்தான். பவர்ஃபுல் இன்ஜின், ஜெர்மன் தொழில்நுட்பம், சூப்பர் பில்டு குவாலிட்டி எனத் தரமான கார்களாக இருந்தாலும், சர்வீஸ் மற்றும் ஸ்பேர்ஸ் விலை ஆகியவற்றால், இவற்றை வாங்கப் பலர் தயங்குகிறார்கள். பெர்ஃபாமென்ஸில் சொல்லியடிக்கும் வெர்னா - இடவசதி, சிறப்பம்சங்கள், ஸ்டைல் ஆகியவற்றில் ஈர்த்தாலும், சஸ்பென்ஷன் செட் செய்யப்பட்ட விதத்தினால், சுமாரான ஓட்டுதல் தரத்தைக்கொண்டிருக்கிறது. மேலும், சியாஸ் மற்றும் டீசல் சிட்டியின் வருகைக்குப் பிறகு, இந்த காரின் விற்பனை கணிசமாகக் குறைந்துவிட்டது.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நல்ல இடவசதி, சொகுசான இருக்கைகள், சீரான பவர் டெலிவரி, போதுமான மைலேஜ் எனப் பல ப்ளஸ்கள் இருந்தாலும், அதிக சத்தம் எழுப்பும் டீசல் இன்ஜினைக்கொண்டிருக்கும் சிட்டியின் கட்டுமானத் தரம், மேற்கூறிய கார்களைப்போல இல்லை. எனவே, காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டில் தற்போதைய ட்ரெண்ட் செட்டரான க்ரெட்டாவை வாங்குவது சரியானதாக இருக்கும். ஏனெனில், பக்காவான டிஸைன், தரமான கேபின், விலைக்கேற்ற சிறப்பம்சங்கள், நிறைவான ஓட்டுதல் அனுபவம் என ஒட்டுமொத்த பேக்கேஜாக அசத்துகிறது க்ரெட்டா. ஆனால், இந்த காரின் வெயிட்டிங் பிரீயட் அதிகம். பவர்ஃபுல் செடான் கார்தான் வேண்டும் என்றால், நீங்கள் குறிப்பிட்டவற்றில் வெர்னா ஓகே!

எனது பட்ஜெட் 1.5 லட்சம். ஹோண்டா CBR 150R அல்லது யமஹா R15 ஆகியவற்றில் எதை வாங்கலாம்?

சரவணக்குமார், இமெயில்


யமஹாவின் R15 பைக்குக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட CBR 150R, அந்த பைக்கைவிட பவர்ஃபுல்லாகவே இருக்கிறது. யமஹாவுடன் ஒப்பிடும்போது, ஹோண்டாவின் சீட்டிங் பொசிஷன் வசதியாகவே இருக்கிறது. மைலேஜ் மற்றும் ஓட்டுதல் அனுபவமும் நிறைவாகவே இருக்கிறது. அறிமுகமான நாள் முதல் இன்றுவரை எந்தவொரு அப்டேட்டையும் ஹோண்டா இந்த பைக்குக்குச் செய்யாததால், பழைய தோற்றத்தைக்கொண்டிருக்கிறது CBR 150R.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மேலும், R15 பைக்கைவிட 7,000 ரூபாய் கூடுதல் விலையைக் கொண்டிருக்கும் CBR 150R-ல், அதனை நியாயப்படுத்துவதற்கான அம்சங்கள் இல்லை. R15 பைக்கின் வெர்ஷன் 2.0 விற்பனைக்கு வந்து நீண்ட நாட்களாகியிருந்தாலும், இன்றும்கூட அந்த பைக் பார்ப்பதற்கு ஸ்டைலாகவே இருக்கிறது. இதனாலேயே ஹோண்டா CBR 150R பைக்கைவிட யமஹா R15 பைக்கின் விற்பனை அதிகமாக இருக்கிறது. சிங்கிள் சீட் மற்றும் ஸ்பிளிட் சீட் ஆப்ஷன்களை வழங்கும் யமஹா R15, சிறப்பான கையாளுமை, நிறைவான ஓட்டுதல் தரம், கூடுதல் சிறப்பம்சங்கள், போதுமான பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அசத்துகிறது. கொடுக்கும் காசுக்கு அதிக சிறப்பம்சங்களுடன், பவர்ஃபுல்லான ஃபுல் ஃபேரிங் பைக் வேண்டுமென்றால், பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கைக்கூடப் பரிசீலிக்கலாம். 

எனது வயது 23. முதன்முதலாக ஒரு பைக்கை வாங்கப் போகிறேன். எனக்கு பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கைப் பிடித்திருக்கிறது. அந்த பைக்கின் பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் எப்படி இருக்கிறது? அதன் ப்ளஸ், மைனஸ் என்ன?

கார்த்திக், செங்கல்பட்டு.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

கச்சிதமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணம், அதன் க்ரூஸர் டிஸைன்தான். இதன் சீட்டிங் பொசிஷன் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப் வசதியாக இருப்பது, நீண்ட தூரப் பயணங்களுக்கு உதவியாக இருக்கிறது. பல்ஸர் 150 பைக்கில் இருக்கும் அதே 150சிசி இன்ஜின்தான் இதிலும் என்பதால், பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் திருப்திகரமாகவே இருக்கிறது. ஆனால், இந்த பைக்கை நெரிசலான இடங்களில் பார்க் செய்வது கடினம். வழக்கமான பைக்கில் இருக்கும் சில சாதகமான அம்சங்களை (கையாளுமை, எர்கனாமிக்ஸ்) இதில் நாம் எதிர்பார்க்க முடியாது. பைக்கின் எடை சற்று அதிகம் என்பதால், இதே விலை மற்றும் பவருடன் கிடைக்கும் மற்ற 150சிசி பைக்குகளான சுஸூகி ஜிக்ஸர் மற்றும் யமஹா
FZ-16 ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடிய பெர்ஃபாமென்ஸ் இதில் கிடைக்காது. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு தீர்க்கமாக முடிவெடுங்கள்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:
மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2.
மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு