Published:Updated:

பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம்
பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / ஹூண்டாய் எக்ஸென்ட்ஞா.சுதாகர், படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

பிரீமியம் ஸ்டோரி
பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம்

“சில படங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்; சில படங்கள் இளைஞர்களுக்குப் பிடிக்கும்; சில படங்கள் பெண்களுக்குப் பிடிக்கும். ஆனால், ஒரு சில படங்கள்தான் எல்லாருக்கும் பிடிக்கும். அதுபோலத்தான் எக்ஸென்ட். எல்லோருக்கும் பிடிக்கும் கார்!” என ‘கபாலி’ ரேஞ்சுக்கு தன் காருக்கு இன்ட்ரோ கொடுத்தார் திருமூர்த்தி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனி அலுவலர். இவரது குடும்பம், இந்த மாத ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்குத் தயாராக இருந்தது.

‘அட’ சொல்ல வைக்கும் அற்புதமான டிஸைன் இல்லை என்றாலும் - அமேஸ், டிஸையர் கார்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு ஸ்டைல், பளிச் இன்டீரியர் எனப் பார்த்தவுடன் ஒரு டிரைவ் செல்லத் தோன்றுகிறது எக்ஸென்ட்டில். அதன் பெர்ஃபாமென்ஸை செக் செய்ய, இந்த முறை கிரேட் எஸ்கேப்புக்கு நாம் தேர்ந்தெடுத்த இடம், தமிழ்நாடு - கேரள எல்லையில், கேரள வனத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பரம்பிக்குளம்.

“முதலில் ஃபோர்டு எஸ்கார்ட் கார் வைத்திருந்தோம். அதற்கடுத்து புதிய கார் ஒன்று வாங்க வேண்டும் என முடிவு செய்தபோது, ஸ்விஃப்ட் டிஸையர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. நடுவில் ஒருநாள் எக்ஸென்ட் காரை ஓட்டிப் பார்த்தார். உடனே இவர் மனசு மாறிவிட்டது!” என எக்ஸென்ட் வாங்கிய கதையைக் கூறினார், திருமூர்த்தியின் மனைவி ஜெயசெல்வி.

‘விருத்தாசலம் to பரம்பிக்குளம்’ என ஜி.பி.எஸ் செட் செய்துவிட்டு, முழுமையான காட்டுப் பயணத்துக்குத் தயாரானோம்.

விருத்தாசலம் துவங்கி, சேலம், ஈரோடு, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், பல்லடம் வழியாக பொள்ளாச்சிக்கு ரூட் பிக்ஸ் செய்தோம். 340 கி.மீ என கூகுள் மேப் காட்டியது. நெடுஞ்சாலைகளில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்தான டிரைவிங்குக்கு கியாரன்டி தருகிறது. 

நெடுஞ்சாலையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஸ்மூத்தாக இயங்கும் எக்ஸென்ட், சிட்டியிலும் டிராஃபிக்கிலும் கொஞ்சம் திணறுகிறது. ஏபிஎஸ் பிரேக்ஸ் தன் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறது. ஐந்து மணி நேரத்தில் பொள்ளாச்சி வந்துவிட, அடுத்த 35-வது கிலோ மீட்டரில் இருக்கிறது டாப் சிலிப். அன்று பொள்ளாச்சியில் ஸ்டே!

மறுநாள் சேத்துமடை செக்போஸ்ட்டில் பணம் கட்டி ரசீது வாங்கினோம். ரசீது இருந்தால்தான் உள்ளே நுழைய முடியும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி. பாதுகாப்பு கருதி, இரண்டு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. டாப் சிலிப் தாண்டித்தான் பரம்பிக்குளம்.

சேத்துமடையைத் தாண்டி உள்ளே நுழைந்ததுமே, அழகான வனப்பகுதி ஆரம்பமாகிவிடுகிறது.
மெதுவாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டே காரை ஓட்ட, பின்னால் வந்த டாடா ஏஸ் டிரைவர், “சில நாட்களாக ஒரு யானை தனியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. காரை எங்கும் நிறுத்தாமல் செல்லுங்கள்!” என எச்சரித்துவிட்டு முந்திச் சென்றார்.

சாலை வசதி, ‘இருக்கு... ஆனா இல்லை’ ரேஞ்சுக்கு இருக்க... 40 கி.மீ வேகம் தாண்ட முடியவில்லை. பரம்பிக்குளம் வருபவர்களுக்கு கூடுதல் பேக்கேஜ்தான் டாப் ஸ்லிப். உலாந்தி வனச்சரகம் என்பதுதான் இந்த இடத்தின் பெயர். யானைச் சவாரி, ட்ரெக்கிங், நகர உலா என மூன்று விதமான பேக்கேஜ்கள் இங்கு கிடைக்கின்றன. நாங்கள் சென்ற நாள், ஊர்க்கோவில் ஒன்றில் திருவிழா நடக்க, யானை சவாரி கேன்சல் ஆகியிருந்தது. பறவை மற்றும் விலங்குகள் ஆர்வலர்களுக்குச் சரியான தீனி போடுகிறது இந்த வனப் பகுதி. அதிலும் எந்தெந்த விலங்குகள், கடைசியாக எப்போது அலுவலர்களுக்குத் தென்பட்டன என ‘லாஸ்ட் சீன் ஸ்டேட்டஸ்’ பட்டியலை டாப் ஸ்லிப் வரவேற்பு அறையிலேயே வைத்திருக்கின்றனர்.

டாப் ஸ்லிப்பில் காலை உணவை முடித்துவிட்டு, அப்படியே பரம்பிக்குளம் நோக்கிப் படையெடுத்தோம். டாப் சிலிப் தாண்டி அடுத்த இரண்டாவது கிலோ மீட்டரிலேயே கேரள எல்லை. அங்கிருந்து 6 கிலோ மீட்டரில் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் துவங்கிவிடுகிறது.

பரம்பிக்குளம் உள்ளே செல்ல வேண்டும் என்றால், அதற்கும் நுழைவுச் சீட்டு எடுக்க வேண்டும்; பரம்பிக்குளம் பகுதியைச் சுற்றிப் பார்க்க வேன் புக் செய்ய வேண்டும். நம் காருக்கு அதற்கு மேல் அனுமதி இல்லை.

பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம்

இதுவரை பயணம் செய்த எக்ஸென்ட்டை ஓரமாக பார்க்கிங் செய்துவிட்டு, பதிவு செய்த வேன் வரும் வரை அங்கேயே காத்திருந்தோம். இங்கே ஒரு நாளைக்கு 7 வேன்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பொறுத்து அதிகபட்சம் மூன்று ட்ரிப் செல்கின்றன. பரம்பிக்குளம் உள்ளே, 20 கிலோ மீட்டர் பயணம் இந்த வேன்களில்தான். 

இந்தப் பகுதியில் தங்குவதற்கு மர வீடுகள், ஏரியின் நடுவே தீவு வீடுகள், காட்டேஜ்கள், மூங்கில் குடிசைகள் என குறைந்த அளவிலான அறைகளே இருக்கின்றன. 500 ரூபாய் முதல் 8,800 வரை வாடகை. இங்கே இல்லையென்றால், டாப் ஸ்லிப்பில் இதேபோல தங்கும்  வீடுகள் இருக்கின்றன. அங்கும் முன்பதிவு அவசியம். இல்லையெனில் பொள்ளாச்சியில் தங்குவது நல்லது. பரம்பிக்குளம் பகுதியில் அறைகள் புக் செய்ய, முன்னதாக போன் மூலம் பதிவு செய்ய வேண்டும். (9442201691, 04253 – 245025). சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பதிவு செய்ய, ஒரு வாரம் முன்பே அழைக்க வேண்டும். தனியார் விடுதிகள் இங்கு கிடையாது. வேன்களில் செல்ல ஒரு நபருக்குக் கட்டணம் 170 ரூபாய். எங்கள் வேன் வரவும், முதலில் ஓடிப்போய் சீட்டில் அமர்ந்தனர் திருமூர்த்தியின் குழந்தைகள் ஹரிஷ்வாவும், பிரத்யூஹாசனும். வேன் ஓட்டுநரே கைடாகவும் இருக்கிறார்.

இந்தியாவில் காடுகளுக்கும் பாதிப்பு வராமல், மனிதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் எக்கோ டூரிஸம் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது கேரள அரசு. முதலில் தென்மலை; அடுத்து வயநாடு; அதற்கடுத்து பரம்பிக்குளம். எக்கோ டூரிஸம் என்பதால், பிளாஸ்டிக் பொருட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. வனப் பகுதியில் சத்தம் போடக் கூடாது. இதனாலேயே இன்னும் முழுமையான காடாக இருக்கிறது பரம்பிக்குளம்.

அதேபோல, இந்தப் பகுதி பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சுற்றுலா வருமானம் முழுக்க அவர்களின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படுகிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கல்வியும், பயிற்சியும் அளித்து, வனம் சார்ந்த பணிகளுக்கும் கைடாகவும் தயார் செய்கிறது கேரள அரசு.

நாங்கள் காட்டுக்குள் சென்றபோது மதியம் 1 மணி. ‘‘இந்தச் சமயத்தில், எல்லா விலங்குகளும் உறங்கப் போயிருக்கும். ஏதாவது காணக் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்’’ எனச் சொல்லி சஃபாரி வேனை ஸ்டார்ட் செய்தார் ஓட்டுநர் ஷாஜூ. ஆங்காங்கே ஓடிய மான்கள், குரங்குகள் என எங்கள் அதிர்ஷ்டத்துக்கு சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைத்தன.

தூணக்கடவு நீர்த்தேக்கத்தை அடைந்ததும், வேனைவிட்டு இறங்கினோம். கிடைத்த நேரத்தில் ஆங்காங்கே செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர் சுற்றுலாப் பயணிகள்.

வேன் நம்மை அடுத்துக் கொண்டுபோய் நிறுத்திய இடம், கன்னிமாரா தேக்கு மரம். உலகின் மிகவும் பழைமையான உயிருள்ள மரங்களில் ஒன்று இ்து. சுமார் 460 ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் இருக்கும் மரம். இதனைச் சிறப்பிக்கும் வகையில் மகாவிருக்ஷா புரஸ்கார் விருதை அளித்து இதனைச் சிறப்பித்துள்ளது இந்திய அரசு. “தேக்கு மரங்களை வெட்டி, வியாபாரம் செய்து கொண்டிருந்த மக்கள், ஒருநாள் இந்த மரத்தையும் வெட்ட... திடீரென ரத்தம் வந்ததாம். மரத்தில் இருந்து ரத்தம் வழிவதைப் பார்த்து மரம் வெட்டுவதை விட்டுவிட்டு, தங்கள் கடவுளாக வணங்க ஆரம்பித்துவிட்டனராம் மலைவாழ் மக்கள்” என இந்த மரத்தின் கதையைச் சொல்கிறது அறிவிப்புப் பலகை.

பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம்

அடுத்து பரம்பிக்குளம் அணையின் வியூ பாயின்ட். பரம்பிக்குளத்தின் மொத்த அழகையும் காணும் இடம். ‘இதுதான் சான்ஸ்’ என தன் வாண்டுகளுடன் செல்ஃபி எடுத்தார் திருமூர்த்தி. இடையே பரம்பிக்குளம் பழங்குடியின மக்களின் ஊரில் வேன் நிற்க, மதிய உணவை ஒரு பிடி பிடித்தோம். இங்கும் முன்னரே உணவு சொல்லி வைக்க வேண்டும். இல்லையெனில் உணவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. இறுதியாக பரம்பிக்குளம் அணையை அடைந்தோம்.

கேரளாவின் நீர்மின் திட்டங்களில் முக்கியமான பங்கு வகிக்கும் திட்டம் இந்த அணை. அதன் அழகை ரசிப்பதற்குள், “அடுத்த ட்ரிப்புக்கு லேட் ஆயிடுச்சு... எல்லாரும் வேனில் ஏறுங்க!’’ என அவசரப்படுத்தினார் டிரைவர் ஷாஜு.

‘‘மூணு மணிநேரம் காட்டுக்குள் சுற்றியும் புலி, யானைன்னு எதுவும் பார்க்கலையே...’’ என எல்லாரும் ‘உச்’ கொட்ட, ரிட்டர்ன் பயணத்துக்குத் தயாரானது வேன்.

மலை மீதுள்ள சுற்றுலாத் தலம் என்றாலும்கூட மூணாறு, வால்பாறை போன்ற பகுதிகளில் இருக்கும் குளுகுளு கிளைமேட் இங்கு மிஸ்ஸிங். கடல் மட்டத்தில் இருந்து 1,975 அடி உயரத்தில்தான் இருக்கிறது பரம்பிக்குளம். எங்களின் மைண்ட் வாய்ஸ் வருண பகவானுக்குக் கேட்டிருக்க வேண்டும். சட்டென மேகங்களை பார்சல் செய்து எங்களுக்காக அவர் அனுப்பி வைத்தைப் போல திடீர் என்று மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது.  ‘இப்போதான் டூர் போற ஃபீலிங்கே இருக்குப்பா’ என எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ரிட்டர்ன் டிரிப்பில், நிறைய மயில்கள் மரக்கிளைகளில் அமர்ந்தவாறு எங்களுக்குத் தரிசனம் அளித்தன. ‘‘எப்படி திடீரென இவ்வளவு மயில்கள்?’’ என ஷாஜூவிடம் கேட்டபோது, ‘‘மயில் இறக்கைகள் மழையில் நனைந்து எடை கூடிவிடும். அதனால், அவற்றால் அதிக தூரம் பறக்க முடியாது. அதனால்தான் மரக்கிளையில் அமர்ந்துவிடுகின்றன” என விளக்கினார்.

பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம்

தூரத்தில் யானைக் கூட்டம் ஒன்று குட்டிகளோடு தென்பட... “எவ்வளவோ காண்பிச்சிட்டீங்க... அப்படியே புலியையும் கண்ல காட்டிட்டா, பயணம் சிறப்பா போயிடும்!” என கோரிக்கை வைத்தார் திருமூர்த்தி. புலிகள் சரணாலயம் என்றாலும்கூட, புலி தென்படாது. அவை அடர்ந்த பகுதிகளில் மட்டுமே மறைந்திருக்கும் எனச் சொல்லி நம்மை மீண்டும் பரம்பிக்குளம் முகப்பில் இறக்கிவிட்டார் ஷாஜு.

மீண்டும் எக்ஸென்ட்டிடம் தஞ்சம். சின்ன பட்ஜெட்டில் ஒரு ஜங்கிள் புக் ஃபாரஸ்ட் ரைடு செல்ல வேண்டும் என்பவர்களுக்கு, பரம்பிக்குளம் ஒரு பச்சை சொர்க்கம்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044  66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு