Published:Updated:

ஜாலியா... திருப்தியா?

டிரைவ்: ஹூண்டாய் டூஸான் 4WDதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
ஜாலியா... திருப்தியா?

முதல் தலைமுறை டூஸான் எஸ்யுவி-யை, 2005-ல் இங்கு ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டுவந்தது. அது, 5 ஆண்டுகளில் வெறும் 1,810 கார்கள் மட்டுமே விற்பனையானது. சுதாரித்த ஹூண்டாய், இரண்டாவது தலைமுறை டூஸான் காரை இங்கு விற்பனைக்குக் கொண்டுவரவில்லை. ஆனால், இப்போது செம ஸ்டைலாக உருவாகி இருக்கும் மூன்றாவது தலைமுறை டூஸான் காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. பிரீமியம் எஸ்யுவிகளுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புதான் இந்த மனமாற்றத்துக்குக்  காரணம். 17 லட்சம் ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் செக்மென்ட்டில், செம ஸ்டைல் காட்டி வர இருக்கிறது டூஸான்!

டிஸைன்

முதல் தலைமுறை டூஸானைப் பார்த்துவிட்டு இதைப் பார்த்தால், இது ஏதோ ஏலியன்கள் வந்து வடிவமைத்த கார் போல இருக்கிறது.  டிஸைனில் ஹூண்டாய் எந்த அளவுக்கு மாற்றம் கண்டிருக்கிறது என்பதற்கு முதல் டூஸானும் இந்த மூன்றாவது டூஸானும் சான்று!

ஹூண்டாயின் டிரேட் மார்க் ‘ஃப்ளூயிடிக்’ டிஸைன் கொள்கையின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இந்த காரில் வளைவுகளாகவும், கோடுகளாகவும் வடிவம் பெற்றிருக்கின்றன. காரில் உள்ள வளைவுகள் கண்ணை உறுத்தாமல், மனதில் இறுக்கமான இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. முன்பக்கம் உள்ள 3-ஸ்லாட் கிரில் எவரையும் ஒரு நிமிடம் ‘நிறுத்தும்’. நீளமான ஹெட்லைட்ஸ், தடிமனான ஷோல்டர் லைன் போன்றவை நல்ல ப்ரசென்ஸ் அளிக்கின்றன. பின் பக்கத்தில் ஓவல் வடிவ கண்ணாடி, காருக்கு எஸ்யுவியைவிட ஒரு கிராஸ்ஓவர் லுக் தருகிறது. பார்ப்பதற்கு க்ரெட்டாவைவிட பெரிய காராகவும், சான்டா-ஃபீயைவிட சின்ன காராகவும் உள்ளது டூஸான். ஒட்டுமொத்தத் தோற்றத்தில், சான்டா ஃபீ காரைத்தான் அதிகம் நினைவூட்டுகிறது. ஒரு கார் டிஸைனருக்கு, காரின் தனித்துவ அம்சங்களை வடிவமைப்பதைவிட, ஒட்டுமொத்தமாக கச்சிதமான தோற்றத்தைக் கொடுப்பதுதான் சிக்கலான வேலை. இந்த விஷயத்தில் 17-இன்ச் அலாய் வீல்களுடன் பார்க்க கனகச்சிதமாக இருக்கிறது டூஸான்.

ஜாலியா... திருப்தியா?

உள்ளே

காரின் வெளிப்புற டிஸைனில் இருக்கும் ஆர்ப்பாட்டம், காரின் உள்புற டிஸைனில் இல்லை. உள்ளே மிகவும் மெனக்கெட்டு அழகுபடுத்தாமல், பயன்பாட்டுக்காக வடிவமைத்துள்ளது ஹூண்டாய். இதன் டேஷ்போர்டு பார்க்க க்ரெட்டா போலவே இருக்கிறது. டச் ஸ்கிரீன் உயரமாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஏ.சி யூனிட்டுக்குக் கீழே இரண்டு 12V பவர் சாக்கெட்டுகள், ஒரு யுஎஸ்பி, ஒரு AUX போர்ட் உள்ளது. ஸ்டீயரிங்கில் இருக்கும் பட்டன்களும் க்ரெட்டாவில் இருப்பதுதான்.

ஜாலியா... திருப்தியா?

பாகங்களின் தரம் க்ரெட்டாவைவிட நன்றாக இருக்கிறது. பிளாஸ்டிக்குகள் தொட சாஃப்ட்டாக உள்ளன. டபுள்-ஸ்டிச்சிங் கொண்ட லெதர் இருக்கைகள் செம ஃபீல். நாம் டெஸ்ட் செய்த காரில் எதிர்பார்த்தது போலவே வசதிகளை நிரப்பியிருந்தது ஹூண்டாய். எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்டபிள் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்சி பிரேக்கிங், 6 காற்றுப் பைகள் எனப் பாதுகாப்பு வசதிகளும் அதிகம்.

டூஸானில் மூன்றாவது வரிசை இருக்கைகள் கிடையாது என்பதால், இரண்டாவது வரிசை இருக்கையில் இடவசதி அதிகமாகவே உள்ளது. இந்த காரில் ஐந்து பேர் மிக சொகுசாக, வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். பூட் இடவசதியும் ஓரளவு இருக்கிறது. இருக்கைகளை மடித்துக்கொண்டால், இன்னும் பொருட்களை வைக்க இடம் கிடைக்கும்.

ஜாலியா... திருப்தியா?
ஜாலியா... திருப்தியா?

இன்ஜின், ஓட்டுதல் தரம், கையாளுமை

டூஸானில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 136bhp சக்தியையும், 38.03kgm டார்க்கையும் அளிக்கிறது. நல்ல ரிஃபைன்மென்ட் கொண்ட இந்த இன்ஜின், ஸ்மூத்தான பவர் டெலிவரியை அளிக்கிறது. டர்போ லேக் அதிகம் இல்லை. குறைந்த ஆர்பிஎம்களில் நல்ல டார்க் இருந்தாலும்,  மிட்-ரேஞ்சில் கொஞ்சம் வீக்தான். இதனால், ஸ்மூத்தாக இயங்கும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுக்கு அதிகம் வேலை வைத்துத்தான் ஓட்ட வேண்டியிருக்கிறது. கிளட்ச் லைட்டாக இருப்பதால், சமாளிக்கலாம். இங்கு விற்பனைக்கு வரும்போது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், 4x4 வெர்ஷன் இங்கு விற்பனைக்கு வர வாய்ப்பு இல்லை.

ஜாலியா... திருப்தியா?

புத்தம் புதிய ஸ்ட்ராங்கான சேஸியில் உருவாக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக இருந் தாலும், பாடி கன்ட்ரோல் நன்றாகவே இருக்கிறது. டூஸானின் ஓட்டுதல் தரம் பலருக்கும் பிடிக்கும். ஆனால், வளைவுகளில் ஜாலியாக இல்லை. பாடி ரோல் கட்டுக்குள் இருக்கிறது என்றாலும், ஸ்டீயரிங் ஃபீல் டல்லாக இருப்பதால்தான் இந்த நிலை.

முதல் தீர்ப்பு

ஜாலியாக ஓட்டிச் செல்வதற்கான கார் இல்லை டூஸான். CR-V போல டைனமிக்கான காராகவும் இல்லை. ஆனால், சொகுசு வசதிகள், ரிஃபைன்மென்ட் போன்ற விஷயங்களில் திருப்திப்படுத்துகிறது. செப்டம்பரில், 17 லட்சம் ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வர உள்ளது டூஸான். க்ரெட்டா காரில் இருந்து கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து, அதற்கேற்ற விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கான கார், டூஸான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு