Published:Updated:

ஜெர்மன் போட்டி!

ஒப்பீடு : பிஎம்டபிள்யூ x1 Vs ஆடி Q3 Vs மெர்சிடீஸ் பென்ஸ் GLA தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
ஜெர்மன் போட்டி!

2016-ம் ஆண்டுக்கான புதிய பிஎம்டபிள்யூ X1 காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தபோது, ஒரு காம்பேக்ட் லக்ஸூரி எஸ்யுவியை வாங்குபவர் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

இந்த செக்மென்ட்டில், ஆடிதான் நீண்ட நாட்களாக விற்பனையில் இருக்கும் கார். ஆனால், கடந்த 2015-ல் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டிருப்பதால் Q3 பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறது. பென்ஸின் GLA, அற்புதமான டிஸைனைக்கொண்டிருக்கிறது. ஆடியும், பிஎம்டபிள்யூவும் ஃப்ரன்ட் வீல் டிரைவ்/ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், பென்ஸில் ஃப்ரன்ட் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே! பெஸ்ட் காம்பேக்ட் லக்ஸூரி எஸ்யுவி எது என்பதைத் தெரிந்துகொள்ள, மற்ற ஜெர்மன் தயாரிப்புகளான ஆடி Q3, மெர்சிடீஸ் பென்ஸ் GLA ஆகிய கார்களோடு, புதிய பிஎம்டபிள்யூ X1 காரை ஒப்பிட்டுப் பார்த்தோம்.

நகரம் - ஓட்டுதல் அனுபவம்

பிஎம்டபிள்யூ X1 காரில் இருப்பது, 190bhp பவரை வெளிப்படுத்தும் புதிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின். பழைய காரைவிடக் குறைவாகவே சத்தம் போடுகிறது. ஆனால், ஸ்போர்ட் மோடில் இன்ஜின் ரெஸ்பான்ஸ் ஷார்ப்பாகவும், எக்கோ மோடில் டல்லாகவும் இருக்கிறது. கம்ஃபோர்ட் மோடில் ஓட்டும்போதுதான் இன்ஜின் ரெஸ்பான்ஸ் கச்சிதமாக இருக்கிறது.

X1 காரின் சஸ்பென்ஷன் மென்மையாக செட் செய்யப்பட்டு இருப்பதால், நகருக்குள் ஓட்ட வசதியாக இருக்கிறது. ஆனால், மேடு பள்ளமான சாலைகளில் வேகமாகச் செல்லும்போது, கார் சற்று ஆட்டம் போடுகிறது. இதற்கு, காரில் இருக்கும் இறுக்கமான ரன்-ஃப்ளாட் டயர்களே காரணம். ஆடி Q3 காரில் பயணிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அந்த காரின் பலமான ஓட்டுதல் தரத்தை உணர முடிகிறது. சாலைகள் தரும் அதிர்வை சஸ்பென்ஷன் சிறப்பாக உள்வாங்கிக் கொள்வதுடன், வேகமாகச் சென்றாலும் கார் நிலையாக இருக்கிறது. ஸ்டீயரிங் எடை குறைவாக இருப்பதால், ஆடியை நகருக்குள் ஓட்டுவது சுலபமாக இருக்கிறது.

ஜெர்மன் போட்டி!
ஜெர்மன் போட்டி!
ஜெர்மன் போட்டி!

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தைச் சேர்ந்த 177bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது ஆடி Q3. ஆரம்ப வேகங்களில் இந்த இன்ஜின் சத்தமின்றி இயங்கினாலும், மிட் ரேஞ்சில் செல்லும்போது, இன்ஜின் சத்தம் சின்ன அளவில் காருக்குள் கேட்கிறது. 1,500 ஆர்பிஎம்மில் இருந்தே பவர் கிடைப்பதுடன், அது டெலிவரி செய்யப்படும் விதம் சீராக இருப்பதால், X1 காரைவிட Q3 காரை கம்ஃபோர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, நல்ல அனுபவம் கிடைக்கிறது.

மெர்சிடீஸ் பென்ஸ் GLA காரில் இருக்கும் 2.1 லிட்டர் இன்ஜின்தான் இங்கிருக்கும் காரிலே பெரியது என்றாலும், இன்ஜின் பவரில் (136bhp) கடைசி இடத்தில் இருக்கிறது. ஆனால், இந்த காரை நகருக்குள் ஓட்டும்போது, பவர் குறைபாடு பெரிதாகத் தெரியவில்லை. இதற்கு இந்த இன்ஜினின் மிட்-ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருப்பதே காரணம். அதை நம்பி காரின் வேகத்தை அதிகரித்தால், இன்ஜின் சத்தம் போடுவது மைனஸ். மேலும், ஐடிலிங்கிலும் இந்த இன்ஜின் கரகரவென ஓசை எழுப்புவது நன்றாக இல்லை. GLA காரின் சஸ்பென்ஷன் இறுக்கமாக செட் செய்யப்பட்டுள்ளதால், கொஞ்சம் பெரிய மேடு பள்ளங்களில் கார் ஏறி இறங்கும்போது கவனம் தேவை. ஸ்டீயரிங்கும் எடை அதிகமாக இருப்பதால், இந்த காரை பார்க்கிங் செய்வது கடினமாக இருக்கிறது.

நெடுஞ்சாலை - ஓட்டுதல் அனுபவம்

பிஎம்டபிள்யூ கார் என்றாலே கையாளுமைதானே! 50:50 விகிதத்தில் காரின் எடை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால், திருப்பங்களில் காரின் கையாளுமை, ஓட்டுநரை உற்சாகப்படுத்தும். காரின் எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் துல்லியமாக இருப்பதால், அதனைப் பயன்படுத்தி சட்டென திசை மாற்ற முடிகிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், காரின் பவரை நான்கு வீல்களுக்கும் தேவையான அளவில் செலுத்துகிறது. பிஎம்டபிள்யூ X1 காரின் டீசல் இன்ஜின், 2,000 ஆர்பிஎம்மை எட்டிய பிறகே பவரை வெளிப்படுத்த ஆரம்பித்தாலும், விரைவாக 5,000 ஆர்பிஎம் எட்டிவிடுகிறது. இதுவே ட்ராக்‌ஷன் கன்ட்ரோலை ஆஃப் செய்துவிட்டு, ஸ்போர்ட் மோடில் வைத்து காரை ஓட்டும்போது, 5,400 ஆர்பிஎம் வரை கியரை மாற்றாமல் ஹோல்டு செய்ய முடிகிறது.

ஜெர்மன் போட்டி!
ஜெர்மன் போட்டி!

ஆனால், இந்த இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கும் Aisin நிறுவனத்தின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், மேனுவல் மோடில் பயன்படுத்தும்போது நன்றாக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் மோடில் காரின் வேகத்தை அதிகரிக்கும்போது, நம் கட்டளைகளுக்கு ஏற்ப கியர்பாக்ஸ் உடனடியாகச் செயல்பட மறுக்கிறது.

நெடுஞ்சாலையில் ஆடி Q3 காரை ஓட்ட அற்புதமாக இருக்கிறது. இந்த காரின் டீசல் இன்ஜின் நன்கு ரெவ் ஆவதுடன், பவர் டெலிவரி அட்டகாசமாக இருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், மேனுவல் - ஆட்டோமேட்டிக் என எந்த மோடில் வைத்து ஓட்டினாலும் சூப்பர்.

பிஎம்டபிள்யூவைவிட ஆடியில் அதிக ரோடு க்ரிப் கிடைக்கிறது. இந்த காரின் திசையையும் சட்டென மாற்ற முடிந்தாலும், ஸ்டீயரிங் போதுமான எடையுடன் இல்லாமல் செயற்கையான உணர்வைத் தருவது மைனஸ்.

திருப்பங்கள் நிறைந்த சாலைகளில் பென்ஸ் GLA தனது திறமையை நிருபிக்கிறது. பாடி கன்ட்ரோல் மற்றும் ரோடு கிரிப் நன்றாக இருப்பதே இதற்குக் காரணம். பெரிய இன்ஜினைக்கொண்டிருந்தாலும், பவர் குறைபாட்டை நெடுஞ்சாலைகளில் உணர முடிகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், உடனடியாகச் செயல்பட மறுக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை மெதுவாக, அதாவது 9.51 விநாடிகளில் எட்டுவது பென்ஸ் GLAதான். இதேவேகத்தை ஆடி Q3 - 8.35 விநாடிகளில் எட்டி, வேகப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. லாஞ்ச் கன்ட்ரோல் மற்றும் பவர்ஃபுல் இன்ஜினைக் கொண்டிருக்கும் பிஎம்டபிள்யூ X1, 0 - 100 கி.மீ வேகத்தை 8.07 விநாடிகளிலே எட்டிவிடுகிறது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இல்லாததால், ஆஃப் ரோடுகளில் பென்ஸை ஓட்டுவது சிரமம் என்றே நினைத்தோம். இங்குதான் காரின் 183 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கை கொடுக்கிறது. பிஎம்டபிள்யூ மற்றும் ஆடியில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருப்பதால், ஓரளவுக்கு ஆஃப் ரோடிங் மேற்கொள்ளலாம்.

ஜெர்மன் போட்டி!
ஜெர்மன் போட்டி!

டிஸைன், கேபின், சிறப்பம்சங்கள்

ஒரு எஸ்யுவிக்கான கெத்து இல்லாவிட்டாலும், மெர்சிடீஸ் பென்ஸ் GLAதான் இங்கிருக்கும் கார்களிலே ஸ்டைல். பழைய X1 காரின் ஸ்டேஷன் வேகன் போன்ற தோற்றத்துடன் ஒப்பிடும்போது, புதிய X1 பார்ப்பதற்கு மினி X5 போலவே இருக்கிறது. Q3 காரில் இருக்கும் கிரில், Q7 காரை நினைவுபடுத்துவதுடன் பிசினஸ் கிளாஸ் டிஸைனைக்கொண்டிருக்கிறது.

X1 காரின் கேபின்தான் கவனத்தை ஈர்க்கிறது. பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய X1 காரின் நீளம், வீல்பேஸ் ஆகியவை குறைந்திருந்தாலும், உயரமான ரூஃப் மற்றும் இன்ஜின் குறுக்குவாட்டில் பொசிஷன் செய்யப்பட்டுள்ளதன் விளைவாக, கேபினில் இடவசதி அதிகரித்திருக்கிறது. ஹெட்ரூம், லெக்ரூம், அகலம் ஆகியவை அதிகமாக இருப்பதால், 5 பேர் தாராளமாகப் பயணிக்கலாம். பின்பக்க இருக்கைகள் சொகுசாக இருப்பதுடன், அதன் சாய்மானத்தையும் அட்ஜஸ்ட் செய்ய முடிவது சிறப்பு. டேஷ்போர்டின் டிஸைன் பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரித்தான கோட்பாடுகளின்படி இருந்தாலும், அதன் உயரம் குறைவாக இருப்பதால் வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் 6.5 இன்ச் ஸ்கிரீன் சற்று சிறிதாகத் தெரிந்தாலும், இதுதான் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. ஆனால், சின்ன முன்பக்க இருக்கைகள், பழைய டிஸைனுடன் உயரமாக இருக்கும் கியர் லீவர், டேஷ்போர்டின் கீழ்ப்பகுதியின் பிளாஸ்டிக்ஸ் தரம் எனக் குறைகளும் இருக்கின்றன.

ஆடி Q3 காரின் முன்பக்க இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. க்ரோம் வேலைப்பாடுகள் கொண்ட டேஷ்போர்டின் டிஸைன் சிம்பிளாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கேபினின் தரம் சிறப்பாக இருக்கிறது. முன்பக்க இருக்கைகள் சற்று உயரமாக இருப்பதால், வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களின் இடையே இருக்கும் ஸ்கிரீனில் சாட்டிலைட் நேவிகேஷன் மேப் தெரிவதால், ஓட்டுநருக்கு கவனச் சிதறல் ஏற்படாது. டேஷ்போர்டின் நடுப்பகுதியில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துக்கான ஸ்கிரீன் மாடர்னாக இல்லை. பின்பக்க இருக்கைகளின் குஷனிங் சூப்பராக இருப்பதுடன், நல்ல சப்போர்ட்டும் அளிக்கின்றன. லெக்ரூம் போதுமான அளவில் இருந்தாலும், சென்டர் ஆர்ம் ரெஸ்ட் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், உயரமான நபர்களுக்கு ஹெட்ரூம் சற்று குறைவாகத் தெரியலாம்.

ஜெர்மன் போட்டி!

மேலோட்டமாகப் பார்க்கும்போது, உயரம் குறைவான சீட்டிங் பொசிஷன், சின்ன கதவுக் கண்ணாடிகள், கறுப்பு நிறம் வியாபித்திருக்கும் உள்பக்கம் காரணமாக, மெர்சிடீஸ் பென்ஸ் GLA காரின் கேபின் இடநெருக்கடியாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், போதுமான இடவசதி இருக்கிறது. முன்பக்க இருக்கைகள் நன்றாக இருந்தாலும், அவை நாம் எஸ்யுவியில் இருக்கிறோம் என்ற உணர்வைத் தரவில்லை.

மூன்று கார்களிலும் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருந்தாலும், பூட் ஸ்பேஸில் வேறுபாடுகள் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ X1 மற்றும் ஆடி Q3 கார்களில் ஸ்பேர் வீலை பூட் ஸ்பேஸுக்கு அடியில் வைப்பதற்கு இடம் இருக்கின்றன. ஆனால், குறைவான பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கும் பென்ஸ் GLA காரில் ஸ்பேர் வீலை, பூட்டில்தான் வைக்க முடியும் என்பது நெருடல். மற்ற இரண்டு கார்களிலும் 60:40 ஸ்பிளிட் சீட் ஆப்ஷனே இருக்க, பிஎம்டபிள்யூ X1-ல் 40:20:40 ஸ்பிளிட் சீட் ஆப்ஷன் இருப்பதுடன், கூடுதலாக பின் பக்க சீட்டை எலெக்ட்ரிக்கலாக மடக்கும் வசதியும் இருக்கிறது.

ஜெர்மன் போட்டி!

லக்ஸூரி செக்மென்ட்டைப் பொறுத்தவரை, காரின் விலைக்கு ஏற்ப சிறப்பம்சங்கள் இருப்பது அவசியம். எனவே, பேடில் ஷிஃப்ட்டர், டிரைவ் மோடுகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் & வைப்பர்கள், லெதர் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக்கலாக முன்பக்க இருக்கையை அட்ஜஸ்ட் செய்யும் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் மூன்று கார்களிலும் உள்ளன. பிஎம்டபிள்யூ X1 காரில் லாஞ்ச் கன்ட்ரோல், பின்பக்க சீட்டை எலெக்ட்ரிக்கலாக மடக்கும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்றவை இருந்தாலும், ரிவர்ஸ் கேமரா, சாட்டிலைட் நேவிகேஷன் இல்லாதது அதிர்ச்சி. ஆனால், இவை அனைத்தும் விலை அதிகமான எம்-ஸ்போர்ட் வேரியன்ட்டில் கிடைக்கின்றன. ஆடி Q3 காரில் போதுமான சிறப்பம்சங்கள் இருந்தாலும், நேவிகேஷன் பேக்கேஜுக்குக் கூடுதலாக 3 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது டூ மச்! GLA-வில் ரியர் ஏ.சி வென்ட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏ.சி போன்ற அத்தியாவசிய வசதிகளை, ஏன் மெர்சிடீஸ் பென்ஸ் சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை. 

ஜெர்மன் போட்டி!

மெர்சிடீஸ் பென்ஸ் GLA காரின் டிஸைன் மற்றும் ஸ்டைலான கேபின் ஆகியவை லைக்குகளைப் பெற்றாலும், சுமாரான ஓட்டுதல் தரம், சத்தம் போடும் டீசல் இன்ஜின், காம்பேக்ட் கேபின், குறைவான பவர், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இல்லாதது, எஸ்யுவிக்கான கெத்து இல்லாதது என ப்ளஸ்களைவிட மைனஸ்கள் அதிகமாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ‘தினசரிப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும்; ஓட்ட சூப்பராகவும் இருக்க வேண்டும்’ என்பவர்களுக்கான காராக ஆடி Q3 மற்றும் பிஎம்டபிள்யூ X1 திகழ்கின்றன.

இரண்டு கார்களும் ஓட்டுதல் அனுபவம், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் காரணமாக ஆஃப் ரோடிங் திறன், பிராக்டிக்கலான கேபின் ஆகியவற்றைக்கொண்டுள்ளன. பிஎம்டபிள்யூ கையாளுமையில் அசத்தினால், ஆடி ஓட்டுதல் தரத்தில் ஸ்கோர் செய்கிறது. கடுமையான போட்டி போட்டாலும், சற்று கூடுதலான இடவசதியைக்கொண்டிருக்கும் பிஎம்டபிள்யூ X1 காரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது. ஏனெனில், எஸ்யுவிகளை இடவசதிக்காகவும், பன்முகத் திறமைகளுக்காகவும் வாங்குபவர்களே அதிகம். சற்று குறைவான இடவசதி காரணமாக, டிரைவர் வைக்காமல் கார் ஓட்டுபவர்களுக்கான சாய்ஸாக ஆடி Q3 இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு