Published:Updated:

ப்ரைஸ்... சர்ப்ரைஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் ஏமியோவேல்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
ப்ரைஸ்... சர்ப்ரைஸ்!

நான்கு மீட்டருக்கு உட்பட்டு இருக்க வேண்டும்’ என்று டாடா தன் இண்டிகோ காரின் டிக்கியைக் குறைத்து, இண்டிகோ CS-ஐ அறிமுகப்படுத்தியபோது, பலரும் அதை எள்ளி நகையாடினார்கள். ஆனால் இப்போது, இந்த செக்மென்ட்டில் மாருதி துவங்கி ஹூண்டாய், ஃபோர்டு, ஹோண்டா என பலரும் போட்டி போட... ஒரு சுற்றுக்குப் பிறகு டாடாவே தன் ஜெஸ்ட் மூலமாக மீண்டும் இந்த செக்மென்ட்டில் கடை போட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் ஃபோக்ஸ்வாகன், இந்த செக்மென்ட்டில் முதல்முதலாக ஏமியோவைக் களம் இறக்கியிருக்கிறது. போட்டியாளர்களைக் கிடுகிடுக்க வைக்கும் விலையோடு களம் கண்டிருக்கும் ஏமியோ, எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய, புனேவில் இருந்து ஆயிரம் கோயில்கள் கொண்ட மகாபலேஸ்வர் வரை ஃபர்ஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம்.

புனேவில் இருந்து மகாபலேஸ்வர் வரை செல்லும் சாலை என்பது, டெஸ்ட் டிரைவ் செய்வதற்காவே ஆர்டர் கொடுத்துப் போடப்பட்ட சாலையைப்போல... நெருக்கடியான நகர்ப்புறச்சாலை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் ஹைவே, மலைப் பாதை, மண்பாதை என்று சகலவிதமான சாலைகளைக் கொண்டதாக இருக்கிறது. சென்னைக்கு எப்போதாவது வரும் கிருஷ்ணா நீர், மகாபாலேஸ்வரை ஒட்டியிருக்கும் ‘தோம்’ அணையைக் கடந்துதான் வரவேண்டும் என்று கேள்விப்பட்டதால், அந்த அணைக்குச் செல்லும் ஆர்வம் அதிகமாகி, மண் பாதையால் ஆன அந்த மலைப் பாதையில் ஏமியோவைச் செலுத்தினோம்.

ப்ரைஸ்... சர்ப்ரைஸ்!
ப்ரைஸ்... சர்ப்ரைஸ்!

‘விலை குறைவான காம்பேக்ட் செடான் செக்மென்ட் என்பது ஃபோக்ஸ்வாகனுக்குப் புதியது’ என்பதால், ஃபோக்ஸ்வாகன் இதை எப்படி உருவாக்கியிருக்கிறது என்பதை அறிய அனைவருமே ஆர்வமாக இருப்பார்கள். ஃபோக்ஸ்வாகன் இந்த ஏமியோவை வென்ட்டோவில் இருந்து உருவாக்காமல், போலோவில் இருந்துதான் உருவாக்கியிருக்கிறது. ஹேட்ச்பேக்கை செடானாக மாற்ற வேண்டும் என்றால், டிக்கியைச் சேர்க்க வேண்டும். அதனால், போலோவின் முகப்பில் இருந்து கொஞ்சம் நீளத்தைக் கபளீகரம் செய்து, அதன் வால் பகுதியில் சேர்த்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இப்படி ஒரு மாற்றத்தைச் செய்யும்போது, காரின் கோணங்கள் குலைந்துவிடாமல் அதன் நீளத்தை நீட்டிப்பது மிகப் பெரிய சவால். இதைப் பக்காவாக எதிர்கொண்டு சாதித்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

வெளித்தோற்றம்

காரின் முகப்பில் இருந்து இரண்டாம் சீட்டின் கதவுகள் வரை, போலோவுக்கும் ஏமியோவுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இன்னும் கேட்டால்... போலோவின் குவார்ட்டர் கிளாஸைக்கூட ஏமியோவில் பார்க்க முடிகிறது. ஆனால், காரின் நீளம் அதிகமாகி இருப்பதால், ஏமியோவின் கூரையைச் சரிவாக வடிவமைத்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

உள்ளலங்காரம்

காரின் கதவைத் திறந்தால், கேபின் போலோவைப் போலவே இருப்பது நல்ல விஷயம். ஆம், போலோவில் இருக்கும் தரத்தை ஏமியோவில் பார்க்க முடிகிறது. காரின் உட்புறத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபேப்ரிக் தரமானதாக இருக்கிறது. இதன் பின்னிருக்கைகள் போலோவைப் போலவே இருக்கின்றன. செடான் காரான ஏமியோவை இப்படி வர்ணிப்பது, அதற்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது. காரணம் - போலோ என்பது, காரின் உரிமையாளர்கள் டிரைவர் வைக்காமல் தாங்களே ஓட்ட விரும்பும்  ஹேட்ச்பேக் கார். ஆனால், ஏமியோ குடும்பத்தோடு பயணிக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் கார். அதனால், இந்த காரை வடிவமைக்கும் போது ஃபோக்ஸ்வாகனின் கவனம் பின்னிருக்கையில்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், போக்ஸ்வாகன் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது. இருந்தாலும், பின்னிருக்கையில் தொடைகளுக்கான சப்போர்ட் ஓகே. ஹெட்ரூமும் போதுமானதாக இருக்கிறது. ஆனால், காலை நீட்டி மடக்கத்தான் சிரமமாக இருக்கிறது.

ப்ரைஸ்... சர்ப்ரைஸ்!

சில போட்டி கார்களில் பின்வரிசையில் கைகளை வைத்துக்கொள்ள இரண்டு சீட்டுக்கும் நடுவில் ஆர்ம் ரெஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த வசதி ஏமியோவில் இல்லை. ஆனால், ரியர் ஏ.சி வென்ட் கொடுத்திருக்கிறார்கள்.

ஏமியோவில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டே - நைட் மிரர், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோமேட்டிக் வைப்பர், க்ரூஸ் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன் வசதிகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இதில் ஸ்மார்ட்போனையே பார்க்கக்கூடிய வசதி, ப்ளூடூத் என மிரட்டுகிறது. 2 காற்றுப் பைகள் மற்றும் ABS ஆகியவை ஏமியோவின் எல்லா வேரியன்ட்களிலும் இருக்கின்றன.  ஆனால், இதன் டிக்கியின் கொள்ளளவு வெறும் 330 லிட்டர்தான்.

ப்ரைஸ்... சர்ப்ரைஸ்!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

75bhp சக்தியையும் 11kgm டார்க்கையும் கொடுக்கக்கூடிய 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் இன்ஜின்தான் ஏமியோவை இயக்குகிறது. 4,500 ஆர்பிஎம்-க்கு மேல் போவதை இந்த இன்ஜின் விரும்பவில்லை என்பது, இது எழுப்பும் சத்தத்தில் இருந்தே தெரிகிறது. பாட்டம் எண்ட் மற்றும் மிட் ரேஞ்ச் ஆகிய இரண்டு நிலைகளிலுமே, இதன் பெர்ஃபாமென்ஸ் உற்சாகம் அளிப்பதாக இல்லை.
வளைவுகளில் சற்று பாடி ரோலை உணர முடிகிறது. ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் ஹோண்டா அமேஸ் அளவுக்கு இதன் ஸ்டீயரிங் துல்லியமாக இல்லை. ஆனால், நெடுஞ்சாலையில்கூட நிலைத்தன்மையோடு பயணம் செய்யும் 15 இன்ச் வீல்களைக்கொண்ட ஏமியோ, தான் ஒரு ஜெர்மானியன் என்பதை நிரூபிக்கிறது.

அதேபோல, யாரும் எதிர்பாராத வகையில் விலையிலும் போட்டி யாளர்களைவிட பல ஆயிரங்கள் குறைவாக வைத்து, இந்த செக்மென்ட்டைப் பரபரக்க வைத்து விட்டது ஃபோக்ஸ்வாகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு