Published:Updated:

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!
வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

ட்ரெய்லர்: 7 சீட்டர் கார்ஸ்தமிழ்

பிரீமியம் ஸ்டோரி

மினி எம்பிவி கார்களின் மார்க்கெட் சரசரவென வளர, 7 சீட்டர் எம்பிவி கார்களுக்கான மவுசு குறைந்தது. ஆனால், டொயோட்டா இனோவா கிரிஸ்டாவின் அதிரடி விற்பனை, மெகா எம்பிவி கார்களுக்கான மார்க்கெட் ஸ்ட்ராங்காகவே இருப்பதை உணர்த்தியிருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் 7 சீட்டர் கார்களைப் பற்றிய ட்ரெய்லர் இங்கே...

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

டாப்-10 கார் விற்பனைப் பட்டியலில் அவ்வப்போது வேகன்-R எட்டிப் பார்க்கிறது. காரணம், பக்கா ஃபேமிலி காராகவும், வயதானவர்கள்கூட ஈஸியாக ஏறி இறங்கும் வகையில் வேகன்-ஆரின் டிஸைன் இருப்பதும்தான். எனவே, வேகன்-R காரில் 7 சீட்டர் கொண்டு வரும் ஐடியா மாருதிக்கு எப்போதோ உதயமானதுதான். ஏற்கெனவே எர்டிகா மார்க்கெட்டில் இருக்கும் நிலையில், வேகன்-ஆர் வந்தால் எடுபடாது என்பதால், 2017-ல் 7 சீட்டர் வேகன்-R ‘தாம் தூம்’ என்று ரிலீஸ் ஆகலாம். 4 மீட்டருக்குள்ளாக இதன் நீளம் இருக்கும். இப்போதிருக்கும் வேகன்-R காரில் உள்ள கேபின் வசதிகள் இதிலும் தொடரலாம்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் கோ-க்ராஸ் காரை பார்வைக்கு வைத்தபோதே, இந்தியாவில் இதை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற முடிவில்தான் டட்ஸன் இருந்தது என்கிறார்கள். கடந்த மாதம் ரெடி-கோ காம்பேக்ட் கார் வெளிவந்துள்ள நிலையில், விற்பனையில் இதன் முன்னேற்றம் எப்படி என்பதைக் கணித்துவிட்டு, 2017 ஆரம்பத்தில்தான் கோ-க்ராஸ் பற்றி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க இருக்கிறது டட்ஸன். கோ வகை கார்கள் அவ்வளவாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால், விலை, இன்ஜின், சொகுசு போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறதாம் டட்ஸன். எனவே, இப்போதைக்கு கோ-க்ராஸ் பற்றிய விவரங்களை மிகவும் கான்ஃபிடென்ஷியலாக வைத்துள்ளது. ஹோண்டா BR-V காருக்கும் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கும் போட்டியாக இது களமிறங்கும். பெட்ரோல், டீசல் என்று இரண்டு இன்ஜினிலும் வெளிவரும் க்ராஸ்ஓவர் காராக கோ-க்ராஸ் இருக்கலாம் என்கிறார்கள். கிட்டத்தட்ட 5 முதல் 10 லட்சத்துக்குள் டட்ஸன் இதை விற்பனை செய்ய இருக்கிறது.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

க்ரெட்டாவின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, ஹூண்டாய் தெம்பாக தனது அடுத்த யுட்டிலிட்டி காரைக் களமிறக்கத் தயாராகி இருக்கிறது. 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஹெக்ஸா ஸ்பேஸின் கான்செப்ட் கார்தான், இப்போது ரியல் காராக வரவிருக்கிறது. இப்போதைக்கு IP என்ற சங்கேதப் பெயரில் தயாராகி வருகிறது ஹெக்ஸா ஸ்பேஸ். அனேகமாக, க்ரெட்டாவின் இன்ஜின் மற்றும் டெக்னிக்கல் விவரங்களை இதில் சேர்க்க இருக்கிறார்கள். க்ரெட்டாவில் குறையாக இருந்த பின்பக்க டிஸ்க் பிரேக், இதில் சேர்க்கப்படலாம்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

சினிமாவில், ஆரம்ப காலகட்டங்களில் ரஜினிகாந்த்தும் விஜயகாந்த்தும் எப்படி குழப்பத்தை ஏற்படுத்தினார்களோ, அதுபோலவே டாடாவின் ஹெக்ஸாவும், ஹூண்டாயின் ஹெக்ஸா ஸ்பேஸ் காரும் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. பெயரளவில்தான் குழப்பம்; தோற்றத்தில் இரண்டும் வெவ்வேறு வகையான கார்கள். ஆரியா காருக்கு மாற்றாக இதை பொசிஷன் செய்ய இருக்கிறது டாடா. முழுக்க க்ராஸ்ஓவர் எஸ்யுவியாக வரவிருக்கும் ஹெக்ஸா, இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகலாம். டாடா மோட்டார்ஸின் கோட்பாடான HorizoNext (ஹரிஸோன்நெக்ஸ்ட்) கொள்கைப்படி ஹெக்ஸா தயாரிக்கப்பட இருக்கிறது. ஹோண்டாவுக்கு எப்படி ‘மேன் மேக்ஸிமம்; மிஷின் மினிமம்’ என்ற கொள்கையோ, அதுபோல் டாடாவுக்கு HorizoNext. அதாவது, முழுக்க முழுக்க பாஸஞ்சர் கார்களில் வாடிக்கையாளர்களை ‘போதும் போதும்’ என்று திருப்திப்படுத்தும் திட்டம்தான் இது. எனவே, பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஃப்ரெஷ்ஷாக வருகிறது ஹெக்ஸா. க்ரெட்டாவுக்கு இணையாக எல்லா வசதிகளையும் டாடா ஹெக்ஸாவில் எதிர்பார்க்கலாம்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

சந்தேகமே இல்லை; டஸ்ட்டர் இல்லை என்றால், ரெனோ இல்லை. இப்போதைக்கு எஸ்யுவி வாங்க நினைக்கும் கணிசமானவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது டஸ்ட்டர்தான். ‘டஸ்ட்டரில்  ஆட்டோமேட்டிக் இல்லையே’ என்றவர்களுக்காக, இந்த ஆண்டு ஆரம்பத்தில் டஸ்ட்டரில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் வந்துவிட்டது. ‘ஆட்டோமேட்டிக் இருந்தால் போதுமா... 7 சீட்டர் இல்லையே’ என்பவர்களுக்காக, 7 சீட்டர் ஆப்ஷனையும் கொடுக்க இருக்கிறது ரெனோ. ‘மாப்பிள்ளை அவருதான்; ஆனா சட்டை என்னோடது’ என்பதுபோல்... பிளாட்ஃபார்ம், இன்ஜின் டஸ்ட்டரினுடையது என்றாலும், கார் டஸ்ட்டர் இல்லை. அடுத்த ஆண்டுக்குள் கிரில், ஹெட்லைட் போன்றவற்றில் மாற்றங்களுடன் 7 சீட்டர் ஆப்ஷனில், புதுப் பொலிவுடன் ‘கப்டூர்’ (Kaptur) என்ற பெயரில் ஒரு முழுமையான க்ராஸ்ஓவர் எஸ்யுவியை இறக்க இருக்கிறது ரெனோ. ஐரோப்பாவில் விற்பனையாகும் Renault Captur மாடலைப்போலவே இது இருக்கலாம் என்கிறார்கள்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

எஸ்யுவி செக்மென்ட்டில் ‘தீயா’ வேலை செய்கிறது டாடா. மார்க்கெட்டில் ஏற்கெனவே ஆரியா, சஃபாரி ஸ்டார்ம், சுமோ விக்டா, தற்போது ஹெக்ஸா என்று ஏற்கெனவே பல 7 சீட்டர்கள் இருக்கும் நிலையில், Q5 என்று ஒரு எஸ்யுவியைக் களமிறக்கும் ஐடியாவில் இருக்கிறது டாடா. டாடா ரசிகர்கள் Q5 காரைத்தான் ‘கபாலி’ ரிலீஸ்போல எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். Q5 காரில் அப்படி என்ன ஸ்பெஷல்? லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருப்பதால், இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது Q5 காருக்கு. லேண்ட்ரோவர் பிளாட்ஃபார்ம் என்பதால், பட்ஜெட்டும் எகிறியடிக்கும். டாடாவின் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட்டும் முக்கியம். எனவே, தயாரிப்புச் செலவை எப்படிக் குறைப்பது என்றும் யோசித்து வருகிறதாம் டாடா. 2.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜினில் வரவிருக்கிறது Q5. இந்த இன்ஜினை ஃபியட் க்ரைஸ்லர் குரூப்பில் இருந்து டாடா வாங்க இருக்கிறது. காரின் விலை 20 முதல் 25 லட்சம் வரை இருக்கலாம். ஆரம்பகட்டத் தயாரிப்பில் இருக்கும் Q5 வெளிவருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

4 வீல் டிரைவ் ஆப்ஷன், ஆஃப் ரோடு மாடல், பஸாத்தில் இருக்கும் 2.0 லிட்டர் இன்ஜின், 190bhp பவர், 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், டிரைவிங் மோடு, LED ஹெட்லைட்ஸ் என்று கன்னாபின்னா வசதிகளுடன் மிரட்ட இருக்கிறது டிகுவான். ஆடி போன்ற கார்கள் தயாரிக்கப்படும் MQB பிளாட்ஃபார்மில் உருவாகும் டிகுவான், ஃபோக்ஸ்வாகனின் டிரேட் மார்க் பில்டு குவாலிட்டிக்குப் பெயர் பெற்றதாக இருக்கும். சென்ற இதழில் நாம் டெஸ்ட் டிரைவ் செய்திருந்த ஐரோப்பிய மாடல் 5 சீட்டர் காரில்தான், சில மாற்றங்கள் செய்து இந்தியாவுக்குக் கொண்டுவரவிருக்கிறார்கள்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

2016 ஜெனிவா மோட்டார் ஷோவில்தான் கோடியாக்கை முதன்முதலாக அறிமுகம் செய்தது ஸ்கோடா. ‘விஸன் S’ எனும் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவான கோடியாக் மீது அப்போதே ஸ்கோடா ரசிகர்கள் ஆர்வமாக இருந்ததால், சீக்கிரமாக இதைக் களமிறக்குவதில் முனைப்புடன் இருக்கிறது ஸ்கோடா. ஸ்கோடா கார்கள் கட்டுமானத் தரத்துக்குப் பெயர் பெற்றவை. அதனால், கோடியாக்கையும் சந்தேகப்பட வேண்டியது இல்லை. காரணம், ஆடி, ஃபோக்ஸ்வாகன் டிகுவான், சூப்பர்ப், பஸாத் போன்ற கார்கள் தயாரிக்கப்படும் அதே MQB பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட இருக்கிறது கோடியாக். ஸ்கோடா யெட்டிக்கு அடுத்த இடத்தில் இதை பொசிஷன் செய்ய இருக்கிறது ஸ்கோடா. டெல்லியில் டீசல் தடையை ஒட்டி, 2.0 லிட்டர் இன்ஜினுக்குள்தான் கோடியாக் வரலாம் என்கிறார்கள்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

டெல்லியில் 2,000 சிசிக்கு மேற்பட்ட டீசல் கார்களுக்குத் தடை விதித்ததில், மிகவும் பாதிக்கப்பட்டது டொயோட்டாதான். இனோவா கிரிஸ்டா 2.7 சாலைக்கு வருவதற்குள் கோர்ட் ஆர்டர் ரிலீஸ் ஆக, ‘பாவம் டொயோட்டா’ என்று ஊடகங்கள் ‘உச்’ கொட்டியது எதையும் பொருட்படுத்தாமல், ‘ரிஸ்க் எடுக்கிறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி’ என்று தைரியமாக மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டது டொயோட்டா. ஆம். முற்றிலும் புதுப் பொலிவுடன் 2.7 லிட்டர் இன்ஜினுடன் வரவிருக்கிறது ஃபார்ச்சூனர். டிஸைன், கிரில் போன்ற பாதி விஷயங்கள் அப்படியே கிரிஸ்டாவின் ஜெராக்ஸ். டெல்லியில் ஃபார்ச்சூனர் விற்பனையாகாது என்று தெரிந்தும், டொயோட்டா எடுத்திருக்கும் இந்த முடிவை ‘என்னாச்சு டொயோட்டாவுக்கு’ என்று ஆச்சரியத்தோடு பார்க்கின்றன மற்ற நிறுவனங்கள்.

வரப் போகும் 7 சீட்டர் கார்கள்!

நாம் சொன்னதுபோல் 2017-ல் CR-V வெளிவந்தால், இதற்கு ஐந்தாவது பிறவி. அதாவது, 5-வது ஜெனரேஷன். இப்போது விற்பனையில் இருக்கும்  CR-V, 5 சீட்டர் என்பதாலும் வெறும் பெட்ரோல் மாடல் மட்டும்தான் என்பதாலும், 7 சீட்டர் ஆப்ஷனுடன் வருகிறது புதிய CR-V. இப்போது BR-V எனும் 7 சீட்டர் கார் விற்பனையில் இருப்பதால், அதன் ரெஸ்பான்ஸைப் பொறுத்து, CR-V 7 சீட்டரை ஹோண்டா களமிறக்கும் என்கிறார்கள். ஏனென்றால், BR-V பட்ஜெட் 7 சீட்டர் கார். எனவே, CR-Vயை கோடியாக், டிகுவான் போன்ற கார்களுக்குப் போட்டியாக சொகுசு எஸ்யுவியாக பொசிஷன் செய்யவிருக்கிறது ஹோண்டா. ஆகவே, இதன் விலை 25 லட்சத்தில் இருந்து 30 லட்சத்துக்குள் இருக்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம், CR-V - டீசல் மாடலிலும் வெளிவர வாய்ப்பு உண்டு.

(*படங்கள் அனைத்தும் ப்ரோட்டோ டைப்)

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு