Published:Updated:

தெறி காட்டும் கவாஸாகி!

ஃபர்ஸ்ட் ரைடு: கவாஸாகி நின்ஜா ZX-10R தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
தெறி காட்டும் கவாஸாகி!

வாஸாகி, 2016-ம் ஆண்டுக்கான ZX-10R பைக்கைத் தற்போது அப்டேட் செய்து அறிமுகம் செய்திருக்கிறது. WSBK சாம்பியன்ஷிப் கோப்பையை இரண்டு முறை தொடர்ந்து வென்றிருப்பதால், மேலும் தெறி கூடியிருக்கிறது. ஆனால், புதிய ZX-10R-ன் தோற்றம் பழைய பைக்கைப்போலவே இருந்தாலும், மெக்கானிக்கலாக நிறைய மாற்றங்கள் பைக்கில் நிகழ்ந்துள்ளன.

டிஸைன், தொழில்நுட்பம்

கவாஸாகி ரேஸிங் அணியின் கிராஃபிக்ஸில் வசீகரிக்கிறது புதிய ZX-10R. முன்பக்க மட்கார்டு, பார்ப்பதற்கு H2R பைக்கில் இருப்பது போலவே இருக்கிறது. இது ரேடியேட்டருக்குப் போகும் காற்றின் அளவை அதிகரித்து, இன்ஜின் விரைவாக கூல் ஆக துணைபுரிகிறது. இரட்டை ஹெட்லைட்ஸ் செம ஸ்போர்ட்டி. விண்ட் ஸ்கிரீனின் அகலம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பக்கவாட்டில் இருக்கும் ஏர் இன்டேக்குகள், ஹெல்மெட்டின் மீது மோதும் காற்றின் அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், பைக்கை ஓட்டுபவரின் கைகளுக்குக் கீழே காற்று செல்லும் என்பதால், தோள்பட்டையில் வலி ஏற்படுவது குறையும் என்கிறது கவாஸாகி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் LCD ஸ்கிரீனில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பாரின் இடதுபக்கத்தில், ரைடரின் திறன் மற்றும் சூழலுக்கு ஏற்ப பைக்கின் செட்-அப்பை மாற்றுவதற்கான ஒற்றை ஸ்விட்ச் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க ஃபோர்க்கின் மீது இருக்கும் பெரிய சிவப்பு நிற கேன்களில் நைட்ரஜன் அடைக்கப்பட்டுள்ளது. Showa-வின் Balance Free Fork (BFF) என அழைக்கப்படும் இவை, கவாஸாகியின் WSBK பைக்குகளுக்காக ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டது.

தெறி காட்டும் கவாஸாகி!

பாஷ் நிறுவனத்தின் Inertial Measurement Unit (IMU), ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் பிரேக்கின் திறனை சூழ்நிலைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்கிறது. Ohlins எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பரின் செட்டிங், புதிய சேஸிக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. க்விக் ஷிஃப்ட்டர் இருப்பதால், அதிக ஆக்ஸிலரேஷனுக்கு கியாரன்டி.

தெறி காட்டும் கவாஸாகி!

ஓட்டுதல் அனுபவம்

பைக்கின் சீட்டிங் பொசிஷன், ரேஸ் பைக்குகளைப்போல இருக்கிறது. ஹேண்டில்பாரை எட்டிப் பிடிக்க அதிகம் வளைய வேண்டியிருக்கிறது. இது ரேஸ் டிராக்குக்கு வேண்டுமானால் சூப்பராக இருக்கலாம். ஆனால், உயரம் அதிகமானவர்கள், நெடுஞ்சாலைகளில் பைக்கைத் தொடர்ச்சியாக ஓட்டுபவர்களுக்கு வலியைத் தரலாம். மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக், சீரற்ற இந்தியச் சாலைகளைச் சிறப்பாகச் சமாளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு சஸ்பென்ஷன் அமைக்கப்பட்ட விதமே காரணம். நின்ஜா H2 பைக்கில் காணப்படும் பிரிட்ஜ்ஸ்டோன் Battlax RS10 டயர்கள் ZX-10R பைக்கில் இருப்பது மிகப் பெரிய பலம். கார்னரிங் ஏபிஎஸ், ஸ்மூத்தான ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இருப்பதால், ஓட்டுநர் தவறு செய்தாலும், அவருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கின்றன.

தெறி காட்டும் கவாஸாகி!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

6 ஸ்பீடு கியர்பாக்ஸின் இயக்கம் துல்லியமாக இருந்தாலும், முதல் கியர் Taller Gearing கொண்டிருப்பதால், ஆரம்ப கட்ட ஆர்பிஎம்-ல் இன்ஜின் சுணக்கம் காட்டுகிறது. ஆனால், 8,000 ஆர்பிஎம் தாண்டியவுடன் தெறிக்கவிடுகிறது ZX-10R. க்விக் ஷிஃப்ட்டர் உதவியுடன் கியர் மாறுவதால், பவர் சீராகக் கிடைக்கிறது. பைக்கின் கியரிங் காரணமாக, திருப்பங்களில் அதிக வேகத்தை ஈஸியாக எட்ட முடிகிறது.  Ohlins எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர், தனது பணியைத் திறம்படச் செய்கிறது. 5 லெவல் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், 3 பவர் மோடுகள் இருப்பதால், ரேஸ் டிராக், நெடுஞ்சாலை, மழைக் காலம் என சூழ்நிலைக்கேற்ப மோடை மாற்றி, பைக்கை ஓட்டலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு