Published:Updated:

எந்திரனும்... கபாலியும்...!

ஒப்பீடு: ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின் Vs டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
எந்திரனும்... கபாலியும்...!

முதன்முறையாக பிரீமியம் பைக் உலகில் நுழைபவர்களுக்கு, எப்போதும் ஒரு கவலை இருக்கும். முதலாவது, விலை. அதன் பின்பு, ரொம்பவும் பயமுறுத்தாத பெர்ஃபாமென்ஸ், பாதுகாப்பு அம்சங்கள், ஸ்போர்ட்டியான கையாளுமை என பார்த்துப் பார்த்து தனது முதல் பிரீமியம் பைக்கைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேடுபவர்களுக்கு செம சாய்ஸாக இருப்பவை, ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின் - டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் பைக்குகள்தான். இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

இரண்டு பைக்குகளின் அடிப்படை டிஸைன் 1960-களில் உருவானவை. பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல், அதேசமயம் ‘ஹிப் ஹாப்’ யூத் மத்தியில் ஹிட்டடிக்க, புதுமையையும் கச்சிதமாகச் சேர்த்து டிஸைன் செய்ய வேண்டிய பொறுப்பு டிஸைனர்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் பரிசுத்தமான டிஸைன் பாராட்டப்பட வேண்டியது. ரொம்பவே கரடு முரடாக இல்லாமல், பார்க்க பக்குவமாக இருக்கிறது. டூயல் க்ரேடில் டிஸைன் சேஸியில், புத்தம் புதிய லிக்விட் கூல்டு 8 - வால்வ் 900சிசி பேரலல் ட்வின் இன்ஜின் உள்ளது. 55bhp சக்தி மட்டும்தான் என்றாலும், முன்பைவிட டார்க் 18 சதவிகிதம் கூடுதலாகக் கிடைக்கிறது. 8.15kgm டார்க் 3,250 ஆர்பிஎம்மிலேயே கிடைப்பது ப்ளஸ்.

எந்திரனும்... கபாலியும்...!

ஸ்ட்ரீட் ட்வின் எந்த வம்பு தும்புக்கும் போகாத டிஸைனைக்கொண்டிருக்கிறது என்றால், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பக்கா மிரட்டல் டிஸைன். பார்க்கவே யூத் ஃபீல் தெறிக்கிறது. அகலமான டயர்கள் இருக்கும் நிலையில், பெட்ரோல் டேங்க் அளவு சிறிதாக இருப்பதால், பார்க்க கட்டுமஸ்தாகத் தெரிகிறது. மான்ஸ்டர் 795/796 பைக்குகளின் 803 சிசி, ஏர் கூல்டு, 4 வால்வ் L-ட்வின் இன்ஜினை, இந்த பைக்குகாகக் கொஞ்சம் மாற்றி டியூன் செய்திருக்கிறார்கள். இந்த இன்ஜின் 75bhp சக்தியையும், 6.93kgm டார்க்கையும் அளிக்கிறது. டியூப்லர் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமைக் கொண்டிருக்கிறது ஸ்கிராம்ப்ளர்.

எந்திரனும்... கபாலியும்...!

சாதாரண பயன்பாட்டுக்காக ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் முன் பக்கம் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்ஸார்பர்களும் உள்ளன. பலதரப்பட்ட சாலைகளில்
பயன்படுத்துவதற்காக, ஸ்க்ராம்ப்ளரில் முன்பக்கம் அப்-சைட் டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

டயர்களைப் பொறுத்தவரை ஸ்கிராம்ப்ளருக்கு ஆன்/ஆஃப் ரோடு பயன்பாட்டுக்கு ப்ளாக் - டைப் ட்ரெட் கொண்ட பைரலி MT60 டயர்களும், ஸ்ட்ரீட் ட்வின்னில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைரலி ஃபான்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் டயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, ஸ்ட்ரீட் ட்வின்னில் பின்பக்கம் மட்டும்தான் ரேடியல்.

பெர்ஃபாமென்ஸ்

பெர்ஃபாமென்ஸைப் பொறுத்த வரை ஸ்ட்ரீட் ட்வின் ஹாஃப்பாயில் ஆம்லெட் என்றால், ஸ்க்ராம்ப்ளர் பக்கா பொடிமாஸ்... தெறி மாஸ்.

0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.03 விநாடிகளில் கடக்கிறது ஸ்க்ராம்ப்ளர். ஸ்ட்ரீட் ட்வின் இதே வேகத்தைக் கடக்க 6.14 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது. இந்த மெகா வித்தியாசத்துக்குக் காரணம் இன்ஜின் பவர் வெளிப்பாடும், எடை வித்தியாசமும்தான். ஆம், ஸ்க்ராம்ப்ளர் வெறும் 186 கிலோ எடை கொண்டிருக்க, ஸ்ட்ரீட் ட்வின் 217 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் பவர் டெலிவரி, க்விக்காக இருக்கிறது. ‘விரட்டு... விரட்டு... மெரட்டு மெர்சல்’ என ஆக்ஸிலரேட்டரை முறுக்கச் சொல்கிறது ஸ்க்ராம்ப்ளர். மிட்-ரேஞ்சில் இரண்டு பைக்குகளும் ஒன்றேதான். ஆனால், குறைந்த ஆர்பிஎம்-ல், முக்கியமாக 2,000 - 2,500 ஆர்பிஎம்-க்குக் கீழே இன்ஜின் கொஞ்சம் தடுமாறுகிறது. டிராஃபிக்கில் கொஞ்சம் கவனமாகவே ஆக்ஸிலரேட்டரை முறுக்க வேண்டும். ஸ்ட்ரீட் ட்வின் இன்ஜின் பெர்ஃபாமென்ஸில் சுமார் என்றாலும், எல்லா ஆர்பிஎம்-லும் சூப்பர் ஸ்மூத்தாக இயங்குகிறது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் இருப்பதால், வழுக்கலான சமயங்களில் தலையிட்டுச் சமாளிக்கிறது.
 
கியர்பாக்ஸைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளும் சுமார்தான். ஸ்க்ராம்ப்ளரில் அவ்வப்போது ஃபால்ஸ் - நியூட்ரல் விழுகிறது. ஸ்ட்ரீட் ட்வின் கியர்பாக்ஸ், டவுன்ஷிஃப்ட் செய்யும்போது மந்தமாக இருக்கிறது.

ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் உயரம் குறைந்தவர்களும் வசதியாக அமர்ந்து ஓட்ட முடிவது ப்ளஸ். ஸ்க்ராம்ப்ளரின் இருக்கை சாஃப்ட்டாக இருந்தாலும், ரைடிங் பொசிஷன் ஒரு மாதிரியாக இருக்கிறது. மேலும், ஹேண்டில்பார்கள் அகலமாக இருப்பதால், தொலை தூரப்பயணங்களில் கைகள் சோர்ந்துவிடுகின்றன. ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் இருக்கை அகலமாகவும், ஹேண்டில்பார் தாழ்வாகவும் உள்ளதால் ஓட்ட வசதியாக உள்ளது. ஆனால், காலின் முட்டிகள் டேங்குக்குக் கீழே வருவதால், தொடைகள் மூலம் கிரிப் செய்ய முடியவில்லை.

எந்திரனும்... கபாலியும்...!

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

வளைவு நெளிவான சாலைகளை உற்சாகமாக எதிர்கொள்கிறது ஸ்க்ராம்ப்ளர். உயர்தரமான சஸ்பென்ஷன் செட்-அப், கேஸ்ட் அலாய் ஸ்விங் ஆர்ம் - பைக்குக்குத் தேவையான இறுக்கத்தைக் கொடுக்கிறது. வளைவுகளில் எவ்வளவு விரட்டி ஓட்டினாலும், ஸ்க்ராம்ப்ளர் நம்பிக்கையைத் தருகிறது. இந்த ஸ்போர்ட்டினெஸ்ஸைக் கொடுப்பதற்காக சஸ்பென்ஷன் இறுக்கமாக செட் செய்யப்பட்டுள்ளது. இதனால், குறைந்த வேகங்களில் சற்று குலுங்கலாகச் செல்கிறது ஸ்க்ராம்ப்ளர். ஆனால், வேகமாக ஓட்டினால், மோசமான சாலைகளை அசால்ட்டாகச் சமாளிக்கிறது. லாங் டிராவல் சஸ்பென்ஷன் ஆஃப் ரோடிங்குக்குக் கைகொடுப்பது ப்ளஸ்.

எந்திரனும்... கபாலியும்...!

ஸ்ட்ரீட் ட்வின் பைக் ஸ்மூத்தான சாலைகளில்தான் ஜாலியாகச் செல்கிறது. வளைவுகளில் ஓகே என்றாலும், ஸ்க்ராம்ப்ளரின் ஸ்போர்ட்டினெஸ் இல்லை. வழுக்கலான சாலை என்றால், ரொம்பவே ஜாலியாக ஓட்டுவதைக் குறைத்துக்கொள்வது நலம். மேடு பள்ளங்களை, ஸ்க்ராம்ப்ளரைவிட எளிதாகச் சமாளிக்கிறது ஸ்ட்ரீட் ட்வின்.

மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இருந்து சடன் பிரேக் போட்டால், வெறும் 29.3 மீட்டரில் கச்சிதமாக

எந்திரனும்... கபாலியும்...!

நிற்கிறது ஸ்க்ராம்ப்ளர். ஸ்ட்ரீட் ட்வின் இதே வேகத்தில் இருந்து நிற்க, 35.4 மீட்டர்கள் எடுத்துக்கொள்கிறது. இரண்டு பைக்குகளிலும் ஏபிஎஸ் இருக்க, நல்ல பிரேக் பீட்பேக் அளிப்பது ஸ்க்ராம்ப்ளர்தான்.

ரண்டு பைக்குகளும் ஒரே செக்மென்ட்தான். ஆனால், பெர்சனாலிட்டியில் இருவேறு விதமாக மெர்சல் செய்கின்றன. ஸ்க்ராம்ப்ளரின் பெர்ஃபாமென்ஸும், ஆஃப் ரோடிங்கும் ஸ்ட்ரீட் ட்வின்னில் இல்லை. அதேசமயம், ஸ்ட்ரீட் ட்வின்னின் ரிஃபைன்மென்ட்டும், ரிலாக்ஸான ஓட்டுதல் அனுபவமும் ஸ்க்ராம்ப்ளரில் இல்லை. ஸ்ட்ரீட் ட்வின்னின் அமைதியும், நிதானமும் எந்த ரைடருக்கும் அவ்வப்போது தேவைதான். ஆனால், நாம் பைக் ஓட்டுவதற்கே ஜாலிக்காகத்தானே... அந்த வகையில் பார்த்தால், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர்தான் எங்கள் செல்லம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு