Published:Updated:

டாப் 10 மைலேஜ் கார்கள்

ரிப்போர்ட்: மைலேஜ் ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

டெல்லி மற்றும் கேரளாவில் நிலவும் டீசல் வாகனத் தடையைத் தாண்டி, ஆட்டோமொபைல் துறையின் ஹாட் டாக், பெட்ரோல் - டீசல் விலை உயர்வுதான். எல்பிஜி கார், ஹைபிரிட் கார் பற்றி மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘என்னோட கார் வெறும் பத்து கிலோ மீட்டர்தான் மைலேஜ் கொடுக்குது... 15 கிலோ மீட்டரைத் தாண்ட மாட்டேங்குது’ என அலுத்துக்கொள்கின்றனர். இப்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கொண்ட கார்களில், அதிக மைலேஜ் தரும் கார் எது? சின்ன கார், ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் ஆகியவற்றில் மைலேஜில் எது பெஸ்ட்?

(மைலேஜ்கள் அனைத்தும் ஆவரேஜ்

டாப் 10 மைலேஜ் கார்கள்

1. நெரிசல்மிக்க நம் ஊர் சாலைகளுக்கு ஏற்ற கார் செலெரியோ. பெட்ரோல் இன்ஜின்களுடன் ஒப்பிடும்போது, டீசல் இன்ஜின் அதிக மைலேஜ் அளித்தாலும், பெட்ரோல் கார் போன்ற ஸ்மூத்னெஸ் இதில் கிடைக்காது. இருந்தாலும், செலெரியோவில் 2 சிலிண்டர் டீசல் இன்ஜினைப் பொருத்தியுள்ள மாருதி சுஸூகி, அதனை பவர்ஃபுல்லாகவும் அதிர்வுகள் இன்றியும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனென்றால், டர்போ லேக் காரணமாக ஆரம்ப கட்ட பெர்ஃபாமென்ஸ் சுமார்தான். மிட் ரேஞ்ச் ஓகே. மிகச் சிறிய டீசல் இன்ஜினில், டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. மாருதியின் பலங்களான குறைவான பராமரிப்புச் செலவுகள், பெரிய சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இந்த காருக்கும் பொருந்தும். 6 வேரியன்ட்களில் கிடைக்கும் செலெரியோவின் சென்னை ஆன் ரோடு விலை, 5.71 லட்சம் முதல் 6.91 லட்சம் வரை.

2. சிறப்பான டிஸைன், சிறப்பம்சங்கள், தரமான கேபின் ஆகியவை ஹூண்டாய் கார்களின் ஸ்பெஷல். கிராண்ட் i10 காரை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் காம்பேக்ட் செடான், எக்ஸென்ட். 4 பேருக்கு ஏற்ற இடவசதியுடன், தேவையான வசதிகள் அனைத்தும் உள்ளன. ஸ்மூத்தான இன்ஜின், போதுமான பெர்ஃபாமென்ஸ், நல்ல மைலேஜ் எக்ஸென்ட்டின் பலம். எடை குறைவான பவர் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப், நகருக்குள் காரை எளிதாக ஓட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், இதுவே நெடுஞ்சாலையில் மைனஸாக மாறிவிடுகிறது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, எக்ஸென்ட்டில் இருக்கும் டீசல் இன்ஜின் பவர்ஃபுல்லாக இல்லை. சுமாரான ஓட்டுதல் அனுபவத்தைத் தாண்டி, எக்ஸென்ட்டில் பெரிய குறைகள் இல்லை. ஆரம்ப வேரியன்ட் முதலாகவே ஏபிஎஸ், காற்றுப் பைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் இதன் சென்னை விலை, 7.26 லட்சம் முதல் 9.31 லட்சம் வரை.

3. ‘டி
ரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படப் புகழ் செவர்லே பீட்டின் கவர்ச்சியான டிஸைனுடன் ஒப்பிடும்போது, அதன் கேபின் வடிவமைப்பு பரவாயில்லை ரகம்தான். ஷார்ட் கியரிங் காரணமாக, நகருக்குள் காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. இதை நம்பி நெடுஞ்சாலைக்குச் சென்று ஆக்ஸிலரேட்டரில் மொத்த வித்தையைக் காட்டினால், வேகமாகச் செல்வதற்கான பவர் இல்லாமல் திணறுகிறது பீட். இதில் இருப்பது, ஃபியட்டின் புகழ்பெற்ற 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் இன்ஜினின் 3 சிலிண்டர் வெர்ஷன். அதிர்வுகள் மற்றும் இன்ஜின் சத்தம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் மற்றும் ஓட்டுதல் தரம் மனநிறைவைத் தருகிறது. 4 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை, 6.30 லட்சம் முதல் 7.81 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரின் விலையை நியாயப்படுத்தும்விதத்தில், அதிக சிறப்பம்சங்கள் இல்லாதது பீட்டின் மைனஸ்.

4. சென்னை ஆன் ரோடு விலையான 6.61 - 8.48 லட்சத்தில், 12 வேரியன்ட்களில் கிடைக்கும் KUV 1OO டிஸைன், இதே விலைக்குக் கிடைக்கும் மற்ற கார்களைவிட வித்தியாசமாக இருக்கிறது. கேபின் வடிவமைப்பும் நன்றாகவே இருக்கிறது. 5 அல்லது 6 இருக்கை ஆப்ஷன்கள் மற்றும் கேபினில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைப்பது, பெரிய குடும்பங்களுக்கு வரப்பிரசாதம். 3 சிலிண்டர் டீசல் இன்ஜினைக்கொண்டிருக்கும் இந்த கார், நகருக்குள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்தாலும், காரின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம் மனநிறைவைத் தரவில்லை. டிரைவிங் மோடுகளை மாற்றி ஓட்டும்போது, பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் வேறுபாட்டை உணர முடிகிறது. KUV 1OO தனித்தன்மையான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், ஆஃப்ரோடு வசதி, பெர்ஃபாமென்ஸ் போன்றவற்றில் ட்ரெண்ட் செட்டர் ஆகவில்லை.

டாப் 10 மைலேஜ் கார்கள்

5. இந்தியாவில் காம்பேக்ட் செடான் செக்மென்ட்டைத் துவக்கிவைத்த பெருமை, இண்டிகோவையே சேரும். 3 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை 6.89 லட்சம் - 7.34 லட்சம். கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கும் இந்த காரை சர்வீஸ் செய்வது எளிது, நல்ல மைலேஜ், 5 பேர் வசதியாக உட்கார முடியும் போன்ற காரணங்களால், டாக்ஸி மார்க்கெட்டில் இண்டிகோ ECS பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. பொதுவாகவே இனோவா தவிர்த்து, டாக்ஸி மார்க்கெட்டில் ஹிட்டடித்த கார்கள், மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது இல்லை. அதேபோல, காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் பல மாடர்ன் ஆப்ஷன்களின் வருகையின் காரணமாக, நீண்ட நாட்களாக விற்பனையில் இருக்கும் இந்த கார், சிறப்பம்சங்கள் மற்றும் டிஸைனில் கெத்து காட்டாததால், மக்களின் பார்வையில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இந்த காருக்கு மாற்றாக, டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட உள்ள கைட்-5 காம்பேக்ட் செடான், இந்நிலையை மாற்றும் என நம்பலாம்.

6. டஸ்ட்டர் மூலம் இந்திய மக்கள் மனதில் இடம்பிடித்த ரெனோ, அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அறிமுகப்படுத்திய ஹேட்ச்பேக் கார், க்விட். போட்டி மிகுந்த ஏரியாவில் குதித்திருக்கும் க்விட்டை, 98 சதவிகிதம் உள்ளூர் பாகங்களைக்கொண்டு CMF-A பிளாட்ஃபார்மில் தயாரித்திருக்கிறது ரெனோ. இதனால், காரின் பராமரிப்புச் செலவுகள் போட்டியாளர்களைவிடக் குறைவாக இருக்கும் என நம்பலாம். மேலும், எஸ்யுவி போன்ற தோற்றத்துடன் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும், 300 லிட்டர் பூட் ஸ்பேஸும் இருப்பதால், பெரிய கார்போல இருக்கிறது க்விட். ஓட்டுதல் தரம் மற்றும் மைலேஜ் மன நிறைவைத் தருகிறது. தனித்துவமாக டிஸைன் செய்யப்பட்டுள்ள க்விட்டின் வெயிட்டிங் பீரியட், க்விட்டின் அசுர வெற்றியைப் பிரதிபலிக்கிறது. 6 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை, 3.34 லட்சம் முதல் 4.53 லட்சம் வரை.

7. பட்ஜெட் காரின் தோற்றம், சீப்பாக இருக்க வேண்டியது இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறது ஹூண்டாய். இயானின் மாடர்ன் டிஸைன் காரணமாகவே, இந்த காரை விரும்பி வாங்கியவர்கள் ஏராளம். க்விட்டுடன் ஒப்பிடும்போது, இயானின் கேபினில் இடவசதி சற்று குறைவுதான். ஆனால், காரின் கறுப்பு - பீஜ் இரட்டை வண்ண டேஷ்போர்டு தரமாக இருப்பதுடன், போதுமான சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது. டிஸைன், கேபின் தரம் மற்றும் சிறப்பம்சங்களில் சொல்லியடிக்கும் ஹூண்டாய் கார்கள், ஓட்டுதல் அனுபவத்தில் சொதப்பிவிடும். அதே பிரச்னையால் தவிக்கும் இயானில், பவர்ஃபுல்லான 1.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் இருப்பது ஆறுதல். காரின் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப், நகரப் பயணத்தைச் சுலபமாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஸ்டைலிஷ் சிட்டி காராக ஜொலிக்கிறது இயான். மொத்தம் 10 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை,
4.20 முதல் 5.20 லட்சம் வரை.

8. மாருதி சுஸூகியின் பிரீமியம் ஹேட்ச்பேக்காக களமிறங்கியிருக்கும் பெலினோவின் டிஸைன், அவர்களது கோட்பாடுகளின்படிதான் அமைந்திருக்கிறது. காரின் கேபினில் இருக்கும் பல பாகங்கள், விலை குறைவான மாருதி கார்களில் இருந்து பெறப்பட்டுள்ளதால், ஸ்பெஷலாக இல்லை. ஆனால், V வடிவ சென்டர் கன்ஸோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், தேவையான தகவல்கள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டித் தரும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், அதிகமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் எனச் சில குறிப்பிடத்தக்க அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. காரின் அகலம் மற்றும் வீல்பேஸ் காரணமாக, மற்ற மாருதி ஹேட்ச்பேக்குகளைவிட நல்ல இடவசதி இருக்கிறது. ஸ்விஃப்ட்டில் இருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள்தான் பெலினோவிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், ஸ்விஃப்ட்டைவிட பெலினோவின் எடை குறைவு என்பதால், பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் திருப்திகரமாகவே இருக்கிறது. பெலினோவின் ஓட்டுதல் தரம் நன்றாக இருந்தாலும், கையாளுமை ஸ்விஃப்ட் அளவுக்கு இல்லை. காரின் பாதுகாப்புக்காக, ஆரம்ப வேரியன்ட் முதலே ஏபிஎஸ் மற்றும் 2 காற்றுப் பைகள் வழங்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன், மொத்தம் 9 வேரியன்ட்களில் கிடைக்கும் பெலினோவின் சென்னை ஆன் ரோடு விலை, 6.22 லட்சம் முதல் 9.95 லட்சம் வரை. மாருதியின் பிரீமியம் ஷோரூமான நெக்ஸாவில் பெலினோ விற்பனை செய்யப்பட்டாலும், காரின் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் பிரீமியமாக இல்லை. வெயிட்டிங் பிரீயட்டில் கார் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

டாப் 10 மைலேஜ் கார்கள்

9. முதன்முறையாக கார் வாங்குபவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆல்ட்டோ 800 காரின் டிஸைன், அதிரடியாக இல்லை. மேலும், இடநெருக்கடி மிகுந்த கேபினின் தரமும், போட்டியாளர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை. ஆனால், குறைவான பராமரிப்புச் செலவுகள், நல்ல மைலேஜைத் தரும் இன்ஜின், மிகப் பெரிய சர்வீஸ் நெட்வொர்க், அற்புதமான ரீ-சேல் மதிப்பு, நிறைவான ஓட்டுதல் அனுபவம் போன்றவற்றால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையைத் தக்க வைத்திருக்கிறது ஆல்ட்டோ 800.
8 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை 3.08 முதல் 4.07 லட்சம் வரை. க்விட் தரும் போட்டியைச் சமாளிப்பதற்காக, கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜுடன் மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ 800 காரை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி.

10.கோ சைஸில் இருக்கும் கார்களோடு இதை ஒப்பிட்டால், இது சுமாராகத்தான் இருக்கும். ஆனால், கோ காரின் விலையில் கிடைக்கும் மற்ற கார்களுடன் இதை ஒப்பிட்டால், கொடுக்கும் காசுக்கு மதிப்பை ஸ்கோர் செய்கிறது கோ. நல்ல பூட் ஸ்பேஸைக்கொண்ட பெரிய கேபின், ஸ்டைலான டிஸைன், சூப்பர் பெர்ஃபாமென்ஸ், போதுமான மைலேஜ், நிறைவான ஓட்டுதல் அனுபவம் என பிராக்டிக்கலாக இருக்கும் கோ காரின் விலையைக் கட்டுக்குள் வைக்க, சென்டர் லாக்கிங், மியூஸிக் சிஸ்டம் போன்ற சில அத்தியாவசிய வசதிகள்கூட சேர்க்கப் படாதது மிகப் பெரிய மைனஸ். காரின் மெக்கானிக்கல் சத்தம் கேபினுக்குள்ளே கேட்கிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும், காரின் விலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, பட்ஜெட் விலையில் பெரிய கார் வேண்டும் என்பவர்களை கோ ஏமாற்றாது. 5 வேரியன்ட்டில் கிடைக்கும் இந்த காரின் சென்னை ஆன் ரோடு விலை, 3.87 முதல் 4.87 லட்சம் வரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு