Published:Updated:

ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!
ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!

ரீடர்ஸ் கிரேட்: எஸ்கேப் ரெனோ லாஜிகா.பாலமுருகன், படங்கள்: வீ.சிவக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!

‘‘எப்போ வேணாலும் கூப்பிடுங்க... கிரேட் எஸ்கேப்புக்காகவே லாஜி புக் பண்ணியிருக்கேன்!” என்று சில மாதங்களுக்கு முன்பே வாய்ஸ் ஸ்நாப் செய்திருந்தார், பழனியைச் சேர்ந்த மதனகோபால். திடீரென ஒருநாள், “நாளைக்கு ஊட்டிக்குப் போலாமா?” என்று ஜாலியாக வாட்ஸ்-அப் செய்தபோது, “நான் ரெடி; நீங்க கிளம்புங்க! தெறிக்கவிடலாம்!” என்று அடுத்த விநாடி தம்ஸ்-அப் எமோட்டிகான் அனுப்பினார் மதனகோபால்.

மறுநாள் காலை - பழனி மலைக்கோயில் அடிவாரத்தில், ஃபேன்ஸி பொருட்களுக்கான தனது ஹோல்சேல் கடையில் லாஜியுடனும், குடும்பத்தினருடனும் நம்மை வரவேற்றார் மதன்.
மனைவி சித்ரா, நான்காம் வகுப்பு படிக்கும் சாருகா, ஆறாம் வகுப்பு படிக்கும் வர்சிகா என்று எல்லோரையும் அறிமுகப்படுத்தியவர், ‘‘லாஜியை நிறைய ஓட்டிட்டேன். நீங்கதான் ஓட்டிப் பார்த்து என்னோட கார் எப்படி இருக்குன்னு சொல்லணும்...’’ என்று காரின் சாவியை நம் கையில் ஒப்படைத்தார். என்னையும் புகைப்படக் கலைஞரையும் சேர்த்து ஆறு பேர் அமர்ந்தபோதும், ‘வேற யாரும் இல்லையா?’ என்று கேட்பதுபோல், ஒரு சீட் காலியாகவே இருந்தது.

ஸ்டார்ட் செய்ததும் ஆச்சரியமாக அதிர்வுகள் இல்லாமல் இயங்கிய ரெனோவின் dCi டீசல் இன்ஜின், கியர் மாற்றி கிளட்சை ரிலீஸ் செய்ததும் சின்ன ஜெர்க்குடன் கிளம்பியது. பழனியில் இருந்து ஊட்டி செல்ல கோவைக்குள் சென்றுதான் செல்ல முடியும். உடுமலைப் பேட்டை, பொள்ளாச்சி வழியாக ஊட்டிக்கு GPS செட் செய்தோம். பழனி - கோவை சாலை இருவழிச் சாலைதான். வளைவு நெளிவுகள், மக்கள் நடமாட்டம் கொண்ட ஊர்கள் இந்தச் சாலையில் அதிகம். எனவே, நிதானமாகவே ஆக்ஸிலரேட்டரைக் மிதித்தேன்.

ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!
ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!

‘‘லாஜியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?’’ என்று மதனகோபாலிடம் கேட்டேன். ‘‘லட்சம் கனவுகளில் லட்சியக் கனவானது என் லாஜி!’’ என்று பஞ்ச் வைத்துப் பேசியவர், கார் வாங்கிய கதையைச் சொன்னார். ‘‘என் முதல் கார், மாருதி ஆம்னி. அதை கொடைக்கானலில் இருந்து ஒருவரிடம் செகண்ட் ஹேண்டாக வாங்கினேன். கார் பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால், மலையைவிட்டுக் கீழே இறங்கிய பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். 90,000 ரூபாய்க்கு வாங்கி, 60,000 ரூபாய்க்கு விற்க வேண்டி வந்தது. அதனால், இனி வாங்கினால் புதிய கார்தான் வாங்க வேண்டும் என்ற வைராக்கியம் வந்துவிட்டது. சில மாதங்களிலேயே புதிய ஆம்னி காரை வாங்கிவிட்டோம். அதில்தான் தொழில் விஷயமாக மதுரை, கோவை என சென்று வந்து கொண்டிருந்தோம். எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். என் அண்ணன் சுரேசனும் நானும் சேர்ந்துதான் ஃபேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறோம். எனவே, குடும்பத்தோடு ஏதாவது விசேஷத்துக்குச் செல்வது என்றால், ஆம்னி கார் போதவில்லை. மேலும், ஆம்னி அவ்வளவு பாதுகாப்பான கார் இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.

ரொம்பவும் பெரிய காராக இல்லாமல் காம்பேக்ட்டான 7 சீட்டர் கார் வாங்கலாம் என என் அண்ணனுடன் கலந்தாலோசித்தேன். பெரிய காருக்குப் போனால் பட்ஜெட் அதிகமாகும்; எனவே, ஓரளவு கண்டிஷனாக இருக்கும் பழைய காரை வாங்கலாம் என்று தேடினேன். கோவையில் மஹிந்திரா ஸைலோவைப் பார்த்தேன். டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தபோது எனக்குத் திருப்தி இல்லை. அதனால், பொலேரோ ஜீப் வரை என் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போதுதான் மோட்டார் விகடனில் 8 காம்பேக்ட் கார்களை ஒப்பிட்டு ஒரு கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதைப் படித்ததும் எனக்கு வாங்கலாம் எனத் தோன்றிய கார் - ரெனோ லாஜி. ஏனென்றால் பட்ஜெட், பராமரிப்பு, பாதுகாப்பு, தேவையான இடவசதி, மைலேஜ் என எல்லா விஷயங்களும் எங்களுக்குச் சாதகமாக இருந்தன. காரை முடிவு செய்துவிட்டு என் யோசனையை அண்ணனிடம் கூறினேன். அவருக்கு அப்படி ஒரு கார் இருப்பதே தெரியவில்லை. ‘‘நம் ஊரில் யாராவது வைத்திருக்கிறார்களா; கம்பெனி எங்கே இருக்கிறது; டீலர் சர்வீஸ் நெட்வொர்க் எப்படி’’ என்பதை எல்லாம் விசாரித்தார். அதற்கு என்னால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. ஆனால், அப்போது ஆதாரமாக என் அண்ணனிடம் காட்டியது மோட்டார் விகடனைத்தான். காரை வாங்கி ஊருக்கு வந்தபோது, உறவினர்களும் நண்பர்களும் ‘இது என்ன கம்பெனி கார்? இப்படி ஒரு காரைப் பார்த்ததே இல்லையே’ என்றுதான் கேட்டனர்.

ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!
ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!

ஆம்னி ஓட்டிக்கொண்டிருந்த எனக்கு, இந்த கார் எல்லாவிதத்திலும் வசதியாக இருக்கிறது; சொகுசாகவும் இருக்கிறது. காரின் டிஸைன், வசதிகள் எல்லாம் ஓகே! ஆனால், பின்பக்கம்தான் என்னமோ போல் இருக்கிறது. அதேபோல், ஸ்பீடு பிரேக்கரில் எவ்வளவுதான் கவனமாக ஓட்டினாலும் இடிக்கிறது. இதில் மட்டும் ரெனோ கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இந்த கார் நம்பர் ஒன்னாக இருக்கும்!’’ என்றார்.

உடுமலை, பொள்ளாச்சி தாண்டி கோவைக்குள் நுழைந்தபோது, மணி மதியம் 12-ஐத் தாண்டியிருந்தது. மேட்டுப்பாளையம் சாலையில் செல்வதா அல்லது அன்னூர் சாலையில் செல்வதா என GPS காட்டிய இரண்டு வழிகளில் அன்னூர் வழியைத் தேர்ந்தெடுத்தோம். மேட்டுப்பாளையம் சேர்ந்தபோது, மணி 2 ஆகியிருந்தது. மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் புறப்பட்டோம். பவானி ஆற்றைக் கடந்து எதிரே உயர்ந்திருந்த மலைகளை நோக்கி விரைந்தபோது, பிளாக் தண்டரைக் கண்டதும் உற்சாகமாகச் சத்தமிட்டனர் குழந்தைகள் இருவரும். ‘‘இன்னொரு நாள் இங்கு வருவோம்’’ என்று அவர்களைச் சமாதானம் செய்தார் மதனகோபால்.

ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கி விட்டதால், மே மாதத்துடன் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்துவிடும். மழை வேறு ஆரம்பித்துவிட்டது. ரிலாக்ஸாக எல்லா இடங்களையும் ரசிக்கலாம் என்பது மதனகோபாலின் எண்ணமாக இருந்தது. ஆனால், ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கீழே இறங்கிக்கொண்டிருந்தன.

லாஜியின் டீசல் இன்ஜின் டர்போ லேக்குக்குப் பெயர்பெற்றது. அதை சாதுர்யமாகக் கையாண்டால், அந்தக் குறையே இல்லாததுபோல லாவகமாக ஓட்ட முடியும். ஆனால், அது தரையில் உள்ள சாலைகளுக்குத்தான் பொருந்தும். மலைச் சாலையில் அந்த சாதுர்யம் கைகூடவில்லை. கிட்டத்தட்ட குன்னூர் வரை ஏற்றமாக இருக்கும் சாலையில் ஹேர்பின் வளைவுகளில் நிற்காமல் செல்ல நேர்ந்தால் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், எதிரே வாகனம் வந்து நின்று வழிவிட்டுப் புறப்பட்டால், டர்போ லேக் பல்லை இளிக்கிறது. அதேபோல், ஏற்றமான சாலையில் நிறுத்தி மீண்டும் கிளம்பும்போது ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டி, ஆர்பிஎம் மீட்டரை 2,000 வரை எகிறவைத்துப் புறப்பட வேண்டியிருக்கிறது. 2,000 ஆர்பிஎம் தாண்டிவிட்டால், புது ரத்தம் பாய்ந்ததுபோல சக்தி பிரவாகம் எடுக்கிறது. அதேபோல், பாடி ரோல் அவ்வளவாக இல்லாதது ஆச்சரியம். டர்போ லேக்கால் மலைச் சாலையில் மிக மிக நிதானமாக ஊர்ந்து செல்லும் பஸ், லாரி போன்ற கன ரக வாகனங்களை, நம்பி ஓவர்டேக் செய்ய முடியவில்லை. அதனால், பயணம் நிதானமாகவே இருந்தது. கார் வாங்கி இதுவரை சுமார் 6,000 கி.மீ-க்கு மேல் ஓட்டிவிட்டார் மதனகோபால். ‘பிரேக் படு ஷார்ப்பாக இருக்கிறது. கிளட்ச்தான் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறது’ என்பதை ஒப்புக்கொண்டார் மதனகோபால்.  

ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்!

பர்லியாறு தாண்டியதும், லேசாக எட்டிய குளிர் காற்றை விண்டோஸை இறக்கிவிட்டு அனுபவித்தனர் மதனகோபால் குடும்பத்தினர். குன்னூர் தாண்டி கேத்தி பள்ளத்தாக்குப் பகுதியை அடைந்து வியூ பாயின்ட்டில் காரை நிறுத்தினோம். பள்ளத்தாக்கில் தெரிந்த வீடுகளையும் பஞ்சுப் பொதிகளாக அலைந்த மேகங்களையும் ரசித்தனர். மணி 4-க்கு மேல் ஆகியிருந்தது. அதனால், உடனே புறப்பட்டு ஏதாவது ஓர் இடத்தையாவது பார்த்துவிடுவோம் எனப் புறப்பட்டோம்.

ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா செல்லும் வழியில் இருந்த செக்போஸ்ட்டை அடைந்தபோது மணி 5 ஆகிவிட்டிருந்தது. 5 மணிக்குமேல் அனுமதி இல்லை என்று கைவிரிக்க... நமது திட்டம் சரிவர நிறைவேறவில்லையே என வருந்தினாலும், ‘பரவாயில்லை சார்... நாளைக்குப் பார்த்துக்கலாம்’ என சமாதானம் ஆனார் மதனகோபால். கீழே இறங்கும்போது சாலையோரம் விற்பனை செய்துகொண்டிருந்த காரட் கடையைப் பார்த்து குழந்தைகள் குதூகலித்தார்கள்.

ஜில்லிட்ட காரட் கொத்துகளை வாங்கிக்கொண்டு உற்சாகமாகக் கடித்தபடி, ‘‘அடுத்து எங்கே போறோம் அங்கிள்?’’ என்றனர் குழந்தைகள் வர்சிகாவும் சாருகாவும். ‘‘இருட்டாகப் போகுது. தூங்கிட்டு நாளைக்குச் சுத்திப் பார்க்கலாம்!’’ எனச் சொல்லிவிட்டு, காரை ஹோட்டல் தமிழ்நாடு நோக்கி அழுத்தினேன்.

தமிழ்நாடு ஹோட்டலில் அன்று இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு கூடலூர் சாலையில் உள்ள பைகாரா, சினிமா படப்பிடிப்பு நடக்கும் புல்வெளிக்கு அருகே இருந்த காமராஜ் சாகர் நீர்த் தேக்கத்துக்கும் சென்றுவிட்டு, ஊட்டி லேக்குக்கு வந்து சேர்ந்தோம். லேசாகப் பெய்த சாரல் மழை, குளிரில் ஊசியாகக் குத்தியது. ஆனால், படகில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் குழந்தைகள் இருவரும். 8 பேர் செல்லும் படகில் இன்னொரு குடும்பத்தையும் சேர்த்துக்கொண்டு உற்சாகமாகச் சத்தமிட்டபடி பயணித்தனர்.

மீண்டும் தமிழ்நாடு ஹோட்டலுக்குத் திரும்பி மதிய உணவை முடித்துவிட்டு தொட்டபெட்டாவுக்குப் புறப்பட்டோம். சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் காரை நிறுத்துவதற்குக்கூட இடம் இல்லை. மலைச் சாலையில் ஓர் ஓரமாக காரை நிறுத்திவிட்டு, சிகரத்தின் முனைக்குச் சென்றோம். குளிர் காற்று உடலை நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. இரண்டு தினங்களாக ஸ்வெட்டர் அணியாமல் இருந்தவர்கள், அவசர அவசரமாகத் ஸ்வெட்டரைத் தேடினார்கள். குளிருக்கு மிளகாய்த்தூள் தூவிய மாங்காய், சூடான சுண்டல் என வாங்கிச் சாப்பிட்டவர்கள், ‘ஐயோ காரம்’ என தண்ணீர் பாட்டிலைத் தேடி ஓடினார்கள்.

“இதற்கு முன்பு நண்பர்களோடு ஊட்டி வந்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு கிளைமேட்டை நான் அனுபவித்தது இல்லை” என்றார் மதனகோபால். “கொடைக்கானல் சென்றுள்ளேன். ஊட்டி இவ்வளவு பெரிய ஊராக இருக்கும் என்று நினைக்கவில்லை” என்றார் சித்ரா. நான்காம் வகுப்புபடிக்கும் சாருகாவுக்கு ஊட்டியைப் பிரிய மனம் இல்லை. இங்கேயே வீடு கட்டி இருந்துவிடலாம் என ஒரு கட்டத்தில் அடம்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். சாருகாவைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது மதனகோபாலுக்கு.

“டயம் ஆச்சு சார். நாளைக்கு குழந்தைங்க ஸ்கூலுக்குப் போகணும்; இப்போ புறப்பட்டாதான் 12 மணிக்குள்ள ஊர் போய்ச் சேர முடியும்” என்றார் மதனகோபால். தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து, நீண்ட தொலைவில் கண்களுக்குத் தெரிந்த மேட்டுப்பாளையத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தது ரெனோ லாஜி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு