Published:Updated:

ஸ்ட்ராங் ஸ்கூட்டர்!

கிளாஸிக் பைக்: கைனடிக் ஹோண்டா சந்திப்பு, படம் : ஜெ.விக்னேஷ்

பிரீமியம் ஸ்டோரி
ஸ்ட்ராங் ஸ்கூட்டர்!

ஒரு காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் வரப்பிரசாதம் கைனடிக் ஹோண்டா.

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா, 1984-ல் இந்தியாவின் கைனடிக் இன்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ஸ்கூட்டர் கைனடிக் ஹோண்டா. 98 சிசி 2 ஸ்ட்ரோக் கியர்லெஸ் ஸ்கூட்டரான இது, ஆரம்பத்தில் கைனடிக் ஹோண்டா DX மற்றும் கைனடிக் ஹோண்டா EX எனும் மாடல்களில்  அறிமுகமானது.

1994-ம் ஆண்டு, புதிய கிராஃபிக் ஸ்டிக்கர்களுடன் கைனடிக் ஹோண்டா ZX மாடல் மார்க்கெட்டுக்கு வந்தது. இதன் பின் கைனடிக் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் பிரிய, கைனடிக் நிறுவனம், 2001-ம் ஆண்டு, 110 சிசி கைனடிக் ZX Zoom மாடலை அறிமுகப்படுத்தியது.

பின்பு ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர்களின் படையெடுப்பால், கைனடிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை குறையத் தொடங்கியது. ஆனாலும், செல்ஃப் ஸ்டார்ட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை கைனடிக் ஹோண்டாவையே சேரும்.

சென்னை, புதுப்பேட்டையில், ஃபர்னிச்சர் வியாபாரம் செய்யும் சையது மெஹபூப் ஷா, கைனடிக் ZX Zoom ஸ்கூட்டரை, 2003-ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகிறார். “நான் 1990-களில் ஜாவா பிரியன். பல ஆண்டுகளாக ஜாவா ஓட்டி வந்த நான், வேலைக்கு ஏதுவாக, 40,000 ரூபாய்க்கு இந்த கைனடிக் ஸ்கூட்டரை வாங்கினேன். 

ஸ்ட்ராங் ஸ்கூட்டர்!

ஓட்டும்போது மிகவும் சௌகரியமாக இருக்கும்; சஸ்பென்ஷனும் சிறப்பாகவே இருந்தது. இதன் இன்ஜின் சவுண்ட் தனித்துவமாக இருக்கும். இப்போதைய ஸ்கூட்டர்கள்போல இல்லாமல், இதன் மெட்டல் பாடி எங்காவது அடி வாங்கினாலும், லேசாக டிங்கரிங் செய்தாலே போதுமானதாக இருந்தது. இதன் லைட்-வெயிட், ஸ்கூட்டரை பார்க்கிங் செய்ய மிகவும் வசதியாக இருக்கும். பின்னால் இருக்கும் ஸ்டெஃப்னி, டயர் பஞ்சராகும் போதெல்லாம் மிகவும் உதவியாக இருக்கும்.

வாங்கிய நாளில் இருந்து இன்று வரை ஒரு லிட்டருக்கு 30 முதல் 35 கிமீ வரை மைலேஜ் தருகிறது. ஸ்கூட்டரில் எந்த வைப்ரேஷனும் இருக்காது. டாப் ஸ்பீடிலும் இதன் ஸ்மூத்னெஸ் குறையாது.
குடும்பத்தோடு செல்ல, சிலிண்டர், மூட்டைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல என அனைத்துக்குமே பொருத்தமான ஸ்கூட்டர் இது. பராமரிப்புச் செலவுகள் மிகக் குறைவு. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்துவிடுவேன். ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்களோடு ஒப்பிடுகையில், இதன் ஸ்பேர் பார்ட்ஸ், பாதி விலைதான். இன்று வரை இன்ஜினில் பிரச்னை ஏதும் ஏற்பட்டது இல்லை.

பெண்கள், ஆண்கள் என இருவருமே இந்த ஸ்கூட்டரை ஓட்டலாம். இதன் உயரமும் குறைவுதான். 13 ஆண்டுகள் ஆகியும், புதிய ஸ்கூட்டர்போல் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாங்கியதில் இருந்து, இதுவரை மூன்று முறை மட்டுமே டயரை மாற்றியுள்ளேன். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு, ஹேப்பியான ட்ரைவிங்குக்கு கியாரண்டி. யார் கேட்டாலும், என் செல்லத்தைக் கொடுப்பதாக இல்லை!” எனச் சிரித்தபடி சொல்கிறார் மெஹபூப் ஷா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு