Published:Updated:

பழைய கார் மார்க்கெட் - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பழைய கார் மார்க்கெட்  - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா?
பழைய கார் மார்க்கெட் - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா?

டிப்ஸ்: பழைய கார் மார்க்கெட் ராகுல் சிவகுரு, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பிரீமியம் ஸ்டோரி
பழைய கார் மார்க்கெட்  - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா?

மிடில் கிளாஸ் மக்களின் கனவுப் பட்டியலில், கார் நிச்சயம் இருக்கும்.  ஆசைப்பட்டால் மட்டும் போதாது; நமக்கான சரியான கார் எது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் வெற்றிக்கான சூட்சுமம் அடங்கியிருக்கிறது. இது பழைய கார் வாங்கும்போதும் பொருந்தும். பழைய கார் சந்தையில் என்னென்ன கவனிக்க வேண்டும்? டீசலா, பெட்ரோலா... எப்படித் தேர்ந்தெடுப்பது..?

முதன்முதலாக கார் ஓட்டப் பழகுகிறவர்கள்; முதன்முதலாக கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், குறைவான பட்ஜெட்; ஆனால், பெரிய கார் வேண்டும் என்பவர்களுக்கான களமாக முன்பு இருந்தது, பழைய கார் மார்க்கெட். ஆனால் இப்போது, சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்திக் காட்ட உதவுவது கார்தான். டூ-வீலர் வைத்திருந்தவர் ஹேட்ச்பேக் காருக்கும், ஹேட்ச்பேக் வைத்திருந்தவர் செடானுக்கும், செடான் வைத்திருந்தவர் எஸ்யுவிக்கும் மாறுவதற்கும் துணை நிற்பது பழைய கார்கள்தான். ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பழைய கார் மார்க்கெட், சமீபத்திய மழை வெள்ளத்தால் சற்று பின்னடைவைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அது உண்மையா?

பழைய கார் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் சிலரைச் சந்தித்தோம். அனைவரும் ஒரே குரலில் சொன்ன வார்த்தை ‘ஆம்’ என்பதுதான். ஆனால், மழை வெள்ளத்துக்குப் பிறகு 6 மாதங்கள் ஆன நிலையில், பழைய கார் மார்க்கெட் சற்று மீண்டு வரத் தொடங்கியிருப்பதாகவும் நம்பிக்கையுடன் சொன்னார்கள்.

“பெட்ரோல்- - டீசல் இடையேயான விலை வித்தியாசத்தால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெட்ரோல் கார்களின் ஸ்மூத்னெஸ் பிடித்தவர்கள், தொடர்ச்சியாக அதையே வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். டீசல் கார்களில் மைலேஜ் அதிகம் என்பதால், அவை டிமாண்டாகவே இருக்கின்றன. ஆனால், மாதத்துக்கு சராசரியாக 1,500 -  2,000 கி.மீ அதனைப் பயன்படுத்தாவிட்டால் நஷ்டம்தான். ஏனெனில், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் பராமரிப்புச் செலவு மற்றும் விலை அதிகம். அது புரியாமல் பலர் டீசல் கார்களை வாங்கி அவதிப்படுகிறார்கள்’’ என்கிறார் ஜெயின்ஸ் கார் ஷாப்பைச் சேர்ந்த ஆர்.இளங்கோ.

ஆன்லைனில் பழைய கார் விற்பனை, கார் நிறுவனங்களே பழைய கார் விற்பனை செய்வது; கடனில் பழைய கார் வாங்குவது பற்றிக் கேட்டபோது, ‘‘ஆன்லைன் கார் விற்பனை மூலமாக போட்டி அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நேரில் காரைப் பார்த்து வாங்கும் அனுபவம் ஆன்லைனில் கிடைக்காது. கார் தயாரிப்பு நிறுவனங்களே பழைய கார் ஷோரூம்களை நடத்தினாலும், அவர்கள் காரின் விலையைக் குறைவாகத்தான் மதிப்பீடு செய்கிறார்கள். இதற்கு ஒரு அளவுகோல் வைத்து விலைகளை அவர்கள் நிர்ணயிப்பதே காரணம். ஆனால், நாங்கள் எங்கள் அனுபவம் காரணமாக, சரியான விலையைச் சொல்லிவிடுவோம். பழைய கார்களை 75 சதவிகிதம் மக்கள் ஃபைனான்ஸ் முறையில் தான் வாங்குகிறார்கள்!’’ எனத் தெளிவுபடுத்தினார்.

சென்னை பிரபா கார்ஸ் பாலாஜியிடம் கேட்ட போது, ‘‘புதிய காரை ஓர் ஆண்டு பயன்படுத்திவிட்டு விற்பவரைவிட, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்கியவர், அதனை ஒரு ஆண்டு கழித்து விற்கும்போது கிடைக்கும் நஷ்டம் குறைவுதான். பொதுவாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை வழக்கத்தைவிடச் சற்று குறைவான விலையிலேயே அவற்றை விற்க வேண்டும். அதற்காக நல்ல கார்களைக்கூட அந்த விலைக்கு எங்களிடம் வந்து கேட்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல ஆப்ஷன்கள் இருப்பதால், மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். மேலும், நல்ல கார் கிடைக்க வேண்டுமென்றால் கலர், நம்பர் போன்ற விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

பழைய கார் மார்க்கெட்  - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா?

இங்கே காரின் உரிமையாளர்கள் எண்ணிக்கை, கி.மீ ஓட்டத்தைப் பொறுத்து, காரின் விலையை ‘இதுக்கு இவ்வளவுதான்’ என நிர்ணயிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதுவே டெல்லி, மும்பை, கர்நாடகா, கேரளா, சண்டிகர் போன்ற இடங்களில், காரின் தற்போதைய கன்டிஷனை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். இதனால்தான் ஒரு சில டீலர்கள் முறையற்ற
ஆர்.சி புக், ஸ்பீடோ மீட்டரை அட்ஜஸ்ட் செய்வது போன்ற மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதேபோல, மற்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட காரை இங்கு விற்பதும், தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதும் சிரமம்!’’ என்கிறார்.

பழைய கார் சந்தையில் விற்பனையில் நம்பர் ஒன் எது?
 

•  எப்படி அதிகம் விற்பனை யாகும் கார்களில் மாருதி சுஸூகி, ஹூண்டாயின் ஹேட்ச்பேக்குகள் தொடர்ந்து இடம் பிடிக்கின்றனவோ, அதேபோல பழைய கார் மார்க்கெட்டிலும் இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்!’

• மாருதி சுஸூகி (ஸ்விஃப்ட், வேகன்-ஆர், ஆல்ட்டோ), ஹூண் டாய் (சான்ட்ரோ/i10, கிராண்ட் i10, i20) ஆகியவை நல்ல விலையில் கிடைத்தால், பலர் அதனை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

• செடான்களைப் பொறுத்த வரை மாருதி சுஸூகி டிஸையர், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா, பழைய ஃபோர்டு ஃபியஸ்டா ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

• எஸ்யுவி/எம்பிவி செக்மென்ட்டில், ஸ்கார்ப்பியோ, XUV 5OO, இனோவா, ஃபார்ச்சூனர் போன்றவை நன்கு விற்பனையாகின்றன.

• சின்ன அளவில் தொழில் செய்பவர்கள், ஐடி, வங்கி போன்றவற்றில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், தங்களின் அந்தஸ்தை பல மடங்கு உயர்த்திக் காட்ட உதவுவது கார்கள்தான். எனவே, பிரீமியம் நிறுவனங்களான ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற ஜெர்மன் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

டல் அடிக்கும் கார்கள்...

• பழைய ஃபிகோ மற்றும் ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட்டின் வருகைக்குப் பிறகு, பழைய கார் சந்தையில் ஃபோர்டு நிறுவனம் ஓரளவுக்கு மீண்டுவிட்டது. ஆனால், மற்றொரு அமெரிக்க நிறுவனமான செவர்லே, பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனாலேயே பீட், க்ரூஸ் போன்றவை நல்ல கார்களாக இருந்தும், அவை குறைவான விலைக்கே போகின்றன.

• கட்டுமானத் தரத்துக்கும், ஓட்டுதல் அனுபவத்துக்கும், இத்தாலிய டிஸைனுக்கும் பெயர் பெற்ற ஃபியட்டின் தயாரிப்புகள், நல்ல கார்களாக இருந்தும், பழைய கார் சந்தையில் அவ்வளவாக மிளிர முடியவில்லை.

• சிட்டியைத் தவிர, பழைய கார் சந்தையில் மற்ற ஹோண்டாவின் தயாரிப்புகள் எதுவும் சூப்பராக விற்பனையாவது இல்லை.

• காம்பேக்ட் கார்களைத் தாண்டி, ஹூண்டாயின் பெரிய கார்களான எலான்ட்ரா, சான்டாஃ பீ, சொனாட்டா போன்றவற்றின் ரீ-சேல் மதிப்பு மிகவும் குறைவு.

• ஜப்பானிய நிறுவனம் என்றாலும், நிஸான் கார்களின் சந்தை மதிப்பு அத்தனை நன்றாக இல்லை. ரெனோவின் நிலையை, டஸ்ட்டருக்கு முன்; டஸ்ட்டருக்குப் பின் எனக் கூறிவிடலாம். ஆனால், அந்த ரெனோ காருக்கு மட்டும்தான் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது.

• ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகனின் தயாரிப்புகள், கார் ஆர்வலர்களின் லைக்ஸை மட்டுமே பெற்றுள்ளன. பழைய கார் சந்தையில், மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பது டாடாதான்.

• டாக்ஸி மார்க்கெட்டில் அதிகம் புழங்கும் கார்கள், பழைய கார் சந்தையில் எப்போதுமே சோபித்தது இல்லை. இனோவா மட்டுமே விதிவிலக்கு என்றாலும், மற்ற டொயோட்டா தயாரிப்புகளான எட்டியோஸ், லிவா ஆகியவற்றுக்கு இந்த விதி பொருந்துகிறது.

உங்கள் கார் டீசலா? பெட்ரோலா? எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?

‘கார் வாங்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது; கையில் காசும் இருக்கிறது; ஆனால், பெட்ரோல் கார் வாங்குவதா, டீசல் கார் வாங்குவதா?’ - இப்படி முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்கள் அதிகம். பெட்ரோல் இன்ஜின்கள் ஸ்மூத்தாக இயங்குவதுடன், அவற்றைப் பராமரிப்பதும் எளிது. ஆரம்ப வேகம் முதல் டாப் எண்ட் வரை, பெட்ரோல் காரின் பெர்ஃபாமென்ஸ் ஒரே சீராக இருக்கும். கியர்களுக்கு இடையேயான இடைவெளியும் கச்சிதமாக இருக்கும்.

இதுவே டீசல் இன்ஜின்களில் டர்போ சார்ஜர் இருப்பதால், டீசல் கார்களின் ஆரம்ப வேகம் (டர்போ லேக் காரணமாக) மந்தமாகவே இருக்கும். ஆனால், 2,000-4,000 ஆர்பிஎம்-ல், டீசல் இன்ஜின் தனது உச்சகட்ட பெர்ஃபாமென்ஸை எட்டிவிடும். கியர்களும் அதற்கேற்ப உடனுக்குடன் மாற்றும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும். அதனால் காடு, மலை போன்ற கரடுமுரடான இடங்களில் பயன்படுத்துவதற்கு டீசல் இன்ஜினே சரியான சாய்ஸ். டார்க் அதிகமாக இருப்பதால், மலைச் சாலை, மேடுகளில் ஏறுவது சுலபமாக இருக்கும். டீசல் இன்ஜின்கள் பெட்ரோல் இன்ஜின்களைவிட அதிக சத்தம் போடுவதுடன், அவற்றின் பராமரிப்புச் செலவுகளும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.

மாதம் 2,000 கி.மீ-க்கு மேல் பயணிப்பீர்கள் என்றால், டீசல் கார்தான் சிறந்தது. டீசல் காரை வாங்க நீங்கள் கூடுதலாகப் பணம் செலவிட்டாலும், பெட்ரோலைவிட டீசலின் விலை லிட்டருக்கு ஒன்பது ரூபாய் குறைவு என்பதால், டீசல் கார் வாங்குவதே உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இதுவே மாதம் 1,000 - 1,500 கி.மீ-க்கும் குறைவாகத்தான் பயணம் செய்வீர்கள் (ஆண்டுக்கு 15,000 கி.மீக்கும் குறைவான தூரம்) என்றால், டீசல் கார் வாங்குவது வீண். பெட்ரோல் காரைவிட டீசலுக்காக நீங்கள் கூடுதலாகக் கொடுக்கும் சுமார் ஒரு லட்ச ரூபாயை ஈடுகட்ட, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். மேலும், உங்கள் பட்ஜெட் மிகவும் டைட்டாக இருக்கிறது என்றால், பெட்ரோல்தான் பெஸ்ட்!

பழைய கார்  வாங்கும் முன் கவனியுஙக்ள்!

பழைய கார் மார்க்கெட்  - டல் அடிக்கிறதா? சூடு பிடிக்கிறதா?

• ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ், ஓனர்ஸ் மேனுவல், சாலை வரி, வாரன்ட்டி, டெலிவரி நோட் என காரின் முக்கியமான ஆவணங்கள் சரிவர இருக்கிறதா என்று பாருங்கள்.

• கூச்சப்படாமல் காரைக் கேட்டு வாங்கி, சர்வீஸ் சென்டருக்குச் சென்று, காரின் அடிப்பகுதியை முழுவதுமாக செக் செய்து கொள்ளுங்கள்.

• கீறல்கள் இல்லாத காரைக் கண்டுபிடிப்பது அரிது. ஆனால், காரின் சர்வீஸ் ரெக்கார்டில், விபத்து நடந்து காரின் பாடியில்/கலரில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்கவும்.

• ஃபைனான்ஸ் மூலம் வாங்கப்பட்ட கார் என்றால், ஃபைனான்ஸ் எண்டாஸ்மென்ட் கேன்சல் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அதேபோல், இன்ஷூரன்ஸிலும் கேன்சல் செய்திருக்க வேண்டும்.

• காரை டெஸ்ட் டிரைவ் பார்க்கச் செல்லும்போது, உடன் மெக்கானிக் அல்லது கார் பற்றி நன்கு அறிந்த நண்பரை அழைத்துச் செல்லுங்கள்.

• காரை வாங்குவது உறுதியானவுடன், விலையைப் பணமாகச் செலுத்தாதீர்கள். காரின் உரிமையாளர் பெயருக்கோ அல்லது காரை விற்பனை செய்யும் டீலர் பெயரிலோ டி.டி எடுத்துக் கொடுங்கள்.

• பழைய கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை, 5 லட்சத்துக்கு ஹேட்ச்பேக், பெரிய செடான்/எஸ்யுவி என பல ஆப்ஷன்கள் கிடைக்கும். ஆனால், பெரிய காரை வாங்கும்போது அதன் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

• குறைவான கி.மீ ஓடிய கார் என்றால், நல்ல கார் என்பது உறுதி இல்லை; அதிக கி.மீ ஓடிய கார் என்றால் மோசமான கார் இல்லை. எந்த காரும் சர்வீஸ் அட்டவணைப்படி பராமரிக்கப்பட்டிருந்தால், தைரியமாக வாங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு