Published:Updated:

ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!
ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!

ரீடர்ஸ் ரெவ்யூ: செவர்லே க்ரூஸ் LTZ நா.மரகதமணி, படங்கள்: வ.வினோத்குமார்

பிரீமியம் ஸ்டோரி
ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!

‘அடக்கமான வெற்றி’ என்பார்களே... இது செவர்லே க்ரூஸுக்குப் பொருந்தும். மாருதி, ஹூண்டாய் கார்களைப் போல சாலைகளில் வதவதவென கண்களில் தென்படாது; டாப் 10 விற்பனைப் பட்டியலில் இடம் பெறாது. ஆனால், க்ரூஸ் காருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த ரசிகர்களில் ஒருவர்தான் மதுரையைச் சேர்ந்த பூமிநாதன். 2008-ல் முதன்முதலாக வெளிவந்த க்ரூஸ், விற்பனையில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இப்போது இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடலாக மேனுவல்/ஆட்டோமேட்டிக் என இரண்டு ஆப்ஷன்களில், புதுப் பொலிவுடன் வந்திருக்கிறது. மதுரையில் மேனுவல் க்ரூஸின் இரண்டாவது வாடிக்கையாளர் பூமிநாதன். ரீடர்ஸ் ரெவ்யூ பகுதிக்காக உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

ஏன் க்ரூஸ்?

‘‘நான் நெடுஞ்சாலைப் பயணத்துக்கு இனோவாவும், நகரப் பயன்பாட்டுக்கு ஹூண்டாய் இயானும்  வைத்துள்ளேன். இனோவாவில் பயணிக்கும்போது கிடைக்கும் சொகுசை, நான் இதுவரையில் வேறு எந்த காரிலும் அனுபவித்தது இல்லை. ‘செடான் கார்கள் இதைவிட சொகுசாக இருக்கும்’ என்று என் நண்பர் கள் பரிந்துரைத்து வந்ததால், எனக்கும் லேசாக செடான் கார்கள் மீது ஆசை வந்தது.
ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா,  ஹூண்டாய் எலான்ட்ரா என பல  கார்கள் இருந்தாலும், க்ரூஸ் மீது எனக்கு ஒரு கண் இருந்துவந்தது. ஏனென்றால், செவர்லே நிறுவனம் மீது எனக்கு எப்போதும் ஓர் அபிமானம் உண்டு. இயான் வாங்கும்போதுகூட செவர்லே பீட் காரை ஒரு முக்கிய ஆப்ஷனாக வைத்திருந்தேன்.

ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!
ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!

இந்த நிலையில்தான் க்ரூஸின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருவதாகச் சொன்னார்கள். மார்ச் மாதம் வந்தும் விட்டது. என் மகனுக்கும் க்ரூஸ் ரொம்பப் பிடித்துவிட்டது. வேறு ஊரில் கல்லூரியில் சேரவிருக்கும் நிலையில், க்ரூஸில் சென்று வந்தால் அவனுக்கு  கெத்தாக இருக்கும் என்று, இதை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து விட்டோம்.

ஷோரூம் அனுபவம்

மதுரைக்கு கார் வந்த உடனேயே, ARAS செவர்லே ஷோரூம் சென்று காரை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டேன். நான் வைத்திருக்கும் இரண்டு கார்களிலும் இல்லாத ஒரு புது அனுபவம், இதை ஓட்டும்போது எனக்குக் கிடைத்தது. ஆனால், க்ரூஸுக்கு 15 நாட்கள் வெயிட்டிங் பீரியட் என்றார்கள். ‘க்ரூஸ் ஆச்சே... பரவாயில்லை’ என்று காரை புக் செய்துவிட்டேன். சில நாட்களுக்குள்ளாகவே ஷோ ரூமிலிருந்து போன்: ‘‘நீங்கள் கேட்டிருந்த க்ரூஸ் வெள்ளை கலர் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வந்துவிட்டது; மூன்றே நாட்களில் ரிஜிஸ்ட்ரேஷனுடன் நீங்கள் டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்’’ என்றனர். அவர்கள் சொன்னபடியே மூன்று நாட்களில் க்ரூஸ் என் வீட்டு வாசலுக்கு வந்தது.

ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!

எப்படி இருக்கிறது க்ரூஸ்?

என்னைப் பொறுத்தவரை, இனோவாதான் சிறந்த கார் என்ற எண்ணம் கொண்டவன். ஒருவேளை நான் வேறு கார்களில் பயணிக்காததால்கூட எனக்கு இப்படித் தோன்றலாம். இப்போது, அதற்கு இணையாக க்ரூஸ் என்னைக் கவர்ந்துகொண்டிருக்கிறது. 166bhp பவர் கொண்ட டர்போ இன்ஜின் என்பதால், கார் பறக்கிறது. நெடுஞ்சாலையில் 180 கி.மீ வரை டாப் ஸ்பீடில் சென்றிருக்கிறேன். இந்த நேரத்தில் காரின் ஸ்டெபிலிட்டி என்னை ஆச்சர்யப்படுத்தியது. அதாவது, ஒரு ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் ஃபீலை அப்படியே உணர முடிகிறது. எந்த ஒரு அலுப்பும் தெரியவில்லை. இதுவரை அதிகமாக லாங் டிரைவ் எங்கும் போகவில்லை. நகருக்குள் லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.
 
பிடித்தது

166bhp பவர் மற்றும் இபிடி (EBD) பிரேக்கிங் சிஸ்டம்தான் க்ரூஸின் ஹைலைட். ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், மிகத் தெளிவான ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் ட்ரைவிங் ஆப்ஷன், 2,000 சிசி டர்போ இன்ஜின், பவர்ஃபுல் ஃபாக் லேம்ப் என க்ரூஸில் பிடித்தவை நிறைய உள்ளன. ப்யூர் லெதர் சீட் மற்றும் அலாய் டிஸைன் உயர்ரக சொகுசு காருக்கான தோற்றத்தை அப்படியே தருகின்றன. டாப் எண்ட் க்ரூஸில் சன் ரூஃப் இருப்பது மற்றுமொரு ப்ளஸ். காரின் கட்டுமானம் திடமாக உள்ளது. இன்ஜின் சத்தம், செம மிரட்டல்.

ஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்!

பிடிக்காதது

டேஷ்போர்டு மெட்டீரியல் அவ்வளவு தரமானதாக இல்லை. பின் பக்க இருக்கைகளின் லெக் ரூம் மிகக் குறுகலாக இருப்பதும், பின் பக்கம் ஏ.சி வென்ட் இல்லாததும் பெரிய அதிருப்தி. இவ்வளவு பெரிய காரில் 4 காற்றுப் பைகள் மட்டுமே உள்ளன. பெரிய செடான் கார்களில் 6 காற்றுப் பைகள் வரை இருக்கும் என்கிறார்கள்.

ஸ்டெபிலிடிக்காக, இதன் உயரத்தைக் குறைவாக வடிவமைத்துள்ளார்கள். பின் இருக்கைகளில் மூன்று பேர் உட்காரும்போது, கதவோரம் இருப்பவர்களுக்கு தோள்பட்டை இடிக்கிறது. பெரிய காருக்கு 450 லிட்டர் பூட் ஸ்பேஸ் என்பது குறைவுதான். செவர்லே பிராண்ட் கார்களுக்கு ரீ-சேல் மதிப்பு பெரிதாக இருப்பது இல்லை.

என் தீர்ப்பு

15 முதல் 20 லட்சத்தில் சொகுசான ஸ்போர்ட்ஸ் கார் வாங்க நினைப்பவர்களுக்கு க்ரூஸ், நல்ல சாய்ஸ். விலைக்கேற்ற மதிப்பு க்ரூஸில் கிடைக்கிறது என்பது என் கருத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு