கா.பாலமுருகன் >> தி.விஜய்

 ##~##

நாகர்கோயில் பகுதியில், ராயல் என்ஃபீல்டின் புல்லட் பைக்குகளின் ராஜ்ஜியம் அதிகம். அடிக்கடி புல்லட் பைக்குகள் நம் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. ரீ-டிசைன் செய்த மஞ்சள் வண்ண புல்லட் ஒன்றில் பறந்து கொண்டிருந்த ஒருவரை மடக்கி விசாரித்தேன். கன்னியாகுமரியில் பஞ்சாபி தாபா ஹோட்டல் நடத்தி வரும் சுரேஷ், ஒரு புல்லட் ரசிகர். 1987-ம் ஆண்டு மாடல் புல்லட்டை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறிய அவரிடம் விசாரித்தபோதுதான், நாகர்கோயிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் உள்ள கொட்டாரம் என்ற ஊரில் இருக்கும் மெக்கானிக் பாபு பற்றிக் கூறினார். 

கொட்டாரம் சென்றபோது, ஏராளமான புல்லட் பைக்குகளுக்கு நடுவே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த பாபுவைச் சந்தித்தேன். மோட்டார் விகடனில் இருந்து வந்திருக்கிறேன் என்றதும், அங்கிருந்த அவருடைய வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். மெக்கானிக் பாபுவின் புகழ் மாலையை ஆளாளுக்குத் தொடுக்க... அவர்களிடமிருந்து பாபுவைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போனேன்.

நம்ம ஊரு மெக்கானிக்

கொட்டாரத்தில் 1984-ல் வொர்க் ஷாப் ஆரம்பித்து, வெள்ளிவிழா கொண்டாடிய பாபுவிடம் பேசியபோது, ''வெறும் ஏழாவதுதான் படிச்சேன். பதினாலு வயசிலேயே நாகர்கோயில்ல இருக்கிற ராயல் ஆட்டோ வொர்க்ஸ் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அப்போல்லாம் பைக்குன்னா அது புல்லட் மட்டுந்தான இருக்கும்?! அங்கதான் ஒன்பது வருஷம் தொழில் படிச்சேன். பிறகு, இங்க வந்து வொர்க் ஷாப் போட்டேன். அன்னைக்கு இருந்து இந்த ஊரை விட்டுப் பிரிய முடியலை. இன்னைக்கு என் கையில ஐநூறு பேத்துக்குக் குறையாம கஸ்டமருங்க இருக்காங்க. நாகர்கோயில் வட்டாரத்துல மெக்கானிக் பாபுன்னா எல்லாத்துக்கும் தெரியும். ஆனா, என் பேரு பாபு இல்லை; பொன்! கடை பேருதான் பாபு. ஆனா, ஒரிஜினல் பேரு மறைஞ்சு போயி, கடை பேருதான் நிலைச்சுப் போச்சு. மும்பை, சென்னை, கேரளான்னு ஆரம்பிச்சு நமக்கு கஸ்டமருங்க எல்லா இடத்துலயும் உண்டு. ஒரு தடவை எங்கிட்ட வந்துடாங்கன்னா... பெறகு யாருகிட்டயும் போக மாட்டாங்க. ஏன்னா, ஒருத்தரு புல்லட்டோட 'டுப் டுப்’ சத்தம் நல்லா இருக்கணும்னு விரும்புவாரு; இன்னொருத்தரு கிக்கரை லேசா மிதிச்சாலே ஸ்டார்ட் ஆகணும்னு நெனைப்பாரு; வேறொருத்தரு மைலேஜ் வேணும்னு நெனைப்பாரு. இப்படி கஸ்டமரு என்ன விரும்புறார்னு தெரிஞ்சு, அதை சரியா செஞ்சு கொடுத்துடுவேன். இதுதான் நம்மளோட தொழில் ரகசியம்!'' என பேசிக்கொண்டே போகிறார் பொன் என்ற பாபு!

இதற்கிடையே, வாடிக்கையாளர் சகாயம் என்பவர் தனது புல்லட்டை ஓட்டிப் பார்க்குமாறு என்னிடம் கேட்டுக்கொள்ள... பைக்கில் அமர்ந்து கிக்கரை லேசாக அழுத்தி மிதிக்க முயற்சி செய்தபோதே பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது! அதை சில கிலோ மீட்டர்கள் ஓட்டிப் பார்த்தேன். இன்ஜினில் இரைச்சல் எதுவுமின்றி தனித்துவமான சத்ததுடன் இருந்தது அந்த 2004 மாடல் புல்லட்! லிட்டருக்கு 45 கி.மீ மைலேஜ் கிடைப்பதாகச் சொல்லி, அவர் பங்குக்கு என்னை ஆச்சரியப்படுத்தினார்.

''எப்படி, இந்த அளவுக்கு இன்ஜின் அமைதியாக இருக்கிறது?'' என்று பாபுவிடம் கேட்டேன். ''2008-ம் வருஷத்துக்குப் பிறகுதான் புல்லட் இன்ஜின்ல 'டேப்பட்’ சத்தம் குறைஞ்சது. அதுக்கு முன்னாடி இருந்த பைக்குகள்ல இந்த டேப்பட் சத்தம் ஒரு பெரிய பிரச்னை. டேப்பட் சத்தத்தக் குறைக்கிறது மாதிரி செட் நான் பண்ணிடுவேன். ஏங்கிட்ட சர்வீஸ் வர்ற வண்டிகள்ல இந்த சத்தமே இருக்காது. அதே மாதிரி, டீசல் இன்ஜின் புல்லட் மட்டும் இங்க இருநூறுக்கும் மேல ஓடுது. அதுல என்ன பிரச்னைன்னா... ஸ்டார்ட் பண்றது ரொம்ப கஷ்டம். அதனால, மாருதி காரோட செல்ஃப் மோட்டார் மாட்டி, சக்ஸஸ் ஃபுல்லா போயிட்டு இருக்கு. இதுவரைக்கும் நூறு பைக்குகளுக்கு மேல இதை மாட்டி இருக்கேன். செல்ஃப் மோட்டார்ல பெரிசா எந்தப் பிரச்னையுமில்லாம போயிட்டு இருக்கு''’ என்றவரிடம், ''புல்லட் தவிர வேறு பைக்குகள் சர்வீஸ் செய்வது உண்டா?'' என்று கேட்டேன்.

''புல்லட் கஸ்டமரோட பைக்குகளுக்கு மட்டும் அப்பப்போ செய்யுறது உண்டு. ஆனா, அதுவே பெரிய கதை. இடையில கொஞ்சநாள் புல்லட் பைக்குக்கு மார்க்கெட்டே இல்லாம இருந்தது. 'புல்லட் கதை அவ்வளவுதான். இனி கதை முடிஞ்சது’ன்னு பல மெக்கானிக்குங்க அப்படியே 100 சிசி பைக்குக்கு மாறிட்டாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. புல்லட் ஓட்டுன ஆளு 100 சிசி பைக் ஓட்ட மாட்டாரு. எத்தனை வருஷமானாலும் புல்லட்டுக்கு மதிப்பு இருக்கும்னு நம்புனேன். அதே மாதிரிதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு. பத்தாயிரம், பதினஞ்சாயிரம் ரூபாய்க்கெல்லாம் பழைய பைக்கை விலை கேப்பாங்க... ஆனா, இப்ப லட்சத்திலதான் ஆரம்பமே ஆகுது. ஆனா, இடையில நானும் பொழப்பு நடத்தணுமேன்னு மத்த பைக்குகளையும் சர்வீஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்ப அதையும் விட முடியலை!'' எனச் சிரிக்கிறார் பொன் பாபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு