பிரீமியம் ஸ்டோரி
எந்திரன் - 23

மேடு பள்ளங்களினால் வாகனத்தில் ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும் ஸ்பிரிங்குகள், அதனை வெளியேற்ற தன் இயல்பான அதிர் வெண்ணில் (Frequency) மேலும் கீழும் குதிக்க வேண்டியிருக்கும். அதனால், வாகனம் மேலும் அதிர்வுகளுக்குள்ளாகி, பின்பு இயல்புநிலைக்குத் திரும்பும். இந்த அதிர்வுகளைப் பதமாகக் குறைத்து, அதே நேரத்தில் மேடு பள்ளங்களினால் ஏற்பட்ட அதிர்வுகளையும் பக்குவமாக வெளியேற்றும் வேலையினை டேம்பனிங்(Dampening) என்று சொல்லப்படுகிறது. இதைச் செய்யும் டேம்பர்களின் வடிவம்தான் ஷாக் அப்ஸார்பர்(Shock Absorber).  இது, இயக்க ஆற்றலை, வெப்ப ஆற்றலாக மாற்றுவதன் மூலம் வாகனத்தில் ஏற்படும் அதிர்வுகளை மெதுவாக்கவும் குறைக்கவும் செய்கின்றன. இவ்வாறு மாற்றப்பட்ட வெப்ப ஆற்றல், ஷாக் அப்ஸார்பரில் இருக்கும் ஹைட்ராலிக் திரவத்தினுள் வீணடிக்கப்படுகிறது.

ஷாக் அப்ஸார்பர்

காரின் சேஸிக்கும், சக்கரத்துக்கும் இடையில் பொருத்தப்பட்ட ஆயில் பம்ப் போன்றது ஷாக் அப்ஸார்பர். அதன் மேல்பகுதி சேஸியுடனும், கீழ்ப்பகுதி சக்கரத்தின் ஆக்ஸிலுடனும் இணைக்கப்

பட்டிருக்கும். ஷாக் அப்ஸார்பரின் மேல்முனையுடன் ஒரு பிஸ்டன் ராடு இணைக்கப்பட்டிருக்கும். அது பிஸ்டனுடன் தொடர்பில் இருக்கும். இந்த பிஸ்டன், ஹைட்ராலிக் திரவம் நிரப்பப்பட்ட ஒரு குழாய்க்குள் பொருத்தப்பட்டிருக்கும். இரட்டைக்குழாய்(Twin Tube Shock Absorber) ஷாக் அப்ஸார்பர்களில் உள்ளே இருக்கும் குழாய் பிரஷர் ட்யூப்(Pressure Tube) என்றும், வெளியில் இருக்கும் குழாய் ரிசர்வ் ட்யூப்(Reserve Tube) என்றும் அழைக்கப்படுகின்றன.

ஏதேனும் மேடு பள்ளத்தில் கார் ஏறி இறங்கும்போது, ஸ்பிரிங்குகள் சுருங்கி விரியும். ஸ்பிரிங்குகளின் இயக்க ஆற்றல், மேல் இணைப்பு மூலமாக ஷாக் அப்ஸார்பரை வந்தடைந்து, உள்ளிருக்கும் பிஸ்டனுடன் கூடிய பிஸ்டன் ராடை மேலும் கீழும் இயங்கச் செய்யும். பிஸ்டனின் இயக்கத்தினால், பிரஷர் ட்யூபில் இருக்கும் ஹைட்ராலிக் திரவம், பிஸ்டனில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகளைத் துளைத்தெடுத்து பிஸ்டனில் நுழையும். மிகச் சிறிய துளைகளாக இருப்பதால், குறைந்த அளவு திரவமே  மிக அதிக அழுத்தத்துடன் நுழையும். இது பிஸ்டனின் வேகத்தைக் குறைப்பதோடு, ஸ்பிரிங்கின் இயக்கத்தையும் மெதுவாக்கும்.

ஷாக் அப்ஸார்பர்கள் கம்ப்ரெஷன் சுழற்சி(Compression Cycle) மற்றும் எக்ஸ்டென்ஷன் சுழற்சி(Extension Cycle) எனும் இரு வகைகளில் இயங்குகின்றன. பிஸ்டன் கீழே இறங்கி, ஹைட்ராலிக் திரவத்தை அழுத்துவது கம்ப்ரெஸன் சுழற்சி. பிஸ்டன் மேல்நோக்கி, சேம்பரின் மேலிருக்கும் திரவத்தை அழுத்துவது எக்ஸ்டென்ஷன் சுழற்சி.

ஸ்ட்ரட் (strut) 

மற்றொரு டேம்பெனிங்(Dampening) உபகரணம், ஸ்ட்ரட். இதில் ஷாக் அப்ஸார்பர், காயில் ஸ்பிரிங்குக்கு உள்ளே இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இவை டேம்பனிங் வேலை மட்டுமன்றி, வாகனத்துக்குத் தேவையான ஸ்ட்ரக்சுரல் சப்போர்ட்டையும்(Structural Support) தருகிறது. வாகனத்தின் ஹேண்டிலிங்குக்கும் சிறப்பாக உதவுகிறது.

ஆன்ட்டி ஸ்வே பார்கள் (Anti sway bars)

இவை வாகனத்தில் ஷாக் அப்ஸார்பர் அல்லது ஸ்ட்ரட் உடன் இணைந்து வாகனத்தின் நிலைத்தன்மையை(Stability) உறுதிப்படுத்துகின்றன. ஆன்ட்டி ஸ்வே பார் எனும் உலோக ராடு, ஆக்ஸில் முழுக்க நீண்டு, வாகனத்தின் இருபுறம் இருக்கும் சஸ்பென்ஷன் அமைப்புகளை இணைக்கிறது.

எந்திரன் - 23

வாகனத்தின் ஒரு சக்கரம் ஏறி இறங்குகையில், அந்த சஸ்பென்ஷன் அமைப்புடன் இணைந்திருக்கும் ஆன்ட்டி ஸ்வே பார், அந்த இயக்கத்தை வாகனத்தின் மற்றொரு சக்கரத்துக்குக் கடத்துகிறது. இது வாகனத்துக்குச் சீரான ஓட்டத்தை அளிப்பதோடு, தேவையற்ற ஊசலாட்டத்தையும் குறைக்கிறது. இதனால், சமீபத்தில் வரும் எல்லா வாகனங்களும் இந்த ஆன்ட்டி ஸ்வே பார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் (Dependent suspension )

பொதுவாக, வாகனங்களில் இரண்டு வகையான சஸ்பென்ஷன் அமைப்புகள் உபயோகிக்கப் படுகின்றன. டிபெண்டன்ட் சஸ்பென்ஷன், இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன். சில டிரக்குகளில் முன்பக்கம் அல்லது பின்பக்கம், இரு சக்கரங்களும் உறுதியான ஒற்றை ஆக்ஸிலில் இணைக்கப் பட்டிருக்கும். இதனுடன் லீஃப் ஸ்பிரிங் என்னும் பொதுவான சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். இந்த லீஃப் ஸ்பிரிங்குகளின் இரு முனையும் வாகனத்தின் சேஸியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஷாக் அப்ஸார்பர் இணைக்கப்பட்ட முனை(Clamp), லீஃப் ஸ்பிரிங் மற்றும் ஆக்ஸிலுடன் இணைக்கப்பட்டிருக்கும். லீஃப் ஸ்பிரிங்குகளுக்குப் பதிலாக காயில் ஸ்பிரிங்குகளும் உபயோகப்படுத்தப்படும். இவை டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் வகைக்கு எடுத்துக்காட்டாகும்.

இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் (Independent suspension)

பெரும்பாலான கார்களில் இந்த வகை சஸ்பென்ஷன் அமைப்பே காணப்படுகிறது. இதில், முன்பக்க இரு சக்கரங்களும் தன்னிச்

சையாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சக்கரத்துடனும் தனித்தனியாக இயங்கும் ஸ்ட்ரட் பொருத்தப்பட்டிருக்கும். மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு. முன்பு விளக்கியபடி, இதில் ஷாக் அப்ஸார்பர்கள், காயில் ஸ்பிரிங்கின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும். இவை கச்சிதமான மற்றும் எடை குறைவான சஸ்பென்ஷன்களை நமக்கு அளிக்கின்றன.

இரட்டை விஷ்போன் சஸ்பென்ஷனும்(Double Wishbone Suspension) இதே இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் வகையைச் சேர்ந்ததாகும். இந்த டபுள் விஷ்போன் அமைப்புகளில் இரண்டு விஷ்போன் வடிவக் கரங்கள் சக்கரங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு விஷ்போனிலும், மேலே இரண்டு முனைகள் சேஸியுடன் இணைக்கப்பட்டும், கீழே ஒரு முனை சக்கரத்துடன் இணைக்கப்பட்டும் காணப்படும். இவை சக்கரங்களின் உள்-வெளி சாய்வுக் கோணங்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், வாகனத்தின் உருளும்தன்மை(Roll) மற்றும் ஊசலாட்டத் தன்மையையும் (Sway) குறைத்து, சீரான கட்டுப்பாட்டில் வாகனம் ஓட வழிவகுக்கின்றன. இண்டிபெண்டென்ட் சஸ்பென்ஷன்களில் ஒரு சக்கரத்தில் ஏற்படும் அதிர்வுகள் மற்றொரு சக்கரத்தின் இயக்கத்தைப் பாதிக்காது.

(எந்திரன் பேசுவான்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு