கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - பஜாஜ் டொமினார் D400தொகுப்பு: ராகுல் சிவகுரு

டொமினார் 400... பல்ஸருக்கு அடுத்தபடியாக பஜாஜின் மிகப் பெரிய முயற்சி. சிறப்பம்சங்கள், பவர், சேஸி, தொழில்நுட்பம் போன்ற ஏரியாக்களில் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருப்பதாலோ என்னவோ, பல்ஸர் பிராண்டைத் தவிர்த்து முற்றிலும் புதிய பிரீமியம் பிராண்டிங்கில் டொமினார் பைக்கைக் களமிறக்கியிருக்கிறது பஜாஜ். இந்த 400சிசி பவர் க்ரூஸர் பைக் பற்றிய விவரங்களைக் கடந்த இதழில் கூறியிருந்தோம். எனவே, ஓட்டுதல் அனுபவம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

டிஸைன்

பல்ஸர் 200NS மற்றும் RS200 ஆகிய பைக்குகளைப் பார்க்கும்போது, டிஸைன் விஷயத்தில் பஜாஜ் அளவுக்கு அதிகமாக மெனக்கெட்டுவிட்டதோ எனத் தோன்றலாம். அப்படிப்பட்ட குழப்பங்கள் ஏதும் இல்லாமல், மாடர்ன் ஆகவும், அதேசமயம் முரட்டுத் தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறது டொமினார் 400. வெள்ளை நிற LED விளக்குகளால் ஆன ஹெட்லைட், Auto Headlamp On (AHO) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. இரவு நேரப் பயணங்களில், இது மிகவும் உதவியாக இருக்கும்.

பெட்ரோல் டேங்க்கின் மீதான டொமினார் பிராண்டிங், பைக்கின் பின்பகுதியில் D400 லோகோ, அலாய் ஹேண்டில்பார் மவுன்ட், அலாய் ஃபுட் ரெஸ்ட் மற்றும் மவுன்ட், 17 இன்ச் அலாய் வீல்கள் என டொமினார் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்கள் பிரீமியம் உணர்வைத் தருகின்றன. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், தொடைகளுக்கு அருமையான சப்போர்ட்டை அளிக்கிறது. பின்பக்க ஸ்பிளிட் இருக்கை சற்று உயரமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், அது சொகுசாகவே இருக்கிறது. இரு கைகளை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கும் பைக்கின் ஸ்டீல் பெரிமீட்டர் ஃப்ரேமின் அருகே டேங்க் ஸ்கூப், Belly Pan, ரேடியேட்டர் ஆகியவை அழகாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளன.

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

டொமினார் 400 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் rpm மற்றும் பெட்ரோல் அளவு ஆகியவை பார் ரீடிங்கில் தெரிகின்றன. சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ABS லைட், இன்ஜின் செக்-அப் போன்றவை, பெட்ரோல் டேங்க்கின் மூடி அருகே இருக்கக்கூடிய ஸ்கிரீனில் தெளிவாகத் தெரிகின்றன. பஜாஜ் பைக்குகளுக்கே உரித்தான பேக்லிட் சுவிட்ச், சொகுசான கைப்பிடி மற்றும் லீவர், ரியர்வியூ மிரர், LED டெயில் லைட் ஆகியவை தமது பணியைத் திறம்படச் செய்கின்றன. டொமினார் 400 பைக்கின் ஃபிட் & ஃபினிஷ், ஒட்டுமொத்த தரம் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

கேடிஎம் டியூக் 390 மற்றும் RC390 பைக்கில் இருக்கும் அதே 373.3சிசி இன்ஜின்தான் டொமினார் 400 பைக்கிலும் உள்ளது. என்றாலும், இன்ஜின் ஹெட்டில் பல மாற்றங்களைச் செய்துள்ளது பஜாஜ். SOHC, 3 ஸ்பார்க் ப்ளக், 4 வால்வுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. லிக்விட் கூலிங் இருப்பதால், இன்ஜின் சூடு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பேலன்ஸர் ஷாஃப்ட் இருந்தாலும், அதிக வேகத்தில் செல்லும்போது பைக்கில் அதிர்வுகள் எட்டிப் பார்க்கின்றன. அதற்காக ராயல் என்ஃபீல்டு பைக்குடன் ஒப்பிட வேண்டாம்.

3,000 ஆர்பிஎம்மிலேயே 2.8kgm டார்க் கிடைப்பதால், நெரிசலான டிராஃபிக்கில் டொமினார் 400 பைக்கை ஓட்டுவது எளிதாக இருக்கிறது. எனவே, கொஞ்சம் ஆக்ஸிலரேட்டரைக் கூட்டினாலே மற்ற வாகனங்களைவிட முந்திச் செல்வதற்கான பவர் கிடைத்துவிடுகிறது. ஒரு கியர் கீழே, மற்ற 5 கியர்களும் மேலே என்ற வகையில் செயல்படக்கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், துல்லியம். ஸ்லிப்பர் கிளட்ச் இருப்பதால், அதிக வேகத்திலும் பயப்படாமல் கியர்களைக் குறைக்க முடிகிறது. கியர் ரேஷியோக்களும் போதுமான இடைவெளியில் இருப்பதால், ஒவ்வொரு கியரிலும் இன்ஜினின் ரெட் லைன் ஆன 9,500 ஆர்பிஎம்-மைச் சீராக எட்ட முடிகிறது.

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!
பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் காரணமாக, டொமினார் 400 பைக்கின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் பெர்ஃபெக்ட்டாக இருக்கிறது. 5,000 ஆர்பிஎம்மைத் தாண்டும்போது பெர்ஃபாமென்ஸில் நல்ல முன்னேற்றம் தெரிவதுடன், அற்புதமான எக்ஸாஸ்ட் சத்தமும் வெளியாகிறது. 0 - 60 கி.மீ வேகத்தை 3.3 விநாடிகளிலும், 0 - 100 கி.மீ வேகத்தை 8.3 விநாடிகளிலும் அதிரடியாக எட்டிப்பிடிக்கும் டொமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கி.மீ. மேலும் 6-வது கியரில் 120 - 130 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்வதற்கும் இன்ஜின் ஒத்துழைக்கிறது.

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!
பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

ஓட்டுதல் அனுபவம்

பஜாஜ் பைக்குகளிலேயே சிறந்த ரைடிங் பொசிஷனைக் கொண்டிருப்பது டொமினார் 400 பைக்தான். ஃப்ளாட்டான ஹேண்டில்பார், கரெக்ட்டான இடத்தில் இருக்கும் ஃபுட் பேக் மற்றும் பிரேக் லீவர் இதனை உறுதிபடுத்துகின்றன. எனவே, பவர்ஃபுல்லான கேடிஎம் பைக்குகளைவிட, பஜாஜ் பைக்கே நீண்ட நேரப் பயணங்களுக்கு வசதியாக இருக்கிறது. பெரிமீட்டர் ஃப்ரேம் - ஸ்டீல் ஸ்விங்ஆர்ம் செட்-அப்பைக் கொண்டிருக்கும் டொமினாரில், 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - Nitrox மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம் பிடித்துள்ளது. சீட்டிங் பொசிஷனைப்போல, ஓட்டுதல் தரமும் கொஞ்சம் ஸ்போர்ட்டியாக இருப்பது ப்ளஸ். ஆகையால், அதிக வேகத்தில் செல்லும்போதும் பைக் ஸ்டெடியாக இருப்பதுடன், திருப்பங்களிலும் பைக்கை நம்பிக்கையாகச் செலுத்த முடிகிறது. டொமினார் 400 பைக்கில் உள்ள சாஃப்ட் காம்பவுண்டு MRF டியூப்லெஸ் ரேடியல் டயர்களின் ரோடு கிரிப் சூப்பர். முன்பக்க,  பின்பக்க டிஸ்க் பிரேக்ஸ், போதுமான ஃபீட்பேக்கை அளிக்கின்றன. டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பது கூடுதல் பலம்.

பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்!

ரூ.1.57 - 1.72 லட்ச ரூபாய் (சென்னை ஆன் ரோடு) எனும் அட்டகாசமான விலையில் கிடைக்கக்கூடிய டொமினார் 400, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காகத் திகழ்கிறது. ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம், தொழில்நுட்பம் எனச் சொல்லியடித்திருக்கும் பஜாஜ், பவர் க்ரூஸர் செக்மென்ட்டை ஆள்வதற்கான தகுதிகள் அனைத்தும் கொண்ட பைக்காக, டொமினார் 400 பைக்கைத் தயாரித்திருக்கிறது.