Published:Updated:

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?
பிரீமியம் ஸ்டோரி
கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

ஒப்பீடு - i20 ஆக்டிவ் VS ஹோண்டா WR-V VS விட்டாரா பிரெஸ்ஸாதொகுப்பு: தமிழ்

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

ஒப்பீடு - i20 ஆக்டிவ் VS ஹோண்டா WR-V VS விட்டாரா பிரெஸ்ஸாதொகுப்பு: தமிழ்

Published:Updated:
கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?
பிரீமியம் ஸ்டோரி
கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

முன்னதுக்கு நடந்தது ஹாட் ஹேட்ச்பேக் கார்களுக்கான போட்டி என்றால், இது கிராஸ் ஹேட்ச்பேக்குகளுக்கும் காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குமானது. ‘ஆரம்பம்’ பட ஆர்யாபோல் ‘பப்ளி’யாக இருக்கும் ஹேட்ச் பேக்குகள், ‘கடம்பன்’ ஆர்யா மாதிரி சிக்கென மாறியிருந்தால், அதுதான் கிராஸ்ஹேட்ச்பேக். கிரவுண்ட் கிளியரன்ஸ் கூடியிருக்கும்; ஆங்காங்கே பிளாஸ்டிக் கிளாடிங்குகள் தெரியும்; சுருக்கமாகச் சொன்னால், ஒரு எஸ்யூவி காருக்கான ஆரம்ப நிலை. அதில் ரொம்ப காலமாகக் கலக்கிவருகிறது ஹூண்டாய் i20 ஆக்டிவ். i20 மாடலின் கிராஸ் வடிவம்தான் i20 ஆக்டிவ்.

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

கிராஸ்ஓவருக்கு அடுத்த படிநிலை - காம்பேக்ட் எஸ்யூவி. அதாவது, 4 மீட்டருக்கு உட்பட்டு இருக்க வேண்டும்; எஸ்யூவி மாதிரி ஸ்டைல் இருக்க வேண்டும்; 5 சீட்டராக இருக்கலாம். எக்கோஸ்போர்ட், க்ரெட்டா, S-க்ராஸ் போன்றவை உதாரணம். மாருதியில் விட்டாரா பிரெஸ்ஸா, காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் கலக்கிவருவது தெரிந்ததே. இந்த செக்மென்ட்டில் கால் பதிக்காத ஹோண்டாவும் WR-V மூலம் களத்தில் இறங்கிவிட்டது. கிராஸ் ஹேட்ச்பேக்கான ஆக்டிவ் i20-க்கும், காம்பேக்ட் எஸ்யூவிகளான ஹோண்டாவின் WR-V, விட்டாரா பிரெஸ்ஸாவுக்கும் நடக்கும் விறுவிறுப்பான போட்டி இது.

டிசைன்

இதில் புது வரவு ஹோண்டா WR-V. ஜாஸின் அண்ணன் என்று இதைச் சொல்லலாம். ஜாஸை அப்படியே உயர்த்தி, ‘மானே தேனே’ போட்டு வடிவமைக்கப்பட்டதுதான் WR-V.  ஜாஸைவிட 23 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்; 44 மிமீ நீளம்; 40 மிமீ அகலம்; 57 மிமீ உயரம்; 25 மிமீ வீல்பேஸ் என்று எல்லாமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சஸ்பென்ஷன் செட்-அப்பும் நிச்சயம் மாறியிருக்கும். பானெட்டும் 16 இன்ச் வீல்களும் லேசாக ரஃப் அண்டு டஃப் தோற்றத்தைக் காட்டுகிறது. ஹோண்டாவின் இந்த முயற்சி வீண் போகவில்லை. நல்லவேளை, ஜாஸில் குத்தப்பட்ட MPV எனும் முத்திரை, இதில் காலி. சொல்லப் போனால், க்ராஸ்ஓவர் பாதி; காம்பேக்ட் எஸ்யூவி மீதி. இதுதான் WR-V. ஜாஸிடம் இருந்து முக்கியமாக வித்தியாசப்படுத்திக் காட்டுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று - முன்பக்கம் ‘DRL’ உடன்கூடிய ஸ்ட்ரெச்டு ஹெட்லைட்ஸ்; இரண்டு - பின்பக்கம் ‘L’ வடிவ டெய்ல் லைட்ஸ். முக்கியமாக, அந்த சன் ரூஃப். இப்போதெல்லாம் ஹோண்டா கார்களில் டிரேட் மார்க் சிம்பல் ஆகிவிட்டது.

பார்த்துப் பழகிய கார்தான் i20 ஆக்டிவ். பெரிய யூனிக் டிசைன் என்று சொல்ல முடியாது. ஆனால், மற்ற கார்களுக்கு டஃப் கொடுக்கிறது i20 ஆக்டிவ்-ன் தோற்றம். பார்த்தவுடன் ‘கிராஸ்ஓவர்தானே’ என்று சொல்லிவிட முடியும். சாதா i20-ன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீதான்; ஆக்டிவ்-க்கு 190 மிமீ. ஸ்டைலான அலுமினியம் ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங்குகள், மிரட்டலான முன்பக்க பம்பர், LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் என்று அசத்துகிறது i20 ஆக்டிவ். இந்த விஷயங்கள் எதுவுமே சாதாரண i20-ல் கிடையாது. அப்படியென்றால், ஸ்டாண்டர்டு i20-யைவிட ஆக்டிவ்-க்கு 60,000 ரூபாய் விலை அதிகம் என்பது காசுக்கேற்ற விஷயங்கள்தான்.

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

பிரெஸ்ஸாவின் டிசைன், இன்ட்ரஸ்டிங்கானது. மாருதியின் சம்பிரதாய டிசைனில் இருந்து வேறுபடுகிறது விட்டாரா பிரெஸ்ஸா. 7 சீட்டர்கள் மட்டும் இருந்தால், இதை முழுமையான எஸ்யூவி என்று சொல்லலாம். க்ரோம் கிரில், வேறு எந்த மாருதி காரிலும் இல்லாதது. புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் அருமை. ஆனால், இது டாப் வேரியன்ட்டில் மட்டும்தான். LED DRL, ஸ்ப்ளிட் ஏர்-டேம், கதவுகளுக்குக் கீழே இருக்கும் கறுப்பு கிளாடிங்குகள் சூப்பர். முக்கியமாக ஃப்ளோட்டிங் ரூஃப் டிசைன், எல்லோரையும் கவரும் அம்சம். ரூஃப் மிதக்கும் ஸ்டைலில் இருப்பதற்குக் காரணம், A, B, C பில்லர்களுக்கு கறுப்பு வண்ணம் கொடுத்திருக்கிறார்கள். 198 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும், 16 இன்ச் வீல்களும் காரை உயரமாகக் காட்டுகின்றன.

உள்ளே...

எஸ்யூவி-க்கு முக்கியமான அம்சம் எது? டிரைவிங் பொசிஷன்தான். இந்த மூன்றில் பிரெஸ்ஸாதான் முன்னே நிற்கிறது. பிரெஸ்ஸாவின் டிரைவர் சீட்டில் இருந்து பார்த்தால், வெளிச்சாலை அருமையாகத் தெரிகிறது. இதன் ‘A’ பில்லரும், எஸ்யூவியைத்தான் ஓட்டுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காகவே டேஷ்போர்டைத் தாழ்வாக வடிவமைத்திருக்கிறார்கள். பிரெஸ்ஸாவின் கேபின், யூஸர் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது. முன்பக்க சீட்டுகள் தாராளம். பொருள்கள் வைக்க ஸ்டோரேஜ் ஸ்பேஸும் அதிகம். இரட்டை க்ளோவ் பாக்ஸ்கள் இருக்கின்றன. ஆனால், பிளாஸ்டிக்குகளின் தரத்தின் மீது சந்தேகம் வருகிறது. விலை குறைந்த மாருதி கார்களில் இருந்து எடுத்துப் பொருத்தியிருக்கிறார்களோ?

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

WR-V-யிலும் டிரைவிங் பொசிஷன் சூப்பர். உயரமாக இருந்தால் மட்டும் போதுமா? பக்கவாட்டில் இருக்கும் ‘A’ பில்லர்கள் பார்வையை மறைக்காமல் இருப்பதுதான் ஒரு எஸ்யூவிக்கு அழகு. ஜாஸில் செய்த அதே தவறை ஏன் WR-V-யிலும் செய்திருக்கிறது ஹோண்டா? சாலை நன்றாகத் தெரிகிறது. ஹெட் ரூம், ஷோல்டர் ரூம் ஓகே. ஆனால், திருப்பங்களில் திணறவைக்கிறது WR-V. இதிலும் சின்னச் சின்னப் பொருள்கள் வைத்துக்கொள்ள இடங்கள், பாட்டில் ஹோல்டர்கள் இருக்கின்றன. ஜாஸைப்போலவே கேபின் இடவசதியும் தாராளம். கியர் லீவர் ஸ்போர்ட்டி; ஆனால், கிரிப் இல்லாததுபோல் தெரிகிறது.

i20 ஆக்டிவ் காரின் உள்ளே நுழைந்தால், பிரீமியம் கார் போல் இருக்கிறது. காரின் கலரைப் பொறுத்து உள்ளேயும் கலர் ஸ்கீம் ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். அதாவது, கிரே போன்ற லைட் கலர் கார்களின் கேபின், நீலம்-கறுப்பு தீமில் இருக்கும். மெரூன், சிவப்பு போன்ற டார்க் கலர் கார்களுக்கு ஆரஞ்ச்-கறுப்பு நிற தீம் டேஷ்போர்டு இருக்கும். இது ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த பிரீமியம் லுக்குக்கு இதுதான் காரணம். மற்றபடி முன் பக்கப் பயணிகளும் டிரைவரும் தாழ்வாக உட்கார்வதுபோல் இருக்கிறது. மற்ற கார்கள்போல் சீட்டிங் பொசிஷன் உயரமாக இல்லை. இது ஹேட்ச்பேக்குக்கான டிரைவிங் பொசிஷன் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு கப் ஹோல்டர்கள் ஓகே. நான்கு கதவுகளில் ஒரு லிட்டர் பாட்டில் வைக்க இடம் இருக்கிறது.

பின்பக்கம்

‘பின்பக்கம் 3 பேர் இட நெருக்கடியில்லாம உட்காரணும்’ என்று நினைப்பவர்களுக்கான கார், நிச்சயம் i20 ஆக்டிவ் இல்லை. இரண்டு பேர்தான் தாராளமாக அமர முடியும். எல்லா கார்களிலும் இருக்கும் அதே பிரச்னைதான் i20 ஆக்டிவ்-விலும். பின்பக்க ஏ.சி வென்ட், நடுவே உட்காரும் பயணிக்கான லெக்ரூமைக் குறைத்துவிடுகிறது. மற்ற கார்களைவிட தாராளமான லெக்ரூமும், நல்ல விஸிபிளிட்டியும் அந்த இரண்டு பயணிகளுக்கும் கிடைக்கும். ஆக்டிவ் காரின் பூட் ஸ்பேஸ் 280 லிட்டர்.

பிரெஸ்ஸாவின் பின்பக்க ஹெட்ரூம் தேவையான அளவு உள்ளது. லெக்ரூம் ஓகே. ஷோல்டர் ரூம் எதிர்பார்த்ததைவிட அதிகம். மற்ற கார்களைவிட ஒரு கம்ஃபர்ட்டான விஷயம் - மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய ஆர்ம் ரெஸ்ட். இதில் இரண்டு கப் ஹோல்டர்கள் வேறு உள்ளன. மற்றபடி உயரமான சீட்டிங் பொசிஷன் பின்பக்கப் பயணிகளுக்கும் உண்டு. பிரெஸ்ஸாவின் பூட் ஸ்பேஸ் 328 லிட்டர்.
குஷனிங்தான் WR-V-யின் பின்பக்கத்தில் உள்ள ப்ளஸ். ஆனால், சாய்மானம் அதிகமோ என்று தோன்றுகிறது. அதேநேரத்தில் இடவசதி அருமை. அதிலும் லெக்ரூம் தாரா.....ளம். விண்டோ பெரிதாக இருப்பதால், வெளிச்சாலை நன்றாகத் தெரிகிறது. ஏமாற்றக்கூடிய விஷயம் என்னவென்றால், ஹெட்ரெஸ்ட் சிறிசு! அதிலும், ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. WR-V-யில்தான் அதிக பூட் ஸ்பேஸ் இருக்கிறது. அதாவது 363 லிட்டர்.

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

வசதிகள்

WR-V காரில் இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு விஷயங்கள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. இதுவே பிரெஸ்ஸாவில் ஏபிஎஸ்-ஸும் டிரைவர் காற்றுப்பையும் மட்டும்தான். கோ-டிரைவர் காற்றுப்பையை 14,000 ரூபாய் கொடுத்து ஆப்ஷனலாகப் பெற்றுக்கொள்ளலாம். பேஸ் மாடல் i20 ஆக்டிவ் காரில் இரண்டு காற்றுப்பைகள் உள்ளன; ஆனால், ஏபிஎஸ் இல்லை. ஆனால், டாப் வேரியன்ட்டான SX-ல் ஆறு காற்றுப்பைகள். அம்மாடியோவ்! பேஸ் வேரியன்ட்டில் மாருதியின் பிரெஸ்ஸாதான் விலை குறைவு. LDI மாடலின் சென்னை ஆன்ரோடு விலை, `8.73 லட்சம். WR-Vதான் விலை அதிகம். இதன் லோ எண்ட் மாடலின் (S) விலை, `10.20 லட்சம்.

வசதிகள் என்று பார்த்தால், டச் ஸ்க்ரீன் விஷயத்தில்தான் கடுமையான போட்டி நடக்கிறது. இந்த மூன்று கார்களிலுமே டச் ஸ்க்ரீன் இருக்கின்றன. எல்லாவற்றிலுமே ரிவர்ஸ் கேமரா, நேவிகேஷன் சிஸ்டம், மிர்ரர்லிங்க் ஆப்ஷன் இருக்கின்றன. இதில் பிரெஸ்ஸாவிலும் ஆக்டிவ்-லும் ஆப்பிள் கார் ப்ளே வசதி இருக்கிறது. ஹூண்டாயில் மட்டும்தான் ஆண்ட்ராய்டு ஆட்டோ இருக்கிறது. ஹூண்டாய் இப்படி என்றால், ஹோண்டா வேறுவிதத்தில் கலக்குகிறது. இதில் டிஜிபேட் சிஸ்டம், HDMI போர்ட், SD கார்டு ரீடர், 3G/4G கனெக் ஷனுடன் இன்டர்நெட் பிரெஸிங்கும் பண்ணிக் கொள்ளலாம். பிரெஸ்ஸாவில் வால்யூம் கன்ட்ரோல் பட்டன், பிடிக்கவில்லை.

மற்றபடி தானாக மடியும் எலெக்ட்ரிக் மிரர்கள், பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் எல்லா கார்களிலுமே உண்டு. சன் ரூஃப் ஹோண்டாவில் மட்டும்தான்; ரியர் ஏஸிவென்ட் ஹூண்டாயில் மட்டும்தான்; ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப் மற்றும் வைப்பர்கள் பிரெஸ்ஸாவில் மட்டும்தான். பிரெஸ்ஸாவில் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட் இல்லை; i20 ஆக்டிவ்-ல் க்ரூஸ் கன்ட்ரோல் ஆப்ஷன் இல்லை; WR-V-யில் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் இல்லை. மேலும், ஜாஸில் இருந்த மேஜிக் சீட்டுகள் ஆப்ஷனை, ஹோண்டா ஏன் காலி செய்தது என்று தெரியவில்லை.

இன்ஜின்

பிரெஸ்ஸாவில் வெறும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டும்தான். WR-V-யிலும் i20 ஆக்டிவ்-லும் பெட்ரோல், டீசல் இரண்டுமே உண்டு. ஹோண்டாவின் 6-வது டீசல் தயாரிப்பான WR-V-யில் இருப்பது 1.5 லிட்டர் i-DTec இன்ஜின். 100 bhp பவரை 3,600 rpm-லும், 20.0kgm டார்க்கை 1,750 rpm-லும் அளிக்கிறது. லோ-ரெவ்களில் ஈஸியாக இழுக்கிறது இந்த இன்ஜின். ஆனால், மிட் ரேஞ்சில் பவர் பம்முகிறது. ஃபியட் இன்ஜின்கள் போல் ஒரு குறிப்பிட்ட rpm-ல் ‘சட்’டென தூக்கிக் கிளப்ப முடியவில்லை. சிட்டி டிரைவிங்குக்கு ஏற்ப இதை ட்யூன் செய்திருக்கிறார்கள். ரொம்பவும் ஆக்ஸிலரேஷன் கொடுத்தால் சத்தம் போட ஆரம்பித்துவிடுகிறது i-DTec. ஒருவேளை சீக்கிரமாக அப்ஷிஃப்ட் செய்துவிட்டால், சத்தம் அவ்வளவாக இல்லாததுபோல் தெரிகிறது. கிளட்ச் செம ஹெவி. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், நைஸ்.

WR-V-யை ஒப்பிடும்போது ரொம்பவும் சத்தம் இல்லை. ஆனால், சுத்தமாக இல்லை என்று சொல்ல முடியாது. ஐடிலிங்கில் இரண்டு கார்களைவிட பிரெஸ்ஸாதான் அதிகச் சத்தம் போடுகிறது. இதன் ஹைடெசிபல் பவர் 49.7DB. ஃபியட் என்றாலே அப்படித்தான் என்று சமரசம் ஆகிவிட வேண்டியதுதான். ஆனால், ஓட்டும்போது... செம ஃபன் கொடுப்பது ஃபியட்டின் ஸ்டைல்.

90 bhpதான் என்றாலும், மிட்ரேஞ்சில் அசத்துகிறது.

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

5,000 rpm வரை ரெட் லைனில்கூட கெத்து காட்டுகிறது. மாருதியின் ஃபன் ரைடுக்குக் காரணமே இந்த ஃபியட் இன்ஜின்கள்தான். ஆனால், டர்போ லேக்கில் படுத்துகிறது 1.3 மல்ட்டிஜெட் ஃபியட் இன்ஜின். 2,000 rpm வரை செம டல். மற்ற கார்களில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கும்போது, பிரெஸ்ஸாவில் 5 ஸ்பீடுதான்.

பிரெஸ்ஸா போன்று மிட்ரேஞ்சில் ஸ்ட்ராங்கும் இல்லை; WR-V போல் ஆரம்ப வேகங்களில் படுக்கவும் இல்லை. ஆனால், ஓட்டுபவர்களின் சொல்பேச்சுக் கேட்கிறது i20 ஆக்டிவ்-ன் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின். பிரெஸ்ஸாவின் அதே பவர்தான்; ஆனால், டார்க் எகிறியடிக்கிறது. 22kgm 1,500-2,750 rpm வரை சொல்லியடிக்கிறது. லோ எண்டில், அதுவும் ஓவர்டேக்கிங்கில் ‘சட் சட்’ என இழுக்கிறது. த்ராட்டிலை அழுத்திக்கொண்டே இருந்தால், 4,800 rpm ரெட் லைன் வரை பவர் டெலிவரி சூப்பர். 6 ஸ்பீடு கியர்ஷிஃப்ட் ஸ்மூத் மட்டும் இல்லை; ஷார்ட்டும்கூட. அதனால் 4, 5-வது கியர்களில் மற்ற கார்களைவிட வேகமாக இருக்கிறது. மூன்றாவது கியரில் பிரெஸ்ஸாதான் பெஸ்ட். ஆனால், 0-100 கிமீ வேகத்தில் டாப்பில் இருப்பது WR-Vதான்.

கையாளுமை

மூன்று கார்களுமே ஃப்ரன்ட் வீல் டிரைவ்தான்; எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்டீயரிங்தான்; 16 இன்ச் வீல்கள்தான்; முன்பக்கம் மெக்ஃபர்ஸ்ன் ஸ்ட்ரட்டும் பின்பக்கம் டார்ஸன் பார் சஸ்பென்ஷன் செட்-அப்தான். ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஓட்டுதலில் வெவ்வேறு குணம் இருக்கிறது. இந்த மூன்றில் பிரெஸ்ஸா கொஞ்சம் உயரமான கார் (1,640 மிமீ). இதனால், சென்டர் ஆஃப் கிராவிட்டி அதிகம். இப்படிப்பட்ட கார்களில் பாடி ரோல் அதிகமாகத்தானே இருக்கும்?! ஆனால், பிரெஸ்ஸா அசரடித்தது. கார்னரிங்கில் அவ்வளவாக பாடி ரோல் தெரியவில்லை. சட்டெனத் திரும்பி க்விக் ரெஸ்பான்ஸ் கொடுத்தது. நேரான சாலைகளிலும் அசத்துகிறது. ஆனால், சஸ்பென்ஷன் ஸ்டிஃப் ஆக இருப்பதால், லேசாக ஓட்டுதல் இறுக்கமாக இருக்கிறது. கரடுமுரடான சாலைகளிலும் மேடு பள்ளங்களிலும் பீ-கேர்ஃபுல். ஆனால், இதுதான் அற்பதமான ஹேண்ட்லிங்குக்குக் கைகொடுக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

WR-V-யில் சஸ்பென்ஷன் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. பாடி ரோலும் அவ்வளவாகத் தெரியவில்லை. மேடு பள்ளங்களைச் சந்தோஷமாகச் சமாளிக்கிறது இந்த சஸ்பென்ஷன். நெடுஞ்சாலைகளில் டாப் ஸ்பீடில் விரட்டும்போது, ஆடாமல் அசையாமல் செல்வதுதான் ஹோண்டாவின் ஸ்டைல். அது WR-V-யிலும் தொடர்கிறது. சஸ்பென்ஷன் டேம்பர் செட்-அப்பின் மகிமை இது. நல்ல சென்ஸ் ஆஃப் கன்ட்ரோலை அளிக்கிறது இந்த பவர் ஸ்டீயரிங். அதாவது, குறைந்த வேகங்களில் ஸ்டீயரிங் லைட் ஆகவும், அதிக வேகங்களில் டைட் ஆகவும் மாறி அசத்துகிறது. லோ-ஸ்பீடு ரைடிங்குக்கும், சிட்டிக்குள் புகுந்து புறப்படுவதற்கும் ஹூண்டாயை விட்டால் வேறு யார்? அத்தனை ப்ளஸன்ட்டாக இருக்கிறது இதன் டிரைவிங் கம்ஃபர்ட். ஆனால், அதிக வேகங்களில் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் பற்றி ஹூண்டாயில் ஒரு குறை உண்டு. அது i20 ஆக்டிவ் காரிலும் தொடர்வதுபோல் தெரிகிறது. சொல்பேச்சுக் கேட்க மறுப்பதுபோல் தெரிகிறது ஸ்டீயரிங். ஹேட்ச்பேக்காக இருந்தாலும் திருப்பங்களில் பாடி ரோல் தெரிகிறதே ஹூண்டாய்? இதுபோக மேடு பள்ளங்களில் குஷன் சீட்டுகளில் ‘தத் புத்’ என பவுன்ஸ் ஆக வேண்டியிருக்கிறது. ஹேண்ட்லிங்கில் ஆக்டிவ் ஆக இல்லை i20 ஆக்டிவ்.

கிராஸ் ஹேட்ச்பேக்... புதிய களம்... புதிய யுத்தம்! - முந்துமா ஹோண்டா WR-V?

சதிகளிலும் பிரீமியம் லுக்கிலும் ஹூண்டாயை அடித்துக்கொள்ளவே முடியாது. கேபின், இடவசதி, தொழில்நுட்பங்கள் என்று ஆக்டிவ் i20, பிரீமியம் கிராஸ்ஓவர்தான். ‘கிராஸ்ஓவர்’ என்றால், முழுக்க எஸ்யூவி அளவுக்கு இருக்க வேண்டியதில்லை. ஓரளவு எஸ்யூவியின் குணங்களைக் கொண்டிருந்தாலே போதும். உயரமான ரைடிங் பொசிஷன், அற்புதமான ஹேண்ட்லிங், ஸ்டீயரிங் என்று இங்குதான் ஹூண்டாய் கோட்டைவிடுகிறது. அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறது ஹோண்டாவின் WR-V. கூடவே, பிராக்டிக்கலாகவும் இருப்பது WR-V-யின் ஸ்பெஷல். டிசைனிலும் கிராஸ்ஓவர் ஸ்டைல் தெரிவது அசத்தல். ஆனால், இன்ஜின் விஷயத்தில் ஓவர் ‘சத்தம்’ அபத்தம். இதன் விலையும் அதிகம். டாப் எண்ட் மாடலான VX. `12.18 லட்சம் என்பது ரொம்பவே அதிகம்தான். இரண்டு காற்றுப்பைகள், டூயல் டோன் ஃபினிஷ், டச் ஸ்க்ரீன் கொண்ட பிரெஸ்ஸாவின் டாப் எண்டான ZDI+ மாடலின் சென்னை ஆன்ரோடு விலை, `11.54 லட்சம். பயன்படுத்த பிராக்டிக்கலாகவும் இருக்கிறது பிரெஸ்ஸா. பிரெஸ்ஸா சொல்லியடிக்கும் இடமே ‘ஃபன் டு டிரைவ்’தான். இதற்கு ஃபியட் இன்ஜினுக்கு ஒரு கைக்குலுக்கல். லேசாக சத்தம் போடுகிறதுதான்; ஆனால், ஐடிலிங்கில் இருந்து கிளம்பி மிட் ரேஞ்சைத் தாண்டி 5,000 ஆர்பிஎம்-முக்கு மேல் போகும்போது, உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. இந்த உற்சாகம்தான் பிரெஸ்ஸா வெற்றி பெறக் காரணமாக அமைகிறது.