Published:Updated:

கொடநாடு ‘ஜில்’ நாடு!

கொடநாடு ‘ஜில்’ நாடு!
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு ‘ஜில்’ நாடு!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கொடநாடுதமிழ், படங்கள்: எம்.விஜயகுமார்

கொடநாடு ‘ஜில்’ நாடு!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கொடநாடுதமிழ், படங்கள்: எம்.விஜயகுமார்

Published:Updated:
கொடநாடு ‘ஜில்’ நாடு!
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு ‘ஜில்’ நாடு!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணபதியின் வீட்டுக்குப் போனால், ஏதோ டைம் மெஷினில் ஏறி சில தலைமுறைகளுக்குப் பின்னே சென்றது போலவே இருக்கிறது. ‘கார்கள் ஜாக்கிரதை’ என்று அறிவிப்பு பலகையே வைக்கலாம்; அந்த அளவுக்கு போர்டிகோ முழுக்க கான்டெஸா, பழைய பென்ஸ், அம்பாஸடர், ப்ளைமவுத் என்று வரிசையாக வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார்கள். ‘‘எனக்கு ரொம்ப ஸ்பெஷல் - 1924-ம் ஆண்டைச் சேர்ந்த ஃபோர்டு கார்தான்!’’ என்று மகிழ்ச்சியாக நம்மை வரவேற்றார் இயற்கை விவசாயி லட்சுமி நாராயணபதி.

கொடநாடு ‘ஜில்’ நாடு!

‘‘ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப், புது கார்ல மட்டும்தான் பண்ணுவீங்களா? வின்டேஜ் கார்ல ஒரு கிரேட் ‘கிரேட் எஸ்கேப்’ போலாம்... நீங்க வர்றீங்க!’’ என்று நம்மை வாய்ஸ்-ஸ்நாப்பில் மிரட்டியிருந்தார் லட்சுமி நாராயணபதி. ‘வின்டேஜ் கார்லயா? கிரேட் எஸ்கேப்பா’ என்று கேள்விக்குறியாகப் பார்த்ததைப் புரிந்துகொண்டு, ‘‘எல்லாம் லேட்டஸ்ட் மாடலுக்கு ஈக்குவலுங்க! எதுவுமே ஓடாது; பறக்கும்’’ என்று சொன்ன ல.நா.பதி, வின்டேஜ் பிரியர் இல்லை; வெறியர். ‘‘இரண்டாம் உலகப் போர் நடந்தப்போ, இந்த ஃபோர்டு எங்கப்பாரு வாங்கினாரு!’’ என்று ஒவ்வொரு காருக்கும் ஒரு வரலாறு வைத்திருக்கிறார். ‘போனால் போகட்டும்’ என்று ஒரு பொலேரோவும்  ஆல்ட்டோவும் இருக்கின்றன. ‘‘எந்த கார்ல போலாம்னு நீங்களே சொல்லிடுங்க!’’ என்று குலுக்கல் முறையில் கார்களைத் தேர்ந்தெடுக்க விட்டார் அவர்.

ப்ளைமவுத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம். வின்டேஜ் கார் என்பதால், ஒரே நாள் டூர், தூரமும் குறைவாக இருந்தால்தான் நல்லது. ‘‘அப்போ கொடநாடு போயிட்டு வந்துடலாம். முன்னாள் முதல்வர் கார்ல முன்னாள் முதல்வர் ஊருக்குப் போறோம்... சரிங்களா?’’ என்று ரைமிங் டைமிங்கில் சிரித்துவிட்டு, ப்ளைமவுத்தைக் கிளப்பினார். லட்சுமி நாராயணபதிக்கு முதல் காரும் ப்ளைமவுத்தானாம். 1928-ல் தன் அப்பா முதன் முதலாக வாங்கிய கார் ப்ளைமவுத் என்றார். வீடு போலவே பெரிதாய் வரவேற்கிறது ப்ளைமவுத்தின் இன்டீரியர். ‘‘காரை செமையா வெச்சிருக்கீங்க!’’ என்று பாராட்டிவிட்டு கொடநாடு செல்ல ரூட் போட்டோம்.

‘‘மாமா... ஊட்டி பக்கம் போயிறாதீங்... செம டிராஃபிக்காட்டம் இருக்குது. கோத்தகிரி போய் நேரா எடுத்துப்போடுங்க!’’ என்று நம் டீமை வழியனுப்பிவைத்தார் லட்சுமி நாராயணபதியின் மருமகள்.
மகன் ரங்கசாமியுடன் டிரைவருமாகச் சேர்த்து மொத்தமாக ஐந்து பேர், அந்த 1957 மாடல் ப்ளைமவுத்தில் கிளம்பினோம். பெட்ரோல் இன்ஜின், செமையாக அதிர்ந்தது; ஆனால், சந்தோஷமாக இருந்தது. மூன்று கியர்கள்தான். டாப் கியரில் நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 50 கி.மீ வேகத்தில் ‘ஜொய்ங்’ எனப் பறந்தது ப்ளைமவுத்.

‘‘ஹேய்... காமராஜர் கார்... ‘காதலிக்க நேரமில்லை’ கார்... ‘வசந்த மாளிகை’ கார்’’ என்று ப்ளைமவுத்தே வெட்கப்படும் அளவுக்கு வெரைட்டியாக உற்சாகமாகிவிட்டனர் சிவிலியன்கள். சில கல்லூரி இளவட்டங்கள், பொண்ணுங்களை ஃபாலோ செய்வதுபோல் பின்னாடியே துரத்திவந்து செல்ஃபி எடுத்த சம்பவங்களும் நடந்தன. ல.நா.பதிக்குப் பெருமை பிடிபடவில்லை. ‘‘ஒவ்வொரு தடவையும் அவங்களோட உற்சாகம் நமக்கும் தொத்திக்குது. இதைவிட சந்தோஷம் வேற எதுவும் பெருசா இல்லைனு தோணுது!’’ என்று வழிநெடுக பூரித்துக்கொண்டே வந்தனர் தந்தையும் மகனும்.

மைலேஜ் பற்றி விசாரித்தபோது, ‘‘சிட்டினா அஞ்சு தரும்ங்க; ஹில்ஸ் ஏறினோம்னா மூணு அல்லது நாலுதான்!’’ என்று சாதாரணமாகச் சொன்னார் லட்சுமிபதி. ப்ளைமவுத் போன்ற வின்டேஜ் கார்களில் பயணிக்கும்போது, கேன்களில் தண்ணீர் எடுத்துச் செல்வது நலம். அவ்வப்போது காரை நிறுத்தி ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றியபடி பயணம் களைகட்டியது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வரை மொத்தம் 7 ஹேர்பின் பெண்டுகள். பவர் ஸ்டீயரிங் இல்லை; திருகு திருகு என திருக வேண்டியிருந்தது. ‘மலையில் ஏறும் வாகனங்களுக்கு வழிவிடவும்’ என்று அறிவிப்புப் பலகை இருந்தது. ஏறுவதற்கு முன்பே ப்ளைமவுத்துக்கு வழிவிட்டார்கள் எல்லோரும்.

செல்லும் வழியில் பவானிசாகர் அணை வியூ பாயின்ட். டாப் ஆங்கிளில் பவானிசாகர் அணை அழகாகத் தெரிந்தது. இடதுபக்கம் திரும்பினால் ஊட்டி; நேராகப் போனால் கொடநாடு. ‘இதான் ஜெயலலிதா ஊர்’ என்று முன்பெல்லாம் சும்மா வேடிக்கை பார்த்தவர்கள்தான் அதிகம். பலர் இந்த வழியில் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை இங்கிருந்தே பாதுகாப்புப் பணிகள் தொடங்கிவிடும். ‘என்னத்துக்கு வம்புனு நிறைய தடவை திரும்பியிருக்கோம்’ என்று சிலர் டீ உறிஞ்சியபடி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். எந்தச் சோதனைகளுக்கும் ஆளாகாமல், ப்ளைமவுத் கொடநாடு பகுதிக்குள் நுழைந்தது.

கொடநாடு ‘ஜில்’ நாடு!

சுற்றிலும் டீ வாசம். எல்லாமே டீ எஸ்டேட்டுகள். டெம்பரேச்சர் 38 டிகிரி என்று ரேடியோவில் சொன்னார்கள். ஆனால், கொடநாடுக்குள் 38 டிகிரிக்கான வெப்பம் தெரியவில்லை. கோத்தகிரி வரை இரண்டாவது கியரிலேயே ஏறிய ப்ளைமவுத், சில இறக்கங்களில் அதே இரண்டாவது கியரில் வாழை இலையில் ஊற்றிய ரசம்போல் ‘சர்’ரென இறங்கியது. கியர்ஷிஃப்ட்டில் லேட்டஸ்ட் கார்கள், ப்ளைமவுத்திடம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏகப்பட்ட டூரிஸ்ட் ஸ்பாட்டுகளெல்லாம் கோடநாட்டில் இல்லை. தங்குவதற்கும் காட்டேஜ்கள் குறைவுதான். கொடநாடுக்கு ஒரே ஒரு வியூ பாயின்ட் மட்டும்தான் அட்ராக் ஷன். அடிபிடி, ஆரவாரம் இல்லை. கூட்டம் கும்மியடித்தாலும் நசநசவென இல்லை. டவர் மாதிரி கட்டி வைத்திருக்கிறார்கள். படிகள் வழியாக டவரில் ஏறிப் பார்த்தால், மேற்குத் தொடர்ச்சி மலை படுத்துக்கிடப்பதை 360 டிகிரியில் ரசிக்கலாம். சுள்ளென்று அடித்த வெயிலில், பனிக்குடத்தில் நீராக உடைந்ததுபோல் மலைகள் கண்ணாமூச்சி காட்டின. வெள்ளை வெளேரென மறைந்து கிடந்த மலையழகை கேமராவுக்குள் கொண்டுவரப் பிரயத்தனப்பட்டார் புகைப்படக் கலைஞர். ‘‘சாயங்காலம்தான் வியூ பாயின்ட்டுக்குச் சரியான நேரம். செமையா இருக்கும்!’’ என்றார் மலையாளி ஒருவர்.

கேமரா லென்ஸை ஜூம் செய்வதுபோல், கண்களை ஜூம் செய்து பார்த்தால், ஒரு நதி. மாயாறு என்றார்கள். இதுதான் முதுமலை வழியாகப் பயணித்து அப்படியே ரிஸர்வ் ஃபாரஸ்ட்டான தெங்குமரஹடாவுக்குப் போய், பவானிசாகரில் கலக்கிறது. இந்த மாயாறுதான் யானைகளின் ஃபேவரைட் ஸ்பாட். மாயாறுக்கு அந்தப் பக்கம் இருப்பது கர்நாடகா. வலது பக்கம் பவானி சாகர் அணை. கோத்தகிரி வியூ பாயின்ட்டுக்கு அண்ணன் இந்த கொடநாடு வியூ பாயின்ட். அதாவது, கடல் மட்டத்தில் இருந்து 6,500 அடி உயரம். இந்த உயரத்துக்காகவே இதற்கு ‘டெர்மினஸ் கன்ட்ரி’ என்று இன்னொரு பெயர் உண்டு. யாருக்கும் இறங்கி வர மனசே இல்லை.

கீழே மிளகாய் பஜ்ஜி, ஸ்நாக்ஸ் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. டவரில் ஏறி ஸ்நாக்ஸ் கொறித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர், வியூ பாயின்ட்டை விட்டுவந்து ப்ளைமவுத் பற்றி விசாரித்து வியந்தார்கள். செல்ஃபி எடுத்தார்கள். ‘ஏய், இங்க பாரு... கியரும் மூணு; மைலேஜும் மூணு’ என்று கமென்ட் செய்தார்கள். கொண்டுவந்திருந்த மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.

கொடநாட்டில் இரண்டே இரண்டு விஷயங்கள் ஃபேமஸ். ஒன்று - டீ; இன்னொன்று - ஜெயலலிதா. தமிழ்நாட்டிலேயே கொடநாட்டில்தான் சிறந்த டீ கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறக்கும் தறுவாயில்கூட ஜெயலலிதா, தனக்கு ஊழியம் பார்த்த நர்ஸ்களிடம், ‘‘இந்தியாவிலேயே சிறந்த டீ என்னோட எஸ்டேட்லதான் விளையுது. வீட்டுக்கு வாங்க. நல்ல டீ தர்றேன்!’’ என்று சொன்னாராம்.

கொடநாடு ‘ஜில்’ நாடு!

வியூ பாயின்ட்டுக்கு வருவதற்கு, நீங்கள் ஜெயலலிதாவின் டீ எஸ்டேட்டையும் பங்களாவையும் கடந்துதான் வர வேண்டும். எஸ்டேட்டுகள் நடுவே தனியாக ‘NH சாலை’ மாதிரி வளைந்து வளைந்து சிமென்ட் ரோடு தெரிந்தது. ‘‘இதுலதான் ஜெயலலிதா பேட்டரி கார்ல எஸ்டேட்டைச் சுத்தி வருவாங்க!’’ என்றார் கொடநாடுவாசி ஒருவர். ஹெலிகாப்டரை லேண்ட் செய்வதற்காக இரண்டு ஹெலிபேடுகள்கூட பங்களாவில் உண்டு என்றார்கள். ஒன்று - ஜெ-வுக்கு; மற்றொன்று - விருந்தினர்களுக்கு. இப்போது, ஜெயலலிதா பங்களா என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. ஒரு காலத்தில் பரபரவென இயங்கிக்கொண்டிருந்த அந்த பங்களா, இப்போது கறுப்புப் பணம்போல பதுங்கி இருக்கிறது. வெறிச்சென்று இருந்த அவர் வீட்டு வாசலில் போட்டோஷூட் செய்துகொண்டிருந்தபோது, இரண்டு வட இந்திய செவத்த பையன்கள் வந்து, ‘‘யஹாங் மத் கரோ... ஜாவோ... ஜாவோ...’’ என்று விரட்டியடித்தார்கள். இன்னும் சிலர் உச்சகட்டமாக, கொடநாட்டின் எங்கோ ஒரு மூலையில் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ‘‘இங்கேலாம் போட்டோ எடுக்கக் கூடாது; வண்டியை சீஸ் பண்ணிடுவோம்; கேமராவைப் புடுங்கிடுவோம்’’ என்று மிரட்டினர். மிரட்டல்களையெல்லாம் தாண்டி, அந்த ஏரியாவைக் கடந்து செல்பவர்கள், ‘‘அம்மா பங்களா... அடுத்து சின்னம்மாவுக்கா?’’ என்று நின்று பார்த்துவிட்டுத்தான் செல்கிறார்கள். இப்போது அம்மாவும் இல்லை; சின்னம்மாவும் இல்லை. கொஞ்ச தூரம் தள்ளி கேத்தரின் அருவி வரும் என்றார்கள். ஆனால், சீஸன் இல்லை என்பதால், நாம்தான் அருவிக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டிய நிலை. கீழ் கோத்தகிரி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. கிழக்கு கோத்தகிரியில் இருந்து 13 கி.மீ தொலைவில் இருக்கிறது. தேநாடு, துநேரி, புக்காடா என்று அழகான கிராமங்கள் சூழ்ந்த கீழ்கோத்தகிரி, ஆன்மிகவாசிகளுக்குப் பிடித்த இடம். மஹாலிங்க சுவாமி கோயில், மாரியம்மன் கோயில் இங்கு பிரசித்தம். ரங்கசாமி சிகரம், ரங்கசாமி தூண் என்று சில இடங்களைச் சொன்னார்கள்.

செல்லும் வழியில் ஒரு க்ரூப் நின்று கொண்டிருந்தது. ‘ஷூட்டிங்கோ’ என நினைத்தால், ‘ஆமாம்’ என்றார்கள். ஆனால், இது பறவைகளுக்கான ஷூட்டிங். கோத்தகிரி இறக்கத்தில் வெரைட்டியான பறவைகளை ரசிக்கலாம். ஏகப்பட்ட படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு பறவைகள் ‘பை பை’ சொல்லின.

நாமும் ‘பை பை’ சொல்லிவிட்டு, ‘ஒரு நாள் ட்ரிப்’ முடிந்த ஜோரில் கோத்தகிரி பெண்டுக்கு ப்ளைமவுத்தை இறக்கினோம்.

பார்க்க வேண்டிய இடங்கள்...

கோத்தகிரியில் இருந்து...

கொடநாடு வியூ பாயின்ட் 18 கி.மீ
ரங்கசாமி சிகரம் 20 கி.மீ
கேத்தரின் அருவி 05 கி.மீ
ஜான் சல்லீவன் நினைவகம் 5.3 கி.மீ.