Published:Updated:

ஏர் பேக் முதல் கூலிங் சீட் வரை... உங்கள் கார்களில் இந்த வசதியெல்லாம் இருக்கிறதா?!

ஏர் பேக் முதல் கூலிங் சீட் வரை... உங்கள் கார்களில் இந்த வசதியெல்லாம் இருக்கிறதா?!
News
ஏர் பேக் முதல் கூலிங் சீட் வரை... உங்கள் கார்களில் இந்த வசதியெல்லாம் இருக்கிறதா?!

இந்தியாவில் பட்ஜெட் கார்களைத் தவிர்த்து, தற்போது அதிகளவில் விற்பனையாகும் காம்பேக்ட் மற்றும் மிட்சைஸ் கார்களில் 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது.

ருபுறம், காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் செக்மென்ட்டில் (5-15 லட்சம் ரூபாய்) புதிதாக கார் வாங்க இருப்பவர்களுக்கான ஆப்ஷன்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மறுபுறம், தனக்கான காரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் அதே சமயத்தில் அதில் இருக்கக்கூடிய வசதிகளையும் பட்டியலிட ஆரம்பித்துள்ளனர். இருக்காதா பின்னே... 5 லட்சம் ரூபாய் காரிலேயே டச் ஸ்க்ரீன், 10 லட்சம் ரூபாய் காரிலேயே 6 காற்றுப்பைகள் என்ற நிலை ஆகிவிட்ட நிலையில், அவர்களின் ஆசையும் நியாயமானதே! அப்படி ஒருவர், தமது காரில் இருக்க விரும்பும் வசதிகளின் தொகுப்பு இங்கே! 

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம்

நீண்டநாள்களாக டிரெண்டிங்கில் இருக்கும் வசதி இதுதான். ஆம், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் காம்பேக்ட் கார்களிலேயே இப்போது டச் ஸ்க்ரீனைப் பார்க்க முடிகிறது. (உதாரணம் - ஸ்விஃப்ட்) இதன்மூலம், ஒருவர் தனது ஸ்மார்ட்போனுடன் Connected-ஆக இருப்பதுபோல, தனது காரின் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்துகொள்ள முடியும் என்பது பெரிய ப்ளஸ். அதில், ஒருவர் தனக்குத் தேவையான அம்சத்தை, பட்டன் - ஸ்க்ரீன் கன்ட்ரோல் - வாய்ஸ் கமாண்ட் எனப் பலவிதத்தில் வழங்க முடியும் என்பதால், கார் ஓட்டும்போது கவனம் சிதறாமல் இருக்கும். இதில் வழக்கமான சாட்டிலைட் நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா, AUX-IN, USB, ப்ளூடூத் ஆகியவற்றைத் தாண்டி, ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே - மிரர் லிங்க் போன்ற கனெக்ட்டிவிட்டி வசதிகளும் வழங்கப்படுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கூல்டு சீட்கள்

ஒரு காலத்தில் ஜெர்மானிய லக்ஸூரி கார்களில் மட்டுமே காணக்கிடைத்த வசதி, இப்போது மிட் சைஸ் கார்களிலேயே பார்க்க முடிகிறது (உதாரணம் - வெர்னா). இந்த வகை சீட்களின் அடியே இருக்கும் ஃபேன், குளிர்ச்சியான காற்றை உமிழும். அது சீட்டின் மேல்புறத்தில் உள்ள Pores வாயிலாக, பயணிகளைச் சென்றடையும். இதனால் வியர்வையால் நனைந்திருக்கும் ஒருவரின் முதுகுப்பகுதி மற்றும் தொடைப்பகுதியில் குளுகுளுவென காற்றடிப்பது, வெயிலில் செம! 

LED ஹெட்லைட்ஸ்

வழக்கமான ஹெட்லைட்ஸுடன் ஒப்பிடும்போது, LED ஹெட்லைட்ஸ் குறைவான மின்சாரத்தையே எடுத்துக்கொள்கின்றன. இவற்றின் துல்லியமான செயல்பாடு மற்றும் அதிக தூரத்துக்கு வெளிச்சத்தை உமிழும் திறன் காரணமாக, `இரவை பகலாக்க வல்லவை' என்ற சொலவடை, LED ஹெட்லைட்ஸுக்கு கனகச்சிதமாகப் பொருந்தும். இப்போது சிறிய ஹேட்ச்பேக் மற்றும் செடான்களிலேயே இதைப் பார்க்க முடிகிறது (உதாரணம் - சிட்டி).

DRL - டே டைம் ரன்னிங் லைட்ஸ்

இது அறிமுகமான வரலாறு சுவாரஸ்யமானது. கடந்த 1970-களில் தமது வாகனத்தின் இருப்பை, எந்தத் தட்பவெப்ப நிலையிலும் ஒருவர் மற்றவருக்குக் காட்டுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் DRL. இதுவும் LED-களைக்கொண்டிருப்பதால், குறைவான மின்சாரத்தில் அதிக வெளிச்சத்தை நீண்டநாளுக்குக் கொடுக்கும் திறன் இதற்கு உண்டு. நாளடைவில் கார் நிறுவனங்கள் இதையே தங்களின் Style Statement-ஆக மாற்றிக்கொண்டதுதான் சுவையான முரண் (உதாரணம் - வால்வோ Thor Hammer DRL).

கூல்டு க்ளோவ் பாக்ஸ்

டேஷ்போர்டில் உள்ள க்ளோவ் பாக்ஸுக்கு உள்ளே சிறியதாக ஒரு ஏர் வென்ட் இருக்கும். தேவைப்பட்டால் திறந்து மூடக்கூடிய வசதியைக்கொண்ட அதன்மூலம் எந்தப் பொருளையும் (கூல்டிரிங்ஸ், சாக்லேட், மருந்துகள்) குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். கூல்டு சீட்களுக்கு அடுத்தபடியாக, ஒருவருக்கு தமது காரில் வெயில் காலத்தில் அதிகம் பயன்படுவது இந்த வசதிதான். விட்டாரா பிரெஸ்ஸா காரை, இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கிலெஸ் என்ட்ரி & கோ

காரை சாவியால் ஸ்டார்ட் செய்தது ஒரு காலம். சாவியை பாக்கெட்டில் வைத்தபடியே காரை ஸ்டார்ட் செய்வது இந்தக் காலம்! டிரைவர் கதவின் கைப்பிடியில், ஒரு பட்டன்/சென்ஸார் இருக்கும். சாவியை உங்கள் கையிலோ பாக்கெட்டிலோ வைத்துக்கொண்டு, கைப்பிடியின் அருகில் சென்றாலே கதவைத் திறக்கவோ, லாக்செய்யவோ முடியும். அதேபோல காருக்குள்ளே சென்று, ஸ்டோரேஜ் ஸ்பேஸில் சாவியை வைத்துவிட்டு, இக்னீஷன் பட்டனை ஆன் செய்தாலே, கார் ஸ்டார்ட் ஆகிவிடும். தற்போது இந்தத் தொழில்நுட்பம், அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டது. ஆம், சாவிக்குப் பதிலாக ஸ்மார்ட் பேண்டிலேயே அந்த வசதியை கார் தயாரிப்பாளர்கள் கொண்டுவந்துவிட்டார்கள்! (உதாரணம் - நெக்ஸான்).

பனரோமிக் சன் ரூஃப்

ப்ரீமியம் கார்களில் தவிர்க்க முடியாத வசதியாக இருந்த இது, இப்போது காம்பேக்ட் கார்களிலேயே காணக் கிடைக்கிறது (உதாரணம் - எக்கோஸ்போர்ட்). சன் ரூஃப்பின் பிரதானமான பணி என்னவென்றால், இயற்கை வெளிச்சத்தையும் காற்றையும் கேபினில் கொண்டுவருவது. மேலும், வெளியே இருந்து பார்க்கும்போது காருக்கு ஸ்டைலான ஒரு லுக்கைத் தருவதுதான். 

பேடில் ஷிஃப்ட்டர்ஸ்

தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட கார்களிலும், மேனுவல் மோடு இருப்பதைப் பார்க்க முடியும். ஆனால், ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்ட்டர்ஸ் இருப்பது, நிச்சயம் கார் ஆர்வலர்களுக்குப் போனஸ்தான் (உதாரணம் - ஜாஸ்). ஏனெனில், ஒருவர் தனது காரை விரட்டி ஓட்ட முற்படும்போது, ஸ்டீயரிங் வீலில் இருந்து கையை எடுக்காமல் கியரைக் குறைத்து, ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டுவது என்பது தனிச் சுகம். இதனால் கியர் மாற்றும்போது ஏற்படக்கூடிய கவனச்சிதறல் தவிர்க்கப்படும் என்பது ப்ளஸ். 

க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி

காரில் எந்த அளவுக்கு ஏசி கூலிங் வைக்கலாம் என்பதில் உங்களுக்குக் குழப்பம் இருக்கிறதா? க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, உங்களுக்கான தீர்வாக இருக்கலாம். ப்ரீமியம் கார்களில் டூயல் ஸோன், டிரிப்பிள் ஸோன், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி இருந்தாலும், காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் கார்களில் இருப்பது சிங்கிள் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசிதான்! இதனால் கச்சிதமான அளவு கூலிங் கேபினில் கிடைக்கச்செய்யலாம் (உதாரணம் - கிராண்ட் i10).

டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட்

ஒருவர் நீண்ட தூரப் பயணங்களில் தனக்கேற்ற டிரைவிங் பொசிஷனைக் கண்டுகொள்ள கைகொடுப்பது ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட்தான்! காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் செக்மென்ட்டில், Tilt அட்ஜஸ்ட்மென்ட் ஸ்டீயரிங் அல்லது சிட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி ஆகியவற்றில் ஒன்றைத்தான் கொண்டிருக்கும். இதுவே ப்ரீமியம் கார்களில் Tilt & Telescopic அட்ஜஸ்ட்மென்ட் வசதியைப் பார்க்க முடியும். சில கார்களில் சீட்டைப்போலவே, ஸ்டீயரிங்குக்கும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி வழங்கப்பட்டிருக்கும். ஆனால், காம்பேக்ட் கார்களில், ஹூண்டாய் எலீட் i20 காரில் Tilt & Telescopic ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட் வசதி இருக்கிறது. 

ஆட்டோ பார்க்கிங்

இந்த மேஜிக் வசதியை, காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் கார்களில் எதிர்பார்ப்பது டூமச்தான்! ஆனால், கமல்ஹாசன் சொல்வதுபோல் `ஆட்டோ பார்க்கிங் வேண்டாம்னு சொல்லல.... இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்' என்பதே சாசனம். இது காரைச் சுற்றியிருக்கும் பகுதியை ஸ்கேன்செய்து, சரியான பார்க்கிங் ஸ்பேஸைக் கண்டுபிடித்துவிடும். நாம் ரிவர்ஸ் கியருக்கு மாறிய பிறகு, ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக்கில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதுமானது. ஏனெனில், இந்த அமைப்பு, ஸ்டீயரிங் கன்ட்ரோலைப் பார்த்துக்கொள்ளும். 

ரிவர்ஸ் கேமரா மற்றும் சென்ஸார்

காரின் கண்ணாடியை இறக்கிவிட்டோ, ரியர் வியூ மிரர்களைப் பார்த்தோ ரிவர்ஸ் எடுப்பது பழைய ஸ்டைல். ரிவர்ஸ் கேமராவைப் பார்த்து, உட்கார்ந்த இடத்தில் இருந்தே காரை ரிவர்ஸ் எடுப்பதுதான் டச் ஸ்க்ரீன் காலத்து டிரெண்ட்! சென்ஸார்கள் இதனுடன் சேர்ந்து, வேறு ஏதெனும் கார் அல்லது சுவர் மீதோ கார் மோதாமல் இருக்க, பீப் சத்தத்தை எழுப்பி டிரைவரை அலெர்ட் செய்யும். இதனால் காரில் ஏற்படக்கூடிய ஸ்க்ராட்ச்/டென்ட் ஆகியவை தவிர்க்கப்படும். (உதாரணம் - ஃப்ரிஸ்டைல்).

ஆட்டோ டிம்மிங் மிரர்

எலெக்ட்ரோ க்ரோமேட்டிக் மிரர் எனவும் அழைக்கப்படும் இது, வெளியில் இருக்கும் கார்களின் ஹெட்லைட் வெளிச்சம், மிரரின் மீது படும்போது அது தானாக டிம் ஆகி, வெளிச்சம் டிரைவரின் கண்களுக்கு அசெளகரியத்தைத் தராமல் பார்த்துக்கொள்ளும். மிட் சைஸ் கார்களில் மேனுவலாக ஆன்/ஆஃப் செய்துகொள்ளக்கூடிய Day Night மிரர்கள் இருக்கின்றன (உதாரணம் - க்ரெட்டா).

எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான டிரைவர் சீட்

லீவர்களைப் பயன்படுத்தி சீட்டை அட்ஜஸ்ட் செய்த நாள்கள் போய், இப்போது சிறிய பட்டன்களைப் பயன்படுத்தி எலெக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் சீட்டை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய காலத்தில் நாம் இருக்கிறோம். ப்ரீமியம் கார்களில் 12 முதல் 48 விதமாக சீட்டை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதியுடன், அதை மெமரியில் வைத்துக்கொள்ளும் அம்சமும் இருக்கிறது. ஆனால், மிட் சைஸ் கார்களில், டொயோட்டா யாரிஸில் மட்டுமே எலெக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட் வசதி இருக்கிறது.

காற்றுப்பைகள்

இந்தியாவில் பட்ஜெட் கார்களைத் தவிர்த்து, தற்போது அதிகளவில் விற்பனையாகும் காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் கார்களில் இரண்டு காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ப்ரீமியம் கார்களில் 6 முதல் 10 காற்றுப்பைகள் இருக்கும். தற்போது கார் தயாரிப்பாளர்கள், பாதுகாப்பின்மீது கொஞ்சம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதனாலேயே சில காம்பேக்ட் கார்களிலேயே 6 காற்றுப்பைகள் இருப்பது சாதாரண விஷயமாகிவிட்டது (உதாரணம் - ஆஸ்பயர்).