Published:Updated:

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

>>சார்லஸ்

 ##~##

தோ... இதோ என இழுத்துக் கொண்டே போன ஃபார்முலா-1 இந்தியச் சுற்று, அக்டோபர் 30-ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்தியச் சுற்று துவங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே டெல்லியில் ஃபார்முலா-1 ஃபீவர் துவங்கிவிட்டது. ரேஸ் டிராக் அறிமுகக் கூட்டம், டெஸ்ட் ரேஸ்கள் என களை கட்டியது புத் ரேஸ் மைதானம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தனை ஆண்டுகளாக ஃபார்முலா-1 ரேஸைக் காண சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளுக்குச் சென்று பார்க்க வேண்டிய நிலமையில் இருந்த இந்திய ரசிகர்கள், இந்திய ரேஸுக்கு பெருமளவில் திரண்டிருந்தனர். மொத்தம் 1 லட்சம் பேர் ரேஸைக் காண புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் குவிந்திருந்தனர்.

இந்திய ரேஸுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்யப்பட்டு இருந்தன. விபத்து ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இரண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸுகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 'சஹாரா ஃபோர்ஸ் இந்தியா’ அணி உட்பட 12 அணியைச் சேர்ந்த 24 வீரர்களும், போட்டி நடந்த வாரத்தில் செவ்வாய்க் கிழமையே இந்தியா வந்து விட்டனர்.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

5.14 கி.மீ தூரம் கொண்ட இந்திய ரேஸ் டிராக், பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக அனைத்து வீரர்களும் பாராட்டினர். ஒரு பக்கம் இந்திய ரேஸ் டிராக் குறித்து பாராட்டுகள் குவிந்தாலும், விமர்சனங்களும் எழுந்தன. இந்திய விளையாட்டு மைதானங்களில், எப்போதுமே அழையா விருந்தாளியாக வந்து மக்களின் கவனத்தைக் கவரும் கதாநாயகனான நாய், புத் ரேஸ் மைதானத்தின் உள்ளேயும் புகுந்தது. ரேஸ் டிராக்கில் வெள்ளிக் கிழமை பயிற்சி நடந்து கொண்டிருந்த போது, நாய் ஒன்று குறுக்கே புகுந்தது. ரெனோ அணியின் புரூனோ சென்னா வேகமாக காரை ஓட்டிக் கொண்டு வர... குறுக்கே நாயைப் பார்த்ததும் அதிர்ந்து போனார். உடனடியாக சிவப்புக் கொடி காட்டப்பட்டு பயிற்சி நிறுத்தப்பட்டு, நாய் ரேஸ் டிராக்கைவிட்டு வெளியே விரட்டி அடிக்கப்பட்டது. அதேபோல், ரேஸ் டிராக்கில் பெருமளவில் புழுதி பறப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

சனிக்கிழமை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. வழக்கம் போல, இந்திய டிராக்கிலும் தகுதிச் சுற்றில் குறைந்த நேரத்தில் 5.14 கி.மீ லேப்பைக் கடந்து முதலிடம் பிடித்தார், ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல். ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் மார்க் வெப்பர் இரண்டாம் இடத்தையும், ஃபெராரி அணியின் ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஹிஸ்பானியா ரேஸிங் அணியின் சார்பில் கலந்து கொண்ட இந்தியாவின் நரேன் கார்த்திகேயன், 24-வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார். முன்னாள் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் 11-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

ஞாயிற்றுக்கிழமை மதியம் சரியாக 3 மணிக்கு ரேஸ் துவங்கியது. ரேஸ் துவங்குவதற்கு முன்பாக, இண்டிகார் ரேஸில் மரணம் அடைந்த டான் வெல்டன் மற்றும் மலேசிய மோட்டோ ஜீபி ரேஸில் மரணம் அடைந்த மார்க்கோ சிமோன்செல்லி ஆகியோருக்கு, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவப்பு விளக்குகள் அணைந்து பச்சை விளக்குகள் ஒளிர்ந்ததும், ரேஸ் கார்கள் வீர்ர்ரிட்டுப் பறக்க... செபாஸ்ட்டியன் வெட்டல் முதல் சுற்றிலேயே பேய் வேகம் பிடித்தார். முதல் லேப்பிலேயே பல மீட்டர் இடைவெளியில் மற்ற வீரர்களைப் பின்னுக்குத் தள்ளினார் வெட்டல். இரண்டாம் இடத்துக்கு ஜென்சன் பட்டனும், மார்க் வெப்பரும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். இதற்கிடையே கடந்த ஐந்து ரேஸ்களாக முட்டிக் கொண்டிருக்கும் ஃபிலிப் மாஸாவின் காரும், லூயிஸ் ஹாமில்ட்டனின் காரும் இந்திய ரேஸிலும் முட்டிக் கொண்டது. மாஸாவின் ஃபெராரியைத் துரத்திக் கொண்டிருந்த லூயிஸ் ஹாமில்ட்டனின் மெக்லாரன் பென்ஸ் கார், 24-வது லேப்பில் வளைவில் முந்த முயற்சித்தபோது ஃபெராரியை முட்டியது. இதனால், ஃபெராரி காரின் முன் பக்கம் தரையில் உரசி தீப்பொறி பறந்தாலும் ரேஸைத் தொடர்ந்தார் மாஸா. ஆனால், லூயிஸ் ஹாமில்ட்டன் உடனடியாக பிட்டுக்குத் திரும்பி, உடைந்துபோன தனது காரின் முன் பக்க பாகங்களை மாற்றினார்.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

இதற்கிடையே மாஸாவின் தவறான ஓட்டுதலால்தான் விபத்து நடந்ததாக ஸ்டூவர்ட்ஸ் தீர்ப்பளித்து, மாஸாவை 32-வது லேப்பின்போது ரேஸை விட்டு வெளியேற்றினர். இதற்கிடையே, முந்துவதற்கு முயற்சி செய்யக்கூட அருகில் யாரும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக ரேஸின் கடைசிச் சுற்றை நெருங்கிக்கொண்டு இருந்தார் செபாஸ்ட்டியன் வெட்டல். இறுதிச் சுற்றான அறுபதாவது சுற்றுக்குள் அனைத்து ரேஸ் கார்களும் நுழைய.... வெற்றிக் கொடியைக் காட்ட தயாராக இருந்தார் சச்சின் டெண்டுல்கர். இதற்கிடையே இறுதிச் சுற்றின் போது ஆறாவது இடத்துக்கு முன்னேறினார் மைக்கேல் ஷூமேக்கர். கடைசி இடத்தில் இருந்து ஆரம்பித்தாலும் விபத்தோ, இன்ஜின் கோளாறோ இல்லாமல் 17-வது இடத்தில் வந்துகொண்டு இருந்தார் நரேன் கார்த்திகேயேன்.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

60-வது லேப்பின் இறுதியில், டெண்டுல்கர் கறுப்பு வெள்ளை வெற்றிக் கொடியைப் பறக்கவிட... வெற்றிக் கோட்டை முத்தமிட்டது வெட்டலின் கார். 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 35 விநாடிகளில் வெற்றிக் கோட்டைத் தொட்டு, இந்திய மண்ணில் முதல் ஃபார்முலா-1 ரேஸின் வெற்றியைப் பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல்.

இந்திய ரேஸோடு சேர்த்து, இதுவரை நடைபெற்ற 17 ரேஸ்களில் 11 ரேஸ்களில் வெற்றி பெற்றிருந்தார் வெட்டல். ஜென்சன் பட்டன் இரண்டாம் இடம் பிடிக்க, ஃபெராரி அணியின் ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாவது இடம் பிடித்தார். 24 கார்களில் 19 கார்களே ரேஸை முழுவதுமாக முடிக்க, நரேன் கார்த்திகேயன் 17-வது இடம் பிடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஹாரா ஃபோர்ஸ் இந்தியா அணி வீரர்கள் ஆட்ரியான் சுட்டில் 9-வது இடத்தையும், பால் டி ரெஸ்ட்டா 13-வது இடத்தையும் பிடித்தனர்.

ஃபார்முலா-1 அபுதாபி

இந்திய ரேஸுக்கு அடுத்தபடியாக, ஃபார்முலா-1 போட்டிகளின் 18-வது சுற்று அபுதாபியின் யாஸ் மரினா ரேஸ் டிராக்கில் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இந்த ரேஸிலும் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். மெக்லாரன் அணி வீரர்கள் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாம் இடத்தில் இருந்தும், ஜென்சன் பட்டன் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவங்கினர். இந்திய வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு, இந்த ரேஸில் கலந்து கொள்ள ஹிஸ்பானியா அணி வாய்ப்பு அளிக்கவில்லை.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!
டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

இரவு-பகல் ரேஸாக நடைபெற்ற இந்த ரேஸிலும் செபாஸ்டியன் வெட்டலே வெல்வார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ரேஸ் டிராக்கில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் வெட்டல். ஆனால், வெட்டலை இந்த முறை துரதிருஷ்டம் துரத்தியது. ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே வெட்டல் காரின் பின் பக்க டயர் பஞ்சராக... ரேஸில் இருந்து வெளியேறினார் சாம்பியன் வெட்டல். இந்தச் சம்பவத்தால் உற்சாகம் அடைந்த லூயிஸ் ஹாமில்ட்டன் வெற்றி பெறுவது உறுதியானதால், பேய் வேகம் பிடித்தார். இருப்பினும், அவருக்கு கடைசி லேப் வரை டஃப் ஃபைட் கொடுத்தார் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ. ஆனால், இறுதியில் வெற்றி பெற்றார் லூயிஸ் ஹாமில்ட்டன்.

முதல் லேப்பிலேயே வெட்டலின் கார் எப்படி பஞ்சர் ஆனது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது வரை 18 ரேஸ்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு  சாம்பியன் பட்டத்தை ஏற்கெனவே வென்று விட்ட செபாஸ்ட்டியன் வெட்டல் 374 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஜென்சன் பட்டன் 255 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஃபெர்னாண்டோ அலான்சோ 245 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், பிரேசிலில் இந்த ஆண்டுக்கான கடைசி ரேஸ் போட்டி நவம்பர் 27-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்!

இந்திய ரேஸில் சில சுவாரஸ்ய சம்பவங்கள்!

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

ஃபார்முலா-1 காஸ்ட்லி விளையாட்டு என்பதற்குச் சாட்சியாக, ரேஸ் மைதானத்தைச் சுற்றிலும் எல்லாமே காஸ்ட்லி விலைதான். ஃபெராரி, மெக்லாரன் டீ-சர்ட்டுகள், தொப்பிகள், மினியேச்சர் கார்கள் என ரேஸ் தொடர்பாக விற்பனை செய்யப்பட்ட அனைத்துமே 1,000 ரூபாய்க்கு மேல் இருந்தது. அதேபோல், 300 ரூபாய்க்குக் குறைந்து சாப்பாடு அங்கு எங்கேயும் கிடைக்கவில்லை.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

ரசிகர்களின் கூட்டத்தால் ஃபார்முலா-1 டிராக் செல்லும் வழியெங்கும் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டது. அதேபோல், சச்சின் டெண்டுல்கர், உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி, விஜய் மல்லையா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, ஷாரூக்கான் என பலரும் தனித் தனி விமானங்களில் வந்ததால், டெல்லி விமான நிலையத்திலும் டிராஃபிக் ஜாம்! 24 தனி விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. விமான நிலையத்தில் இருந்து ரேஸ் டிராக்குக்கு, ஹெலிகாப்டர்களில் வந்து சேர்ந்தனர் விவிஐபிகள்!

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!
டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

வெற்றிக் கோப்பையில் கோயில் கோபுரங்கள் மற்றும் தாஜ் மகாலின் பிம்பம் இடம் பெற்றிருந்தது. 24 கேரட் தங்கத்தால் பாலீஷ் செய்யப்பட்டு இருந்த இந்த வெற்றிக் கோப்பையில், இந்தியக் கொடியைக் குறிக்கும் வகையில் மூன்று வர்ணங்கள் மிளிர்ந்தது.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

டெல்லியில் முதன்முறையாக கார் ரேஸ் நடப்பதால், ரேஸ் ஆர்வத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ரேஸைக் காண வந்திருந்தனர். அவர்களுக்கு ரேஸைப் பற்றி அதிகம் தெரியாததால், ஃபோர்ஸ் இந்தியா அணியின் காரைப் பார்த்ததும் நரேன் கார்த்திகேயன் கார் என்றும், ஃபெராரி காரைப் பார்த்ததும் மைக்கேல் ஷூமேக்கர் கார் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட இந்திய செலிபிரிட்டிகள் யாரையும் அடையாளம் தெரியவில்லை.

டெல்லியிலும் வெட்டல் ராஜ்ஜியம்!

இந்திய ரேஸுக்கான டிக்கெட்டுகள், விற்பனை துவங்கிய 3 மணி நேரத்தில் 1.25 கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்தன. டிக்கெட் கட்டணம் 2,500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இருந்தன!