Published:Updated:

GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்

சென்னை to சத்தியமங்கலம்

GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்

கா.பாலமுருகன், கி.ச.திலீபன்  ஜெ.தான்யராஜு 

க்யூட் கார் ஹூண்டாய் இயான். இதை, சிட்டிக்குள் ஓட்டுவதற்கான கார் என்றுதான் அனைவரும் நினைக்கிறார்கள். அதனால், 'இதை ஒரு நீண்ட தூரப் பயணத்துக்குப் பயன்படுத்தினால் என்ன?’ என்று தோன்றியதின் விளைவு, சத்தியமங்கலம் நோக்கி விரைந்தது இயான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சத்தியமங்கலம் என்றாலே வனம்தான் நினைவுக்கு வரும். வீரப்பனின் புகழிடமும் இந்த காடாகத் தான் இருந்தது. மேற்கு மலைத் தொடரும், கிழக்கு மலைத் தொடரும் கை குலுக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது பவானி சாகர் அணை. இந்த அணைதான் ஈரோடு மாவட்டத்தையே ஈரம் குறையாத, பசுமை மாறாத வயல் வெளியாக வைத்திருக்கிறது. வட கிழக்கு பருவ மழை ஓய்ந்த மறுநாள், சத்தியை நோக்கிப் புறப்பட்டோம்.  

இயானில், முன்னிருக்கைகள் இரண்டுமே வசதியானவை. ஆனால், டால் பாய் டிசைன் இல்லை. முன் இருக்கைகள் இரண்டும் வசதியாகவும் தொடைகளுக்கு ஆதாரத்தையும் கொடுக்கின்றன. சற்றே தாழ்வாக அமர்ந்திருப்பதாகத் தோன்றினாலும், சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடிகிறது.

 ##~##
ஆனால், பின் பக்க இருக்கை...? குழந்தைகளுக்கும், நடுத்தர வயதினருக்கும் ஏற்றதாக இருந்தாலும், கொஞ்சம் உயரமானவர் அமர்ந்தால், முட்டி இடித்துக் கொள்ளும். ஸ்டார்ட் செய்தால், மிக மிக அமைதியாக இயங்குகிறது 800 சிசி இன்ஜின். ஆனால், முதல் கியருக்கு மாற்றி ஆக்ஸிலரேட்டரை அழுத்தி பவர் கிடைத்ததும் கிளட்சை ரிலீஸ் செய்தால்தான் சட்டென சீறுகிறது. இல்லாவிட்டால் தொய்வுடன் நகர்கிறது இயான்.

சரி, முதல் கியர்தான் அப்படி... இரண்டாவது கியர் சீறும் என்று எதிர்பார்த்தால், அதுவும் அதே கதைதான். நான்காவது கியருக்கு மாறிய பிறகுதான் தன் வேலையைச் சிறப்பாகச் செய்கிறது இன்ஜின். அதனால், நகருக்குள் அடிக்கடி கியர் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியது இருக்கிறது. நகரும் போக்குவரத்து நெருக்கடியில், இது சிரமத்தைக் கொடுக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், நெடுஞ்சாலையில் அப்படியல்ல... மற்ற கார்களுடன் போட்டி போடும் வகையில் சீறுகிறது இயான்.

GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்

முதல் இரண்டு கியர்கள் மாற்றும்போது, கியர் லீவர் அநியாயத்துக்கு உதறுகிறது. மூன்றாவது நான்காவது கியருக்கு மாறிய பிறகு இந்த அதிர்வு அடங்கி விடுகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்தை எட்டிய பிறகு இயான் காருக்கு இன்னொரு முகம் வெளிப்படுகிறது. இது, 800 சிசி இன்ஜினா என சந்தேகப்படும் அளவுக்கு பர்ஃபாமென்ஸில் சிறந்து விளங்குகிறது. 100 கி.மீ வேகம் வரை அற்புதமாகச் செயல்படுகிறது. மேலும், இதன் அதிகபட்ச வேகத்தைத் தொட்டு விடலாம் என முயற்சித்த போது மணிக்கு 117 கி.மீ வேகம் வரை சென்றது இயான். 120 கி.மீ வேகத்தைத் தொட முடியவில்லை. ஆனால், இன்ஜின் கதறும் சத்தம் காருக்குள் அதிர்கிறது. மேலும், 100 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் குரூஸ் செய்து ஓட்டிச் செல்ல, இன்ஜின் சத்தம் வந்தாலும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங்கின் செயல்பாடு சற்று பயத்தை வரவழைப்பது உண்மை. 80 - 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது, பிரேக்கில் கால் வைத்ததும் சட்டென நம் கட்டுப்பாடுக்கு கார் வந்துவிடுவது ஆச்சரியம். அதனால், வேகமாகப் பயணிக்க பயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சென்னையில் இருந்து சத்தியமங்கலம் செல்ல, பெங்களூரு ஹைவேயில் கிருஷ்ணகிரி சென்றோம். அங்கிருந்து சேலம் வழியாக ஈரோடு பைபாஸ் சாலையில் திரும்பி கவுந்தபாடி, கோபிச் செட்டி பாளையம் வழியாக சத்தியமங்கலத்தை அடைந்தபோது மாலை ஆகியிருந்தது. சென்னையில் இருந்து மொத்தம் 470 கி.மீ தூரம் சத்தி.

GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்

சத்தியமங்கலம் வனப் பகுதியை தமிழகத்தின் பசுமை நுரையீரல் எனலாம். ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு நடுவே சுழித்துக் கொண்டு ஓடும் நதிகளும், காட்டாறுகளும்தான் இந்த வனத்தை வளம் கொழிக்கச் செய்கின்றன. காணும் திசையெங்கும் பச்சைப் போர்வை போர்த்தி நிற்பது போலத் தோன்றும் இந்தக் கானகம் ஒரு கனவுலகம். யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள் என உயிரியல் சுழற்சியின் மிக முக்கிய விலங்குகளின் புகலிடமாய் இருக்கிறது. முதுமலை, பந்திப்பூர் போன்ற வன விலங்கு சரணாலயங்களில் கிடைக்காத அரிய தாவர வகைகள்கூட இங்கு இருக்கின்றன. வற்றாத ஜீவ நதிகளாக பவானியாறும், மோயாறும் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், பவானி ஆகிய பகுதிகளின் தண்ணீர்த் தாயாக விளங்குகிறது.  

ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகரான கிளைமேட் வேண்டுமா? அப்படியென்றால் இங்குள்ள தாளவாடி மலைப் பகுதியில் இருக்கும் கெத்தேசாலுக்குத்தான் வர வேண்டும். சத்தியமங்கலத்திலிருந்து சரியாக 54 கி.மீ தொலைவில் இருக்கிறது கெத்தேசால். ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத அழகிய மலைக் கிராமமான இந்த கெத்தேசாலின் கிளைமேட்டுக்கு மசியாதவர்களே இல்லை.

GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்

சத்தியமங்கலம் என்றாலே பண்ணாரி மாரியம்மன் கோவில்தான் நினைவுக்கு வரும். சத்தியமங்கலத்திலில் இருந்து சரியாக 12 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த பண்ணாரி அம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. அதுவும், ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் திருவிழா என்றால் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... கர்நாடகா மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பண்ணாரியை வழிபட்டு குண்டம் இறங்குவர். இந்தக் கோவிலிலிருந்து 6 கி.மீ தொலைவில் வனத்தினுள் இருக்கிறது காட்டு பண்ணாரி அம்மன் கோவில். இங்குதான் பண்ணாரி தோன்றியதாக ஐதீகம். இந்தக் கோவிலுக்குப் போக பஸ் வசதி ஏதும் இல்லையெனினும், தீவிர பக்தர்கள் நடந்தே செல்கிறார்கள்.

GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்
GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்

சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது பவானி சாகர் அணை. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை என்று பல சிறப்புகள் பெற்றது. இங்குள்ள பூங்கா சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்கு. அணையில் பிடிக்கப்பட்ட மீன்கள் சுடச் சுடப் பொரித்து விற்பனை செய்யப்படுகின்றன. அணையின் மேல் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆண்டுக்கு இருமுறை அதாவது, காணும் பொங்கல் மற்றும் ஆடிப் பெருக்கு ஆகிய இரு நாட்களுக்கு மட்டும்தான் அனுமதி. இந்த அணைக்குள் டணாய்க்கன் கோட்டை எனும் ஒரு கோட்டை மூழ்கிக் கிடக்கிறது. அணையின் நீர்மட்டம் 25 அடியாகக் குறையும்போது இந்தக் கோட்டையைக் காண முடியும்.

அதேபோல், சத்தியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் கொடிவேரி அணை அருவி இருக்கிறது. இந்தக் கொடிவேரியை மினி குற்றாலம் எனலாம். கரை

GREAT ESCAPE - ஹூண்டாய் இயான்

புரண்டு வரும் பவானியாற்று நீர் அருவியாகக் கொட்டுவது அழகோ அழகு. அருவியில் குளிக்க விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கோபியிலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது குண்டேரிப் பள்ளம். குன்றி மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடியும் இடம்தான் இந்த குண்டேரிப் பள்ளம் அணை. மூன்று பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்து நிற்க... நடுவே இந்த அணை இயற்கை அழகினை வாரி இறைக்கிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்களின் சுவையே தனி!

மேலும், கோபியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் தூக்கநாயக்கன் பாளையம் எனும் விவசாய கிராமம் இருக்கிறது. இங்கு, 500 ஆண்டுகளாக வற்றாத நீரூற்று ஒன்றுள்ளது. பார்ப்பதற்கு நீச்சல் குளம் போலக் காட்சி தரும் இந்த நீரூற்றின் பெயர் மத்தாளக்கொம்பு. இந்தப் பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்கள் விடுமுறைக் காலத்தை இதில்தான் கழிக்கின்றனர். இந்த நீரூற்றோ படிகத்தைப் போலத் தூய்மையானது என்பதால், இங்கு குளிப்பதற்காகவே கூட்டம் அலைமோதும்.

சத்தியிலிருந்து மலைச் சாலை வழியாக திம்பம், தாளவாடி ஆகிய இடங்களைக் கடந்தால் கர்நாடக மாநிலம். அப்படியே சாம்ராஜ் நகர் வழியாக மைசூரை அடைந்துவிடலாம். பண்ணாரியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் திம்பம் என்ற இடத்தை அடைவதற்குள் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. உண்மையிலேயே இயானுக்கு மிகச் சவாலான சாலைதான். கொண்டை ஊசி வளைவுகளில் லாவகமாக ஏறினாலும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தி பவர் கொடுத்துத்தான் செல்ல வேண்டி இருந்தது. கொண்டை ஊசி வளைவுகள் கடந்து தலமலை வழியாக காட்டுச் சாலையில் 10 கி.மீ தூரம் வரை பயணம் செய்துவிட்டு, வந்த வழியே திரும்பி கோபியில் நமக்காகக் காத்திருந்த மோ.வி வாசகர் ரவிகுமாரைச் சந்திக்கச் சென்றோம்.

ஆடிட்டராக இருக்கும் வாசகர் ரவிகுமாரின் குடும்பமே மோட்டார் விகடன் பிரியர்கள். குடும்ப சகிதமாக இவர்கள் இயான் காரை சில கி.மீ தூரம் வரை ஓட்டிப் பார்த்தனர்.

''டிரைவிங் சீட் உட்கார்ந்து ஓட்டுவதற்கு அருமையாக இருக்கிறது. இருக்கையில் அமர்ந்ததும் நம்மை உள்வாங்கிக் கொள்வதால், எவ்வளவு தூரம் பயணித்தாலும் அலுப்பே தெரியாது. ஆனால், ஆரம்ப கியர்களில் பிக்-அப் ரொம்பவுமே சுமாராக இருக்கிறது. இந்த காருக்கு ஐந்து கியர்கள் அதிகமோ என்று தோன்றுகிறது. நான்கு கியர்களே போதுமானது தான். இதனால், அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய தொல்லை இருக்காது. 60 கி.மீ வேகத்தைக் கடந்ததும் சிறப்பாக இருக்கிறது. பின் பக்க இருக்கைகளில் பெரியவர்களை வைத்துக்கொண்டு நீண்ட தூரம் வசதியாகப் பயணிக்க முடியாது. குழந்தைகளுக்கு வேண்டுமானால், மிக வசதியாக இருக்கும். மற்றபடி காரைக் கையாள மிக சுலபமக இருக்கிறது. அதேபோல், காரின் முன் பக்க டிசைன் மிகவும் பிடித்திருக்கிறது. அதுவும் பூனைக் கண் ஹெட் லைட் கொள்ளை அழகு'' என்று வர்ணித்தார் ரவிகுமார்.

அவரிடம் விடை பெற்றுக் கொண்டு மீண்டும் சென்னை நோக்கிச் சீறியது இயான்!