கார்ஸ்
Published:Updated:

போர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்!

போர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்!
பிரீமியம் ஸ்டோரி
News
போர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: போர்ஷே பனாமெரா டர்போ தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ழு ஆண்டுகளுக்கு முன்பு போர்ஷே பனாமெரா அறிமுகமானபோது, ஆட்டோமொபைல் உலகமே ‘தெய்வக்குத்தம்’ நிகழ்ந்துவிட்டதுபோல் அலறியது. காரணம், ‘சூப்பர் கார்களுக்கு பெஞ்ச் மார்க்காக இருக்கும் போர்ஷே நிறுவனம், 4-டோர் சலூன் காரை உருவாக்குவதா?’ எனப் பலரும் ஆச்சரியப்பட... காரின் சுமாரான டிசைன், ஆர்வலர்களிடம் நெகட்டிவ் ரெவ்வியூக்களை அள்ளியது. ஆனால், வாடிக்கையாளர்களோ, பனாமெராக்களை வாங்கிக் குவித்தனர்.

போர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்!

டிசைன்

இப்போது அறிமுகமாகியுள்ள இரண்டாம் தலைமுறை பனாமெராவுக்கோ, ஏராளமான ரசிகர்கள். அப்போது டிசைனில் செய்திருந்த அத்தனை தவறுகளையும் திருத்திக்கொண்டு சிக்ஸர் அடித்துள்ளது போர்ஷே. பனாமெராவின் அடிப்படை டிசைன் அப்படியே இருந்தாலும், ஜிம்முக்குச் சென்றுவந்தது போல ஸ்லீக்காக இருக்கிறது. புது பனாமெரா டிசைன், போர்ஷேவுக்குப் பக்குவத்தன்மை வந்திருப்பதைக் காட்டுகிறது. ஃபோக்ஸ்வாகனின் புது MSB மாட்யூலர் பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது பனாமெரா. பழைய காரைவிட ஷார்ப்பாகக் காட்சியளித்தாலும், உண்மையில் காரின் நீளம் 34 மிமீ அதிகரித்துள்ளது. 6 மிமீ கூடுதலாக அகலமாகியிருக்கிறது. வீல்பேஸ் 30 மிமீ அதிகரித்துள்ளது. இன்னும் கூடுதல் வீல்பேஸ் உடன் ‘எக்ஸிக்யூட்டிவ்’ என்ற வேரியன்டும், ‘ஸ்போர்ட் டூரிஸ்மோ’ என்ற எஸ்டேட் வேரியன்டும் விரைவில் வர இருக்கின்றன. 

போர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்!

முன்பக்கம் LED ஹெட்லைட்ஸில் உள்ள 4-பாயின்ட் LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் அழகாக இருக்கின்றன. பானெட் டிசைன் இப்போது நேர்த்தியாக உள்ளது. காரின் ரூஃப்லைன், பிரபல போர்ஷே காரான 911 போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க ஃபெண்டரில் கூலிங் ஏர் வென்ட்டுகள்கூட உள்ளன. பின்பக்கம் உள்ள ரிட்ராக்டபிள் ஸ்பாய்லர்தான் காரின் மொத்த டிசைனிலேயே ஹைலைட். இயங்கும்போது செம ஸ்டைலாக இருக்கிறது. பின்பக்கம் உள்ள LED டெயில் லைட்டுகளை, LED லைட் ஸ்ட்ரிப் இணைத்திருப்பதால், பார்க்க ஒரே டெயில் லைட் போன்று தோற்றமளிக்கிறது.

போர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்!

உள்ளே

 புதிய பனாமெராவின் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், நாம் இதுவரை டெஸ்ட் செய்ததிலேயே சிறந்ததாக இருக்கிறது. நேர்த்தியான கலர் செலெக்‌ஷன், கச்சிதமான மெனு ஆப்ஷன்கள் என இதை ரசித்து ரசித்து உருவாக்கியுள்ளார்கள்.  ஒரு போர்ஷே காரில் மசாஜிங் சீட்ஸ் இருக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால், புது பனாமெராவில் முன்னிருக்கையில்கூட இருக்கிறதே! என்ன, வேகமாக ஓட்டும்போது இது கவனத்தைச் சிதறடிக்கக்கூடும். பின்பக்கம் கால்களுக்கு இடவசதி மிக அதிகம். ஹெட்ரூம் போதுமான அளவு இருந்தாலும், ஜன்னல்கள் சிறியவை என்பதால், ஒரு லக்‌ஷூரி செடானில் கிடைக்கும் இடவசதி உணர்வு வரவில்லை. தொடைகளுக்குத் தேவையான சப்போர்ட் கிடைக்கும்படி இருக்கையை அட்ஜஸ்ட் செய்யலாம். பின்னிருக்கைகளிலும் மசாஜிங் வசதி உண்டு.

 இன்ஜின்

 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜின் 550 bhp சக்தியை அளிக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.58 விநாடிகளிலேயே தொடுகிறது. மணிக்கு 20 கி.மீ வேகத்திலிருந்து 80 கி.மீ வேகத்தை அடைய வெறும் 2.51 விநாடிகளே ஆகின்றன. இவ்வளவு பெர்ஃபாமென்ஸ் கொண்ட காரிலும், மைலேஜுக்காக இன்ஜினில் சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்த ஆர்பிஎம்களில் நான்கு சிலிண்டர்களிலேயே இயங்குகிறது.

போர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்!

ஆப்ஷனலாகக் கிடைக்கும் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜைத் தேர்ந்தெடுத்தால் லான்ச் கன்ட்ரோல், டிரைவிங் மோடு ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. ‘ஸ்போர்ட் ப்ளஸ்’ மோடில் ரைடு-ஹைட் அட்ஜஸ்டபிள் ஏர் சஸ்பென்ஷன், எலெக்ட்ரானிக் டாம்பர் கன்ட்ரோல், எலக்ட்ரோ-மெக்கானிக்கல் ரோல் ஸ்டெபிலைசேஷன், ரியர் ஆக்ஸில் சுவிட்ச் ஆகியவற்றில் அதிகபட்ச செட்டிங்குகளை அமைக்க முடியும்.  புதிய பனாமெராவில் ‘ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ்’ எனும் பட்டன் இருக்கிறது. இதுதான் சரவெடி. ஒருமுறை அழுத்தினால், 20 விநாடிகளுக்கு காரில் இருந்து மிக அதிகபட்ச பெர்ஃபாமென்ஸ் வெளியாகிறது. இது செம கிக்.

 ஓட்டுதல் தரம், கையாளுமை

ஏர் சஸ்பென்ஷன் என்பதால், காரின் ஓட்டுதல் தரம் சொகுசாகவே இருந்தாலும், ஒருவித இறுக்கத்தை உணர முடிகிறது. ஸ்போர்ட்ஸ் கார் என்பதால், இது சரியானதுதான். மேடுபள்ளங்களை நிச்சயம் கவனித்துத்தான் ஓட்ட வேண்டியிருக்கும். இவ்வளவு பெரிய கார், வளைவுகளில் விரட்டி ஓட்டும்போது தரும் கையாளுமை ஆச்சர்யப்படுத்துகிறது. புதிய 8-ஸ்பீடு PDK கியர்பாக்ஸ் டக்டக்கென்று ஷிஃப்ட் ஆவது பெரிய ப்ளஸ் பாயின்ட்.

பழைய பனாமெரா கார் விற்பனை ரீதியில் வெற்றி பெற்றாலும், ஆர்வலர்களின் குட்புக்கில் இடம்பெறவில்லை. புது பனாமெராவைப் பார்த்தவுடனே ஆர்வலர்களுக்கும் பிடித்துவிடும் என்பதால், விற்பனையில் ஹிட்டடிக்கும். டிசைனில் அசத்தும் புதிய பனாமெரா, பெர்ஃபாமென்ஸில் காட்டும் சீற்றம் தெறி மாஸ். கையாளுமையில் பக்கா ஸ்போர்ட்ஸ் கார்தான். 1.93 கோடி ரூபாய் விலை (எக்ஸ்-ஷோரூம் மும்பை). ஒரு குடும்பத்துக்கே ஸ்போர்ட்ஸ் கார் அனுபவத்தைக் கொடுக்கும் மிகச் சில கார்களுள் பனாமெராவும் ஒன்று.