Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக்

கிராமத்து மரியாதை!

  ச.ஆ.பாரதி  தி.விஜய்

 ##~##

''நேரம் பார்க்காம கடுமையா உழைக்கணும். ஆனா, வரவேற்பைப் பார்த்துட்டு திமிர் வந்திடக் கூடாது. அப்படி வந்தா, நமக்கு எல்லாம் தெரியுங்கிற நெனைப்பிலேயே உன்னோட தொழில் தேங்கிடும். நிறைய கத்துக்கணும்னு நினைச்சாதான் அடுத்த கட்டத்துக்குப் போகமுடியும் - இப்படி என் குருநாதர் சொன்ன வார்த்தைங்க தான், என்னை கஸ்டமர் கொண்டாடுற மெக்கானிக்கா மாத்தியிருக்கு!'' என நிதானமான வார்த்தைகளில் பேசுகிறார் பழனிச்சாமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஈரோடு மாவட்டத்தின் சிவகிரியில் மெக்கானிக் ஷெட் நடத்தி வரும் இவருடைய புகழ், சிவகிரியைத் தாண்டி கோவை, திண்டுக்கல், திருச்சி என்று கணிசமான தொலைவிலும் பரந்து விரிந்திருக்கிறது. 'ராயல் என்ஃபீல்டு வாகனங்களின் ஸ்பெஷலிஸ்ட்’ என அந்த வட்டாரத்தில் கொண்டாடப்படும் பழனிச்சாமியிடம் பேசினோம்.

''ஐந்தாவது வரைக்கும்தான் படிச்சேன். எனக்குப் படிப்பு வரலைன்னு அப்பா மெக்கானிக் ஷெட்ல வேலைக்குச் சேர்த்து விட்டாங்க. மெக்கானிக் ஷெட்லயே நான்தான் அப்போ சின்னப் பையன். ஆரம்பத்தில எடுபுடி வேலைதான் செஞ்சுகிட்டு இருந்தேன். நாளாக நாளாக ஸ்பேனர் பிடிச்சு வேலை செய்யக் கத்துகிட்டேன். ஒரு கட்டத்துல, ஷெட்டுக்கு வர்ற கஸ்டமருங்க, 'குட்டிப் பையன் இல்லையா?’ ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. என் வேலையைப் பார்த்து என் குருநாதர் நட்ராஜ், 'கால நேரம் பார்க்காம கடுமையா உழைச்சா நல்ல இடத்துக்குப் போயிடலாம்’னு அட்வைஸ் கொடுக்குறது மட்டுமில்லாம, அவரோட மகனாகவே என்னை நடத்தினார்.

நம்ம ஊரு மெக்கானிக்

போல்ட், நட்டு கழட்டுறதுல ஆரம்பிச்சு, அப்படியே புல்லட்டோட அத்தனை உள்ளுறுப்புகளையும் பிரிச்சுப் போட்டு வேலை பார்க்கக் கத்துகிட்டேன். பதினைந்து வருஷம் சம்பளத்துக்கு வேலை பாத்துட்டு 1985-லதான் தனியா வொர்க் ஷாப் வெச்சேன். அப்போல்லாம் ராஜ்தூத், ஜாவானு சில பைக்குகள் சர்வீஸுக்கு வரும். என்ன இருந்தாலும், புல்லட் பைக்கை சர்வீஸ் செய்யுற திருப்தி வேற எந்த பைக்கிலயும் கிடைக்காது. ஒரு தடவை கஸ்டமரைத் திருப்திப்படுத்திட்டா போதும். 'அடடா... பைக் ரிப்பேரா? பழனிச்சாமி ஷெட்டுக்குப் போப்பா’ன்னு எனக்கு பைசா செலவு இல்லாம அவங்களே விளம்பரம் கொடுத்திருவாங்க. இப்படியே நம்ம ஷெட் முழுக்க புல்லட்டா நிரம்பி இருக்கும்.

100 சிசி பைக்குங்களோட வளர்ச்சி அதிகமானதும், புல்லட்டோட எண்ணிக்கை குறைஞ்சது மட்டுமில்லாம, தொழிலும் ரொம்ப மந்தமாயிடுச்சு. சில பேரு, பொழப்ப நடத்தணுமேன்னு 100 சிசி பைக்குகளையும் சர்வீஸ் செய்யப் பழகுனாங்க. ஆனா, மறுபடியும் புல்லட் பைக்குக்கு மதிப்பு கூடுனதும் எங்க பழைய கம்பீரம் மீண்டுச்சு. வெள்ளைச் சட்டை, வேஷ்டி கட்டி நூறு பேர் இருக்கிற கூட்டத்துக்குள்ள புல்லட்டுல போனா, அத்தனை பேரும் புல்லட் பைக்ல வர்றவங்கள மரியாதையா பார்ப்பாங்க. அந்த அளவுக்கு கிராமத்துல புல்லட் பைக் பிரபலமாகி இருக்கு. இன்னிக்கு, இளவட்டப் பசங்க தொடங்கி பெரியவங்க வரைக்கும் எல்லோரும் என்னோட கஸ்டமர் தான்!

புல்லட் பைக்க பொறுத்த வரைக்கும், சரியா பராமரிப்பு செஞ்சுகிட்டே இருந்தா எந்தப் பிரச்னையும் இல்லாம ஓடிக்கிட்டே இருக்கும். ஆயில் மாத்துறது, டயர்ல ஏர் பிரஷர் கரெக்ட்டா மெயின்டெய்ன் பண்றது, பேட்டரியில சார்ஜ் சரியா இருக்கான்னு செக் பண்றது... இப்படி அக்கறையோட பார்த்துகிட்டா செலவே வைக்காத குதிரை மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும்'' என்று டிப்ஸ் கொடுக்கிறார் பழனிச்சாமி.

''ஒரே ஒரு வொர்க் ஷாப் இருந்த இந்த ஏரியாவுல, இன்னைக்கு முப்பது, நாப்பது வொர்க் ஷாப் வரைக்கும் வந்துடுச்சு. இதுல பாதி பேருக்கும் மேல என்கிட்டே தொழில் கத்துகிட்டவங்கதான். என் குருநாதர் சொன்னது மாதிரி, எல்லாரும் நல்லா இருக்கட்டும்'' என ஆசிர்வதிக்கிறார் பழனிச்சாமி!