Published:Updated:

மாவீரனை வென்ற மரணம்!

மாவீரனை வென்ற மரணம்!

மலேசியாவிலிருந்து சுரேன்

 ##~##

மோட்டோ ஜீபி வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அமைந்து விட்டது மார்க்கோ சிமோன்செல்லியின் மரணம். 24 வயது இத்தாலிய ரேஸ் வீரரான மார்க்கோ சிமோன்செல்லி, இந்த ஆண்டு ஹோண்டா கிரெசினி அணியின் சார்பில் ரேஸில் கலந்துகொண்டார். எல்லா ரேஸ்களிலும் முதல் ஆறு இடங்களுக்குள் வந்து கொண்டிருந்த மார்க்கோ செல்லிசெல்லியின் மோட்டோ ஜீபி பயணத்துக்கு, முற்றுப் புள்ளி வைத்தது மலேசியன் ஜீபி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த அக்டோபர் 23-ம் தேதி மலேசியாவில் நடைபெற்ற மோட்டோ ஜீபி ரேஸ் பந்தயத்தின்போது மரணம் அடைந்தார் சிமோன்செல்லி. மலேசியாவின் இதே செப்பாங் ரேஸ் மைதானத்தில்தான் அவர் 2008-ம் ஆண்டு 250 சிசி சாம்பியன் ஷிப் பட்டம் வென்றார். பட்டம் வென்ற மைதானத்திலேயே மரணமடைந்ததுதான் ரேஸ் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது.

மாவீரனை வென்ற மரணம்!

வாலன்டினோ ராஸி ஊர்க்காரர் என்பது மட்டும் அல்ல... வாலன்டினோ ராஸியின் அதி தீவிர ரசிகர் மார்க்கோ சிமோன்செல்லி. அவரைப் போலவே ஹேர் ஸ்டைல் வைப்பது, ரேஸ் டிராக்கில் காமெடி செய்வது என அப்படியே ராஸியின் காப்பிகேட்டாக தன்னை வடிவமைத்துக் கொண்டவர் சிமோன்செல்லி. அதேபோல், மோட்டோ ஜீபி ரேஸ் வீரர்களில், ராஸியின் ஒரே நண்பரும் மார்க்கோ சிமோன்செல்லிதான். 2008-ம் ஆண்டு 250 சிசி ரேஸ் போட்டியில் கலந்துகொள்ள ராஸிதான் சிமோன்செல்லிக்கு ஸ்பான்ஸர்ஷிப் வாங்கிக் கொடுத்தார். 2009-ம் ஆண்டு சிமோன்செல்லி, வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸுக்குச் சென்று விட்டபோது, அவரை அடுத்த ஆண்டே மோட்டோ ஜீபிக்குள் இழுத்து வந்தவர் ராஸி.

நண்பனாக, ரோல் மாடலாக இருந்த வாலன்டினோ ராஸியே மார்க்கோ சிமோன்செல்லியின் சாவுக்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டதுதான் கொடுமையிலும் கொடுமை! பொதுவாக, ரேஸ் வீரர்கள், போட்டி துவங்குவதற்கு முன்பு பிட் ஸ்டாப்பில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்குக் கை காட்டி உற்சாகப்படுத்துவார்கள். ஆனால், மலேசிய ரேஸுக்கு வந்த ரசிகர்களை உற்சாகப்படுத்த எந்த ரேஸ் வீரரும் வெளியே வரவில்லை. மார்க்கோ சிமோன்செல்லி மட்டுமே வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து விட்டு ரேஸுக்குத் தயாரானார்.

மாவீரனை வென்ற மரணம்!

மலேசிய ரேஸில் ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றிருந்தார் சிமோன்செல்லி. டேனி பெட்ரோஸா முதல் இடத்தில் இருந்தும், கேஸி ஸ்டோனர் இரண்டாவது இடத்தில் இருந்தும், ஆண்டிரியோ டோவிஸியோஸோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். காலின் எட்வர்ட்ஸ் நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, வாலன்டினோ ராஸி ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ரேஸ் துவங்கிய இரண்டாவது லேப்பில் காலின் எட்வர்ட்ஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நான்காவது இடத்துக்கு முன்னேறினார் சிமோன்செல்லி. இதற்கிடையே ரேஸ் டிராக்கின் 11-வது வளைவில் இடது பக்கமாகச் சென்று கொண்டு இருந்த சிமோன்செல்லியின் பைக், திடீரென பயங்கர வேகத்தில் ரேஸ் டிராக்கின் வலது பக்கமாக வந்து, காலின் எட்வர்ட்ஸின் பைக் மீது மோத, பின்னால் வந்த ராஸியின் பைக் அப்படியே சிமோன்செல்லியின் தலையின் மீது ஏறியது.

மாவீரனை வென்ற மரணம்!

பைக் தலையில் ஏறியதில் சிமோன்செல்லியின் ஹெல்மெட் கழன்று கொள்ள... அந்த விநாடியிலேயே சிமோன்செல்லி நிலைகுலைந்து ரேஸ் டிராக்கில் சரிந்தார். அவரது பைக் உடைந்து பல துண்டுகளாகச் சிதறின. உடனடியாக சிவப்புக் கொடி காட்டப்பட்டு ரேஸ் நிறுத்தப்பட்டது.

அவசரமாக அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டும், 45 நிமிடங்கள் கழித்து ரேஸ் டிராக்கில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை ரேஸைக் காண வந்திருந்த சிமோன்செல்லியின் தந்தை பவ்லோ, சிமோன் செல்லியின் காதலி கேட்டி மற்றும்

மாவீரனை வென்ற மரணம்!

வாலன்டினோ ராஸி மூவரும் இத்தாலிக்குக் கொண்டு சென்றனர். மார்க்கோ சிமோன்செல்லியின் மரணத்துக்குப் பிறகு, ராஸி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

எப்போதுமே ரேஸ் டிராக்கில் ஆக்ரோஷமாக, அதிரடியாக ரேஸ் ஓட்டக் கூடியவர் சிமோன்செல்லி. கடைசி நிமிடம் வரை வெற்றிக்காகப் போராடக் கூடிய போராளி. மலேசிய ரேஸில்கூட அவர் இறுதி வரை பைக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடித்தான் கோர விபத்தில் சிக்கினார். பைக்கின் முன் பக்க டயர் பேலன்ஸை இழந்தபோதே, அவர் பைக்கில் இருந்து கையை எடுத்திருந்தால், பைக் தனியாகவும், சிமோன்செல்லி தனியாகவும் ரேஸ் டிராக்கில் இருந்து வெளியே போய் விழுந்திருப்பார்.

ஹோண்டாவின் மோட்டோ ஜீபி பைக்குகள் உயரம் குறைவானவர்கள் ஓட்டுவதற்கே சரியாக இருக்கும். டேனி பெட்ரோஸா, கேஸி ஸ்டோனர், டோவிஸியோஸோ என மூவருமே உயரம் குறைவான ஹோண்டா அணி வீரர்கள். ஆனால், சிமோன்செல்லியின் உயரம் ஆறு அடி. அவரால் இந்த சின்ன பைக்கில் சரியாகப் பொருந்த முடியவில்லை. அப்படி இருந்தும் வேறு அணிகளுக்குத் தாவாமல் தொடர்ந்து இந்த பைக்கிலேயே சாதனைகள் படைத்தார் சிமோன்செல்லி.

இந்த ஆண்டு நடைபெற்ற எல்லா தகுதிச் சுற்றிலும், ரேஸ்களிலும் மிகவும் வேகமாக இருந்தார் சிமோன்செல்லி. அவர் இருந்த கிரெசினி அணி ஃபேக்டரி அணி இல்லை. ஆனாலும், அவரது வேகம் யமஹா, ஹோண்டா, டுகாட்டி என ஃபேக்டரி வீரர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.

''ஒரு ரேஸ் வீரருக்குப் பெருமையே ரேஸ் டிராக்கில் உயிர் பிரிவதாகத்தான் இருக்க முடியும். மார்க்கோ சிமோன்செல்லி ரேஸ் ஓட்டிக் கொண்டு இருக்கும்போது, அவரது பைக்கோடு இருந்தபோதே மறைந்திருக்கிறார். மார்க்கோ சிமோன்செல்லி ஆசிர்வதிக்கப்பட்டவர்!'' என்றார் கார் ரேஸ் வீரர் லூயிஸ் ஹாமில்ட்டன்.

உண்மையிலேயே மார்க்கோ சிமோன்செல்லி ஆசிர்வதிக்கப்பட்டவர்தான்!