Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

Published:Updated:
மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

E-Pace - ஜாகுவாரின் சிறிய எஸ்யூவி!

F-Pace காரைத் தொடர்ந்து, தனது இரண்டாவது எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது ஜாகுவார். E-Pace எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் தயாரிக்கப்படும் அதே D8 பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகிறது. முன்பக்கம் பார்ப்பதற்கு மினி F-Pace போல இருந்தாலும், பக்கவாட்டுப் பகுதி மற்றும் ரூஃப் லைன், F-Type காரை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கிறது. இப்படி ஜாகுவார் கார்களுக்கே உரித்தான டிசைன் அம்சங்களைக் கொண்டிருக்கும் E-Pace, ஒரு பிராக்டிக்கலான எஸ்யூவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார், ஜாகுவாரின் டிசைன் பிரிவுத் தலைவர் Ian Callum. 4,345 மிமீ நீளம் - 1,984 மிமீ அகலம் - 1,649 மிமீ உயரம் - 2,681 மிமீ வீல்பேஸ் என அதன் வகையிலே சிறிய கார்களில் ஒன்றாக இருக்கும் E-Pace, ஓட்டுநரை முன்னிருந்தும் கேபினைக் கொண்டிருக்கிறது. கிராப் ரெயில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் லீவர், மூன்று ரோட்டரி கன்ட்ரோலருடன் கூடிய 10 இன்ச் Incontrol TouchPro இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், TFT டிஸ்ப்ளே - சாட்டிலைட் நேவிகேஷன் உடனான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் விதத்தை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். கடந்த மாதம் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்ட இது, அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மோட்டார் நியூஸ்

நடைமுறைக்கு வந்தது, புதிய கிரவுண்ட் கிளியரன்ஸ் விதி!

இந்நாள் வரை, ஒரு காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ், கெர்ப் வெயிட் - அதாவது ஆளில்லாமல் இருக்கும் வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டு வந்தது. இனிமேல் Gross Vehicle Weight - அதாவது கெர்ப் வெயிட் + பே-லோடுடன் கூடிய காரைக் கொண்டு, அதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஆட்கள் இல்லாத கார், பார்க்கிங்கில் இருப்பதுபோல இருக்கும். இதுவே நிரம்பிய கார் என்றால், அதன் சஸ்பென்ஷன் கம்ப்ரஸ் ஆகி, காருக்கும் தரைக்குமான இடைவெளியைக் குறைத்துவிடும். இந்தப் புதிய விதியால், ரியல் டைம் கிரவுண்ட் கிளியரன்ஸ் தெரிந்துவிடும் என்பது பெரிய ப்ளஸ். இதனைத் தொடர்ந்து, இதுவரை 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருந்த அவென்ச்சுரா, தற்போது மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, 156 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸையே பெற்றிருக்கிறது.

மோட்டார் நியூஸ்

சீனாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான SAIC, இந்தியாவுக்கு வருகிறது!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் மாருதி சுஸூகி எப்படியோ, சீனாவில் SAIC (Shanghai Automotive Industry Corporation) அப்படி. இந்தியாவில் டயர் பதிக்க நாள் குறித்துவிட்டது. தனது குழும நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த MG-யுடன் (Morris Garages) இணைந்து, இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்யவுள்ளது SAIC. MG மோட்டார் இந்தியா என்ற பெயரில் வரவிருப்பதுடன், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் CEO-வான ராஜீவ் சாபா, அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2019-ல் கார் உற்பத்தி தொடங்கி, அவை MG லோகோவுடன்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இது தவிர, SAIC-க்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களான Maxus, Roewe ஆகியவையும் இந்தியாவில் களமிறங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம். அனைத்து செக்மென்ட்களிலும் கார்களைத் தயாரித்து விற்பனை செய்யும் SAIC மற்றும் MG கூட்டணி, முதற்கட்டமாக எஸ்யூவிகளை இந்தியாவில் வெளியிட உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா, குஜராத்தின் Halol-ல் அமைந்திருக்கும் கார்த் தொழிற்சாலையில், மே மாத இறுதியில் உற்பத்தியை நிறுத்தியது. அந்த மூடப்பட்ட தொழிற்சாலையைத்தான், MG மோட்டார் இந்தியா நிறுவனம், தன் கார்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் முடிவில் இருக்கிறது.

மோட்டார் நியூஸ்

பெண்களுக்காக, பெண்கள் நடத்தும் யமஹா ஷோரூம்!

Scooter Boutique எனப்படும் ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேகமான ஷோரூமை, சென்னையில் கடந்த மாதம் துவக்கியது யமஹா. மாருதிக்கு நெக்ஸா எப்படியோ, யமஹாவுக்கு இந்த Scooter Boutique அப்படி. குரோம்பேட்டையில் 3,100 சதுர அடியில் அமைந்திருக்கும் இந்த ஷோரூமில், யமஹாவின் ஸ்கூட்டர்களுக்கான சேல்ஸ் - சர்வீஸ் - ஆக்சஸரீஸ் ஆகிய சேவைகள் வழங்கப்படும். உலகளவில் முதன்முறையாக இவ்வகை ஷோருமைத் துவக்கியிருக்கும் யமஹா, இதுபோன்ற 20 ஷோரூம்களை, இந்தியா முழுக்க இந்த ஆண்டில் துவக்கவிருக்கிறது. பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்படும் இந்த ஷோரூமில், ரே-Z, ரே-ZR, ஆல்ஃபா, ஃபஸினோ ஆகிய வழக்கமான யமஹாவின் ஸ்கூட்டர்களைத் தவிர, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டரான XMax 300 காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் நியூஸ்

கன ரக வாகனங்களுக்கு அசத்தல் ஏர் டிஸ்க் பிரேக்!

கமர்ஷியல் வாகனங்களுக்கான PAN 17 மற்றும் PAN 22 எனும் இரண்டு வகை ஏர் டிஸ்க் பிரேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது வாப்கோ. FEM சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி, இவை 17.5 இன்ச் மற்றும் 22.5 இன்ச் வீல்களுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. 1996-ல் முதன்முதலாக அறிமுகமான PAN 17 சீரிஸ் (19 மிமீ பிரேக் பேடு; 23 கிலோ எடை) டிஸ்க் பிரேக்குகளை, காலத்துக்கு ஏற்ப அப்டேட் செய்திருக்கிறது வாப்கோ. 18 டன் வரை எடை சுமக்கும் ட்ரக்குகளில் PAN 22 சீரிஸ் (23 மிமீ பிரேக் பேடு; 36 கிலோ எடை)  பொருத்தப்பட்டுள்ளது. முன்பைவிட 2 மிமீ கூடுதல் தடிமனான டிஸ்க் பேடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இவை பழைய சிஸ்டத்தைவிட குறைவான உராய்வுடன், மிகத் துல்லியமாக இயங்கும் எனத் தெரிவித்திருக்கிறது வாப்கோ.

மோட்டார் நியூஸ்

ஹஸ்க்வர்னா 401 பைக்கை, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்போகிறது பஜாஜ்!

ஸ்்வீடன் நாட்டின் ஹஸ்க்வர்னா நிறுவனத்தை 2013-ம் ஆண்டு கையகப்படுத்தியது கேடிஎம். பஜாஜுடன் கேடிஎம் கூட்டணி அமைத்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் ஹஸ்க்வர்னா பிராண்டை அடுத்த ஆண்டில் உலகளவில் கொண்டுசெல்லப் போவதவாகக் கூறியுள்ளார்கள். 114 ஆண்டுகள் பழைமையான ஹஸ்க்வர்னா, எண்டியூரோ, மோட்டோ க்ராஸ், சூப்பர் மோட்டோ ஆகிய செக்மென்ட்களில், பல மாடல்களை பொசிஷன் செய்திருக்கிறது. 2016-ம் ஆண்டு மட்டும் 30,000 பைக்குகளை உலகளவில் விற்பனை செய்திருக்கிறது. Vitpilen 401 (கஃபே ரேஸர்), SvartPilen 401 (ஸ்க்ராம்ப்ளர்), Vitpilen 701 ஆகிய மூன்று மாடல்களை, முதற்கட்டமாக இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் அசெம்பிள் செய்யும் எனத் தெரிகிறது. இதில் ‘401’ மாடல்கள் இரண்டும், தற்போது விற்பனை செய்யப்படும் டியூக் 390 பைக்கை அடிப்படையாகக் கொண்டவை.

இதுவே 701 மாடல், வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கேடிஎம்மின் 690 பைக்கை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எனவே, மாடர்ன் மற்றும் தனித்துவமான டிசைனைக் கொண்டிருக்கும் ஹஸ்க்வர்னா பைக்குகளில் இருப்பவை, கேடிஎம் பைக்குகளின் இன்ஜின் - ஃப்ரேம் - சஸ்பென்ஷன்தான்! அடுத்த ஆண்டு துவக்கத்தில், 401 மாடல்கள் இரண்டும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

ஆரம்பத்தில் கேடிஎம்மின் Mattighofen தொழிற்சாலையில் இருந்துதான் ஹஸ்க்வர்னாவின் பைக்குகள் இந்தியாவுக்கு வரும் என்றாலும், 2018-ன் இறுதிக்குள் இந்த நிறுவன பைக்குகளை, டியூக் மற்றும் RC பைக்குகள் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில், பஜாஜ் அசெம்பிள் செய்யத் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கேடிஎம்மின் ப்ரோ-பைக்கிங் ஷோரூம்களில், டியூக் மற்றும் RC பைக்குகளுடன், ஹஸ்க்வர்னாவின் 401 மாடல்கள் விற்பனை செய்யப்படும் என்பது பெரிய ப்ளஸ். ஆனால், கேடிஎம் பைக்குகளைவிட சற்று அதிக விலையில்தான், ஹஸ்க்வர்னா பைக்குகள் விற்பனை செய்யப்படும். சேல்ஸ் & சர்வீஸ் விஷயத்தில் பிரச்னை இருக்காது என்பதால், பிரீமியம் பொசிஷனிங்கை ஏற்றுக்கொள்ளலாம்.

மோட்டார் நியூஸ்

ஜப்பான் ஸ்டைல் படிப்பு! மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

‘மேட் இன் ஜப்பான்’ என்றாலே தனி மவுசுதான். ஜப்பான் ஃபார்முலாவே இந்தியாவுக்கு, அதுவும் சென்னைக்கு வருகிறது. ஆம்! Yamaha Motor NTTF Training Center (YNTC) சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய இன்ஸ்டிட்யூட். YNTC, புதிதாக ஒரு ட்ரெயினிங் கோர்ஸ் ஆரம்பித்துள்ளது. இது, 4 வருட கோர்ஸ். இதில் மோட்டார் சைக்கிள் அசெம்பிளி, பார்ட்ஸ், கன்ட்ரோல், பெயின்ட், வெல்டிங், கேஸ்டிங், மெஷினிங், குவாலிட்டி கன்ட்ரோல் போன்ற பிரிவுகள் பாடமாக எடுக்கப்படும். எல்லாமே ஜப்பானிய நாட்டுத் தொழில்நுட்பத்தின்படி! நம்பிக்கையான விஷயம் என்னவென்றால், Japan-India Institute of Manufacturing (JIM) தலைமையில் நடைபெறும் இந்த ட்ரெயினிங் சென்டர், ஜப்பானிய அரசும் இந்திய அரசும் சேர்ந்து உருவாக்கிய ஒப்பந்தத்தின்படி நடத்தப்படுகிறது என்பதுதான். திறமையான மாணவர்களின் வேலை வாய்ப்புப் பயிற்சிக்கும் இந்த இன்ஸ்டிட்யூட் பொறுப்பேற்குமாம்.