Published:Updated:

ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!

ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!
பிரீமியம் ஸ்டோரி
ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : டட்ஸன் ரெடி கோ 1.0 லிதமிழ்

ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : டட்ஸன் ரெடி கோ 1.0 லிதமிழ்

Published:Updated:
ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!
பிரீமியம் ஸ்டோரி
ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!

‘மூன்றரை லட்ச ரூபாய் பட்ஜெட்; 800 சிசியாக இருந்தாலும் பரவாயில்லை... ஒரு சின்ன கார் வேண்டும்’ என்பவர்களது வெயிட்டிங் லிஸ்ட்டில்தான் இருக்கும் டட்ஸன் ரெடி கோ. ஏனென்றால் மாருதி ஆல்ட்டோ, ரெனோ க்விட் அளவுக்கு மக்கள் மனதில் அவ்வளவாக இடம் பிடிக்கவில்லை ரெடி கோ. மாதம் 2,000 ரெடி கோ கார்கள் விற்பனை என்பது பெரிய எண்ணிக்கைதான். இருப்பினும், சக்தி குறைவான இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், ரிஃபைன்மென்ட், குறைவான டீலர் நெட்வொர்க் என்று சில குறைகளும் இருந்தன.

குட்டியூண்டு ஹூண்டாய் இயானிலேயே எப்போதோ 1,000 சிசி இன்ஜின் வந்துவிட்டது. டட்ஸனுக்கு இப்போதுதான் இந்த ஐடியாவே வந்திருக்கிறது. 800 சிசி இன்ஜின் இருந்த இடத்தில் 1.0 லிட்டர் இன்ஜினைப் பொருத்தி, ‘நகர்ப்புற க்ராஸ்ஓவர்’ என்று அடைமொழி கொடுத்து, ரெடி கோ 1.0 காரை டட்ஸன் அறிமுகம் செய்திருக்கிறது. நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு  ரெடி கோ இப்போது எப்படி இருக்கிறது?

ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!

பின்பக்க டெயில் கேட்டில் 1.0 லிட்டர் பேட்ஜைத் தவிர நீளம்/அகலம்/உயரம் என்று எதுவும் ஒரு மிமீகூட மாறவில்லை. மோ.வி. கார் மேளா பகுதியில், இதன் மைனஸ் கேபின் தரம் என்று சொல்லியிருந்தோம். அந்தக் குறையை நீக்க லேசாகப் பாடுபட்டிருக்கிறார்கள். டேஷ்போர்டில் கிரே தீம், முன்பைவிட இன்னும் கொஞ்சம் அடர்த்தியாகி இருக்கிறது. பாகங்களின் ஃபிட் அண்டு ஃபினிஷ் தரத்தை மறைக்க இது பயன்படுகிறது. அட! சென்டர் கன்ஸோலில் புதிதாக சென்ட்ரல்-லாக்கிங் பட்டனும், கதவுகளுக்கான ரிமோட் லாக்கிங்கும் இருக்கின்றனவே! க்விட்டில் இருந்து இதை எடுத்திருக்கிறார்கள்.

சீட்டிங் பொசிஷன் முன்பைவிட இப்போது உயர்ந்திருக்கிறது. பெரிய கண்ணாடிக் கதவுகள், விசாலமாக இருப்பதுபோல் தெரிகிறது. முன்பு ‘பிக் பாஸ்’ வீட்டில் இருப்பதுபோல் அடைபட்டுக் கிடந்த பயணிகள், இப்போது வெளியே என்ன நடக்கிறது என்று தெளிவாகப் பார்த்துக்கொண்டே பயணிக்கலாம். இருந்தாலும், அந்தத் தடிமனான ‘A’ பில்லர்கள், கார்னரிங்கின்போது மட்டும் சாலையை மறைக்கின்றன. ஹைலைட் என்னவென்றால், பின் பக்கப் பயணிகளுக்கான லெக் ரூமும் ஹெட் ரூமும் இப்போது கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன.

இத்தனை விஷயங்களை இம்ப்ரூவ் செய்தவர்கள், இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். முன்பக்கம் இருக்கும் சின்ன க்ளோவ் பாக்ஸில் ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்? கேபின் கதவுகளில் சில பாகங்கள், கவர்ச்சி நடிகைகளின் காஸ்ட்யூம் மாதிரி அங்கங்கே திறந்தமேனியில் இருக்கின்றன. பழைய சான்ட்ரோ கார்களில் இருப்பதுபோல் உட்புற மெட்டல் பாகங்கள் அப்படியே வெளியே தெரிகின்றன. இது நிச்சயம் யாருக்கும் பிடிக்காது. க்விட்டை உதாரணமாக எடுத்துக்கொண்டவர்கள், க்விட்டின் அட்ராக்டிவ்வான டச் ஸ்கிரீனை விட்டுவிட்டார்கள். டச் ஸ்கிரீன் இல்லாவிட்டால்கூட ஓகே... ரெடி கோவின் மியூஸிக் சிஸ்டம் புளூடூத் கனெக்டிவிட்டி இல்லாமல் இருக்கிறதே?

ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!

இன்ஜின் விஷயத்தில் அப்படியே க்விட்தான். அதில் இருக்கும் அதே 1,000 சிசி 3 சிலிண்டர் இன்ஜின், 68bhp பவர், 9.1kgm டார்க் என்று அதே டெக்னிக்கல் அம்சங்கள். T(O) மற்றும் S என இரண்டு வேரியன்ட்களில் இந்த 1 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் வருகிறது. சிட்டிக்கு ஏற்றபடி பவர் நன்றாக ரெவ் ஆவதுபோல் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்யும்போது, பழைய ‘ரெடி கோ’ திணறும். இப்போது நம்பிக்கையோடு, ‘ரெடி... கோ’ என்று சீறுகிறது இன்ஜின். பவர் டெலிவரியும் முன்புபோல் இல்லை; இப்போது செம ஸ்மூத். முக்கியமாக லோ ரெவ்களில் பழைய 800 சிசிபோல் ஜெர்க் ஆகவில்லை. இன்ஜின் விஷயத்தில் வெல்டன் டட்ஸன். ரிஃபைன்மென்ட் ஓகே!

சவுண்ட் டெஸ்ட்டிங் கருவிகளை வைத்து நாம் டெஸ்ட் செய்யவில்லை. இருந்தாலும் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. ஆல்ட்டோ K10, க்விட் கார்களைவிட கொஞ்சம் ஓவராகத்தான் சத்தம் போடுகிறது ரெடி கோ. அதிக வேகங்களில் சத்தம் ஓகே! ஆனால், வெளிச்சத்தம் கேபினுக்குள் அலறடிக்கிறது. கிளட்ச், இப்போது லைட் வெயிட்டாக இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில், இப்போது ஷார்ட் த்ரோக்களில் கியர் மாற்ற முடிகிறது.

 AUTOCAR INDIA

ரெடி... போலாம்! - இது 1,000சிசி ரெடி டட்ஸன்!

அநேகமாக, க்விட்டுக்குப் போட்டியாக ரெடி கோ AMT மாடலும் வரலாம். சஸ்பென்ஷன் செட்-அப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, ஓட்டுதல் தரம் பழைய கார் போலவேதான் இருக்கும். கொஞ்சம் டைட் ஆக இருந்தாலும், ஓட்டை ஒடிசலான சாலைகளை எளிதாகச் சமாளிக்கிறது. இதற்கு இன்னொரு காரணம் - ரெடி கோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ். 185 மிமீ. வாவ்!

ரெடி கோ கொஞ்சம் உயரமான கார். அப்படியென்றால், பாடி ரோல் இருக்கத்தானே செய்யும். வேகமான திருப்பங்களில் காரோடு சேர்ந்து நாமும் திரும்பினோம். ஆனால், சிட்டிக்கு ஏற்றபடிதான் இதன் ஸ்டீயரிங் செட்-அப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அராய் மைலேஜாக லிட்டருக்கு 22.5 கி.மீ கிடைக்கும் என்கிறது டட்ஸன். ரெடி கோவின் 800 சிசி-க்கு 22.7 கி.மீ; ஆல்ட்டோ K10-க்கு 24.07 கி.மீ, க்விட் 1.0-க்கு 23.1 கி.மீ. மற்ற போட்டி கார்களுக்கான அராய் மைலேஜை ஒப்பிடும்போது, புதிய ரெடி கோவில் 200 சிசி அதிகமானாலும், மைலேஜ் பெரிதாக அடிபடவில்லை.

போட்டியாளர்களைவிட இதன் விலையை டட்ஸன் நிச்சயம் குறைவாகத்தான் நிர்ணயிக்கும். மூன்று ஆண்டுகளுக்கான இதன் சர்வீஸ் பேக்கேஜும் மிகக் குறைவு. ஒருசில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சிட்டிக்குள் புகுந்து புறப்பட சரியான சாய்ஸ் ரெடி கோ.