Published:Updated:

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

ஃபர்ஸ்ட் லுக் : 2017 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ராகுல் சிவகுரு

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

ஃபர்ஸ்ட் லுக் : 2017 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ராகுல் சிவகுரு

Published:Updated:
புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் காரின் டிசைனை மாற்றுவது எவ்வளவு சவாலானது தெரியுமா? உற்பத்தியில் தனது இறுதிக்காலத்தில் இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் கார் விற்பனையில் டாப்-5 பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்துவரும் காரின் தயாரிப்பை நிறுத்துவது எவ்வளவு கடினமானது தெரியுமா? இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டைத் தோற்றுவித்த சுஸூகி ஸ்விஃப்ட் காரைப் பற்றித்தான் சொல்கிறேன்... முன்னே கேட்ட கேள்விகளுக்கு, சுஸூகியிடமே அதற்கான பதில் இல்லை; உலகளவில் 2004-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹேட்ச்பேக், சுஸூகியின் இமேஜையே மாற்றியது. 2-பாக்ஸ் வடிவமைப்பு, காரின் அகலம், ஷார்ப்பான டிசைன் ஆகியவை மக்களுக்குப் பிடித்துப்போனதால், ஹிட்டடித்தது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்.

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

2010-ல் வெளிவந்த இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட், முந்தைய மாடலைப் போலவே இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் சரியான ஃபார்முலாவைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்டிருந்ததால், அது முதல் தலைமுறை மாடலைவிட விற்பனையில் எகிறியடித்தது. ஸ்விஃப்ட்டின் இந்திய வரலாற்றில், அதிகமான கார்கள் விற்பனையானது, 2017 ஏப்ரலில்தான் (23,802 கார்கள்). இதனால், அந்த மாதத்தில் ஆல்ட்டோவை முந்தி, அதிகம் விற்பனையான கார்களின் டாப்-10 பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது ஸ்விஃப்ட்; ஓர் ஆண்டுக்குள் இதன் உற்பத்தி நிறுத்தப்படப் போகிறது என்ற நிலையிலும், இத்தகைய அசத்தலான விற்பனை, வேறு எந்த காருக்கும் கிடைக்குமா எனத் தெரியவில்லை! ஆகவே, மிகப் பெரிய பொறுப்பைத் தன்வசம் கொண்டிருந்த சுஸூகி, ‘if it ain’t broke, don’t fix it’ என்ற கூற்றுக்கு ஏற்ப, மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட்டை வடிவமைத்திருக்கிறது. உலக அளவில் இந்த ஆண்டின் துவக்கத்தில், இந்த கார் விற்பனைக்கு வந்துவிட்டது; இந்தியாவைப் பொறுத்தமட்டில், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்விஃப்ட் அறிமுகம் செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.  முன்பைவிட, புதிய டிசைன் அம்சங்களால் காரைச் செதுக்கியிருக்கிறது, ஜப்பானிய நிறுவனமான சுஸூகி.

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

டிசைன்

காரின் முன்பக்கத்தில் அதிக மாற்றங்கள் இருக்கின்றன என்றாலும், அவை அனைத்தையும் நாங்கள் புதிய டிசையர் காரிலேயே பார்த்துவிட்டோமே சுஸூகி? எனவே, அந்த காருக்கான டிமாண்டை வைத்துப் பார்க்கும்போது, புதிய ஸ்விஃப்ட் இந்தியாவுக்கு வரும்போது, ஒரு புதிய காருக்கான கவர்ச்சியை அது இழந்துவிடும் என்றே தோன்றுகிறது. அதற்காக ஸ்விஃப்ட்டின் டிசைனை மோசம் எனச் சொல்லவில்லை; அறுங்கோண வடிவ க்ரில், DRL உடனான LED ஹெட்லைட் ஆகியவை ஒன்றுசேரும் விதம் வெகு அழகு. பம்பரின் அடிப்பகுதி மற்றும் கிரில்லை கறுப்பு நிறத்தில் இருக்கும் ப்ளாஸ்டிக் பட்டை பிரிக்கிறது; அதன் இருபுறமும் பனி விளக்குகள் இருக்கின்றன. ஆனால், இது டாப் வேரியன்ட்களில் மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது. ஸ்விஃப்ட்டுக்கே உரித்தான 2-பாக்ஸ் வடிவம், கறுப்பு நிற பில்லர்கள், காரின் அகலம் ஆகியவை இங்கும் தொடர்கின்றன. மேலும், முன்பைவிட அதிக வீல்பேஸ் மற்றும் பெரிய 16 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை, காருக்கு கெத்தான தோற்றத்தைத் தருகின்றன. பக்கவாட்டில் இருக்கும் பாடி லைன்கள், டெயில் லைட்டுடன் நேர்த்தியாக இணைகின்றன. ஆனால், இது பெலினோவில் இருந்து பொருத்தியதுபோல இருக்கிறது. செவர்லேவின் பீட் மற்றும் மஹிந்திராவின் KUV1OO ஆகிய ஹேட்ச்பேக்குகளைத் தொடர்ந்து, C-பில்லரில் பின்பக்கக் கதவுகளுக்கான கைப்பிடிகளைக் கொண்டிருக்கிறது ஸ்விஃப்ட். காருக்கு ஸ்போர்ட்டியான உணர்வைக் கொடுப்பதற்காக சுஸூகி இதைச் செய்திருந்தாலும், அது பிராக்டிக்கலாக இல்லை என்பதே உண்மை. ஆனால், இதனால் Floating Roof போன்ற லுக் கிடைத்துவிடுவது ஆறுதல்.

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?
புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

கேபின்

ஸ்விஃப்ட்டில் குறையாகச் சொல்லப்பட்ட பூட் ஸ்பேஸை, ஓரளவுக்கு இதில் சரிசெய்திருக்கிறது சுஸூகி. இன்னும் சொல்லப்போனால், ஸ்விஃப்ட்டின் குறைவான பூட் ஸ்பேஸ்தான், பலரை டிசையர் காரை வாங்கத் தூண்டியது எனலாம். எனவே, முந்தைய மாடலில் 204 லிட்டர் பூட் ஸ்பேஸ் மட்டுமே இருந்தது என்றால், புதிய மாடலில் 265 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது. ஆனால், பூட்டின் வாய்ப்பகுதி உயரமாக இருப்பது நெருடல். பின்பக்க இருக்கைகளுக்கு 60:40 ஸ்பிளிட் வசதி இருப்பதுடன், உறுதியான பார்சல் டிரேவும் வழங்கப்பட்டிருக்கிறது. முன்பைவிட 20மிமீ கூடுதல் வீல்பேஸ் கிடைத்திருப்பதால், பின்பக்க இருக்கையில் இடவசதி அதிகரித்திருக்கிறது. புதிய ஸ்விஃப்ட்டின் அகலமும், முந்தைய மாடலைவிட 40மிமீ அதிகமாக இருந்தாலும், பின்பக்க இருக்கையில் மூன்று பேருக்கான இடம் இல்லை என்பது  மைனஸ். அதேபோல, ஹெட்ரூமிலும் முன்னேற்றம் தெரிகிறது. ஆனால், தடிமனான சி-பில்லர், கறுப்பு நிறத்தில் இருக்கும் Quarter க்ளாஸ் மற்றும் கேபின் ஆகியவை ஒன்றுசேரும்போது, பின்பக்க இருக்கை இருட்டாகத் தெரிகிறது. ஓட்டுநர்களுக்குப் பிடித்தமான முன்பக்க இருக்கைகள் தாழ்வாக இருந்தாலும், உயரம் குறைவானவர்களுக்கும் வெளிச்சாலை தெளிவாகத் தெரியும்படி இருக்கிறது. மேலும் முன்பைவிட இருக்கைகளின் சப்போர்ட் மற்றும் சொகுசுத்தன்மையும் அதிகரித்திருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஸ்விஃப்ட் அறிமுகமாகும்போது, இருக்கைகளில் வித்தியாசமான ஃபேப்ரிக் மற்றும் குஷனிங் அளவுகள் இருக்கும்.

பெரிய டோர் பாக்கெட் மற்றும் நடுப்புறத்தில் ஆழமான CubbyHole என ஸ்டோரேஜ் ஸ்பேஸிலும் முன்னேற்றம் இருக்கிறது. இவையெல்லாம் ஒன்று சேரும்போது, பெலினோ மற்றும் எலீட் i20-காருக்கு நிகரான இடவசதி, புதிய ஸ்விஃப்ட்டில் கிடைக்கிறது. ஆனால், காரின் கேபின், அந்த கார்களைப் போல பிரீமியமாக இல்லை. ஏனெனில், முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, கேபின் தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஹூண்டாய் போல, தரமான மெட்டீரியல்களால் கேபினை வடிவமைக்க சுஸூகி விரும்பவில்லைபோலும். கேபின் முழுக்க பளபளப்பான இறுக்கமான வகை பிளாஸ்டிக்குகளே வியாபித்திருப்பதால், ‘ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக்கில்தான் இருக்கிறோமா?’ என்ற சந்தேகம் எழுகிறது. இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச மாடலில் இருக்கும் ஸ்டைலான கிளைமேட் கன்ட்ரோல் நாப் மற்றும் TFT டிஸ்ப்ளே உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இருந்தாலும், இவை இந்திய மாடலில் இருக்குமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால், இந்த காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய டிசையரில், வழக்கமான டிசைனில் இருக்கும் நாப்கள் மற்றும் Dot Matrix ஸ்கிரீன் உடனான சிம்பிளான டயல்கள்தான் இருந்தன. ஆனால், வட்ட வடிவ ஏ.சி வென்ட்கள் மற்றும் ஃப்ளாட் ஃபாட்டம் ஸ்டீயரிங் வீல் ஆகியவை, கேபினுக்கு ஸ்போர்ட்டியான உணர்வைத் தருகின்றன.

கட்டுமானம்

புதிய டிசையரைப் போலவே, புதிய ஸ்விஃப்ட்டும் Heartect ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகிறது. முன்பைவிட காரின் சேஸி நீளமாகவும் - அகலமாகவும் - திடமாகவும் இருந்தாலும், புதிய ஸ்விஃப்ட்டின் எடை 40 கிலோ குறைந்திருக்கிறது. இதற்கு இந்த காரின் சேஸியில் பயன்படுத்தப்பட்டுள்ள Hollow-வான பாகங்களே காரணம். இதனால் கட்டுமானத்தரம் பாதிக்குமா என்ற கேள்விக்கு, சுஸூகி தக்க பதில் வைத்திருக்கிறது. சேஸியின் முக்கிய இடங்களில் உறுதித்தன்மை அதிகரித்திருப்பதால், முந்தைய மாடலைவிடப் புதிய கார், க்ராஷ் டெஸ்ட்டில் பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கூறியுள்ளது. அது ஓரளவுக்கு உண்மை. ஏனெனில், தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட், க்ராஷ் டெஸ்ட்டில் Zero ஸ்டார் ரேட்டிங்தான் வாங்கியது. இதுவே, புதிய ஸ்விஃப்ட் க்ராஷ் டெஸ்ட்டில் 3 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியிருக்கிறது.

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

1.2 லிட்டர் K12 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் என முந்தைய மாடலில் இருந்த அதே இன்ஜின்கள்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் 111bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனையாகிறது என்றாலும், அது உடனடியாக இந்தியாவுக்கு வருவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால், நாம் இங்கு டெஸ்ட் செய்திருக்கும் 1.2 லிட்டர் DualJet பெட்ரோல் இன்ஜின் - AllGrip - SHVS ஆகியவை இருக்கும் மாடல், வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகும். இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், ஹோண்டாவின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைவிட சிறப்பான ஒன்று என்பது அறிந்ததே. இது நன்கு ரெவ் ஆவதால், நெரிசலான நகரச்சாலை அல்லது அகலமான நெடுஞ்சாலை என எங்கே பயணித்தாலும், காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆனால், C-பில்லர் பார்வையை மறைப்பதால், பார்க்கிங்கின் போது கவனம் தேவை! மிட் ரேஞ்ச் கொஞ்சம் டல்லாக இருந்தாலும், 4,000 ஆர்பிஎம் முதல் 6,300 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி அருமையாக இருக்கிறது. அதிக வேகங்களில் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்டாலும், அது ரசிக்கும்படியே இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸும், பயன்படுத்த துல்லியமாகவே இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் ஸ்விஃப்ட்டில், டிசையரில் இருக்கும் அதே பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள்தான் இருக்கும். எனவே, இந்த வெளிநாட்டு மாடல் பவர்ஃபுல்லாக இருந்தாலும், இந்திய மாடலில் AllGrip - SHVS போன்றவை இருக்காது என்பதால், அதைவிட எடை குறைந்துவிடும் என்பதால், பவர் குறைபாடு ஒரு பொருட்டாக இருக்காது எனலாம்.

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

ஓட்டுதல் அனுபவம்

புதிய ஸ்விஃப்ட் அளவில் வளர்ந்திருந்தாலும், அதன் ஓட்டுதலில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஸ்விஃப்ட்டின் ஐரோப்பிய மற்றும் கொரிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, கார் பெரிய மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும்போது, சஸ்பென்ஷன் அவற்றைச் சிறப்பாக உள்வாங்காததால், அவற்றால் ஏற்படும் அதிர்வுகளை காருக்குள்ளே உணர முடிகிறது. இதில் இடம்பெற்றுள்ள 16 இன்ச் டயர்களின் (இந்திய மாடலில் 15 இன்ச் வீல்களே இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம்) ரோடு க்ரிப் அருமையாக இருப்பதால், திருப்பங்களில் காரை நம்பிக்கையாகச் செலுத்த முடிகிறது. தவிர, எந்த வேகத்தில் சென்றாலும், கார் நிலையாக இருப்பது ப்ளஸ். புதிய ஸ்விஃப்ட்டின் அதிக வீல்பேஸ், இதற்குத் துணை நிற்கிறது. ஆனால், பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய காரின் கையாளுமை அவ்வுளவு ஈர்க்கவில்லை. இதற்கு காரின் உயிரில்லாத ஸ்டீயரிங்தான் காரணம். இதனாலேயே நாம் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, தொடர்ச்சியாக ஸ்டீயரிங்கில் கவனத்தைச் செலுத்துவது அவசியமாகிறது.

புத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா? சாதிக்குமா?

முதல் தீர்ப்பு

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, பெரிதாகவும், ஸ்டைலிஷ் ஆகவும் மாறியிருக்கும் ஸ்விஃப்ட், எப்படி இருக்கிறது? முன்பைவிடப் பெரிய பூட் மற்றும் அதிக இடவசதி என கார் பிராக்டிக்கலாக மாறியிருக்கிறது. கார்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், இது வரவேற்கத்தக்க மாற்றமே! ஆனால், ஒரு ஃபேமிலி காராக ஸ்விஃப்ட் எப்போதுமே அறியப்படவில்லை. தாமாகவே காரை ஓட்டும் நபர்களுக்கான பக்கா காராக  பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் ஸ்விஃப்ட், பழைய காரைவிட எடை குறைந்திருப்பதால் வேகமாக இருந்தாலும், அதில் இருந்த அசத்தலான ஓட்டுதல் மிஸ்ஸிங்! அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாக உள்ள இந்த கார், வழக்கமான மாருதி ஷோரூம்களில்தான் விற்பனை செய்யப்படும் என்பதால், கச்சிதமான விலையை எதிர்பார்க்கலாம். எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட்டின் அனுபவம் இதில் கிடைக்காவிட்டாலும், விற்பனையில் அதைவிட ஏறுமுகத்தில் செல்வதற்கான வழி தெரிகிறது.