Published:Updated:

மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!
பிரீமியம் ஸ்டோரி
மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் : ரெனோ க்விட் க்ளைம்பர் தமிழ் : படங்கள்: வீ.சிவக்குமார்

மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் : ரெனோ க்விட் க்ளைம்பர் தமிழ் : படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!
பிரீமியம் ஸ்டோரி
மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

ள்ளலாக இருந்தால்தான் பாரி; வீரனாக இருந்தால்தான் ஓரி - அப்படியென்றால் ‘க்ளைம்பர்’ என்ற பெயர்கொண்ட கார் எப்படி இருக்க வேண்டும்? ‘‘க்விட் க்ளைம்பர் புக் பண்ணியிருக்கேன் அண்ணே... க்ளைம்பர்னு பேர் இருக்கே, மலை ஏறுமானு செக் பண்ணணும், வர்றீங்களா?’’ என்று வாய்ஸ் ஸ்நாப் பண்ணியிருந்தார், திருத்தங்கல்லைச் சேர்ந்த விமல். இவரின் ரெனோ க்விட் க்ளைம்பர் காருக்கு நம்பர்கூட இன்னும் வரவில்லை. வாங்கிய ஐந்தாவது நாளிலேயே கிரேட் எஸ்கேப் கிளம்ப வேண்டும் என அடம்பிடித்தார்.

``மொத்தமே 200 கி.மீ.தான் ஓட்டியிருக்கேன். கொடைக்கானல் வரைக்கும் க்விட் க்ளைம்பர் க்ளைம்ப் ஆகுமானு பார்த்திடலாமா?’’ என்று நம்மைத் திருத்தங்கல்லுக்கு வரவைத்துவிட்டார்.

க்விட்டின் அடுத்த வெர்ஷன்தான் க்விட் க்ளைம்பர். ஆரஞ்சு, நீலம் எனச் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து,  ஆங்காங்கே க்ளைம்பர் என்னும் ஸ்டிக்கர் வேலைகள் செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான். மற்றபடி அதே 1.0 லிட்டர், 68bhp பவர், 9.1kgm டார்க்கொண்ட மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். இதில் RXT வேரியன்ட் மட்டும்தான். ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உண்டு. ஆனால், விமலின் க்ளைம்பர், மேனுவல்.

மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

கிளட்ச் மிதித்து கியர் போட்டதும் உறுமியபடி கிளம்பியது க்ளைம்பர். பெட்ரோல் கார் என்றால் சத்தியமாக நம்ப மாட்டார்கள்... அத்தனை இரைச்சல். ஹைவேஸில் கிட்டத்தட்ட 100 கி.மீ வரை பறக்கிறது க்விட். அதேநேரம், எடை குறைந்த கார் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், இதுதான் டிராஃபிக்கில் புகுந்து புறப்பட செம ஜாலியாக இருக்கிறது. ‘‘என் கார் 100 கி.மீ வேகத்தில் எல்லாம் போகுமா?’’ என்று வியந்தார் விமல். ஏழு இன்ச் டச் ஸ்கிரீன்தான் க்விட்டின் அழகு. ‘‘ஆனா, இதுல நேவிகேஷன் செட் பண்ணிப்போறதுக்குள்ள, போற இடமே வந்துடுது!’’ என்று குறைபட்டார். நிஜம்தான்; பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும்தான் அடையாளம் காட்டுகிறது இந்த GPS. போனில் கொடைக்கானலுக்கு நேவிகேட் செய்துவிட்டுக் கிளம்பினோம்.

வத்தலக்குண்டில் புகைப்படக் கலைஞரை ஏற்றிக்கொண்டு, மண்பானைச் சமையலை ருசித்துவிட்டு க்ளைம்பர் கிளம்பியது. மலைச்சாலை தொடங்கும்போதே வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது க்ளைம்பர். பெட்ரோல் இன்ஜினில் மந்தம்? 2,000 ஆர்.பி.எம் வரை திணறுகிறது. புது கார் என்பதால், ‘நம்பர் பிளேட் எங்கே?’ என செக் செய்தார்கள். டெம்பரரி நம்பரைக் காட்டி விஷயத்தைச் சொன்னதும், ‘‘அதுக்கில்லை சார், புது வண்டி இங்கே நிறைய திருட்டுப்போகுது. இதுவரைக்கும் அஞ்சு கார்கள் காணாமப்போயிருக்கு!’’ என்றார் காவல் துறை அதிகாரி.

மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

கொடைக்கானலை நெருங்கியதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டது. கண்ணாடியை இறக்கினால்... செம குளிர். மலைச்சாலைகளில் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, கதவை மூடி ஏ.சி-யை ஃபுல் ஸ்விங்கில் வைத்துவிட்டோ பயணிப்பதைவிட, கண்ணாடியை இறக்கிவிட்டுப் பயணித்துப் பாருங்கள். ‘‘செம சில்னெஸ். சின்ன வயசுல வந்திருக்கேன் கொடைக்கானலுக்கு. மோ.வி-க்கு தேங்க்ஸ்’’ என்றார் விமல். ஊட்டி மலைச் சாலைபோல் ஏகப்பட்ட ஹேர்பின் பெண்டுகள் இல்லை. இருந்தாலும் சின்னச் சின்ன ஏற்றங்களில்கூட க்ளைம்ப் பண்ண முடியாமல் திணறியது க்ளைம்பர்.

கொடைக்கானல் டூரில் முதலில் வருவது ‘டம்டம்’ பாறை. வாகனம் ஓட்டிக் களைத்து வருபவர்களுக்கு, இந்த வியூ பாயின்ட் செம ரெஃப்ரெஷ்மென்ட். பழநிக்குச் செல்லும் வழியில் முருகக் கடவுள் இங்குதான் தங்கிச் செல்வது வழக்கமாம். இந்தப் பாறையில் நின்று தூரத்தில் தெரியும் எலிவால் அருவியைப் பார்க்கலாம். எலியின் வால்போல் ஒல்லியாக விழுவதால், இதற்கு ‘ரேட் டெய்ல் ஃபால்ஸ்’ என்று பெயர். ஆனால், எலிவால் அருவி காலியாக இருந்தது. ``அக்டோபரில் செம சீஸன்’’ என்றார்கள். மஞ்சளாற்று அணையின் வியூ பாயின்ட்டும் இதுதான்.

‘டம் டம்’ பாறையிலிருந்து கொடைக்கானல் மெயினுக்கு இன்னும் 40 கி.மீ தூரம் காட்டியது GPS. மலை ஏற்றம் இன்னும் அதிகமானது. மேலேறும் வாகனங்களுக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் மலைச் சாலையின் விதி. ஆங்காங்கே பலகைகள் இருந்தும் ‘சர் சர்’ என வந்த வாகனங்களால் நட்ட நடுவில் திணறியது க்ளைம்பர். எதிரே வாகனங்கள் வரவில்லையென்றால், க்ளைம்பருக்கு மகிழ்ச்சி! 2,000 ஆர்.பி.எம்-க்கு மேல் ஒரே மூச்சில் மேலேறலாம்.

மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

சில்வர் ஃபால்ஸ்... அதாவது வெள்ளி அருவி. கொடைக்கானலுக்குச் செல்பவர்களின் முதல் ஜாலி ஸ்பாட். அங்கிருந்து வருபவர்களுக்குக் கடைசி ஸ்பாட். வெள்ளி அருவியில் மட்டுமல்ல, கொடைக்கானல் முழுவதும் ஆன் தி ஸ்பாட்டிலேயே புகைப்படம் எடுத்து, ஐந்து நிமிடத்துக்குள் ஃப்ரேம் செய்தும் தருகிறார்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,900 அடி உயரத்தில் இருக்கிறது. குற்றாலம் அளவெல்லாம் ஒப்பிட முடியாது. ஆனால், பெயருக்கு ஏற்றபடியே வெள்ளியை உருக்கிக் கொட்டியதுபோல் இருந்தது. சூடாய் மிளகாய் பஜ்ஜி, கட்டஞ்சாயா சாப்பிட்டுக்கொண்டே வெள்ளி அருவிச் சாரலில் நனைந்து, செல்ஃபி எடுத்துத் தள்ளிவிட்டார் விமல்.

கொடைக்கானல் செல்பவர்கள் தவறவிடும் முக்கியமான விஷயம் - சிட்டி வியூ. சில்வர் ஃபால்ஸிலிருந்து நேராகச் செல்லும்போது, தடாலென இறங்குகிறது ஒரு பாதை. ‘ஏதோ ஒரு கிராமத்துக்குப் போகும் பாதைபோல’ என்று பலர் இந்த வழியில் இறங்காமல் மலையேறிவிடுகிறார்கள். ‘‘சிட்டி வியூ செம வியூ பாயின்ட். நேரா போனீங்கன்னா நாலு கி.மீதான். ஆனா, ரோடு நல்லா இருக்காது’’ என்று உள்ளூர்வாசி ஒருவர் வழிகாட்டினார். சொன்னதுபோல ரோடு சரியில்லாமல் இல்லை; ரோடே இல்லை. இந்த நேரத்தில்தான் க்விட் க்ளைம்பரின் சாஃப்ட் சஸ்பென்ஷனுக்கு ஒரு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் போட்டே ஆக வேண்டும். 180 மிமீதான் கிரவுண்ட் க்ளியரன்ஸ். ஆனால், ‘பெரிய டஸ்ட்டர்ல போறோமோ’ எனச் சந்தேகிக்கும் அளவுக்கு அத்தனை அழகாகச் சமாளிக்கிறது இதன் பேலன்ஸ்டு சஸ்பென்ஷன். இதை `மினி டஸ்ட்டர்’ என்றுதான் சொல்கிறார்கள். நிச்சயம் அதற்குத் தகுந்ததுதான் க்விட் க்ளைம்பர். மலை ஏற்றத்தில் கிடைத்த ஏமாற்றம், மோசமான சாலைகளில் காணாமல்போனது.

சுற்றிலும் பேரிக்காய் மரங்கள். டெலஸ்கோப்பே தேவையில்லை - உட்கார்ந்த இடத்திலிருந்தே திண்டுக்கல் முதல் வத்தலக்குண்டு வரை அத்தனையும் குட்டி குட்டியாகத் தெரிகின்றன. ‘‘மதுரையில் இருந்து வர்றோம்ணே... மாசத்துக்கு ஒரு கொடைக்கானல் ட்ரிப் அடிச்சிடுவோம். உங்களுக்கு எப்படி இந்த இடம் தெரியும்?’’ என்று ஐந்து பைக்குகளில் வந்திருந்த 10 கல்லூரி இளவட்டங்கள் கைகொடுத்தார்கள்.
மறுபடியும் க்ளைம்பரில் ஆஃப் ரோடு செய்து கொடைக்கானல் பஸ் நிலையம் வந்தபோது இருள ஆரம்பித்தது... இன்னும் குளிர ஆரம்பித்தது.

கொடைக்கானலில் தங்கும் விடுதிகள்தான் பலமும் பலவீனமும். சீஸன் டைமில் என்றால், தண்டம் அழ வேண்டும். இதுவே சீஸன் இல்லாத நேரங்களில் பாதி விலைக்குக்கூட காட்டேஜ்கள் கிடைக்கும். நாம் ஏற்கெனவே புக் செய்திருந்ததால், பிரச்னை இல்லை. ஹோட்டல்களையும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்பெல்லாம் வெஜ், நான்-வெஜ் ஹோட்டல்களைத்தான் தேடிப் போவோம். இப்போது GST, Non-GST ஹோட்டல்களைத் தேடிப் போகவேண்டியிருந்தது. மறுநாள் காலை... அஸ்ட்டோரியா எனும் சைவ உணவகத்தில், 350 ரூபாய்க்கு 80 ரூபாய் GST பில் போட்டுத் தாளித்தார்கள்.

மனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி!

கொடைக்கானலில் கார் இல்லாமல் வருபவர்களுக்கு, வாடகை கார்கள் கிடைக்கும். ஒரு நாளைக்கு 1,500 முதல் 2,500 வரை வசூலிப்பார்கள். ‘‘அண்ணே... 15 இடம்ணே.. சுத்திப் பார்க்கலாம்ணே...’’ என்று ஸ்கூல் வாண்டுகள்கூட கைடு அவதாரம் எடுத்து வழிமறித்தார்கள். கைடுகள் முதலில் கூட்டிச் செல்லும் இடம் கோக்கர்ஸ் வாக். கோக்கர் எனும் பிரிட்டிஷ் தளபதி இந்த வழியாக நடந்து போய்க் கண்டுபிடித்ததால், இது ‘கோக்கர்ஸ் வாக்’ என்று பெயராம். இங்கிருக்கும் டெலஸ்கோப் வழியாக வைகை அணை, பெரியகுளம் எல்லாம் கண்ணுக்குப் பக்கத்தில் தெரிகின்றன. இங்கும் ஆன் தி ஸ்பாட் போட்டோகிராபி உண்டு.
கொஞ்ச தூரம் தள்ளி, பிலோமென் சர்ச். 100 ஆண்டுக்கால பழைமையான சர்ச். இது சுண்ணாம்பிலும் செங்கல்லிலும் கட்டப்பட்டும், இன்றும் அதே பொலிவோடு இருக்கிறது. அடுத்து அப்பர் லேக் வியூ. அதாவது, கொடைக்கானல் ஏரியின் மொத்த அழகையும் டாப் ஆங்கிளில் தரிசிக்கும் வியூ பாயின்ட். கிட்டத்தட்ட ஒன்பது கி.மீ சுற்றளவுகொண்ட ஏரியின் அழகு செல்ஃபி எடுக்கத் தூண்டியது. அப்படியே பைன் ஃபாரஸ்ட்டில் போட்டோ ஷூட் முடித்துவிட்டு, பில்லர் ராக் வழியாக `குணா’ குகைக்குப் போகத் திட்டம்.

திரும்பவும் வந்த வழியே போனால், `குணா’ குகை. கமல்ஹாசனின் ‘குணா’ படம் எடுத்த பிறகுதான் இதற்கு ‘குணா குகை’ என்றே பெயர் வந்தது. ஐந்து ரூபாய் டிக்கெட் எடுத்துவிட்டு, உள்ளே நடந்து போவது... செம த்ரில்லிங். அடுத்து பில்லர் ராக். அதாவது, தூண் போன்ற பாறைகள். பெரும்பாலும் பில்லர் ராக்கைப் பார்ப்பது அரிது என்றார்கள். பகலில்கூட பனி மூடியிருப்பதால், பில்லர் ராக்கைப் பார்ப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். பனி விலகும் வரை காத்திருந்து, வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தார் நமது புகைப்பட நிபுணர்.

கொடைக்கானலின் மோஸ்ட் வான்ட்டட் ஸ்பாட் - டால்ஃபின் நோஸ். அந்த மலைப்பாதையைக் கடந்தால் டால்ஃபினின் மூக்குபோன்ற பாறை வருகிறது. இதில் அமர்ந்து போட்டோ எடுக்கும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம்கூட இல்லை; அதுக்கும் மேலதான். சும்மாவா பின்னே... பல ஆயிரம் அடி இருக்கும். செல்லும் வழியில் சரிவான மலைப்பாதையில் உங்கள் செருப்பு, ஷூக்களில் கடக்க முடியாமல் வழுக்கும் அபாயம் நேர்ந்தால், ஒரு சூப்பர் ஆப்ஷன் உண்டு. இங்கு வழுக்காத காலணிகளை வாடகைக்குக் கொடுக்கிறார்கள். 15 ரூபாய். வாடகைச் செருப்பில், சாலையை கிச்செனப் பிடித்து ஈஸியாக நடந்துகொண்டிருந்தார்கள் சிலர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் யானைகள் தென்படாது என்றார்கள். ஒரு காலத்தில் சிங்கம், புலி வாழ்ந்த குகைகள் எனச் சிலவற்றைக் காட்டினார்கள். மற்றபடி காட்டெருமைகள், மான்கள் அதிகம் என்றார்கள். செல்லும் வழியில் காட்டு அணில்கள் மட்டும் ஹாய் சொல்லின. வழிநெடுக வானரங்கள் வாகனங்களுக்கு டாட்டா காட்டுவதுபோல், இப்போது காட்டு அணில்களும் மனித வாடைக்குப் பழகிவிட்டனபோல. கீரிப்பிள்ளை அளவில் இருந்த படா காட்டு அணில்கள், ஹாயாக பயமே இல்லாமல் மலைப்பாதைகளில் உலவிக்கொண்டிருந்தன.

ஊட்டிக்கு கேரட் என்றால், கொடைக்கானலுக்கு மரத்தக்காளி. சாதாரணத் தக்காளிபோலவே இருக்கும் இந்தத் தக்காளியின் ஸ்பெஷல் - இது ஐந்து வகையான சுவைகொண்டது. இளநீரை வெட்டுவதுபோல் மேல் பாகத்தை வெட்டி, உறிஞ்சவேண்டியதுதான். இனிப்பு, புளிப்பு... அப்புறம் துவர்ப்பு, கசப்பு என வரிசையாக, சுவைப்பவர்களின் முகம் மாறிக்கொண்டே இருக்கும். சாதா தக்காளியே ஆப்பிள் விலைக்கு விற்கும்போது, மரத்தக்காளியின் விலை சாதாரணமாகவா இருக்கும். ஒன்று 10 ரூபாய் என்றார்கள். கொடைக்கானல்வாசிகள் வீட்டில் மரத்தக்காளிச் சட்னி பெரும்பாலும் காலை டிபனில் இருக்குமாம்.

இது தவிர, கொடைக்கானலில் கோயில்கள், ஏரி படகுச் சவாரி, குதிரைச் சவாரி, வாடகை சைக்கிள் சவாரி என அனுபவிக்க, எக்கச்சக்க அம்சங்கள் உண்டு. நேரமின்மையால், மனசே இல்லாமல் போட்டிங், ஹார்ஸ் ரைடிங் போன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட்டன.

ஏறுவதற்குத்தான் சிரமப்பட்டது க்ளைம்பர்; இறங்கும்போது செம பவர். மூணாவது கியரைக் குறைக்கவில்லை. வழி நெடுக வானரங்கள், கிடுகிடு பள்ளங்கள், வெண்முகில் கூட்டங்கள், வண்ண வண்ணப் பூக்கூட்டங்கள், மேனி உரசும் தென்றல், சில்வர் ஃபால்ஸ், டம் டம் பாறை - மீண்டும் அதே பயணம். வீட்டுக்குப் போனதும், ‘மலைகளின் இளவரசி மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை’ என்று வாட்ஸ்அப்பில் கொடைக்கானல் செல்ஃபியை அப்டேட் செய்திருந்தார் விமல்!

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!