Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

மாருதி சுஸூகி ஆல்ட்டோ K10 காரை வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு அந்த கார் குறித்த விவரங்களைக் கூறினால் நன்றாக இருக்கும்.

- மனோகரன், பொள்ளாச்சி.


இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களில், எப்போதுமே முதல் இடம் பிடிப்பது ஆல்ட்டோதான்! முதன்முறையாக கார் வாங்குபவர்களை மனதில் வைத்து, 3 - 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இது தயாரிக்கப்பட்டிருந்தாலும், ‘800சிசி மாடலைவிட இன்னும் கொஞ்சம் பவர் வேண்டும்’ என்பவர்களுக்கான கார்தான் ஆல்ட்டோ K10. இது, வழக்கமான ஆல்ட்டோவைவிடச் சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதுடன், கேபின் டிசைனும் ஸ்டைலாக இருக்கிறது. பட்ஜெட் காருக்கே உரித்தான வசதிகள்தான் இதில் இருக்கின்றன என்றாலும், பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படாதது மைனஸ். மேலும், இதன் போட்டி காரான க்விட் உடன் ஒப்பிடும்போது, இடவசதி மற்றும் சிறப்பம்சங்களில் மிகவும் பின்தங்குகிறது ஆல்ட்டோ K10. இதில், AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இருக்கிறது. பட்ஜெட் விலையில், நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற காம்பேக்ட் ஆட்டோமேட்டிக் கார் இது.

மோட்டார் கிளினிக்

எனது பட்ஜெட் 3 லட்ச ரூபாய். யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய செவர்லே ஆப்ட்ரா (2009) மற்றும் ஃபோக்ஸ்வாகன் போலோ (டீசல்) கார்களில் எந்த காரை வாங்கலாம்?

- ஹேமா தேவி, நாகப்பட்டினம்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள கார்களில், செவர்லே ஆப்ட்ரா காரைத் தவித்துவிடுவது நலம். அது பவர்ஃபுல்லான செடான் காராக இருந்தாலும், ஏற்கெனவே தயாரிப்பு நிறுத்தப்பட்ட மாடல் என்பதால், பின்னாளில் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். மேலும், இதன் ரீ-சேல் மதிப்பும் மிகக் குறைவு.  ‘டிசம்பர் 2017-க்குப் பிறகு, இந்தியாவில் கார்களை விற்பனை செய்யப் போவதில்லை’ என்ற முடிவில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. உங்களது மற்றொரு ஆப்ஷனான போலோவின் டீசல் மாடல், நல்ல மைலேஜைத் தந்தாலும், சின்ன 1.2 லிட்டர் டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் சுமார் ரகம்தான். மேலும், இந்த காரின் பராமரிப்புச் செலவுகளும், அதன் போட்டியாளர்களைவிட அதிகம். உங்கள் பட்ஜெட்டை நீங்கள் சற்று அதிகரித்தால், பெரிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட போலோவை நீங்கள் பரிசீலிக்கலாம்.

மஹிந்திராவின் புதிய TUV300 மாடல், எப்போது விற்பனைக்கு வரும்?

-ராஜூ, கும்பகோணம்.


எக்கோஸ்போர்ட், விட்டாரா பிரெஸ்ஸா போன்ற காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, மஹிந்திரா களமிறக்கியதுதான் TUV300. லேடர் ஃப்ரேம் கட்டுமானம், 7 இருக்கைகள், டிரைவிங் மோடுகள், டூயல் டோன் கலர் ஆப்ஷன் என இந்த காரில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தாலும், அந்த நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கார் விற்பனையாகவில்லை. எனவே, க்ரெட்டா, டஸ்ட்டர், S-க்ராஸ் ஆகிய கார்களின் சைஸுக்கு, தற்போதைய TUV300 காரின் அளவுகளை மாற்றி, TUV500 என்ற புனைபெயரில் அதனை டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது மஹிந்திரா. தற்போதைய TUV300 காரின் கடைசி வரிசை இருக்கைகள், 2 பேர் உட்காரக்கூடிய Jump Seat வகையில் இருக்கின்றன என்றால், TUV500-ல் 3 பேர் உட்காரக்கூடிய வழக்கமான Bench சீட் பொருத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதில் ஸ்கார்ப்பியோவில் இருக்கும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான சாத்தியம் உண்டு. 2018-ல் அறிமுகமாகவுள்ள TUV500, எர்டிகா மற்றும் லாஜி போன்ற எம்பிவிகளுக்குப் போட்டியாக பொசிஷன் செய்யப்படலாம்.

மோட்டார் கிளினிக்

டாடா டியாகோ டீசல் அல்லது ரெனோ க்விட்டின் AMT மாடலை வாங்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன். 6 லட்சத்துக்குக் கிடைக்கும் இந்த கார்களில் எது பெஸ்ட்?

- தில்லிபாபு, இமெயில்.


நீங்கள் மாதத்துக்குச் சுமார் 1,500 - 2,000 கி.மீ அளவுக்குக் காரைப் பயன்படுத்துவீர்கள் என்றால், டீசல் காரை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். ஆனால், முதன்முறையாக கார் வாங்கப் போகிறீர்கள் என்றால், பெட்ரோல் கார் வாங்குவதுதான் சரி. நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மாடல்களும் உங்களது பட்ஜெட்டிலேயே கிடைக்கின்றன என்பதுடன், பெட்ரோல் மாடலில் AMT ஆப்ஷனும் இருக்கிறது. பெர்ஃபாமென்ஸ் - மைலேஜில் க்விட் வென்றாலும், வசதிகளில் ஸ்கோர் செய்வது டியாகோதான். ஓட்டுதல் அனுபவத்தில் இரண்டுமே சமமாக இருக்கின்றன. ஆனால், ஒரு பெரிய காரை ஓட்டுவது போன்ற அனுபவத்தைத் தருவது டியாகோதான். இரண்டு கார்களும் மாடர்ன்னாக டிசைன் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு மினி டஸ்ட்டர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது க்விட். இரண்டு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு, உங்களுக்குப் பொருத்தமான காரைத் தேர்வு செய்யுங்கள்.

மோட்டார் கிளினிக்

1.8 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் பவர்ஃபுல் பைக் எது? எனக்கு பஜாஜின் டொமினார் மிகவும் பிடித்திருக்கிறது. அதன் பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் எப்படி? எனது தேர்வு சரியானதா? வேறு ஏதேனும் மாடல் இருக்கிறதா?

- கெபின், கன்னியாகுமரி.


உங்கள் தேர்வு சரியானதே. உங்கள் பட்ஜெட்டில், டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான மாடல் கிடைப்பதால், அதனை வாங்குவதே சிறந்தது. ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 பைக்குக்குப் போட்டியாக பொசிஷன் செய்யப்பட்ட டொமினார், அசத்தலான டிசைன் - அதிக வசதிகள் - அட்டகாசமான பெர்ஃபாமென்ஸ் - அற்புதமான கையாளுமை என அசத்துகிறது. ஆனால், மைலேஜில் வெல்வது கிளாசிக்தான். மேலும், அந்த பைக்கின் விலை, டொமினாரைவிடக் குறைவு; ஆனால், பராமரிப்புச் செலவுகள் அதிகம். ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஃப்யூல் கேஜ் போன்ற சில அடிப்படையான வசதிகள்கூட இல்லை என்பதுடன், அதிர்வும் அதிகமாக இருக்கிறது. முன்னே சொன்ன இரண்டு பைக்குகளைவிடக் குறைவான விலையில் கிடைக்கும் யமஹாவின் FZ25 பைக்கையும் நீங்கள் பரிசீலிக்கலாம். இந்த பைக்கின் எடை குறைவு என்பதால், கையாள்வதற்கு எளிதான பைக்காக இருக்கிறது. யமஹா பைக்குகளுக்கே உரித்தான குணங்கள் அதில் இருந்தாலும், அதில் டொமினார் பைக்கைப் போல ஏபிஎஸ்/6-வது கியர் இல்லை என்பது மைனஸ்.