Published:Updated:

பர்ஸ் இல்லா பயணம்!

பர்ஸ் இல்லா பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
பர்ஸ் இல்லா பயணம்!

காசே இல்லாமல் இந்தியாவைச் சுற்றும் அன்ஷ் மிஷ்ரா!அனுபவம் : பயணம்தமிழ்

பர்ஸ் இல்லா பயணம்!

காசே இல்லாமல் இந்தியாவைச் சுற்றும் அன்ஷ் மிஷ்ரா!அனுபவம் : பயணம்தமிழ்

Published:Updated:
பர்ஸ் இல்லா பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
பர்ஸ் இல்லா பயணம்!

ங்களுக்குப் பழக்கமான ஏரியாதான். வாகனம் இல்லை; உங்களால் லிஃப்ட் கேட்டு வீட்டுக்குப் போக முடியுமா? தெரியாதவர்களுக்கு லிஃப்ட் கொடுப்பது சிக்கல்; லிஃப்ட் கிடைப்பது அதைவிடச் சிக்கல். ஆனால், அலஹாபாத்திலிருந்து லிஃப்ட் கேட்டுப் பயணித்தே சென்னைக்கு வந்திருக்கிறார் அன்ஷ் மிஷ்ரா! சொன்னால் நம்புங்கள் - கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல் அவர் கிளம்பி வந்ததுதான் இந்தக் கட்டுரைக்குக் காரணம்!

ரயிலில் முன்பதிவு செய்தோ, ஹோட்டலை புக் செய்துவிட்டோ, திட்டமிட்டுப் பயணப்பட்டதல்ல அன்ஷ் மிஷ்ராவின் பயணம். `எதையுமே ப்ளான் பண்ணிச் செய்யாத’ அசால்ட் பயணம் இது. அன்ஷ் மிஷ்ரா, வீட்டிலிருந்து கிளம்பி (பிப்-3) இன்றோடு 167 நாள்கள் ஆகின்றன. வீடு திரும்ப இன்னும் எத்தனை நாள்கள் ஆகும் எனத் தெரியாது. சென்னையில் ஒரு நண்பர் வீட்டில் தங்கிவிட்டு, அதிகாலையில் கன்னியாகுமரிக்குச் செல்வதற்காக லிஃப்ட் கேட்டுக்கொண்டிருந்தவரை, பைபாஸில் மடக்கிப் பிடித்தோம். போன், லேப்டாப், நான்கைந்து செட் உடைகள், ஷூ, ஒரு டிராவல் பேக், முக்கியமாக கேமரா - இது மட்டும்தான் அன்ஷ் மிஷ்ரா வீட்டிலிருந்து கிளம்பும்போது எடுத்து வந்தவை. அப்படியென்றால் சாப்பாடு?

பர்ஸ் இல்லா பயணம்!

``அதெல்லாம் சொல்ல முடியாது. கிடைச்சதைச் சாப்பிட்டுப்பேன்’’ என்று அசால்ட்டாகச் சொல்கிறார். ஒருவேளை தவ வாழ்க்கை வாழ்கிறாரோ அல்லது ஏதேனும் வேண்டுதலா? இந்தக் கேள்விக்கு அன்ஷ் மிஷ்ராவிடம் பெரிய ஃப்ளாஷ்பேக்கெல்லாம் இல்லை. ‘‘இந்த உலகத்தில் காசுபணம் இல்லாமல் சந்தோஷமாக இருக்க முடியாதா? அதுதான் இந்தப் பயணத்துக்குக் காரணம். இதோ நான் சந்தோஷமாக இருக்கிறேனே!’’ என்று ‘பத்து செகண்ட் கதை’ மாதிரி சட்டென முடித்தார் அன்ஷ். இந்த யோசனைதான், அவரை இவ்வளவு தூரம் பயணிக்கத் தூண்டியிருக்கிறது. பி.எட் படித்து முடித்து, கைநிறையச் சம்பாதித்துக்கொண்டிருந்த அன்ஷ் மிஷ்ரா, இந்த லட்சியப் பயணத்துக்காகவே தன் வேலையைத் துறந்து, இந்தியா முழுவதும் லிஃப்ட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுவரை இரண்டு யூனியன் பிரதேசங்களையும், பத்து மாநிலங்களையும் கடந்து வந்திருக்கிறார். பென்ஸ் முதல் சைக்கிள் வரை அவர் லிஃப்ட் கேட்டு வராத வாகனமே இல்லை. லிஃப்ட் கிடைக்காத பட்சத்தில், நடந்தே பல ஊர்களைக் கடந்திருக்கிறாராம்.

‘‘எனக்கு அதிகமா லிஃப்ட் கொடுத்து உதவியது லாரி டிரைவர்கள்தான். லாரி டிரைவர்களைப் பார்த்தாலே கும்பிட வேண்டும்போல் தோன்றுகிறது. எனக்கு லிஃப்ட் கொடுத்ததற்காகச் சொல்லவில்லை. இந்தியப் பொருளாதாரம், அவர்கள் ஸ்டீயரிங் பிடிப்பதில்தான் இருக்கிறது என்பதை, இந்தப் பயணத்தின் மூலம் நன்கு தெரிந்துகொண்டேன். என் பயணத்தின் பாதி நாள்களில் அவர்கள்தான் எனக்குச் சாப்பாடு கொடுத்து உதவினார்கள்’’ என்று சொல்லும் அன்ஷ் மிஷ்ரா, தங்குவதற்கு எங்கேயும் தேடிப் போக மாட்டாராம். செல்லும் வழியில் கோயில் வாசலிலோ, காடு என்றால் டென்ட் அடித்தோ, பஸ் நிலையங்களிலோ ஓய்வெடுப்பாராம். சமயங்களில் நெடுஞ்சாலை ஓரங்களிலேயே படுத்து உறங்கியும் பயணிக்கிறாராம்.

பயணம் என்றால், சும்மாவே அனுபவங்கள் கொட்டும். பர்ஸ் இல்லாமல் சும்மாவே பயணிக்கும் அன்ஷ் மிஷ்ராவுக்கு அனுபவங்கள் இல்லாமலா இருக்கும்? கர்நாடகக் காட்டுப் பகுதியில் பழங்குடி மக்களுடன் தங்கியது; குஜராத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய டவரில் மூச்சு வாங்கச் சிரமப்பட்டுக் கீழ் இறங்கியது; கொள்ளையர்களிடம் சிக்கி தன்னிடம் பணம் இல்லாததால், அவர்கள் ஏமாந்துபோனது என்று எக்கச்சக்க அனுபவங்களைச் சேகரித்திருக்கிறார். அதிலும் வயநாடு காட்டுக்குள் போலீஸிடம் அவர் சிக்கிய கதை, வெகு சுவாரஸ்யம்.

பர்ஸ் இல்லா பயணம்!

‘‘அடர்ந்த காட்டுப் பகுதியில், செல்ஃபி எடுக்கும் ஸ்டிக்கில் என்னுடைய மொபைல் போனை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென கேரள போலீஸ் என்னைச் சுற்றி வளைத்தது. ‘மரியாதையா துப்பாக்கியைக் கீழே போடு’ என்று மொத்த டீமும் என்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். அப்போதுதான் புரிந்தது, நான் போனில் செல்ஃபி எடுத்தது அவர்களுக்குத் துப்பாக்கிபோல் தெரிந்திருப்பது. நான் பிரெஞ்சு பியர்டு வேறு வைத்திருந்தேன். என்னைத் தீவிரவாதி என்று நினைத்து, வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள். பிறகு, வீட்டுக்குத் தகவல் சொல்லி... அம்மாவிடம் பேசி... என் லட்சியப் பயணத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு... அப்புறம் என்ன... எனக்குச் சாப்பாடு போட்டு வாழ்த்தி வழியனுப்பினார்கள். இருந்தாலும் அந்த இரண்டு மணி நேர கஸ்டடியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது!’’ என்றார் அன்ஷ்.

கையில் நயா பைசா இல்லை; விரும்பியதைச் சாப்பிட முடியாது; சொகுசாகத் தங்க முடியாது... செல்லும் இடங்களில் புதுப்புது மனிதர்கள்... எப்படி? ‘‘நிஜமாகவே நான் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தச் சந்தோஷத்துக்குப் பணம் சத்தியமாகத் தேவையில்லை. மனிதர்கள் எவ்வளவு அன்பானவர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது’’ என்று சொல்லும் அன்ஷ் மிஷ்ராவின் இந்த வெற்றிப் பயணத்துக்குப் பின்னால், ஒரு மொபைல் அப்ளிகேஷன்தான் ஸ்லீப்பர் செல்.

பர்ஸ் இல்லா பயணம்!

CouchSurfing - இந்த ஆப்பை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும்; இப்போது நீங்கள் ஒரு டிராவலர் அல்லது அவர்களுக்கு உதவும் கவுச்சர். இதில் CouchSurfing என்பது இலவச ஆப். நீங்கள் உங்கள் பெயரை ரிஜிஸ்டர் செய்து log-in செய்துவிட்டால், நீங்கள் டிராவலராகவும் பயணிக்கலாம்; அன்ஷ் மிஷ்ரா போல் டிராவலராக வருபவர்களுக்கு தங்க இடம், சாப்பாடு கொடுத்தும் உதவலாம். இப்படித்தான் அன்ஷ் மிஷ்ராவுக்குப் பல இடங்களில் ஆதரவளிக்கிறார்கள்.

இந்த ஆப் மட்டுமல்லாமல், அந்தந்த மாநிலங்களில் அன்ஷ் மிஷ்ராவைப் பற்றி வரும் செய்திகள், தகவல்கள் மூலம் ‘எங்க வீட்டுல தங்கலாமே... நாங்க சாப்பாடு போடுறோம்’ என்று அவருக்கு உதவிகள் வரும். இப்போது அன்ஷ் மிஷ்ராவின் அடுத்த திட்டம் பற்றித் தெரிந்து, ‘நாங்க ஹெல்ப் பண்றோம்’ என்று முன்னுக்கு வந்தவர்களை அன்போடு மறுத்துவிட்டாராம். அப்படி என்ன திட்டம்?

லிஃப்ட் கேட்டே அந்தமானுக்குப் பயணிப்பது! ‘‘கடலில் லிஃப்ட் கேட்டு கன்னியாகுமரியில் இருந்து அந்தமான் போக வேண்டும். அதுதான் திட்டம். அந்தமான் போயிட்டு வாட்ஸ்-அப் பண்றேன்!’’ என்று அசால்ட்டாகச் சொல்லிவிட்டு, லிஃப்ட் கேட்டபடி கிளம்பியேவிட்டார் அன்ஷ் மிஷ்ரா.