Published:Updated:

ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!

ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!
பிரீமியம் ஸ்டோரி
ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!

தமிழ்

ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!

தமிழ்

Published:Updated:
ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!
பிரீமியம் ஸ்டோரி
ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!

பைக்கை எல்லோருமே ஓட்டலாம். ஆனால், சரியான நேரத்தில் கிளட்சைப் பிடித்து... ரிலீஸ் செய்து... ஆக்ஸிலரேட்டரை முறுக்கி என பைக்கை பெர்ஃபெக்ட்டாக ஓட்டும் ரைடர்கள் குறைவுதான். இதனால்தான் ஒரே பைக், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மைலேஜ் தருகிறது.

நெடுஞ்சாலைப் பயணத்தின்போது, கிளட்ச் பயன்பாடு அவ்வளவாக இருக்காது. அதனால், நகரத்தைவிட நெடுஞ்சாலையில் ஒரு பைக் அதிக மைலேஜ் தரும். இன்னும் சொல்லப்போனால், கிளட்ச்தான் மைலேஜுக்குச் சிம்மசொப்பனமும் உற்ற நண்பனும்!

ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!

கிளட்ச் என்றால் என்ன?

ஒரு வாகனம், எப்போதுமே ஒரே பவர் மற்றும் டார்க்கில் செல்லாது. நேரத்துக்கும் வேகத்துக்கும் தகுந்தாற்போல இதை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் கியர்பாக்ஸின் வேலை. இன்ஜினுக்கும் கியர்பாக்ஸுக்கும் நடுவில், சமாதானத் தூதுவர்போலச் செயல்படுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட டிவைஸ்தான், கிளட்ச்.

கிளட்ச் அசெம்பிளி:

கிளட்ச் பிடித்து, கியரைப் போட்டுவிட்டு மீண்டும் கிளட்சை ரிலீஸ் செய்தால், வாகனம் முன்னே செல்கிறது. இந்த வேலைக்குப் பின்னால் கிளட்ச் மட்டும் இல்லை; ஒரு கூட்டமே இருக்கிறது. இதற்குப் பெயர்தான் ‘கிளட்ச் அசெம்பிளி.’ கிளட்ச் பிளேட், கிளட்ச் ஹப், பிரஷர் பிளேட், கிளட்ச் ஸ்பிரிங்குகள், கிளட்ச் லீவர் மற்றும் கிளட்ச் கேபிள் - இவை எல்லாம் சேர்ந்ததுதான் `கிளட்ச் அசெம்பிளி.’

கிளட்ச் பிளேட்:

பெயருக்கு ஏற்றபடி ஒரு தட்டுபோலவே இருக்கும் இதில் டிரைவ் (Friction) பிளேட் மற்றும் டிரைவன் (Steel) பிளேட் என்று, இரண்டு வகை உண்டு. ஃபைபரால் செய்யப்பட்டிருக்கும் ஃப்ரிக்‌ஷன் பிளேட், நீங்கள் கிளட்ச் பிடிக்கும்போது ஏற்படும் உராய்வைத் தாங்கிக்கொள்ளும். வெளியே பற்கள் இருந்தால், அது டிரைவ் பிளேட். கிளட்ச் ஹப்புக்கு இடையில் இது ஃபிட் செய்யப்பட்டிருக்கும். பிரேக் ஷூவில் ஒருவித மெட்டீரியலைக் கவனித்திருக்கிறீர்களா, அதுவும் டிரைவ் பிளேட்டில் இருக்கும்.

ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!

டிரைவன் பிளேட்டில் பற்கள் உள்பக்கம் இருக்கும். இது அலுமினியம் மற்றும் ஸ்டீலால் தயாரிக்கப்பட்டிருக்கும். இந்தப் பற்கள், ஹப்புக்கு இடையில் இருக்கும் கேப்புகளில் பொருந்தியிருக்கும்.  கம்யூட்டர் வகை பைக்குகளில் ஸ்டீல் பிளேட்டுகள்தான் பெரும்பான்மையான சாய்ஸ். சூடு தாங்கும் சக்தியிருப்பதால், இதற்கு ஆயுள் அதிகம். அலுமினியம், குறைந்த எடைக்குப் பெயர்பெற்றது. மோட்டோ ஜீபி பைக்குகளில் இருப்பது அலுமினியம் பிளேட்தான். ஸ்டீல் பிளேட்டுகளைவிட இதன் ஆயுள் ரொம்பக் குறைவு. இந்த பிளேட்டுகள் தேயத் தேய, உங்கள் மைலேஜில் பெரிய வீழ்ச்சி தெரியும்.

பிரஷர் பிளேட்:

கிளட்ச் அசெம்பிளியில், இது நகர்ந்துகொண்டே இருக்கும். கிளட்ச் ஸ்பிரிங்குகளில் ஏற்படும் உராய்வுக்கு எதிராகப் போராடுவது இதுதான். நீங்கள் கிளட்ச் லீவரைப் பிடிக்கும்போது, ஒரு டைட் ஃபீலை உணர்வீர்கள்தானே! அது கிளட்ச் பிளேட்டுகளிலிருந்து, பிரஷர் பிளேட் விடுபடுகிறது என அர்த்தம்.

கிளட்ச் ஸ்பிரிங்குகள்:

குட்டி காயில்கள்தான் இந்த ஸ்ப்ரிங்குகள். சாதாரண பைக்குகளில் நான்கு ஸ்பிரிங்குகள் இருக்கும். பைக்குகளின் பெர்ஃபாமென்ஸைப் பொறுத்து, ஐந்து ஸ்பிரிங்குகள் வரைகூட இருக்கலாம். கிளட்ச் லீவரை ரிலீஸ் செய்யும்போது, ஒரு லைட் ஃபீல் கிடைக்குமே... அதற்குக் காரணம் இந்த ஸ்பிரிங்குகள் கம்ப்ரஸ் ஆகி ரிலீஸ் ஆவதுதான். நீங்கள் கிளட்ச் லீவரை ‘டப் டப்’ என வேகமாக ரிலீஸ் செய்தால், ஸ்பிரிங்குகளுக்கு அதிக வேலைப் பளு இருக்கும்.

கிளட்ச் கேபிள்:

கிளட்ச் அசெம்பிளிக்கு, முன்னே சொன்ன மொத்தப் பணிகளையும், ஒரு வொயர் மூலமாகக் கடத்திச்செல்வதுதான் இந்த கிளட்ச் கேபிள்.

கிளட்ச் லீவர்:

பைக் ஹேண்டில்பாரில் இடதுபக்கம் இருக்கும் இந்த கிளட்ச் லீவர், உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். கிளட்ச் அசெம்பிளிக்கு இன்புட், இந்த லீவர் மூலமாகத்தான் செல்கிறது.

எப்படி வேலைசெய்கிறது கிளட்ச்?

இன்ஜினும் கிளட்ச்சும் ஒரு வாகனத்தில் தனித்தனியாக இருந்தாலும், இரண்டுக்கும் தொடர்பு உண்டு. இன்ஜினின் ஒரு பகுதி கிளட்ச் என்றும் சொல்லலாம். இன்ஜின் கிராங்க்‌ஷாஃப்ட்டில் இருந்து டிரான்ஸ்மிஷன். அதாவது, கியர்பாக்ஸுக்கு பவரை என்கேஜ் செய்வதும் டிஸ்என்கேஜ் செய்வதும் கிளட்ச்தான். இதனால் கிடைக்கும் பவரை, அப்படியே பைக்கின் பின்பக்கச் சக்கரத்துக்கு அனுப்பும் வேலைதான் கியர் பாக்ஸினுடையது.

ஒரு நார்மல் கண்டிஷனில்... அதாவது இக்னீஷன் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலும்கூட, கிளட்ச் எப்போதுமே இன்ஜினுடன் தொடர்பில் இருக்கும். வாகனம் ஓடும்போதும், கியர் மாற்றும் வேளையில் கிளட்ச்சை நீங்கள் இறுகப் பற்றும்போதும், கிளட்ச்சின் உள்ளிருக்கும் காயில் ஸ்பிரிங்குகள் கம்ப்ரஸ் ஆகி, பிரஷர் பிளேட்டுகள் விரிவடையும். இதனால் கிளட்ச் அசெம்பிளிக்கும், இன்ஜினுக்கும் உண்டான தொடர்பு அற்றுப்போகும். இந்த நேரத்தில் கியர் பாக்ஸும், வீல்களுக்கு பவர் அனுப்பும் வேலையைச் செய்யாது. எனவே, நீங்கள் கிளட்ச்சை நன்றாகப் பிடித்து கியர்போடுவதுதான், இன்ஜினுக்கும் கியர் பாக்ஸுக்கும் கிளட்ச்அசெம்பிளிக்கும் நல்லது. இதைத்தான் `கிளட்ச் பிளே’ என்கிறோம். பிறகு கிளட்ச்சை ரிலீஸ் செய்ததும், மீண்டும் இன்ஜினுக்கும் கிளட்ச் அசெம்பிளிக்கும் தொடர்பு ஏற்பட்டு, உங்கள் வாகனத்துக்கு வேகமும் பவரும் மாறி மாறித் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது.

ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்!

கிளட்ச்சுகளில் இரண்டு வகை...

கிளட்ச்சுகளில் இரண்டு வகை உண்டு. டிரை கிளட்ச், வெட் கிளட்ச்; சாதாரண கம்யூட்டர் பைக்குகளுக்கு, வெட் கிளட்ச்தான் பயன்படுத்துவார்கள். இதன் பெயருக்கு ஏற்ப, இது இயங்குவதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியம். அது இன்ஜின் ஆயில் மூலம் கிடைக்கிறது. ஆயில் மூலம் கிடைக்கும் வழவழப்புத்தன்மையில்தான் இது இயங்குகிறது. இந்த கிளட்ச் செட்-அப் முழுவதும், பைக்கின் கேஸுக்கு உட்புறம் பொருத்தப்பட்டிருக்கும். லூப்ரிகேஷன் மூலம் இயங்குவதால், டிரை கிளட்ச்சுடன் ஒப்பிடும்போது, இதன் இயக்கம் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும். இதில் சத்தமும் குறைவுதான். ஆனால் இதைக் கழற்றி மாற்றுவது கொஞ்சம் சிரமம்.

டிரை கிளட்ச்சும், கிட்டத்தட்ட இதே சிஸ்டம்தான். ஆனால் இதற்கு ஆயில் தேவைப்படாது. லூப்ரிகேஷன் மூலமும் இயங்காது. இதை, பைக்கின் கேஸுக்கு வெளியே பொருத்தியிருப்பார்கள். கண்ணுக்குத் தெரியும்வண்ணம் வெளியே இருப்பதால், இதை அகற்றி மாற்றுவது எளிது. டுகாட்டி போன்ற ஹை-பவர் சூப்பர் பைக்குகளில் இருப்பது டிரை கிளட்ச்தான்.

கிளட்ச் பிளே எப்படி இருக்க வேண்டும்?

கிளட்ச் என்றால், இறுகப் பிடிப்பது என அர்த்தம். அப்படியென்றால், இறுகப் பிடிப்பதற்குக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் கிளட்ச். ஆம்! நீங்கள் கியர் போடும்போதும் குறைக்கும்போதும், எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தமாக கிளட்ச்சைப் பிடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் இன்ஜினும் ஹேப்பி... கியர்பாக்ஸும் ஹேப்பி! அதே நேரத்தில், பிரேக் பிடிக்கும்போது சிலர் கிளட்ச்சையும் சேர்த்தே பிடிப்பது...  சிக்னலில் நிற்கும்போது முதல் கியரில் கிளட்ச்சைப் பிடித்துக்கொண்டே நிற்பது... எல்லாமே ரொம்பத் தப்பு பாஸ்!

ஏனென்றால், ஒரு பைக்கின் மைலேஜுக்கும் கியர் பாக்ஸின் ஆயுளுக்கும் மேஜிக் ஸ்விட்ச், இந்த கிளட்ச்தான். எனவே, இறுக்கிப் பிடியுங்கள்; முறுக்கி விரட்டுங்கள்!