கார்ஸ்
Published:Updated:

ஆக்‌ஷனுக்கு... RS 7

ஆக்‌ஷனுக்கு... RS 7
பிரீமியம் ஸ்டோரி
News
ஆக்‌ஷனுக்கு... RS 7

டிரைவ் - ஆடி RS7ர.ராஜா ராமமூர்த்தி - படங்கள்: ப.பிரியங்கா

ஆக்‌ஷனுக்கு... RS 7

`மோட்டார்  விகடனுக்கு ஒரு பிக் பாஸ் சேலஞ்ச். ரெடியா?’ என மெயில் தட்டியது ஆடி இந்தியா. ‘ஐ யம் வெயிட்டிங்!’ என்று பதில் சொல்லிய அடுத்த ஒருமணி நேரத்துக்குள், ஆபீஸ் வாசலில் எக்ஸாஸ்ட் சத்தம். வெளியில், மிசானோ ரெட் வண்ணத்தில் புத்தம் புதிய ஆடி RS7 ஸ்போர்ட்பேக் கார் நின்றுகொண்டிருந்தது.

நமக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க், சென்னையின் ட்ராஃபிக்கில் ஒருநாள் முழுக்க, இந்த காரை ஓட்ட வேண்டும் என்பதுதான். இது கேட்கச் சுலபமாக இருந்தாலும்,  553 bhp சக்திகொண்ட இந்த காரை அண்ணா சாலையிலும், நந்தனம் சிக்னலிலும் பொறுமையாக ஓட்ட முனிவர் அளவுக்குப் பக்குவம் வேண்டும்.

ஆக்‌ஷனுக்கு... RS 7

காரை ஸ்டார்ட் செய்ததும், கெத்தாக உறுமியது 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 TFSI பெட்ரோல் இன்ஜின். 553 குதிரைகளையும் தட்டி எழுப்பிவிடக் கூடாது என்று ஆக்ஸிலரேட்டரைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, ட்ராஃபிக்கில் மெதுவாக நீந்தி வந்தோம். கொஞ்சதூரம் ஓட்டியதுமே, நம்பிக்கையாக காரை ஓட்ட முடிந்தது. ஜாலியாகச் சொன்னால், இது ஒரு ‘ஸ்லீப்பர் செல்’ கார்.

நான்கு சீட்டுகளுடன் பார்க்க லக்ஸூரி செடான் போன்று தெரிந்தாலும், உள்ளே பவர்ஃபுல்லான V8 இன்ஜின் இருப்பது, ஆக்ஸிலேரேட்டரை மிதித்தால்தான் சாலையில் உள்ளவர்களுக்கே தெரியும். அப்போதும் ஸ்போர்ட்ஸ் மோடில் கியரைத் தட்டினால், எக்ஸாஸ்ட் சத்தம் செம ரகளை!

இந்த காரின் த்ரில்லே, இதன் டார்க் டெலிவரிதான். 71.38 kgm டார்க் 1,750 ஆர்பிஎம்-மில் இருந்தே கிடைக்கிறது.

ஆக்‌ஷனுக்கு... RS 7

ரேஸ் ட்ராக்கில் காரின் ஸ்டீயரிங்கை டைனமிக் மோடிலும், சஸ்பென்ஷனை கம்ஃபோர்ட் மோடிலும், இன்ஜினை டைனமிக் மோடிலும் செட் செய்யுங்கள். கியர் லீவரை ஸ்போர்ட் மோடில் செட் செய்துவிட்டு, ஸ்டீயரிங்கை இறுக்கப் பிடித்துக்கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால், சகல தெய்வங்களையும் கும்பிட்டுக்கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லையென்றால், ஆடியின் இன்ஜினீயர்களைக் கும்பிட்டுக்கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு RS7-ல் கிடைக்கப்போகும் அனுபவம், வேறு எந்த காரிலும் கிடைக்காது.

ஆக்‌ஷனுக்கு... RS 7

ஆக்ஸிலரேட்டரை ஒரே மிதிதான். சீறிப் பறக்கிறது ஆடி RS7. ரோலர் கோஸ்டரில் ராக்கெட்டைக் கட்டிவிட்டால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது ஆக்ஸிலரேஷன். 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், கியர்களைப் படபடவென மாற்றுவதையும் உணர முடிவதில்லை. வெறும் 3.9 விநாடிகளில் மணிக்கு 0 டு 100 கி.மீ வேகத்தைக் கடந்து பாய்கிறது. பவர் டெலிவரி கொஞ்சமும் குறையவே இல்லை. அவ்வளவு வேகத்தில் இருந்து காரை நிறுத்தும்போது பிரேக்ஸ் கொஞ்சம் சாஃப்ட்டாக இருப்பதுபோல தோன்றினாலும், அதன் இயக்கத்தில் குறைவில்லை. காரை நிறுத்திவிட்டு இறங்கினால்தான் இதயத்துடிப்பு எகிறியிருப்பதே தெரிகிறது. ட்வின் டர்போ இன்ஜின், சக்தியை வாரி வழங்க, குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், அவ்வளவு பவரையும் ரோடு க்ரிப் இழக்காமல், நான்கு வீல்களுக்கும் கொடுக்கிறது. அதனால்தான், இவ்வளவு பவர்ஃபுல் ஆக்ஸிலரேஷன். சில சூப்பர் கார்களே வெட்கப்படும் அளவுக்கு இருக்கிறது  இதன் பர்ஃபாமென்ஸ்.

ஆக்‌ஷனுக்கு... RS 7

ஓட்டக் கொஞ்சம் பழகிவிட்டால், சிட்டி டிராஃபிக்கில் பதறாமலேயே மெதுவாக இந்த காரை ஓட்டலாம். ஒருநாள் முழுக்கச் சென்னையில் சுற்றி, ஆடி கொடுத்த டாஸ்க்கில் ஜெயிப்பது சுலபமாகவே இருந்தது. பெரிய 20 இன்ச் வீல்கள் என்பதால், சின்ன மேடு பள்ளங்களில் கொஞ்சம் மெதுவாகவே ஓட்டுவது நல்லது. பின்னிருக்கையில் இரண்டு பேர் சொகுசாக உட்காரலாம். அட... இந்த ஆடியில் இதுபற்றியெல்லாம் கவலையே பட  வேண்டாம். அந்த ஆக்ரோஷமான ஆக்ஸிலரேஷனுக்காகத்தான் இந்த ஆடி.

1.4 கோடி ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) மாதத் தவணையே சில ஹேட்ச்பேக் கார்களின் விலையைத் தொடுகிறது. ஆனால், நான்கு சீட்டுகளுடன் வரும் இந்த ராக்கெட் ரோலர் கோஸ்டருக்கு ஈடு இணையே கிடையாது. 

ஆங்… இன்னொரு முறை இதே டாஸ்க்கை ரிப்பீட் பண்ணலாமா ஆடி? ப்ளீஸ்..!

ஆக்‌ஷனுக்கு... RS 7

பி.ஸ்வேதா,

எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக் மீடியா, அண்ணா பல்கலைக்கழகம்.

நம்ம டாஸ்க்ல வைல்டு கார்டு கன்டெஸ்டன்ட்ஸ் ரெண்டு பேரையும் சேர்த்துக்கிட்டோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருந்த ஸ்வேதாவையும், சுமதியையும் ஆடியில் ஏற்றிக்கொண்டு ஒரு பவர் ட்ரைவ் சென்றோம்.

‘காருல ஏறுன அடுத்த செகண்டே எனக்கு ஹார்ட் பீட் செமயா ஏறிடுச்சு. ஆடி எனக்கு ரொம்ப பிடிச்ச பிராண்ட். ஆனா, மணிக்கு 100 கி.மீ-க்கு ஒரு ஆக்ஸிலரேஷன் பண்ணிக் காமிச்சாங்க பாருங்க. யப்பா… வேற லெவல் அனுபவம். அப்புறம் அந்த சிவப்பு கலர்... மெர்சல்!

எஸ்.சுமதி,

எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக் மீடியா, அண்ணா பல்கலைக்கழகம்.

வாழ்க்கைல ரேஸ் கார்லேயும், ஆடி கார்லயும் போனதே இல்லை. இதான் ஃபர்ஸ்ட் டைம். இந்த இரண்டு ஆசையும் ஒண்ணா நடந்த மாதிரி இருந்துச்சு. என்னா ஸ்பீடு! என்னா சவுண்ட்! என்னா கம்ஃபர்ட்! வாவ்வ்வ்... இதை சூப்பர் காருன்னு சொல்லறதா, இல்ல ஸ்போர்ட்ஸ் காருன்னு சொல்லறதான்னு டவுட்டா இருக்குபா!

- கு.லி.நந்தினி பிரியா