Published:Updated:

வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!
வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!

கார்-சர்வீஸ்தமிழ்தென்றல் - படங்கள்: செ.விவேகானந்தன்

பிரீமியம் ஸ்டோரி

ந்த கார் வாங்குவது என்பதைவிட, ‘எங்கே சர்வீஸ் விடுவது’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் குழப்பம். வாரன்ட்டி பீரியட் வரை கம்பெனி சர்வீஸ் ஓகே. அதன்பிறகுதான் இந்தப் பிரச்னை. டாக்டர், வக்கீல் போலத்தான் மெக்கானிக்கும். நம்பிக்கையான மெக்கானிக்குகள் கிடைப்பதில்தான் நம் காரின் ஆரோக்கியம் இருக்கிறது.  

வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!

கம்பெனி சர்வீஸோ, பிரைவேட் சர்வீஸோ - எதுவாக இருந்தாலும் கார் சாவியை ஒப்படைப்பதுவரைதான் உங்களுக்குத் தெரியும். கார் சர்வீஸ் சென்டருக்குள் போய்விட்டால், ஆபரேஷன் தியேட்டர் மாதிரிதான். ‘விசிட்டர்ஸ் நாட் அலவ்டு!' உள்ளே நம் காருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது.

‘‘அந்தக் கவலை இனி இல்லை’’ என்கிறார் 'My Tvs' நிறுவனத்தின் துணை சர்வீஸ் மேலாளர் சசிகுமார் மேனன். ‘அப்படியென்றால், சர்வீஸ் சென்டருக்குள் நம்மை அனுமதிப்பார்களா’ என்றால், இது அதுக்கும் மேல! ஆம். உங்கள் வீட்டுக்கே வந்து, கண்ணெதிரிலேயே உங்கள் காரை சர்வீஸ் செய்து தரத் தயாராக இருக்கிறது `My Tvs'. முதன்முதலில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இந்த சர்வீஸ் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

‘‘சென்னையில் மட்டும் ஐந்து மொபைல் சர்வீஸ் வாகனங்கள் இருக்கின்றன. கஸ்டமர்கள் அதிகரிக்கும்பட்சத்தில் வாகனங்களும் அதிகரிக்கும்’’ என்றார் சசிக்குமார். ஒரு காரை சர்வீஸ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். `My Tvs' டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்துவிட்டால், நீங்கள் விரும்பும் நேரத்தில் சர்வீஸ் அட்வைஸர், டெக்னீஷியன், க்ளீனர் ஆகியோர் அடங்கிய குழு உங்கள் வீட்டுக்கு வருவார்கள். அப்புறமென்ன? உங்கள் கண்ணெதிரிலேயே காரின் சர்வீஸ் நடக்கும். 

வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!

‘ஒரு சாம்பிள் பார்த்தாதான் ஐடியா கிடைக்கும்’ என்று சொன்னபோது, ‘My Tvs' நிறுவன அதிகாரி மற்றும் ஊழியர்களுடன், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஜெயராம் என்பவரின் வீட்டில் ஆஜரானோம். ‘‘இன்னிக்குத்தான் நாங்க ஃப்ரீ. அதான் இன்னைக்கு வரச் சொன்னேன்’’ என்ற ஜெயராமின் ஸ்கார்ப்பியோவுக்குத்தான் சர்வீஸ். ‘‘என்கிட்ட டிசையர், ஸ்விஃப்ட், செலெரியோ, ஸ்கார்ப்பியோனு நாலு கார் இருக்கு. ஸ்கார்ப்பியோ 10,000 கி.மீ-க்கு மேல் ஓடிருச்சு. வாரன்ட்டி முடிஞ்சிடுச்சு. My Tvs-ல்தான் எப்பவும் சர்வீஸ் பண்ணுவேன். இந்தத் தடவை வீட்டுக்கே வந்து சர்வீஸ் பண்ணித் தர்றோம்னு சொன்னதும், ஹேப்பி ஆகிட்டேன்’’ என்று மகிழ்ச்சியோடு சொன்னார் ஜெயராம்.

ஒரு மாருதி ஈக்கோவில், சர்வீஸ் சென்டரை அப்படியே கொண்டுவந்திருந்தார்கள். சர்வீஸ் அட்வைஸர் காமேஷ், டெக்னீஷியன் கார்த்திகேயன், க்ளீனர், வொர்க் ஷாப் ஊழியர் என்று நால்வர் வந்திருந்தார்கள். ‘‘ஆயில் சர்வீஸ் பண்ணிடுங்க. பேட்டரி கொஞ்சம் செக் பண்ணிடுங்க. வாங்கி மூணு வருஷம் ஆச்சு! மத்தபடி ஒரு ஜெனரல் செக்-அப்’’ என்று விவரித்தார் ஜெயராம். 

இது தவிர, கார்களில் என்னென்ன மாற்ற வேண்டும், எந்தெந்த பாகங்கள் எத்தனை நாள்கள் வரும் என்கிற தகவல்களையெல்லாம், ஒரு மொபைல் ஆப் மூலமாகப் பரிசோதித்தார் காமேஷ். இதற்கென அவர்கள் முதலில் செய்வது - லேப்டாப்பில் டாங்கிள் சொருகுவதுபோல் காரில் ஒரு டாங்கிள் சொருகுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் மொபைலுக்கு எல்லாமே தகவலாக வந்துவிடுகிறது. இதைத்தான் ‘OBD’ என்கிறார்கள். அதாவது, On Board Diagnostics. இன்ஜின் ஆயிலின் விஸ்காஸிட்டி, கூலன்ட்டின் தன்மை, ஆயில் லீக்கேஜ், சிலிண்டர்களின் வேலைப்பாடு என்று எல்லாமே OBD-ல் தெரிகிறது. இது இன்ஜின் சம்பந்தமானது மட்டும்தான்.  

வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!

பொதுவாக, நாம் சாதாரணமாகச் செல்லும் சர்வீஸ்களில் ‘‘சார், பிஸ்டன் தேய்ஞ்சிடுச்சு. ரீ-போர் பண்ணணும். சம்ப் அடி வாங்கியிருக்கு. மொத்தமா மாத்தணும்’’ என்று பெரிய குண்டைத் தூக்கிப் போடுவார்கள். இதில் அந்த மாதிரி தகிடுதத்தங்கள் எதுவும் செய்ய முடியாது. இன்ஜின் என்றால்,  ஒன்பது ஆப்ஷன்கள் வரும். இதில் எல்லாவற்றையும் டிக் செய்து அனுப்பினால்தான், அடுத்த வேலைக்கே போக முடியும். ‘‘எனவே, சர்வீஸ் இன்ஜினீயர்கள் ஏமாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை’’ என்றார் சர்வீஸ் அட்வைஸர் காமேஷ். இன்ஜின் என்றில்லை; டயர்கள், டிஸ்க் பேடுகள், ஸ்டீயரிங், கியர்பாக்ஸ் எல்லாவற்றுக்கும் ‘OBD’ உண்டு.

உதாரணத்துக்கு, டயர்களை செக் செய்யச் சொன்னோம். சின்ன தெர்மாமீட்டர் போன்று இருந்த ஒரு கருவியை வைத்து டயரில் அழுத்தினார் காமேஷ். 4.45 மிமீ என்று காட்டியது. ‘‘இன்னும் 35,000 கி.மீ வரை இந்த டயர் ஓடும் சார்’’ என்று துல்லியமாகச் சொன்னார். அதாவது, ஒரு டயரின் த்ரெட்களை, மி.மீ வைத்துக் கணக்கெடுப்பார்கள். 7 மிமீ-ல் இருந்து ஆரம்பம். இந்த மி.மீ-க்கள் குறையக் குறைய, டயரின் ஆயுட்காலம் முடியப் போகிறது என்று அர்த்தம். அதேபோல்தான், பேட்டரிக்கும் ஒரு மல்ட்டி மீட்டர். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கலாமாம்.   

வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!

நடுநடுவே, ‘இது என்ன? அது ஏன் இப்படி இருக்கு?’’ என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் ஜெயராம் மனைவி. எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லி, மொத்தமாக செக் செய்து டிக் பண்ணி, காமேஷ் மொபைலில் வேலையை முடிக்க முடிக்க.... டெக்னீஷியன் கார்த்திகேயன் சரசரவென ஜாக்கி போட்டு காரை மேலேற்றி, ஆயில் லீக்கேஜ் சரிசெய்து, ஆயில்-கூலன்ட் மாற்றி, டிரை வாஷ் செய்து என்று 100 நிமிடங்களுக்குள் கார் பார்க்கிங்கிலேயே, நம் கண்ணெதிரில் மொத்த சர்வீஸும் முடிந்தே போனது. சர்வீஸுக்குப் பிறகு - காரின் ஹெல்த் ரிப்போர்ட் ஒன்றும் ஜெயராமின் மொபைலுக்கு மெசேஜாக வந்து விழுந்தது. `எந்த ஸ்பேர் எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும்' என்ற விவரங்கள்.

சர்வீஸ் பில், ரூ.4,500 வந்திருந்தது. ஸ்கார்ப்பியோ பெரிய கார் என்பதால், ஆயில் சம்ப் பெரியது. 6 லிட்டர் வரை பிடிக்கும். ‘‘ஹேட்ச்பேக், செடான் கார்களுக்கு 4 லிட்டர் வரைதான் ஆகும்’’ என்றார் காமேஷ். பொதுவாக, செடான் கார்களுக்கான பில் தொகை இது. அப்புறம் எப்படி? ஜெயராம், AMC எனும் வருடாந்திரப் பராமரிப்பு ஒப்பந்தம் செய்திருந்ததால், பில் தொகை குறைவு. 

வீட்டுக்கே வருது கார் சர்வீஸ்!

இந்த சர்வீஸைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள்தான் மிஸ்ஸிங். வீல் அலைன்மென்ட், வாட்டர் வாஷ். இதற்கு பெரிய செட்-அப் வேண்டும். ‘‘விரைவில் அதற்கும் ஏற்பாடு செய்ய வாய்ப்புண்டு’’ என்றார் சசிக்குமார்.

‘‘உதாரணத்துக்கு, பேட்டரி மாற்ற வேண்டிய பட்சத்தில் என்ன நடக்கும்?’’ என்றார் ஜெயராம். ‘‘அதற்காகத்தான் முதலிலேயே ஹெல்த் செக்-அப் செய்துவிடுவோம். கஸ்டமர்கள் ஒப்புதல் கொடுத்த பிறகு, இரண்டே மணி நேரத்தில் ஸ்பேர்கள், ஸ்பாட்டுக்கு வந்துவிடும்’’ என்றார் சசிக்குமார்.

சர்வீஸ் மட்டுமில்லை. ‘கார் ஸ்டார்ட் ஆகவில்லை; வைப்பர் வேலை செய்யவில்லை; டிஸ்க் பேடு மாற்ற வேண்டும்; பேட்டரி மாற்ற வேண்டும்’ என்று எதுவாக இருந்தாலும், வீட்டுக்கே வருமாம் My TVS. ஆடை, காய்கறி, பீட்ஸா, வீட்டுச் சாமான்கள் என்றில்லை; கார் சர்வீஸே நம் வீடு தேடி வருவது அடுத்த லெவல்! இதுவரையில் ‘எங்க ஏரியா, உள்ள வராதே’ என்றுதான் சர்வீஸ் சென்டர்கள் நடந்துகொண்டு வந்தன. இப்போது நம் ஏரியாவுக்கு உள்ளேயே வந்து, நம் கண்ணெதிரிலேயே சர்வீஸ் பண்ணுவது - காருக்கும் நமக்கும் நல்லதுதானே! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு