
ஏன் எதற்கு எப்படி? - பவர் ஸ்டீயரிங் தமிழ்தென்றல்
நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ‘ஃபன் டு டிரைவ்’ என்றால் என்ன? இன்ஜினில் கிடைக்கும் பன்ச் இதற்கு முதல் காரணம் என்றால், அடுத்த காரணம் - அந்த காரின் ஸ்டீயரிங். கார்னரிங்கில் ஈஸியாக வளைத்துத் திருப்ப... நெடுஞ்சாலைகளில் நம்பிக்கையாகப் பயணிக்க... என்று ஸ்டீயரிங்கின் பணி அபாரமானது. ‘ஸ்டீயரிங்கைத் திருப்பினால் வீல்கள் திரும்புகின்றன. அதனால் காரும் திரும்புகிறது’ - இந்த நடைமுறைக்குப் பின்னால், சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஸ்டீயரிங்கைத் திருப்புவதுபோல் இது ஈஸியான விஷயம். அல்ல... கொஞ்சம் நுட்பமான அறிவியல்.

ஏன் ஸ்டீயரிங்?
பயணம் ஜாலியாவதற்கு பார்ட்னர்ஷிப் அவசியம். ஸ்டீயரிங் வீல் - ரோடு வீல். அதாவது, டயர். நாம் ஸ்டீயரிங்கைத் திருப்பும்போது, வீல்களும் சரியாகத் திரும்ப வேண்டும். இதில் ஒரு ஜியாமெட்ரிக் அளவு இருக்கிறது. ஒவ்வொரு வீலும் ஒவ்வொரு சர்க்கிளை ஃபாலோ செய்ய வேண்டும். உள்பக்க வீல்கள் சின்ன ரேடியஸில் திரும்ப வேண்டும். அதாவது, வெளிப்பக்க வீல்களைவிட டைட்டாக இருக்க வேண்டும். உள்பக்கம் குறைவாகவும், வெளிப்பக்கம் அதிகமாகவும் திரும்பும் இந்த ஜியாமெட்ரிக் சிஸ்டத்தை ‘ஸ்டீயரிங் லிங்கேஜ்’ என்கிறார்கள். இந்த ஸ்டீயரிங் லிங்கேஜ் சரியாக இருந்தால், உங்கள் பயணம் ஸ்மூத்!
எதற்கு?
டன் கணக்கில் இருக்கும் வாகனத்தை எளிதாகத் திருப்பி வளைக்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்டீயரிங். பெரிய காரைத் திருப்புவதற்கு, நீங்கள் பல்க்காக இருக்க வேண்டிய அவசியம் என்றில்லை. அதற்காகத்தான் பவர் ஸ்டீயரிங். பழைய அம்பாஸடர், ஜிப்ஸி, சான்ட்ரோ போன்ற வாகனங்களில் பவர் ஸ்டீயரிங் என்பது வசதிகளில் ஒன்றாகத்தான் இருந்துவந்தது. ‘பவர் ஸ்டீயரிங் இருக்குல்ல' என்று எக்ஸ்ட்ராவாகப் பணம் கொடுத்து புக் செய்வார்கள். இதுவே, பவர் ஸ்டீயரிங் இல்லாத கார்களில் ‘திருப்பு திருப்பு’ என்று திருப்ப வேண்டும். இப்போது அந்தப் பிரச்னை இல்லை. பவர் ஸ்டீயரிங் ஆப்ஷன், ஸ்டாண்டர்டாகவே எல்லா கார்களிலும் வந்துவிட்டது.

நீங்கள் ஹேட்ச்பேக் வைத்திருக்கிறீர்கள் என்றால், இதைக் கவனிக்க மறக்காதீர்கள். 15 இன்ச் ரிம் அளவுகொண்ட உங்கள் காரின் டயர், நீங்கள் ஒருமுறை ஸ்டீயரிங்கை முழுவதுமாக லாக் ஆகும் வரை திருப்பி ‘U’ டர்ன் அடிக்கும்போது, நான்கு முறை அவுட்டர் வீல் சுழலும். அதாவது, இதன் ஓரங்கள் 12 இன்ச் அளவுக்குத் (300 மி.மீ) திரும்பும். இதுவே இந்த ஃபுல் லாக்குக்கு ஸ்டீயரிங் வீல் பயணிக்கும் தூரம், 16 அடி. (5 மீட்டர்). இந்த ஸ்டீயரிங் மெக்கானிசம் இல்லாதபட்சத்தில், அதாவது நேரடியாக டயர்களைப் பிடித்துத் திருப்ப வேண்டுமென்றால், இதேபோல் 16 மடங்கு திருப்ப வேண்டும்.
எப்படி?
ஸ்டீயரிங்கில் இருந்து கிடைக்கும் ஆற்றல், வீல்களுக்கு எப்படிச் செல்கிறது? இதற்கு ‘பைவட்டட் ஜாயின்ட்’ என்று பெயர். நமது முழங்கை, முழங்கால்களில் இருக்கும் ஜாயின்ட்களைப்போல் என்று சொல்லலாம். இந்த ஜாயின்ட்கள் மூலமாகத்தான் டயர்கள் திரும்புவது; சஸ்பென்ஷனுக்குத் தகுந்தாற்போல் மேலே போவது; கீழே வருவது என்று பணிபுரிகிறது.
வெறும் திருப்பங்களில் மட்டுமல்ல, கார் வேகமாகப் போகும்போதும் ஸ்டீயரிங்குகளின் பணி முக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது, வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போதும், சாதாரண நேரங்களுக்கு இணையாக வீல்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். அப்போது, ஸ்டீயரிங்கில் கிடைக்கும் நிலைத்தன்மையான ஆற்றல்தான் காரை ஸ்டேபிளாகச் செல்ல வழிவகுக்கிறது.

ஸ்டீயரிங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. 1. ரேக் அண்டு பினியன், 2. ஸ்டீயரிங் பாக்ஸ் சிஸ்டம் (ரீ-சர்குலேட்டிங் பால் ஸ்டீயரிங்). பவர் ஸ்டீயரிங் என்பது தனி. இந்த இரண்டிலுமே பவர் ஸ்டீயரிங் ஆப்ஷன் உண்டு.
ரேக் அண்டு பினியன் ஸ்டீயரிங்
எஸ்யூவி, ஹேட்ச்பேக், செடான் என்று பெரும்பான்மையான கார்களில் இருப்பது இந்த சிஸ்டம்தான். ஸ்டீயரிங் சேம்பரின் அடிப்பகுதியில் சின்ன கியர் வீல் இருக்கும். இதுதான் ‘பினியன்’ (Pinion). காரின் முன் பக்க டயர்களை இணைத்திருக்கும் ராடுக்குப் பெயர் ‘ரேக்’ (Rack). இதற்கு ‘டை ராடு’ (Tie Rod) என்று இன்னொரு பெயரும் உண்டு. அடுக்கடுக்காக இருக்கும் இந்த ரேக்கின் மேற்பரப்பில், பினியன் கியர் வீல் சேர்ந்து இயங்குவதுதான் ரேக் அண்டு பினியன் ஸ்டீயரிங் சிஸ்டம். நீங்கள் ஸ்டீயரிங் வீலைத் திருப்பும்போது, ஸ்டீயரிங் சேம்பரின் கீழே இருக்கும் பினியன் கியர், ரேக்கில் இருக்கும் துளைகளில் சரியாகப் பொருந்தி வீல்களைத் திருப்பும் பணியைச் செய்யும். இந்த ‘Tie Rod’களில் இருக்கும் ஜாயின்ட்களுக்குப் பெயர்தான் ‘பைவட் ஜாயின்ட்’. இது ஸ்டீயரிங் வீலைக் கண்டபடி திரும்பாமல், கார் ஸ்டேபிளாகச் செல்ல உதவுகிறது.

ஸ்டீயரிங் பாக்ஸ் சிஸ்டம்
ரேக் அண்டு பினியனில் இருந்து லேசான மாற்றம் கொண்டது இது. இதில் முக்கியமாகப் பணிபுரிவது ‘வார்ம் கியர்’ (Worm Gear) எனும் கியர் சிஸ்டம். Worm என்றால் புழு. அதாவது, நார்மல் கியர் சிஸ்டத்தைவிட வளைந்து நெளிந்து புழுபோல் இருப்பதால் இது வார்ம் கியர். இது ‘Steering Column’-க்கு அடியில் இருக்கும். சிலிண்டர் வடிவம்தான், த்ரெட்களாக வளைந்து வெளிந்து இருப்பதுதான் இதன் வித்தியாசம். ஒரு போல்ட்டை ஸ்பானர் கொண்டு திருகுகிறீர்கள்; போல்ட்டுக்கு ஏற்றபடி ஸ்பானரும் திரும்புமே... அதே சிஸ்டம்தான். இதிலுள்ள புழுபோன்ற த்ரெட்கள், ஸ்டீயரிங் வீலுடன் இணைக்கப்பட்ட ராடு கியருடன் இணைந்து பணிபுரிவது இந்த ஸ்டீயரிங் பாக்ஸ் சிஸ்டம்.
இதில் ஒரே ஒரு... ஆனால், பெரிய வித்தியாசம் - வார்ம் கியரும் ராடும் நேரடியாக கனெக்ட் செய்யப்படுவதற்குப் பதில், பால் பேரிங்குகளைக் (Ball Bearings) கொண்டிருக்கும் என்பதுதான். இந்த இடத்தில் ‘பால் பேரிங்குகள்’ எதற்கு?

திருப்புதல் முறை எளிதாக இருக்கும் என்பதோடு, ராடுக்கும் கியருக்கும் ஏற்படும் உராய்வையும் இது குறைக்கும். சில கார்களில் நீங்கள் இதை உணர்ந்திருக்கலாம் - ஸ்டீயரிங்கைத் திருப்பு திருப்பு என்று திருப்புவீர்கள், இன்ஜினில் ஏற்படும் ‘டர்போ லேக்’ மாதிரி வீல்கள் கொஞ்சம் மந்தமாகவே திரும்பும். இது பால் பேரிங் சிஸ்டத்தில் இருக்காது என்பது ஸ்பெஷல். ரேக் அண்டு பினியன் சிஸ்டத்தில், இந்த கியர் பற்கள் ஓவர்லேப் ஆகாமல், மிஸ் ஆகி வெளியே விழுந்திருப்பதுதான் இதற்குக் காரணம்.
இந்த ரீ-சர்க்குலேட்டிங் பால் சிஸ்டத்தில், உயர் அழுத்தம் கொண்ட லிக்விட் ஊற்றினால் அது பவர் ஸ்டீயரிங். இதைத்தான் ‘ஸ்டீயரிங் ஆயில்’ என்கிறோம். ஸ்டீயரிங் சிலிண்டரில் உள்ள ஒரு பிளாக்குக்கு இந்த ஆயில் செலுத்தப்படும்போது, பால் பேரிங்குகள்-ஆயில் என்று எல்லாமாகச் சேர்ந்து ஸ்டீயரிங்கைக் கையாளும் முறை செம ஈஸியாக இருக்கும் என்பதுதான் இதன் தத்துவம்.

அப்படியென்றால், பாக்ஸ் சிஸ்டத்தில் மட்டும்தான் பவர் ஸ்டீயரிங் இருக்கிறதா என்றால், இல்லை. இரண்டிலுமே பவர் ஸ்டீயரிங் ஆப்ஷன் உண்டு. பால் பேரிங்குகளைத் தாண்டி அதற்கு இன்னும் இரண்டு விஷயங்கள் ஒத்துழைக்கின்றன. பம்ப் மற்றும் ரோட்டரி வால்வ்.
எப்படிப் பராமரிப்பது?
கார்களில் வேகமாகப் போகும்போது, ஸ்டீயரிங்கை மென்மையாகப் பற்றியபடி லேசாகக் கவனியுங்கள். உங்கள் கார் நிறுவனத்தின் லோகோ - நேராக, 90 டிகிரியில் ஆடாமல் அசையாமல் இருந்தால், கார் ஸ்மூத்தாகச் செல்கிறது என்று அர்த்தம். இதைத்தான் ‘Steering Off-Centre’ என்கிறார்கள். கார் ஒரு பக்கமாக இழுத்துச் சென்றால், ஆஃப் சென்டர் சரியாக இல்லை என்று அர்த்தம். ஸ்டீயரிங் ஆயில் மாற்றுதல் மற்றும் வீல் அலைன்மென்ட்டோடு சேர்த்து, சர்வீஸில் இதையும் சரி பார்த்தால் எப்போதுமே பவர்ஃபுல் ஹேண்ட்லிங்தான்.