பிரீமியம் ஸ்டோரி

நான் மாருதி சுஸூகி டிசையர் பெட்ரோல் மாடல் வைத்திருக்கிறேன். அதில் ஒருமுறை என் ஓட்டுநர், தவறுதலாக டீசலை நிரப்பிவிட்டு ஓட்டிச் சென்றிருக்கிறார். கார் சற்றுநேரத்திலே நின்றபோதுதான் தவறு அவருக்குப் புரிந்திருக்கிறது. அருகே இருந்த சர்வீஸ் சென்டரில், ஃப்யூல் டேங்க்கை அகற்றிச் சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் பெட்ரோலை நிரப்பிவிட்டார். பின்பு கார் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கினாலும், இது மாதிரியான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும்?

-ஆறுமுகம், இ-மெயில். 

மோட்டார் கிளினிக்

நீங்கள் தெரியாமல் உங்கள் காருக்கான எரிபொருளை மாற்றி நிரப்பிவிட்டால், காரை உடனடியாக ஸ்டார்ட் செய்ய வேண்டாம். ஏனெனில், நீங்கள் காரை ஸ்டார்ட் செய்த அடுத்த விநாடி, எரிபொருள் இன்ஜினின் கம்பர்ஷன் சேம்பருக்குள் சர்க்குலேட் ஆகிவிடும். சரியான அழுத்தத்தில் சரியான எரிபொருள் கிடைக்கும்வரை இயங்கும் இன்ஜின், அதன் பின்னர் தானாகவே ஆஃப் ஆகிவிடும். எனவே, ‘‘காசு வேஸ்ட் ஆச்சே’’ என நினைக்காமல், காரை அப்படியே சர்வீஸ் சென்டருக்கு இழுத்துச்சென்று (Tow), டேங்க்கில் இருக்கும் மொத்த எரிபொருளையும் இறக்கிவிடுவதுதான் உங்கள் காரின் இன்ஜினைக் காப்பாற்றுவதற்கான சிறந்த வழி! அதையும் மீறி, ‘இருக்கிற எரிபொருளை வைத்து, காரை அப்படியே சர்வீஸ் சென்டர்வரை கொண்டுபோய்விட்டுவிடலாம்’ என நினைத்து காரை ஓட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டாம்.

நான் முதன்முறையாக கார் வாங்க உள்ளேன். எனது பட்ஜெட் 10 லட்ச ரூபாய். எனக்கு அதிகப் பாதுகாப்பும், குறைவான பராமரிப்புச் செலவுகளும் முக்கியம்; சொகுசு மற்றும் மைலேஜ் இரண்டாம் பட்சம்தான். ஹோண்டா ஜாஸ், ஃபோர்டு ஆஸ்பயர், டொயோட்டா எட்டியோஸ் ஆகிய கார்களில் எதை வாங்கலாம்? இதே விலையில், எனக்கு ஏற்ற கார்கள் ஏதேனும் இருக்கின்றனவா?

 சிபிக்குமார், திருச்சி.     

மோட்டார் கிளினிக்

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்ட கார்களில்   ஹோண்டா ஜாஸ் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது,  அதிக விலை - மினி எம்பிவி போன்ற தோற்றம் ஆகியவை மைனஸ். ஆனால், ஐந்து பேருக்கான இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் - ஒட்டுமொத்த தரம் - போதுமான மைலேஜ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் - தேவையான சிறப்பம்சங்கள் என அசத்துவதால், மிகவும் பிராக்டிகலான காராக ஈர்க்கிறது ஜாஸ். ஆனால், கிட்டத்தட்ட இதே குணாதிசயங்களுடன், காம்பேக்ட் செடான் பிரிவில் கிடைக்கக்கூடிய கார் வேண்டுமென்றால், நீங்கள் ஃபோர்டு ஆஸ்பயரைப் பரிசிலிக்கலாம். தனது வகையிலேயே 6 காற்றுப்பைகளுடன் கிடைக்கக்கூடிய ஒரே காராக இருந்தாலும், பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிறப்பம்சங்களில் பின்தங்கிவிடுகிறது. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து, தீர்க்கமாக முடிவெடுங்கள்.

நான் பஜாஜ் பல்ஸர் பைக் வைத்திருக்கிறேன். வெளிநாட்டில் பணிபுரிவதால், எப்போதாவதுதான் என்னால் பைக்கைப் பயன்படுத்த முடியும். எனது குடும்பத்தினர், மூன்று நாள்களுக்கு ஒருமுறை பைக்கை ஆன் செய்வது வாடிக்கை. எனவே, ஒரு வருடத்துக்கு பைக்கின் இன்ஜின் மற்றும் பேட்டரியைப் பாதுகாப்பது எப்படி? 

- மொஹமத் ஆரிஃப் கனி, இ-மெயில்.


நீங்கள் உங்கள் பைக்கை நீண்ட நாள்கள் பயன்படுத்தாமல் இருப்பதால், அதை சென்டர் ஸ்டாண்டு போட்டுவிட்டு, நிழலான இடத்தில் நிறுத்திவிடுவது நல்லது. மேலும் பைக்கை கவர் செய்யும்போது, தேவையற்ற தூசு - மண் - பூச்சி போன்றவை பைக்கில் நுழைவதையும் படிவதையும் தடுத்துவிடலாம். தவிர, பைக்கின் டயரைச் சுற்றி, நாம் பயன்படுத்தும் Talcum Powder-ஐ தூவி விட்டால், டயர்களின் ஆயுட்காலம் குறை வதைத் தவிர்க்கலாம். பேட்டரி கேபிள்களைக் அகற்றிவிட்டால், அதன் சார்ஜ் லெவல் அவ்வளவு சீக்கிரத்தில் நீர்த்துப்போகாமல் இருக்கும். இதனுடன் பேட்டரியின் Terminal-களில் Vaseline/Grease தடவுவதும் நன்மை தரும். நீங்கள் தற்போது மூன்று நாள்களுக்கு ஒருமுறை, பைக்கை ஆன் செய்வதற்குப் பதிலாக, அதை தினசரி செய்தாலே போதுமானது. இன்ஜின் ஆயிலையும் ஒருமுறை மாற்றிவிடுவதுடன், தேவைப்பட்டால் மட்டுமே பெட்ரோல் நிரப்ப வேண்டும்.

எனது பட்ஜெட் 10 - 15 லட்ச ரூபாய். மலைச் சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும்தான் காரை அதிகமாகப் பயன்படுத்துவேன். எனவே, சிறப்பான ரோடு கிரிப், காற்றுப்பை போன்ற பாதுகாப்பு வசதிகள், அதிக இடவசதியுடன் கூடிய புதிய கார் வேண்டும். விட்டாரா பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், டஸ்ட்டர், WR-V ஆகியவற்றில் எது பெஸ்ட்? நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால், ஒரே குழப்பமாக இருக்கிறது. எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

சிவக்குமார், சென்னை


நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்களில், எக்கோஸ்போர்ட் அல்லது WR-V, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கார்களாக இருக்கின்றன. இந்த இரண்டு கார்களின் டீசல் இன்ஜினிலும் டர்போ-லேக் குறைவு என்பதால், மலைச்சாலைகளுக்கு ஏற்றபடி பவர் டெலிவரி சீராக இருக்கிறது. மேலும் இவை டிசைன் மற்றும் பாதுகாப்பு வசதிகளிலும் ஸ்கோர் செய்துவிடுகின்றன.

WR-V இடவசதியில் அசத்தினால், எக்கோஸ்போர்ட் கட்டுமானத் தரத்தில் ஈர்க்கிறது. ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இந்த கார்களின் விலை கொஞ்சம் அதிகமோ எனத் தோன்றுகிறது.

விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டஸ்ட்டர் ஆகியவை, சிறப்பான ஓட்டுதல் அனுபவம் - போதுமான பாதுகாப்பு வசதிகள் - மனநிறைவைத் தரும் இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் என ஆல்ரவுண்டர்களாக இருக்கின்றன. ஆனால், இவற்றின் டீசல் இன்ஜின்கள் டர்போ-லேக்கை வெளிப்படுத்துவதால், நெரிசல்மிக்க மலைச் சாலைகளில் இந்த கார்களை ஓட்டுவது கொஞ்சம் அசெளகரியமான விஷயமாகவே இருக்கும். நெக்ஸான் காரைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.

நான் இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனவே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் கார் வாங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். எனது முடிவு சரி என்றால், எனக்கு ஏற்ற கார் ஒன்றைப் பரிந்துரைக்கவும்.

பிரபா சங்கர், இ-மெயில்.  

மோட்டார் கிளினிக்

உங்கள் முடிவு சரியானதே. கார் ஒட்டக் கற்றுக்கொள்வதற்கு, புதிய காரைவிடப் பழைய கார்தான் பொருத்தமாக இருக்கும். உங்களுக்கு மாருதி சுஸூகியின் ஆல்ட்டோ மற்றும் வேகன்-ஆர் ஆகிய கார்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். காம்பேக்ட்டான கார் வேண்டும் என்றால் ஆல்ட்டோவையும்,கொஞ்சம் இடவசதியுடன்கூடிய கார் வேண்டும் என்றால் வேகன்-ஆர் காரையும் நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும், 2010-க்குப் பிந்தைய மாடல்களின் டாப் வேரியன்ட்களைப் பார்ப்பது நலம். ஏனெனில், இவை தற்போதைய BS-IV விதிகளைப் பின்பற்றுவதுடன், சிறப்பம்சங்கள் - பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றில் கொஞ்சம் அப்டேட் ஆகவும் இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, i10 ஆகிய கார்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:

மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு