Published:Updated:

புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்

புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்

லாஜிஸ்டிக்ஸ்ஜோடி குருஸ்

புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்

டுத்த நொடியில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருப்பதுதான்  நம் வாழ்வின் சுவராஸ்யமே.‘அறியாமை பரவசமானது’ என்று சொல்வார்களே... அதுபோல. 1991-ம் ஆண்டின் இறுதி. கல்லூரியில் விரிவுரையாளராகும் கனவோடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபடியிருந்த நான், ஆய்வுப் படிப்பை உதறிவிட்டு மும்பை செல்கிறேன். அங்கு சென்ற மூன்றாவது வாரத்திலேயே  வேலை கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த நாள், அந்த வாரக் கடைசியான வெள்ளிக்கிழமை. மாலையில் அலுவலக மேலாளர் என்னை காரில் அழைத்துக்கொண்டு எங்கோ போகிறார். வானம் இருண்டு நல்ல மழை. வேகமான காற்று வேறு… கனவுலகில் நடப்பதுபோல் நனவுலகில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தவாறே ஓட்டுநரின் அருகே அமர்ந்திருக்கிறேன்.  

புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நரிமன் பாயின்ட், சர்ச்கேட், விக்டோரியா டெர்மினஸ், மஜித் பந்தர், டாக்யார்டு ரோடு, ரே ரோடு, கார்ட்டன் கிரீன் கடந்து சிவ்ரி ஸ்டேஷன் தாண்டி, மரங்கள் அடர்ந்த வெளிச்சமே இல்லாத ஒரு பகுதிக்குள் கார் நுழைகிறது. ‘‘ச்சல், பார் நிக்கால் மதராஸி’’ என்றார் என்னை அங்கு அழைத்துச்சென்ற மேலாளர். தொடர்ந்து இடி, மின்னலோடு பேய்மழை கொட்டுகிறது. காரிலிருந்து இறங்கி ஓடிய நான், மழைக்குப் பயந்து திறந்துகிடந்த ஒரு கதவின் பின்புறம் ஒதுங்குகிறேன். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி நிதானத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, அது ஓர் இரும்புப் பெட்டகம். உள்ளே தேயிலையின் நறுமணம். களைப்பு மிகுதியில் படுத்து உறங்கிவிட்டேன். விழிப்புத் தட்டி எழுந்து வெளியே வந்து பார்த்தால், பூதகணங்களாகக் காலியான இரும்புப் பெட்டகங்கள். 20,  40 அடி நீளத்தில் ஒரே அளவிலான அகல உயரத்தோடு இருந்தன. அவை சரக்குப் பெட்டகங்கள்; மும்பைத் துறைமுகத்துக்கு இறக்குமதிச் சரக்குகளோடு வந்த இந்தப் பெட்டகங்கள்  காலி செய்யப்பட்டு, துறைமுகத்துக்குள் இடமில்லாத காரணத்தால், ரயில்வே சைடிங் பக்கம் அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஏற்றுமதிச் சரக்குகள் தயாரானதும் இவற்றில் நிரப்பப்பட்டுக் கப்பலில் போய்விடுமாம். இந்தப் பெட்டகங்கள்தான் சர்வதேசச் சரக்குப் போக்குவரத்தில் முன்காலத்தில் இருந்த நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, பெரும் புரட்சியையே போக்குவரத்துத் துறையில் ஏற்படுத்தியவை என்பது அன்று எனக்குத் தெரியாது. இந்த நிகழ்வுக்குப் பின்னான நாள்கள் வாழ்வில் சுவராஸ்யமானவை. வாழ்வை அதன் போக்கிலேயே எதிர் கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்தைத் தந்்தது.

அடுத்த மாதமே பணிநிமித்தம் குஜராத்தில் உள்ள காண்ட்லா துறைமுகம் சென்றபோதும் இதுபோலவே ஓர் அனுபவம். துறைமுக வாசலருகே மலைபோல் சரக்குப் பெட்டகங்கள் குவிந்து கிடக்கின்றன. தொழிலாளர்கள், திறந்துகிடக்கும் பெட்டகங்களுக்குள் உறங்கிக்கொண்டும், சீட்டு விளையாடிக்கொண்டுமிருக்கிறார்கள். பக்கத்தில் போய் விசாரித்தால், ரஷ்ய கன்டெய்னர் லைனாம் அது. சோவியத் அரசு பிரிந்துவிட்டதால், ஏற்றுமதிச் சரக்குப் போக்குவரத்து நின்றுவிட்டதன் காரணமாக இப்படிக் குவிந்து கிடப்பதாகச் சொன்னார்கள். காண்ட்லாவில் எங்கள் நிறுவனத்தில் மட்டுமே குறைந்தது 200 தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தார்கள். அவர்களைப் பணிநீக்கம் செய்யாத எங்கள் நிறுவனம், காண்ட்லாவுக்குள்ளேயே லாஜிஸ்டிக்ஸ் சார்ந்த பல தொழில்களுக்குப் பணி இடமாற்றம் அளித்துச் சமாளித்தது. மூன்று மாதங்களுக்குள்ளாகவே நிலைமை கட்டுக்குள் வந்து, சரக்குப் பெட்டகங்களில் சரக்கு ஏறித் தொழிலாளர்களின் முகங்களில் மீண்டும் பிரகாசம் தெரிந்தது. காரணம், சரக்குப் பெட்டகங்கள் சர்வதேசச் சரக்குப் போக்குவரத்தில் தவிர்க்க முடியாத முக்கியமான அங்கமாக மாறியிருந்தன.

எனக்கு இன்னும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. சரக்குப் பெட்டகங்களின் அருகில் சென்றால், என்னையறியாமலேயே என் விரல்கள் அவற்றை வருடும். ‘கப்பல்கள் சரக்கைச் சுமந்து பயணிப்பது நடைமுறை. ஆனால், சரக்குப் பெட்டகங்கள் எப்படிப் பயணிக்கும்?’ இதுபோல கேள்விகள் எழும். காலம் பதில் சொல்லக் காத்திருந்த அந்தக் கேள்விக்கு அடுக்கடுக்காய் பல பதில்களையும், சுவாரஸ்யமான பிரமிப்புகளையும் எனக்குத் தந்ததோடு, நான் முழுமனதோடு பணியாற்றவும் அனுமதித்தது லாஜிஸ்டிக்ஸ் துறை.

அந்தக் காலத்து நடைமுறைப்படி, ஒரு தனிநபர் ஏற்றுமதியாளராகவோ அல்லது இறக்குமதியாளராகவோ இருக்க வேண்டுமென்றால், ஒரு கப்பல் நிறைய சரக்குகளை ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு முதலீடு உடையவராக இருக்க வேண்டும். குறைந்த முதலீட்டில் வர்த்தகம் செய்கிறவர்கள் ஏற்று மதி - இறக்குமதி வியாபாரத்தைக் கனவிலும் நினைக்க முடியாத காலம். ஆனால், இந்தப் பெட்டகங்களின் வரவு, சராசரி நடுத்தர வர்க்கத்தையும் குறைந்த முதலீட்டில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய உதவியதுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்களின் பங்கை ஊர்ஜிதம் செய்து, நடுத்தர வர்க்கத்தைத் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவும் மாற்றியது.

லாஜிஸ்டிக்ஸ், சர்வதேசச் சரக்குப் போக்குவரத்தில் இன்று தவிர்க்க முடியாத ஒரு வார்த்தைப் பிரயோகம். நுகர்வோரைத் திருப்திப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வியாபார உத்தி.  இந்தச் சொல்லாடல் பிரபலமாவதற்கு முன்னாலும் சரக்குப் போக்குவரத்து நடக்கத்தான் செய்தது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களோடு பெரும் பணக்காரர்களால் மட்டுமே ஈடுபட முடிந்தது.  விலை உயர்வான பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி கையாள்கையில் வீணாகின. சரக்குத் திருட்டைத் தவிர்க்க முடியவில்லை. இந்தச் சூழலில் வரப்பிரசாதம்போல் வந்ததுதான் சரக்குப் பெட்டகம். இதன் அறிமுகம் பெயர்ச்சியியலுக்கும் மகுடம் வைத்ததுபோல் ஆகிவிட்டது. இழப்புகள் தவிர்க்கப்பட்டுக் குறித்த சரக்குகள், குறித்த நேரத்தில், குறித்த இடத்தை அடைந்தன. வாங்குபவரும், விற்பவரும் மகிழ்ந்தார்கள்.

இன்று பெரும்பாலோர் புரிந்துவைத்திருப்பதைப்போல் ‘லாஜிஸ்டிக்ஸ்’ என்ற சொல்லாடல் சரக்குப் பெட்டகத்தை மட்டுமே சார்ந்தது அன்று; அது ஒட்டுமொத்த சரக்குப் பெயர்ச்சியியல் சார்ந்தது.

லாஜிஸ்டிக்ஸ் என்பது  ஓர் ஒருங்கிணைந்த சேவை. இங்கு ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். 1800 ஜூன் 14, மாவீரன் நெப்போலியனின் மேரன்கோ போர்க்களம். வரலாற்று நாயகர்களில் படை நடத்தும் ஆளுமையில் கொடி
கட்டிப் பறந்தவர், மாவீரன் நெப்போலியன் என்பது நமக்குத் தெரியும். சதுரங்கத்தில் சமயோசிதமாகக் காய் நகர்த்துவதுபோல, படைகளை இடப்பெயர்ச்சி செய்யும் வித்தையை முழுமையாக அறிந்த நெப்போலியன், மேரன்கோ போர்க்களத்தில் தோல்வியைத் தவிர்த்து மாபெரும் வெற்றி பெற்றதற்கு லாஜிஸ்டிக்ஸின் பயன்பாடே காரணம். தன் வெற்றிக்குப் பின்னான உரையில், ‘‘இந்த வெற்றி லாஜிஸ்டிக்ஸால் (பெயர்ச்சியியலால்) வந்தது’’ என்று கூறினார் நெப்போலியன். உண்மையில் லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயர்ச்சொல்லின் மூலமும் பிரெஞ்சு மொழிதான். ‘சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்காப் பணம்’ என்பது நம் ஊர் சொலவடை. சுமைகூலி என்ற பதத்தில் உருவகிக்கப்படும் லாஜிஸ்டிக்ஸ்தான் பொருள்களின் விலையில் முக்கியக் காரணி என்று அன்றே அறிந்திருந்தார்கள் நம் முன்னோர்கள். எங்கோ விளையும் அரிசியை நம் சமையலறையில் கொண்டுவந்து சமைக்கக் கொடுப்பதுதான் லாஜிஸ்டிக்ஸ். இன்று ஒரு மந்திரச்சொல்லாகவே மாறியிருக்கும் இந்த லாஜிஸ்டிக்ஸ் விதவிதமான கப்பல், விமானம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை மட்டும் உள்ளடக்கியதல்ல... மாறாகச் சரக்குகளின் தேவையறிதல், அளவறிதல், சேமிப்பு, ஒருங்கிணைத்தல், கையாளுமை, பொதிதல் மற்றும் திட்டமிடல் போன்ற இதரச் சேவைகளையும் உள்ளடக்கியது என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.

‘நேரடியாகவே உருவாக்குத் தளத்திலிருந்து உபயோகத் தளத்துக்கு’ என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே சர்வதேசச் சரக்குப் போக்குவரத்தில் இருக்கும் ஒரு முக்கிய அம்சம். சர்வதேசச் சரக்குப் போக்குவரத்தின் போக்கையே மாற்றியெழுதிய இந்தச் சரக்குப் பெட்டகங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான காலத்தில், 1956-ம் ஆண்டில்தான் அமெரிக்காவின் வடகரோலினா மாகாணத்தின் லாரி உரிமையாளரான மால்கம் மேக்லீன் என்ப
வரால் தேவை கருதி அறிமுகப்படுத்தப்பட்டது. நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து, தன்னுடைய சரக்குகளைப் பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் செயல்பட்ட மேக்லீனுக்கு, இந்தச் சரக்குப் பெட்டகங்கள் வருங்காலத்தில் சரக்குப் போக்குவரத்துத் துறையில் வியத்தகு மாறுதல்களைச் செய்து, அது சார்ந்த பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும் வழங்கப்போகின்றன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

-தொடர்ந்து கற்போம்

புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்

ஜோ டி குரூஸ். திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்தவர். மீனவ சமூகத்தின் கடல் சார் வாழ்க்கையைப் பதிவு செய்யும் `ஆழி சூழ் உலகு’, `கொற்கை’, `அஸ்தினாபுரம்’ ஆகிய நாவல்களின் ஆசிரியர். இவரது ‘கொற்கை’ நாவல் 2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. பொருளாதாரத்தில் ஆய்வறிஞர் பட்டம் பெற்றுள்ள இவருக்கு லாஜிஸ்டிக்ஸ் (பெயர்ச்சியியல்), துறையில்  28 வருட அனுபவம் உண்டு.  தற்போது ‘சசி லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தேசியக் கப்பல் வாரியத்தின் உறுப்பினர் இவர். லாஜிஸ்டிக்ஸ் துறையில் ஆழ்ந்த அறிவும் முதிர்ந்த அனுபவமும் கொண்ட இவர், இந்தத் துறையின் பிரகாசமான எதிர்காலம் குறித்து, தொழில் முனைவோருக்கு உதவிடும் வகையில், தன் அனுபவங்களையும் வழிமுறை களையும் பகிர்ந்துகொள்கிறார்.