Published:Updated:

புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!

புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!

வடிவமைப்புக.சத்தியசீலன்

புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!

வடிவமைப்புக.சத்தியசீலன்

Published:Updated:
புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!
பிரீமியம் ஸ்டோரி
புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!

ளமான, திடமான, பாதுகாப்பான, நிறைவான ஒரு புதிய இந்தியாவைப் படைக்க... கடைந்து, துடைத்து, வடிவமைத்து எடுக்க வேண்டிய கட்டாயச் சூழலில் நாம் சந்திக்கிறோம். ‘இந்தியாவைப் படைத்தல்’ என்ற வார்த்தையை, ‘வடிவமைத்தல்’ என்று சொல்லலாம்; இன்னும் கொஞ்சம் எளிமையாக ‘டிசைன் செய்தல்’ என்றுகூட சொல்லலாம். அதற்கான சூழல் தற்போது கனிந்திருக்கிறது. அதை நான் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்.  

புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!

பறந்து விரிந்த இந்த உலகத்தில், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இருக்கிற இந்தியத் துணைக் கண்டம், வரலாற்றின் எல்லாச் சமயங்களிலும் ஒரு புதையலாக, பொக்கிஷமாகவே இருந்திருக்கிறது. இந்தியாவைத் தேடி கடல் வழியே ஐரோப்பியர்கள் புறப்பட்டு வந்ததால், எத்தனையோ புதிய கண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிகிறோம். அன்றிலிருந்து இன்றுவரை, அணுகுண்டு முதல் ஆல்காரித்தம் உள்ளிட்ட நவீன கம்ப்யூட்டர் யுகம் வரை, பல்வேறு விதமாக நாம் உலக வரலாற்றை தீர்மானிப் பவர்களாகவே இருக்கிறோம். யோசித்துப் பார்த்தால்... இங்கிருந்து போய் அமெரிக்க விண்வெளி மையங்களிலும் அண்டார்டிகா வரை ஆராய்ச்சியிலும், கணினித் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும், கட்டுமானத் துறையிலும், வணிக ஏற்றுமதி இறக்குமதித் துறையிலும் இந்தியர்களாகிய நாம் முக்கியமான இடத்தை அடைந்தி ருக்கிறோம். அது உண்மைதான். இப்படி எல்லாத் துறையிலும் நாம் முன்னேறி இருந்தால்கூட, ஒன்றை மட்டும் நாம் தவறவிட்டுவிட்டோம்.

நாம் தவறவிட்டது என்று சொல்வது, வடிவமைப்பு அல்லது டிசைன். டிசைன் என்பது ஃபேஷன் - டிசைன் என நாம் அறிந்து வைத்திருக்கிறோம் அல்லது ஆர்கிடெக்சர்; கட்டட வடிவமைப்பு. இந்தத் துறைகளைத்தான் டிசைன் என்று கொஞ்சம் தெரிந்துவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உங்களைச் சுற்றிப் பாருங்கள்... உங்கள் கையில் இருக்கும் செல்போன், லேப்டாப், உங்கள் காலணிகள், பேனா, வாட்ச், கண்ணாடி, ஓட்டுகிற வாகனம் வரை பல பொருள்களை இங்கே உற்பத்தி செய்கிறோம். ஆனால், இவை எங்கே, எப்படி, யாரால் வடிவமைக்கப்படுகிறது என்பதைப் பற்றி நமக்கு அக்கறையோ, அறிதலோ இல்லாமல் இருக்கிறோம். வடிவமைப்பு எனும் டிசைனை கொஞ்சம் உற்றுநோக்கினால், ஒரு பொருளின் வடிவமைக்கப்பட்ட மொத்த பாகங்களும் ஜப்பானிலிருந்து வந்திருக்கும்; கொரியாவிலிருந்து வந்திருக்கும்; உள்ளே பொருத்தப்பட வேண்டிய ‘ஐ.சி சிப்’ தாய்வானில் செய்யப்பட்டதாக இருக்கும்; சைனாவில் இருந்து வந்திருக்கும்; ஒருவேளை ஐரோப்பா, அமெரிக்கா விலிருந்துகூட வந்திருக்கலாம். அனைத்துப் பாகங்களையும் இணைத்து அசெம்பிள் செய்யும் பணியை மட்டுமே நாம் இங்கே செய்து கொண்டிருக்கிறோம். எனவே, அந்தப் பொருளின் ‘வடிவமைப்பு’ (மேட் இன் இந்தியா) இந்தியா என்று தைரியமாக நாம் சொல்லிக்கொள்ள இயலவில்லை. இதுதான் நாம் தவறவிட்ட மிக முக்கியமான இடம்.

அதாவது, மேலே சொன்ன மருத்துவத் துறை, கட்டுமானத் துறை, பொருளாதாரத் துறை, விண்வெளித் துறை, வாகன உற்பத்தித் துறை ஆகியவை போன்றதுதான் புராடக்ட் டிசைனும். இவை அத்தனையையும் ஒன்றாக இணைக்கக்கூடிய ஒன்று இருக்கிறது என்றால், அதுதான் டிசைன். உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், 80-களில் பிளாஸ்டிக் சேர் என்ற விஷயமே இல்லை. ஆனால், 90-களுக்குப் பிறகு மனிதர்கள் புழங்குகிற எந்த இடத்திலும் காணக்கூடியதாக அந்த பிளாஸ்டிக் சேர் மாறிவிட்டது.

ஒரு காலத்தில் அடுப்பு பற்றவைக்க, சமைக்க நெருப்பு மூட்டுவதற்கு தீப்பெட்டி என்ற ஒன்று இல்லை. ஆனால், என்றைக்கு நம் நாட்டுக்குள் தீப்பெட்டி வந்ததோ, அந்த நிமிடத்தில் இருந்து தீப்பொறி போல பரவி, நகரங்களில் இருந்து சிறு கிராமம் வரை எல்லா வீடுகளிலும் இருக்கும் பொருளாக அது மாறிவிட்டது. இங்கே நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தத் தீப்பெட்டியைச் சார்ந்த வணிகம் மற்றும் வேலை வாய்ப்பு. இவற்றை எல்லாம் நாம் பார்க்கும்போது இதுபோன்ற புதிய புதிய  புராடக்ட் அதாவது  பொருள்களுக்கான தேவை, மனித வாழ்க்கையில் எப்போதும்  இருக்கிறது. தேவைகளும் அது சார்ந்த வணிகங்களும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு 20 ஆண்டுகளிலும், உங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் உங்களைச் சுற்றி இருக்கும் பொருள்கள், உணவு  உட்பட அனைத்தும் மாறிக்கொண்டே வருகின்றன. இந்த மாற்றத்தை யார் தீர்மானிக்கிறார்கள்? இந்த மாற்றத்துக்கு நீங்கள் உட்படுத்தப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? யோசித்திருக்கிறீர்களா?  இன்றைக்கு எல்லோரும் பயன்படுத்துகிற செல்போன், அது சார்ந்த பொருள்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கிடையாது.ஆனால், இன்றைக்கு அது சார்ந்த நிறுவனங்கள், அதில் இருக்கக்கூடிய வேலை வாய்ப்புகள், பயன்கள் இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போது, எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுகிற ஒரு பெரிய வணிகச் சந்தையாக இந்தியா இருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்.

உலகத்தின் எல்லா நாடுகளும் தாங்கள் டிசைன் செய்கிற பொருள்களை சந்தைப் படுத்துவதற்கு இங்கே வருகிறார்கள். அது அவர்கள் பொருள்கள்; அவர்களால் தீர்மானிக்கப்பட்ட டிசைன்கள். ஆக, நீங்கள் என்ன வாங்க வேண்டும்; என்ன முகப்பூச்சு பூச வேண்டும்; என்ன உணவு உண்ண வேண்டும்; என்ன வாகனத்தை நீங்கள் வாங்க வேண்டும்; அது எப்படி இருக்க வேண்டும்  என்று  தீர்மானிக்க, தீர்மானிக்கும் அம்சமாக டிசைன் துறை இருக்கிறது. அதுபற்றி நாம் அறிய வேண்டாமா? அதுபற்றி நாம் பேச வேண்டாமா?

என் கையில் இருக்கிற பென்சில் எங்கே மரமாக இருந்தது என்று நான் யோசிக்கிறேன். அதற்குள் எழுதுகிற கரித்துகளைக் கட்டியாக்கி உள்ளே அடைத்தது யார்? அந்தக் கரித்துண்டு எப்படி மரத்துண்டுக்குள் நுழைந்தது? அதில் எப்படி வண்ணம் பூசப்படுகிறது? அதன் மேலே எப்படிப் பெயரை எழுதினார்கள்? அது எங்கிருந்து எந்தெந்த இடங்களுக்கு அனுப்பப்படுகிறது என்று நாம் யோசிக்கும்போது, எனக்கு ஓர் உண்மை விளங்குகிறது. இந்தியச் சமூகத்தில் நாம் நமது அடிப்படைக் கல்வி முறைகளை வடிவமைக்க வேண்டியது இருக்கிறது. நமது தொழில்நுட்ப அறிவை எங்கு, எப்படிப் பயன்படுத்துவது என்று முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. நமது கலை சார்ந்த படைப்பு ஆற்றலை, ஓவியம் வரையும் ஆற்றலை, இசையமைக்கிற ஆற்றலை எப்படிப் பயனுள்ளதாக ‘வடிமைக்கிற பொருளாக’, பொருளை வடிவமைக்கும் படைப்பாற்றலாக மாற்றுவது என்பதைக் கற்க - கற்பிக்க வேண்டியிருக்கிறது.

வடிவமைத்தல் எனும் துறையை நாம் தவற விட்டுவிட்டோம். ஆனால், அதுதான் இப்போது நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ். ஆக, நாம் தவறவிடக் கூடாத கடைசி பஸ்ஸாக இருக்கும் வடிவமைப்பைப் பற்றிச் சிறிது பேசவும், ஒரு பாமரனின் பார்வையில் அதை அணுகவும், முடிந்த அளவுக்கு எடுத்துச் சொல்லவும், இதை நீங்கள் படித்துப் புரிந்துகொண்டு, இதைப்பற்றி எல்லா இடங்களிலும் பேச வேண்டும் என்ற ஆவலிலேயே இதை எழுதுகிறேன்.

டிசைன் என்பது எல்லா இடங்களிலும் பொருந்தக்கூடிய விஷயம். எனவே, ஆரம்பத்திலேயே நான் சொன்னதுபோல டிசைன் என்பது மனித வாழ்வில் இனி இன்றியமையாத ஒன்று. ஆகவே, நாம் நமது படைப்பாற்றலையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றாக இணைக்கும்போது நாமும் இதைச் சாத்தியப்படுத்த முடியும். இந்தக் கட்டுரையின் முதல் வரியில் சொன்ன, ‘படைத்து, கடைந்து, துடைத்து’ எடுக்க வேண்டும் என்ற ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் உற்றுநோக்கினால், படைத்தல் என்பது உருவாக்கம்; கான்செப்ட். அதை ஒரு படைப் பாற்றல் கலை சார்ந்த விஷயமாகப் பார்க்கலாம். கடைதல் என்றால், உருவாக்குவது. அதற்குத் தொழில்நுட்பம் தேவை. துடைத்தல் என்பது காத்தல். அதாவது, நாம் கடைந்து, துடைத்து எடுத்த பொருளைப் பாதுகாப்பாக இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்வது இந்த மூன்றையும் இணைத்தால் வருவதுதான் வடிவமைத்தல் எனும் உருவாக்கம்.

வாருங்கள்... புத்தம் புதிய பொருள்களை நாம் உருவாக்குவோம்.

- வடிவமைப்போம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்!

க.சத்தியசீலன். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஓர் ஓவியர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்ற பின்பு, தஞ்சாவூர் அடைக்கல மாதா கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு, டெல்லி ஐ.ஐ.டி-யில் முதுகலை டிசைன் பயின்று டாடா மோட்டார்ஸ்,  ஜெனரல் மோட்டார்ஸ்,  டி.வி.எஸ். மோட்டார்ஸ், டாடா  இலக்சி - நிஸான்(ஜப்பான்) ஆகிய நிறுவனங்களின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் பிரிவில் பணியாற்றியவர். தற்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் ஸ்டைலிங் பிரிவின் பொது மேலாளராகச் சென்னையில் பணிபுரிகிறார். இதுவரை 30-க்கும் மேற்பட்ட பலவகை வாகனங்களை வடிவமைத்துள்ளார்.

ஐ.ஐ.டி, ஐ. ஐ.எஸ்.சி, என்.ஐ.டி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புரொடக்ட் - இண்டஸ்ட்ரியல் டிசைன் குறித்த பயிற்சிப் பட்டறைகள் நடத்திவருகிறார். ஐ.ஐ.ஐ.டீ.டி.எம், எம்.ஐ.டி(புனே) ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். புராடக்ட்- இண்டஸ்ட்ரியல் டிசைன் குறித்த, விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தத் தொடரை எழுதுகிறார்.