Published:Updated:

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்
சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹோண்டா சிஆர்-விதமிழ் - படங்கள்: க.விக்னேஷ்வரன், விநாயக்ராம்

பிரீமியம் ஸ்டோரி

புத்தாண்டுச் சிறப்பிதழுக்குப் பயணமும் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் டாப் ஸ்லிப்பைத் தேர்ந்தெடுத்தோம். முயற்சி வீண் போகவில்லை. ‘சாப்பாடு சூப்பரா இருந்துச்சு’ என்று திருமண வீட்டில், சமையலைப் பற்றி பலர் பாராட்டுவதுபோல் இருந்தது டூர். தன் ஹோண்டா CR-V  காரில், நண்பர் சௌந்தர்ராஜுடன் ரெடியாக இருந்தார் குணசேகரன். ட்ரூ காலரில் ‘ஸ்போர்ட்ஸ் குணா’ என்று பெயர் வரும் அளவுக்கு, விளையாட்டு வெறியர். ‘‘ சி.ஆர்.வி-யில் டீசல் டெஸ்ட்டிங் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ஜிபிஎஸ் இல்லாததும், ஹேண்ட்பிரேக் காலில் இருக்கிறதும்தான்  சி.ஆர்-வி-யில் எனக்குப் பிடிக்காத விஷயம்.’’ என்றவரை ஆசுவாசப்படுத்தி, மொபைலில் ஜிபிஎஸ் செட் செய்துவிட்டு, கோவை காளப்பட்டியில் இருந்து ஜூட் விட்டோம்.   

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

‘‘பொள்ளாச்சிக்கு ரோடு சரியில்லை சார், நெகமம் வழியா போயிடலாம்’’ என்று சரியான நேரத்தில் புகைப்பட நிபுணர் ஐடியா கொடுத்ததன் பேரில், ரூட் மாற்றப்பட்டது. அதனால்,  சி.ஆர்-வி-யில் கிட்டத்தட்ட ஒண்ணே கால் லிட்டர் பெட்ரோல் காலியாகி இருக்கலாம். அதாவது, 12 கி.மீ சுற்று. (பார்க்க: ரூட் மேப்)

டாப் ஸ்லிப் எல்லோருக்கும் தெரிந்த ஏரியாதான். ஆனால், தெரியாத விஷயங்கள் நிறைய உண்டு. அதனால், இந்த முறை படம் பார்த்துக் கதை தெரிந்து கொள்க.

1. பொள்ளாச்சியில் ரூம் புக் செய்துவிட்டு, ஆனைமலை செல்லும் வழியில் இடதுபுறம் திரும்பினால் வருகிறது, நா.மு.சுங்கம் எனும் இடம். இங்கே ஹோட்டல் தாஜ் எனும் குடிசை வீட்டு உணவகம் ஃபேமஸ். அசைவப் பிரியர்களுக்கு சரியான தீனி போடும் உணவகம். முழுக்க முழுக்கப் பெண் ஒருவரின் தலைமையில் சமைப்பதால், வீட்டு உணவு போன்ற சுவைக்கு உத்தரவாதம்.  

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

2.‘மச்சி, டாப் ஸ்லிப்ல ரூம் போடுறோம்; சரக்கடிச்சுட்டு குளுகுளுனு கவிதை பாடுறோம்’ என்று ஊட்டி, கொடைக்கானல் பயணங்கள் போல், டாப் ஸ்லிப்பை நினைத்து விடாதீர்கள். பயங்கரமான செக்கிங் உண்டு. சரக்கு பாட்டில்களுக்கு இங்கே முற்றிலும் தடை..

3.அம்புலி இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து, மாலை நேரங்களில் காட்டில் ஒரு கழுகுப் பார்வையைச் செலுத்தினால், எங்காவது ஒரு யானைக் கும்பலோ, சிறுத்தையோ, காட்டெருமைக் கூட்டமோ கண்ணுக்குப் படலாம்.   

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

4. டாப் ஸ்லிப்பில் பைஸன் ஹவுஸ், ஹார்ன்பில் ஹவுஸ், பாம்பூ ஹட், அம்புலி இல்லம் என்று கிட்டத்தட்ட 8 வகையான ரூம்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். எல்லாமே நட்டநடுக்காட்டில் என்பதால், இரவு நேரங்களில் நிச்சயம் ரூமில் இருந்தபடியே விலங்குகளைத் தரிசிக்கலாம். 6.30 மணிக்கு மேல் வெளியே நடமாட அனுமதி இல்லை. கேன்டீனில் முன்பே ஆர்டர் செய்ய வேண்டும்.

5. டாப் ஸ்லிப்பில் உணவகங்கள், தின்பண்டங்களெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனைமலை அல்லது சேத்துமடைதான் கடைசி டவுன் பாயின்ட். எனவே, சேத்துமடையிலேயே பிஸ்கட், தண்ணீர் பாட்டில், சமைப்பதற்கு முட்டை, சிக்கன் போன்ற வஸ்துக்களை பேக் செய்து கொள்வது நல்லது.

6. சேத்துமடை செக்போஸ்ட்டில் என்ட்ரி போட்ட பிறகுதான், டாப் ஸ்லிப்புக்கு மலையேற முடியும். இங்கே மாலை 4 மணி வரைதான் அனுமதி. 4.05-க்கு வந்தால்கூட, அப்படியே பொள்ளாச்சிக்கு யு-டர்ன் அடிக்க வேண்டியதுதான். ரூம் புக் செய்திருந்தால் மட்டும், மாலை 5 மணி வரை அனுமதி. காலை 6.30 முதல் மாலை 4.00 மணி வரைதான் செக்போஸ்ட் டைமிங் என்பதைக் கவனத்தில் கொள்க.  

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

7. நாம் தங்கியது அம்புலி இல்லம். டாப் ஸ்லிப்பில் இருந்து இன்டீரியராகக் காட்டுக்குள் 3 கி.மீ காரில் பயணம் செய்துதான் அடைய முடியும். சமைப்பதற்கு இரண்டு ட்ரைபல்ஸ் எந்நேரமும் இங்கே இருக்கிறார்கள். வேண்டியதை ஆர்டர் செய்து, ஜிஎஸ்டி வரி இல்லாமல் சாப்பிட்டுக் கொள்ளலாம். எல்லா ரூம்களுக்கும் செக்-இன் நேரம் - பகல் 1 மணியில் இருந்து மறுநாள் 10 மணி வரை மட்டுமே!

8. நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைச் சவாரி மறுபடியும் தொடங்கியிருக்கிறார்கள். நான்கு நபர்களுக்கு 800 ரூபாய் கட்டணம். இரண்டு பேருக்கும் அதே கட்டணம்தானாம். 25 நிமிடம் அடர்ந்த காட்டுக்குள் யானைச் சவாரி செய்வது, செம த்ரில்லிங். நாம் சவாரி போனது ‘சூர்யா’ என்கிற யானையின் மேல். சவாரியின்போது, அதிர்ஷ்டம் இருந்தால் சிறுத்தை, புலி, மற்ற யானைக் கூட்டங்கள் பார்க்கலாம். நமக்கு காட்டு அணில்களும், மான்களும் மட்டுமே தரிசனம் தந்தன.  

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

9. யானைகளுக்கான முகாம்தான் டாப் ஸ்லிப்பின் அட்ராக்‌ஷன். ஒரு நபருக்கு 200 ரூபாய் கட்டணம் வீதம், 18 பேர் சேர்ந்தால் மட்டுமே அரசாங்க வாகனத்தில் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்கிறார்கள். யானைகளைக் குளிப்பாட்டுவது, சோறூட்டுவது என்று அவற்றின் அன்றாட வாழ்க்கை முறைகளைக் கண்டு ரசிக்கலாம்.

10. டாப் ஸ்லிப்பில் நீங்கள் தங்க வேண்டும் என்றால், ஒரே வழி - பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே ரூம் புக் செய்துகொள்ள வேண்டும். சனி, ஞாயிறு நேரங்களில், இது அவசியம். சீஸன் நேரம் இல்லை என்பதால், நேரடியாகவே போய் புக் செய்துகொண்டோம்.

ஆன்லைனில் முன் பதிவு செய்ய:
https://www.atrpollachi.com எனும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இணையதளத்தில் புக் செய்யலாம். தொலைபேசி: 04259 238360, 04253 245002

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

ஹோண்டா சிஆர்-வி எப்படி?

ஹோண்டாவின் பிரீமியம் கார் சிஆர்-வி. இரண்டாம் தலைமுறை கார். 2.4 லிட்டர் பெட்ரோல் மாடல். 30 லட்சத்துக்கு வாங்கியதாகச் சொன்னார் குணசேகரன். 5 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆடோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இதில், மைலேஜையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ‘‘சிட்டிக்குள்ள 9.5 கி.மீ வருது. அவுட்டிங் போனா 12 வரும். பெரிய கார், இந்த மைலேஜ் தர்றதே பெரிய விஷயம்!’’ என்று சிலாகிக்கிறார் குணசேகரன். பேடில் ஷிஃப்டர் உண்டு. ஸ்போர்ட்ஸ் மோடில் தெறிக்கிறது சிஆர்-வி. எக்கோ மோடில் நாம் சென்றவரை, ஆவரேஜ் மைலேஜாக 9.6 காட்டியது. புதுமை என்று ஹேண்ட் பிரேக்கை, காலில் வைத்திருக்கிறார்கள். டெட் பெடல் இருந்தாலும், ஹேண்ட் பிரேக் இடிக்கிறது. சிட்டிக்குள் ஓட்டுவதற்குச் சின்ன கார்போல் இருந்தது சிஆர்-வி. 30 லட்ச ரூபாய் காரில், நேவிகேஷன் சிஸ்டம் இல்லை என்பது பெரிய மைனஸ். ஆனால், சன் ரூஃபெல்லாம் இருக்கிறது. காட்டுப் பகுதிகளில் டூர் அடிக்க சரியான ஆப்ஷன் சிஆர்-வி. பெரிய 17 இன்ச் டயர்கள், நான்கு பக்கமும் டிஸ்க் என்று எந்தச் சாலையிலும் நம்பிக்கையாக ஓட்டலாம்.

‘‘இதுக்கு மேல சல்லிக்காசு வாங்க மாட்டோம்!’’

பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் ரூம் புக் செய்தபோது, ஓர் அறைக்கு வாடகை 2,000 வீதம் இரண்டு அறைகளுக்கு ரூ.4,000 கட்டணம் என்றவர்கள். கார் பார்க்கிங், நுழைவுக் கட்டணம், அறைப் பராமரிப்பு என்று எக்ஸ்ட்ரா ரூ.420 வாங்கினார்கள். ‘‘என்ன கணக்கு’’ என்று விசாரித்தபோது, ‘‘எல்லாமே இதுல இன்க்ளூடட் சார். இதுக்கு மேல சல்லிக்காசுகூட நீங்க யாருக்கும் தர வேண்டியதில்லை’’ என்றார்கள். ஆனால், சேத்துமடை செக்போஸ்ட்டில், ‘‘இது என்ட்ரி ஃபீஸ் இல்லை சார். ட்ரைபல் வெல்ஃபேர்க்கான அமௌன்ட். நீங்க பே பண்ணியே ஆகணும்’’ என்று 150 ரூபாய்க்கான கட்டணமும், டாப் ஸ்லிப் ரிசப்ஷனில் ‘‘இது எருமைப் பாறை ட்ரைபல் வெல்ஃபேர்க்காக சார்... கார் பார்க்கிங் கட்டணம். இது வேற சார்!’’ என்று 200 ரூபாய் கட்டணமும், 'சாப்பாடு நீங்கதான் பார்த்துக்கணும்' என்றும் வசூலித்தார்கள். நல்லவேளையாக - அறையில் தூங்கியதற்கான செலவு, மின் விசிறி பயன்படுத்தியதற்கான செலவு, சுடுதண்ணீர்ச் செலவு, பாத்ரூமில் குளித்ததற்கான செலவு என்று எதுவும் வாங்கவில்லை என்பது ஆறுதல்.

காட்டுப் பாதையில் கவனம்!

பொதுவாக சேத்துமடை போன்ற அடர்ந்த காட்டுப் பாதைகளில் ரோடு ‘கடாமுடா’வெனவே இருக்கும். ‘‘ச்சே.. காசு வாங்குறாங்க... ரோடு போட மாட்றாங்களே’’ என்று நாம் குறையிடுவது முறையல்ல. காரணம், சாலை நன்றாக இருந்தால் ஆக்ஸிலரேட்டர் மிதித்துப் பறக்கத் தோன்றும். சாலையில் திடீரென க்ராஸ் ஆகும் விலங்குகளுக்கு இது பேராபத்து; நமக்கும்தான். எனவே சிஆர்-வி-யை, 15 கி.மீ-க்கு மேல் தாண்டவிடாமல் பார்த்துக் கொண்டோம்.

எப்போதுமே மலைச்சாலையில் காரில் போகும்போது டெம்ப்ரேச்சர் மீட்டர், எரிபொருள், காற்று எல்லாவற்றையும் செக் செய்து கொள்வது நல்லது. நாம் சென்றபோது, ஆல்ட்டோ ஒன்று கூலன்ட் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. டெம்ப்ரவரியாக கூலன்ட்டில் தண்ணீர் ஊற்றி மேலேறியது ஆல்ட்டோ. மேலே பெட்ரோல் பங்க்குகள் இல்லை என்பதையும் நினைவில் கொள்க!

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

என்ன செய்யலாம்?

சேத்துமடையில் இருந்து

டாப் ஸ்லிப் - 15 கி.மீ

அருமையான மலைப் பிரதேசம். இரவு நேரங்களில் தங்குவது, அலாதி சுகம் + பயம்.

யானைச் சவாரி

டாப் ஸ்லிப்பில் யானைச் சவாரியை மிஸ் பண்ணாதீர்கள். பாகன்களுக்குக் கட்டுப்பட்டு யானைகள் நம்மை பூப்போல ஏற்றிக்கொண்டு, நடுக்காட்டில் சவாரி போவது அற்புதமான விஷயம். அதிர்ஷ்டம் இருந்தால், காட்டு விலங்குகள் பார்க்கலாம்.

அம்புலி இல்லம் - 18 கி.மீ


டாப் ஸ்லிப் ரிசப்ஷன் ஏரியாவில் இருந்து 3 கி.மீ இன்டீரியராகப் பயணிக்க வேண்டும். இது தவிர, மூங்கில் வீடு, பைசன் ஹவுஸ் எல்லாமே தங்குவதற்கு அருமையான சாய்ஸ்.

பரம்பிக்குளம் 17.5 கி.மீ

டாப் ஸ்லிப்தான் இதற்கு ஒரே வழி. டாப் ஸ்லிப்பில் இருந்து 1.5 கி.மீ-ல் தொலைவில் வரும் செக்போஸ்ட்டில் அனுமதி வாங்கிவிட்டு உள்ளே பயணிக்க வேண்டும். 8 மணி முதல் வேன் சவாரி உண்டு.

தூணக்கடவு அணை - 25.2 கி.மீ

பரம்பிக்குளம் பகுதியின் அட்ராக்‌ஷன்களில் ஒன்று. இந்த அணைதான் விலங்குகள் தண்ணீர் அருந்த வரும் ஸ்பாட். தூணக்கடவில், தங்கும் ஆப்ஷனும் உண்டு.

பரம்பிக்குளம் அணை - 30 கி.மீ


பரம்பிக்குளத்தில் தங்கினால், இந்த அணையில் போட்டிங் இலவசம். மூங்கில் படகில் போட்டிங் போவது செம த்ரில்லிங்!

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு