Published:Updated:

ஆச்சர்ய அப்பாச்சி!

சூப்பர் சுறா - 6G டெக்னாலஜி...தமிழ்தென்றல் - ராகுல் சிவகுரு - படங்கள்: மீ.நிவேதன்

பிரீமியம் ஸ்டோரி

ஜினியும் அர்னால்டும் சேர்ந்து நடித்தால், அந்தப் படத்துக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்? அப்படித்தான் அப்பாச்சி RR310 சிசி பைக்குக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இங்கே ரஜினி - டிவிஎஸ் என்றால், அர்னால்டு - பிஎம்டபிள்யூ. பிஎம்டபிள்யூவுடனான கூட்டணிக்குப் பிறகு, டிவிஎஸ்-ல் இருந்து வெளிவரும் முதல் 300சிசி பைக் என்பது கூடுதல் கவனம் ஈர்க்கிறது. முதல் ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக்; முதல் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்; முதல் இரட்டை LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் கொண்ட பைக்; முதல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட பைக்; முதல் லிக்விட் கூல்டு இன்ஜின் என்று டிவிஎஸ்-க்கு எக்கச்சக்க ‘முதல்’கள் கொண்ட பைக் என்கின்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது, அப்பாச்சி RR310. 

ஆச்சர்ய அப்பாச்சி!

‘‘பிஎம்டபிள்யூ டச் தெரியுதா? டாப் ஸ்பீடு 160 போலாமா? விலை எவ்வளவு? நின்ஜா, டியூக், டொமினாரெல்லாம் என்னாகும்?’’ என்று அப்பாச்சி RR310 பைக்கின் வருகை பற்பல  கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்க அப்பாச்சி RR310 ஸ்போர்ட்ஸ் பைக்கை, சென்னை ரேஸ் ட்ராக்கில் ஓட்டிப் பார்த்தோம்!

சுறா மாதிரி இருக்கே!

 ஒரு திரைப்படத்தில்  ‘நீங்க எங்கேயோ போயிட்டீங்க’ என்று ஒரு வசனம் வரும். அதுபோல் டிசைனில் எங்கேயோ போய்விட்டது டிவிஎஸ். பைக்கை சைடு ஸ்டாண்டு போட்டு, தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கும்போது ‘பார்க்க டுகாட்டி மாதிரியே இருக்கு சார்’ என்றார் புகைப்பட நிபுணர். டிசைனுக்கு அந்தளவு மெனக்கெட்டிருக்கிறார்கள். முன் பக்கத்தில் அந்த டூயல் LED புரொஜெக்டர் ஹெட்லைட் வேறு எந்த பைக்கிலும் கிடையாது... செம கெத்து.

ஃபுல் ஃபேரிங்குடன் இணைந்திருக்கும் பெட்ரோல் டேங்க்கே, இது ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் என்பதைச் சொல்லிவிடுகிறது. ரைடிங்கின்போது கால்களுக்கு சப்போர்ட் கொடுப்பதில் இதன் அருமை தெரிகிறது. ஷார்ப்பான ஃபுல் ஃபேரிங், தடிமனான 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகிய இந்த டிசைன்களுக்கு அடிப்படை, ஒரு சுறா மீன் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்தானே! டாப் ஆங்கிளில் பார்த்தால், அப்படித்தான் தெரிந்தது. சுறாவின் கூர்மையான மூக்குபோல், பைக்கின் டிசைன் ஏரோடைனமிக்ஸ்படி இருப்பதாகச் சொல்கிறது டிவிஎஸ். விண்ட் ஸ்கிரீன் கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது. என்றாலும், இது எதிர்காற்று முகத்தில் அறையாமல் பார்த்துக் கொள்கிறது.

எல்லாம் பிஎம்டபிள்யூ மயம்!

அதென்ன... ஸ்பீடோ மீட்டர் எல்லா பைக்குகளிலும் படுக்கை வசமாகத்தானே இருக்கும்? இங்கே செங்குத்தாக இருக்கும் ஸ்பீடோ கன்ஸோலே, இதன் தனித்துவத்தைச் சொல்கிறது. இரட்டை ட்ரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், கடிகாரம், ஆர்பிஎம் மீட்டர் என்று எல்லாமே டிஜிட்டல். ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால், 0-60 மீட்டர், லேப் டைமர், டாப் ஸ்பீடு, கியர் இண்டிகேட்டர், மைலேஜ் என்று எல்லா விஷயங்களும் உண்டு. மொத்தம் 18 தகவல்களைக்கொண்ட கன்ஸோல் இது.

பிஎம்டபிள்யூவுக்கு G310R என்றால், டிவிஎஸ்-க்கு அப்பாச்சி RR310. ஃபுல் ஃபேரிங் தவிர அப்படித்தான் மற்ற எல்லாமே அமைந்திருக்கிறது. பின் பக்கம் பார்வையை ஓட்டும்போது தெரிந்தது. இது டுகாட்டி பனிகாலேவைக் கொஞ்சம் நினைவுபடுத்துகிறது. ஆனால், ஜல்லிக்கட்டுக் காளையின் கொம்புபோல் இருக்கும் டெயில் லைட்... கம்பீரம். இப்போதைக்குக் கறுப்பு, சிவப்பு என இரண்டு வண்ணங்களில் வந்திருக்கிறது RR310. கறுப்பு நிறத்தின் மேட் ஃபினிஷ், இது பழைய பைக்கோ எனத் தோன்றவைக்கும் அபாயமும் இருக்கிறது. அநேகமாக அழகான சிவப்புதான் எல்லோரது சாய்ஸாக இருக்கும்.  

ஆச்சர்ய அப்பாச்சி!

தனி ஒருவனாக இருக்கும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் செட்-அப், செம ஸ்போர்ட்டி. ஃபுல் ஃபேரிங்கில் மட்டும்தான் அப்பாச்சி என்கிற ஸ்டிக்கரிங் இருக்கிறது. ஃபேரிங்கின் மற்ற இடங்களில் RR310 - DOHC, ஃப்ரேமில் Race Spec, சீட்டில் TVS Racing, பின்பக்கத்தில் 35 Years of TVS Racing என்று ஏகப்பட்ட ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகள். இதில் ‘35’ என்பது, ரேஸிங்கில் டிவிஎஸ் நிறுவனத்தின் அனுபவத்தைக் குறிக்கும். அதாவது, 1982-ல்தான், டிவிஎஸ் 50 மொபெட் வாயிலாக முதன்முதலில் ரேஸிங்கில் நுழைந்தது டிவிஎஸ். 35 ஆண்டுகளாகிவிட்டதைக் கொண்டாடும்விதமாகத்தான், டிவிஎஸ்-ஸில் இருந்து இப்படி ஒரு விருந்து கிடைத்திருக்கிறது. ‘டெட்லி ஸ்போர்ட்’ என்பார்களே... அது இந்த அப்பாச்சிக்குத்தான் பொருந்தும். எல்லாமே ஸ்போர்ட்டி அண்டு செக்ஸி! டிவிஎஸ்-ஸுக்கும் பிஎம்டபிள்யூவுக்கும் லைக்ஸ் லாரியையே கொட்டலாம்.

அதென்ன RR?

சாதாரண கம்யூட்டிங் பைக்குக்கான எந்த அம்சமும் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருக்காது. ஏனென்றால், இது ரேஸ் பைக் இல்லை; ஆனால், ரேஸ் பைக். பைக்கின் பெயரே இதைச் சொல்கிறது. RR என்றால், ரேஸிங் ரெப்ளிகா. ரெப்ளிகா என்றால், ‘ஜெராக்ஸ்’ என்று அர்த்தம். இதை ‘ரேஸ் ரெடி’ என்றும் சொல்லலாம். ரேஸ் பைக்குக்கு பில்லியன் சீட் எதற்கு என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ? இதில் உட்கார்ந்து பயணிப்பதெல்லாம்... பின்னால் வருபவர்கள் மனநிலையையும் உடல்நிலையையும் பொருத்தது. யமஹா R15 போல கிராப் ரெயிலும் கிடையாது. ஆனால், இந்த அப்பாச்சியின் முன் பக்க சீட்டில் யார் உட்கார்ந்தாலும், ரேஸர் ஃபீல் கிடைப்பது இதன் ப்ளஸ். முன் பக்க சீட்டின் வடிவமைப்பும், ஹேண்டில்பார் பொசிஷன் செய்யப்பட்ட விதமும் அப்படி.

ரைடிங் இல்லை, ரேஸிங்!

நேக்கட் பைக்குகளுக்கும், ஃபுல் ஃபேரிங் பைக்குகளுக்கும் ஒரு பெரிய வித்தியாசம். குறை என்றுகூடச் சொல்லாம். அதாவது, ஏரோ-டைனமிக்ஸ். ஆம்! நேக்கட் பைக்குகள் அதிவேகங்களில் கொஞ்சம் காற்றில் அலைபாயும். ஃபுல் ஃபேரிங் பைக்குகளில் இது அவ்வளவாக இருக்காது. ஆனால், ‘இது அதுக்கும் மேல’ என்று க்ளெய்ம் செய்கிறது டிவிஎஸ். சென்னை ரேஸ் ட்ராக்கில் கிட்டத்தட்ட 145 கி.மீ வரை விரட்டினேன். சின்ன ஜெர்க்கூட இல்லை. காரணம், இதன் Drag Co-efficient ரொம்பக் குறைவு (0.26). இதற்காக மட்டும் பைக்கை 300 மணிநேரம் Wind Tunnel டெஸ்ட்டிங் செய்திருக்கிறதாம் டிவிஎஸ். காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வதில் பயமாக இல்லை; ஜாலியாக இருக்கிறது. ஆச்சரியம்தான்! இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ரைடர்களே!  

ஆச்சர்ய அப்பாச்சி!

சாதாரணமாக முறுக்கினாலே, 95 கி.மீ-க்கு மேல் பறக்க ஆரம்பித்துவிடுகிறது RR310. அப்போதுதான் ஆர்பிஎம் மீட்டரைக் கவனித்தேன். ஐடிலிங்கில்கூட 1,700-ல் துடித்துக்கொண்டிருந்தது டிஜிட்டல் முள். ஆனால், கேடிஎம் டியூக் 390 அளவுக்குச் சீறவில்லை. 0-60 கி.மீ-யை 2.93 விநாடிகளில் தாண்டுகிறது RR310. இதே வேகத்துக்கு கேடிஎம் டியூக் 390 எடுத்துக்கொள்ளும் நேரம் - 2.47 விநாடிகள்! அப்பாச்சி RR 310-ன் டாப் ஸ்பீடு 163கி.மீ என்கிறது டிவிஎஸ். இது கேடிஎம் பைக்குடன் ஒப்பிடும்போது சூப்பர். ஏனென்றால், டியூக் 390-ன் பவர் 43.5 bhp. அப்பாச்சி RR310-ன் பவர், 34 bhpதான். சொல்லப்போனால், பிஎம்டபிள்யூ G310R பைக்கைவிட RR310 பைக்கின் டாப் ஸ்பீடு 15 கி.மீ அதிகம். வெல்டன் டிவிஎஸ்!

ஸ்மூத்தா... ரஃப்பா?

பைக்கை ஐடிலிங்கில் உற்றுக் கேட்டால், கொஞ்சம் ரஃப் ஆகவே தெரிந்தது. மற்றபடி 312.2சிசி இன்ஜின், நன்றாகவே உறுமியது. டார்க், 2.73kgm. இன்ஜினை ரேஸிங்குக்காக ட்யூன் செய்திருப்பது தெரிகிறது. கேடிஎம் டியூக் 390-ல் இருக்கும் ரைடு பை வயர் இங்கே இல்லை. பைக் பறக்க ஆரம்பித்ததும், அதிர்வுகளே தெரியவில்லை. இந்த அப்பாச்சியில் நான் வியந்த விஷயம் - வேகம் குறைத்தபோது கியர் மாற்ற மறந்துவிட்டேன். ஆனாலும், அதே கியரில் பிக்-அப் இருந்ததுபோலத் தெரிந்தது. உதாரணத்துக்கு, 45 கி.மீ வேகத்தை 6-வது கியரில்கூட திணறாமல் செல்ல முடிந்தது. குறைந்த வேகங்களுக்கும் அப்படித்தான். டிராக்கில் மூன்றாவது கியருக்கு மேல் டவுன்ஷிஃப்ட் பண்ணச் சொல்லி அடம்பிடிக்கவே இல்லை RR310. இதை ‘டாலர் கியர் ரேஷியோ’ என்பார்கள். இன்ஜினைப் போலவே பவர் டெலிவரியும் ஸ்மூத்தாகவே இருந்தது. டிவிஎஸ்-ன் முதல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட அப்பாச்சிக்கு ஒரு பெரிய பொக்கே!

பச்சக் பிரேக்கிங்!

சில நிறுவனங்கள், எல்லாவற்றையும் இனிக்க இனிக்கக் கொடுத்துவிட்டு, பிரேக்கிங்கில் ‘கை’ வைத்துவிடுவார்கள். டொமினார் தவிர்த்து யமஹா FZ25, கேடிஎம் டியூக் 250, மோஜோ, ஹிமாலயன் போன்ற பைக்குகள் இதில்தான் பின்தங்குகின்றன. டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்ததற்காக டிவிஎஸ்-க்கு சபாஷ். கான்டினென்டல் நிறுவனத்தின் தயாரிப்பு இது. மேலும் Bybre நிறுவனத்தின் (முன்: 300மி.மீ, பின்: 240மி.மீ) பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் அருமை. எத்தனை வேகத்தில் போனாலும், ஏபிஎஸ் இருப்பதால், பிரேக்குகள் மேல் தைரியமாக நம்பிக்கை வைக்கலாம். ஆனால், கேடிஎம் டியூக் 390 போல, பிரேக் மற்றும் க்ளட்ச் லீவர்களை அட்ஜஸ்ட் செய்ய முடியாதது நெருடல்.

எடை, தடை இல்லை!

பார்ப்பதற்கு 600சிசி சூப்பர்ஸ்போர்ட் பைக்போல இருந்தாலும், இதன் எடை 169.5 கிலோதான். கேடிஎம் டியூக் 390 பைக்கைவிட 6.5 கிலோ அதிகமாக இருந்தாலும்,  டொமினாரைவிட 12.5 கிலோ குறைவு. எனவே, பைக்கை வளைத்துத் திருப்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. பைக்கின் லைட் வெயிட் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், ஹேண்ட்லிங்கில் கைகொடுக்கிறது. எவ்வளவு ஸ்பீடில் போய் கார்னரிங் செய்தாலும்கூட அலேக்காக பைக் திரும்புகிறது. அத்தனை பவ்யம்! கயாபா நிறுவனத்தின் USD- மோனோஷாக் சஸ்பென்ஷன், அருமையாக இயங்குகிறது. இதை நகரச்சாலை அல்லது நெடுஞ்சாலைகளில் ஓட்டினால்தான் இதன் மகத்துவம் இன்னும் புரியும்.

ஆச்சர்ய அப்பாச்சி!

முழுக்க முழுக்க ரேஸிங்கை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டிருக்கிறது அப்பாச்சி RR 310. பைக் ஓட்டும் எல்லோருமே ரேஸர்கள் இல்லை. ஆனால், எல்லோருக்குமே ‘ஜிவ்’வென்று பறக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு இதன் டிரைவிங் பொசிஷன், செமையாக கம்பெனி கொடுக்கலாம். சீட்டில் யார் உட்கார்ந்தாலும், பக்கா ரேஸர் போலவே தெரிவார்கள். நாம் இதை வெளிச்சாலைகளில் ஓட்டினால், இன்னும் கொஞ்சம் ஐடியா கிடைக்கலாம். அந்த வகையில் இதன் பில்லியன் சீட் ஒத்துழைக்க மறுக்கிறது என்பதுதான் உண்மை. அப்படியென்றால், ரேஸிங்/ரைடிங்/த்ரில்லிங் பார்ட்டிகளுக்கானது அப்பாச்சி RR310. கம்யூட்டிங் அண்ணாச்சிகள், இந்த அப்பாச்சியிடம் இருந்து ஒதுங்கிக் கொள்வது நலம். இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக 2.05 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்திருக்கிறது டிவிஎஸ். அப்படியென்றால், சுமார் 2.25 முதல் 2.3 லட்சம் ரூபாய் ஆன்ரோடு வரலாம். டியூக் 390, டொமினார் D400, யமஹா R3, நின்ஜா 300, RC 390, மோஜோ போன்ற பைக்குகள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு