Published:Updated:

பாதுகாப்புக்கு மறுபெயர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்வேல்ஸ் - படங்கள்: கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

மிட் சைஸ் லக்ஸூரி எஸ்யூவியின் களம், எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. புதிய ஜாகுவார் F-Pace, புதிய லெக்ஸஸ் NX 300h, ஆடி Q5 ஆகியவற்றோடு இன்னும் சில மாதங்களில் பிஎம்டபிள்யூ X3-யும் சேர்ந்துவிடும். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் போட்டியாக வந்திருக்கும் இரண்டாம் தலைமுறை வால்வோ XC60 எஸ்யூவிதான், இப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.  

பாதுகாப்புக்கு மறுபெயர்!

ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் செடான் S90 மற்றும் எஸ்யூவியான XC90 ஆகியவை தயாராகும் SPA (Scalable Product Architecture) பிளாட்ஃபார்மில்தான், இந்த வால்வோ XC60 காரும் தயாரிக்கப்படுகிறது. வால்வோவின் அக்மார்க் கிரில், Thor Hammer வடிவில் காட்சிதரும் LED ஹெட்லைட்ஸ் என்று லேட்டஸ்ட் வால்வோ காருக்கான அத்தனை அடையாளங்களும், XC 60 காரிலும் இருக்கின்றன. 19 இன்ச் அலாய் வீல், இதற்கு மேலும் கம்பீரத்தைக் கூட்டுகிறது. குறுகலான D பில்லர், XC60-க்கு தனி அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. புழக்கத்தில் இருந்த XC60 காரைவிட இரண்டாம் தலைமுறை XC60, நீளத்தில் 44 மிமீ, அகலத்தில் 11 மிமீ, வீல்பேஸில் 121 மிமீ அதிகமாகியிருக்கிறது. ஒரே டீசல் இன்ஜின் ஆப்ஷனோடு விற்பனைக்கு வந்திருக்கும் XC60, எல்லா வசதிகளும் நிரம்பிய டாப் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

உள்ளலங்காரம்: ஆளையே அசரடிக்கக்கூடிய அளவுக்கு உள்ளலங்காரம் கிறங்கவைக்கிறது. மரவேலைப்பாடுகள், நாப்பா லெதர் என்று சொகுசு காருக்கான அடையாளம், கேபின் முழுக்கத் தெரிகின்றன. வால்வோவின்  லேட்டஸ்ட் மாடல்களில் காணப்படும் 9 இன்ச் டச் ஸ்கிரீனில், எல்லா கன்ட்ரோல்களும் இருக்கின்றன.

பாதுகாப்புக்கு மறுபெயர்!

பருவ நிலைக்கு ஏற்ற வகையில் குளிர் காற்று அல்லது கதகதப்பான காற்றை வெளியிடும் முன்பக்க இருக்கைகளில், மசாஜ் வசதியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது இந்த செக்மென்டில், வேறு எந்த காரிலும் இல்லாத வசதி. 9 இன்ச் டச் ஸ்கிரீன், 12.3 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை,  கேபினின் ஸ்டைலை உயர்த்துவதோடு, பயன்படுத்தவும் சுலபமாக இருக்கின்றன.

வேகமாகச் செல்லும்போது, என்ன வேகத்தில் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள, சாலையில் இருந்து பார்வையை விலக்குவது பாதுகாப்பானது இல்லை என்பதால், ஹெட்-அப் டிஸ்ப்ளே (Head-up display) கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, பாதுகாப்பு கோணத்தில் Lane Departure Warning வசதியையும் கொடுத்திருக்கிறார்கள்.  

பாதுகாப்புக்கு மறுபெயர்!

15 ஸ்பீக்கர்கள் கொண்ட Bowers & Wilkins சவுண்ட் சிஸ்டம்,  சன் ரூஃப், பேடில் ஷிஃப்டர்... என வசதிகளுக்கு இதில் முடிவேயில்லை.

பாதுகாப்பை தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் வால்வோவில், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உண்டு. நாம் கட்டளையிட்டால், நமக்கு முன்னே செல்லும் வாகனத்தின் வேகத்துக்கு ஏற்றவகையில், இதுவே தன்னுடைய வேகத்தையும் செட் செய்துகொள்ளும். இதில் இருப்பது செமி ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி.  எதன் மீதும் இடிக்காமல் பாதுகாப்பாக காரை பார்க் செய்ய முன் பம்பர், பின் பம்பர், பக்கவாட்டில் என்று இதில் மொத்தம் ஆறு கேமராக்கள். டாப் ஆங்கிளில் இருந்து நாம் ஓட்டும் காரின் காட்சி டச் ஸ்கிரீனில் வீடியோவாகத் தெரிவதால், காரை பார்க்கிங் செய்வதும் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுப்பதும் படு சுலபமாக இருக்கிறது.  

பாதுகாப்புக்கு மறுபெயர்!

இதன் 2 லிட்டர் டீசல் இன்ஜின், 235bhp சக்தியை 4,000 ஆர்பிஎம்மிலும், 48kgm டார்க்கை  1,750-2,250 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. எந்த வேகத்தில் சென்றாலும் சக்திக்குப் பஞ்சம் இல்லை. அதனால், டர்போ லேக் என்ற பேச்சுக்கும் இடமில்லை. சத்தமே இல்லாமல் இயங்கும் இந்த டீசல் இன்ஜின், மிட் - ரேஞ்சில் அசத்துகிறது. எட்டு கியர்களைக்கொண்ட ஆட்டோமேட்டிக்  கியர்பாக்ஸ், இயக்குவதற்கு படு ஸ்மூத்தாக இருக்கிறது. டிரைவிங் ‘மோட்' மாதிரியே ‘சஸ்பென்ஷனையும்' தேவைக்கு ஏற்ற வகையில், இதில் நாம் மாற்றிக்கொள்ள முடியும்.

223 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஆல் வீல் டிரைவ் எஸ்யூவியான இது, எல்லா வகையான சாலைகளையும் ஈஸியாக சமாளிக்கிறது. வால்வோ XC60 - புத்திசாலி காராக மட்டுமல்ல, அமைதியாக இயங்கும் அழகான தோற்றம் கொண்ட சொகுசு எஸ்யூவியாகவும் இருக்கிறது. சிறப்பு அம்சங்களுடன் பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவே இல்லாமல் இருக்கும் இதன் விலை, உத்தேசமாக 70 லட்சம் ரூபாய் (ஆன்-ரோடு) இருக்கலாம். போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது, இது சற்று கூடுதலாக தெரியலாம். ஆனால், இதன் அதிநவீனமான தொழில்நுட்பங்களும், புத்தம் புதிய கார் என்கிற அடையாளமும், வாடிக்கையாளர்களை வால்வோ XC60 யின் பக்கம் நிச்சயம் திருப்பும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு