Published:Updated:

ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்!
ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்!

ஸ்பை டிரைவ்-ஃபோர்டு CUVதொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் ஒரு கார் புதிதாக அறிமுகமாகிறது என்றால், அறிமுக விழாவுக்குப் பிறகு டெஸ்ட் டிரைவ்-க்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில்தான் அந்த காரின் ஓட்டுதல் அனுபவத்தைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒரு புதிய கார், டெஸ்டிங்கில் இருக்கும் நேரத்தில் அதனை ஓட்டிப் பார்ப்பது என்பது, முற்றிலும் புதிய அனுபவம். ஃபோர்டு நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிளான இதை, இப்போதைக்கு ‘ஃபிகோ க்ராஸ்’ எனக் குறிப்பிடலாம்!  

ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்!

காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்த பிறகுதான் தெரிந்தது, இதில் இருப்பது முற்றிலும் புதிய 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின் என்பது. எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜினைப் போலவே, இதுவும் 3 சிலிண்டர் இன்ஜின் என்பதுதான் ஹைலைட். 1.5 லிட்டர் இன்ஜினில் அதிர்வுகளைக் குறைக்கக்கூடிய பேலன்சர் ஷாஃப்ட் இருந்த நிலையில், 1.2 லிட்டர் இன்ஜினில் அது இல்லை. ஃபேன் வேகத்தை லோ-வில் வைத்தபோதும், ஐடிலிங்கில் இருந்து காரைக் கிளப்பும்போதுதான் இன்ஜின் கொஞ்சம் சத்தம்போடுவது போல இருக்கிறது. மற்றபடி குறைவான வேகங்களில், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் மூன்றாவது 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்தாகவே இயங்குகிறது.

இந்த காரில் எங்களுடன், ஃபோர்டு நிறுவனத்தின் வாகனப் பொறியியல் குழுவின் தலைவரான சரோஷ் சோமன் பயணித்தார். இவர், பார்ப்பதற்கு இளையவராகத் தெரிந்தாலும், இன்றளவிலும் இந்தியாவில் அறிமுகமான ஃப்ரன்ட் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்ட கார்களில் சிறப்பான ஹேண்ட்லிங்கைக் கொண்ட காரான, 2008 ல் வெளிவந்த ஃபியஸ்டா S காரின் வடிவமைப்பில் பணிபுரிந்துள்ளார். சீட்டிங் பொசிஷன் மற்றும் ரியர் வியூ மிரர்களை எனக்கேற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொண்டு, காரை மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்டார்ட் செய்தேன்.  

ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்!

ஏர்போர்ட்டிலிருந்து வெளியேவந்து, அஹமதாபாத் நகரத்தின் காலை நேர டிராஃபிக்கில் காரைச் செலுத்தினேன். இந்த நேரத்தில் ஸ்டீயரிங் லைட்டாக இருந்தது சிறப்பு.  கார் கொஞ்சம் வேகம் பிடித்தபோது எடை கூடியது போன்ற உணர்வு. இதனால் டிராஃபிக்கில் சட் சட் என லேன் மாறுவது சுலபமாக இருந்தது. ஆனால், நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது, ஸ்டீயரிங் லைட்டாக இருந்தால் நன்றாக இருக்காதே? எனது மைண்ட் வாய்ஸை, சரோஷ் படித்துவிட்டார் போலும். ‘குறைவான வேகத்தில் ஸ்டீயரிங் லைட்டாக இருப்பதுதான் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும். நீங்கள் காரின் வேகத்தை அதிகரிக்கும்போது, ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் மாறுவதை உணரலாம்’ என்றார்.

எனவே, அஹமதாபாத் நகரத்தின் நெடுஞ்சாலைகளில் காரைச் செலுத்த முடிவு செய்தேன். அப்போதுதான் கவனித்தேன். கியர் மாற்றுவது லைட்டாக இருந்ததுடன், கியர்பாக்ஸும் துல்லியமாக இருந்தது. தனது கார்களில் இருக்கும் IB5 கியர்பாக்ஸுக்குப் பதிலாக, முற்றிலும் புதிய இன்ஜினுடன் புதிய 5 ஸ்பீடு Getrag கியர்பாக்ஸை (MX65) இணைத்துள்ளது ஃபோர்டு. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஸ்டீயரிங், கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் – பிரேக் ஆகியவற்றைப் பயன்படுத்துவது முன்பைவிடச் சுலபமாக மாறியுள்ளதுடன், அவை சரியான எடையிலும் இருக்கின்றன.

ஹோண்டா, சுஸூகி,  ஹூண்டாய் ஆகிய போட்டியாளர்களின் கார்களில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் போட்டிப் போடக்கூடிய வகையில், ஃபோர்டு நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. அதுவும் 4,000 ஆர்பிஎம்முக்கு மேலே இதன் பர்ஃபாமென்ஸ் அதிரடியாக இருக்கிறது. கொஞ்சம் ஷார்ட் கியரிங் இருப்பதால், இந்த இன்ஜினை 6,800 ஆர்பிஎம் ரெட்லைன் வரை விரட்டி ஓட்டுவது, நல்ல அனுபவமாக இருக்கிறது. இந்த நேரத்தில் இன்ஜின் சத்தம் காருக்குள்ளே கேட்டாலும், அது ஸ்போர்ட்டியாக இருப்பதால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளலாம். இது டெஸ்ட்டிங்கில் இருக்கும் கார் என்பதால், இதுவே இறுதி மாடல் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ‘இந்த பர்ஃபாமென்ஸ், விற்பனைக்கு வரப்போகும் மாடலில் மைலேஜுக்காக சமரசம் செய்யப்படுமா?’ என சரோஷிடம் கேட்டோம். ‘இல்லை’ என அவர் பதில் சொன்னார். இதை ஏன் கேட்டோம் என்றால், இந்த 3 சிலிண்டர் 1.2 லிட்டர் டிராகன் இன்ஜின், 95bhp பவரை வெளிப்படுத்துகிறது. இந்த வகையிலே பவர்ஃபுல் பெட்ரோல் இன்ஜின் இதுதான்.   

ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்!

சரோஷ் முன்பே சொன்னது போலவே, அதிக வேகங்களில் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருந்தது. நேர்க்கோட்டில் செல்லும்போது கொஞ்சம் உணர்வில்லாமல் இருப்பதுபோலத் தெரிந்தாலும், லேன் மாற்றி ஓட்டும்போது நல்ல ஃபீட்பேக் கிடைக்கிறது. ஃபிகோ ஹேட்ச்பேக்குடன் ஒப்பிடும்போது, சஸ்பென்ஷன் 15மிமீ ஏற்றம் கண்டுள்ளது. மேலும், காரின் டிராக் அகலமாகி இருப்பதுடன், முன்பைவிட உயரமான மற்றும் அகலமான 185/60 R15 GoodYear டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் கொண்ட கார்களைப்போல இல்லாமல், எக்கோஸ்போர்ட் போல திருப்பங்களில் இந்த காரை ஓட்டுவது செம ஜாலியாக இருக்கிறது. சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்குப் பெயர் பெற்ற ஃபோர்டு நிறுவனத்தின் DNA, இந்த காரிலும் இருப்பது பெரிய ப்ளஸ்.

நெடுஞ்சாலைகளில் இருந்து மீண்டும் நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் காரைச் செலுத்தினேன். குறைவான வேகத்தில் செல்லும்போது, இன்ஜின் திணறாமல் இருந்தது. எந்த கியரில் இருந்தாலும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும்போது கார் சட்டென முன்னோக்கிச் செல்கிறது. ஆரம்ப வேகத்தில் இன்ஜின் ரெஸ்பான்ஸ் நன்றாக இருந்தாலும், 3,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி கொஞ்சம் ஃப்ளாட்டாகவே இருக்கிறது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, டிஜிட்டல் த்ராட்டிலின் செட்டிங்கில் ஃபோர்டு பணிபுரிந்து வருவதாகச் சொன்னார் சரோஷ். 

ஒரு மாறுதலுக்காக, அஹமதாபாத்தின் கரடுமுரடான சாலைகளில் காரைச் செலுத்தினேன். எந்தவித ஆட்டமும் போடாமல், கார் அதில் அசால்ட்டாகச் சென்றது. மேடு பள்ளம் நிறைந்த சாலைகள் தரும் அதிர்வுகளை, சஸ்பென்ஷன் சத்தமின்றி சிறப்பாக உள்வாங்கிக்கொள்கிறது. குறைவான வேகத்தில் செல்லும்போது சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதால், கார் கொஞ்சம் தூக்கிப்போடுவது போல இருந்தது. ஆனால், 40 கி.மீ வேகத்தைத் தாண்டிய பிறகு, ஓட்டுதல் தரம் அற்புதமாக இருக்கிறது. குறுகலான சாலைகள் மற்றும் திருப்பங்களில் காரைச் செலுத்தியபோது, பவர்ஃபுல்லான 95bhp பெட்ரோல் இன்ஜின் மற்றும் உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் இணைந்து அட்டகாசமான ஓட்டுதலைக் கொடுத்தன. காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிளாக இருந்தாலும், இதன் எடையும் எஸ்யூவிகளைப் போல பல்க்காக இல்லை என்பதால், கார் துள்ளிக்கொண்டு பறக்கிறது.

பெரிய ஆன்ட்டி ரோல் பார்கள் மற்றும் அகலமான டயர்கள் இருப்பதால், பாடி கன்ட்ரோல் மற்றும் ரோடு க்ரிப் மிகச் சிறப்பாக இருக்கிறது. தவிர ESP-யும் தனது பணியைத் திறம்படச் செய்வதால், திருப்பங்களில் காரைக் கச்சிதமான வேகத்தில் செலுத்த முடிகிறது.

ஃபிகோவுடன் ஒப்பிடும்போது அகலமான டிராக், உயரமான வீல்கள், கூடுதல் பாடி க்ளாடிங், புதிய பானெட், க்ரில், லைட் எனக் கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கிறது ஃபோர்டு. ஆரம்ப வேரியன்ட்களிலும் டச் ஸ்கிரீன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்பதுடன், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வரலாம்.

நெரிசல்மிக்க நகரச் சாலை, அகலமான நெடுஞ்சாலைகள், கரடுமுரடான சாலைகள் என அனைத்து விதமான சாலைகளுக்குமான காரை ஃபோர்டு தயாரித்திருப்பதால், இந்த காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்களுக்காக கார் ஆர்வலர்கள் நிச்சயம் காத்திருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு